நகுலனும் சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். சல்லியன் வில்வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன் சல்லியனை சாய்க்க நகுல சாகாதேவ சகோதரர்கள் கடுமையாக போராடினர். சல்லியனும் துரிதமாக தன் ஆயுதங்களை பயன்படுத்தினான். சகாதேவன் தன் ஈட்டியால் சல்லியனின் தேரை தாக்கினான். அவன் ஈட்டி பாய்ந்து வருவதை கண்டு சல்லியனின் குதிரைகள் மிரண்டு தடுமாறி ஓட அவைகளை அடக்கினான் சல்லியன். நகுலனோ தன் வாள்திறமையால் சல்லியனின் வில்லை வென்றான். சகாதேவனை சல்லியனின் அம்புகள் தாக்காதவாறு தன் வாழ்சுழற்சியால் அவற்றை தடுத்தான். சல்லியன் தன் இரு மருமகன்களின் போர் திறமையை கண்டு வியந்தான். இறுதியில் மூவரும் சோர்ந்தனர். சல்லியன் மயங்கி நிராயுதபாணியாக தான் தேரில் சாய்ந்தான். தர்மத்தின் படி சல்லியனை கொல்லாமல் உயிர் வாழ விட்டனர் நகுல சகாதேவ சகோதரர்கள்.
கடுமையாய் இருந்த ஏழாம் நாள் போர் சூரியன் மறைய முடிவுக்கு வந்தது. அத்தனை போர் வீரர்களும் போராடி களைத்து போய் இருந்தனர் அன்று இரவு கிருஷ்ணனின் புல்லாங்குழல் வேணுகானம் அனைவருக்கும் அமைதியையும் ஆறுதலையும் கொடுத்தது. அன்று கௌரவர்களுக்கு நடந்த இழப்புகளை அடுத்த நாளில் சரி செய்ய வேண்டும். பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவர்கள் ஆலோசித்து முடிவு செய்தனர்.
எட்டாம் நாள் பீஷ்மர் தனது சேனைகளை ஊர்மி வியூகத்தில் அமைத்தார். அது கடல் போல் பெரியதாக காட்சி அளித்தது. பீஷ்மருக்கு போட்டியாக தன் படையின் சிறந்த வீரர்களின் தொகுப்பை கொண்டு சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். அது பார்க்க இரண்டு கொம்புகள் போன்று காணப்பட்டது. மிகவும் வலுவான இந்த வியூகம் பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. அர்ஜுனனும் திருஷ்டத்யும்னனும் வியூகத்தின் தலை பகுதியில் நின்றனர். தருமர், சிகண்டி, அரவான் இடது புறத்திலும் பீமன் மற்றும் கடோத்கஜன் வலது புறத்திலும் இருந்தனர். நகுல சகாதேவ சகோதரர்கள் அபிமன்யு துருபதன் ஆகியோர் வியூகத்தின் பின்புற சுவராக இருந்தனர்.
துரியோதனன் படை தளபதிகளிடம் கோபம் கொண்டான் ஆகையால் கௌரவ படைகள் சீற்றடுடன் போர் புரிந்தனர். பாண்டவ படைகள் ஏழாம் நாள் கிடைத்த வெற்றியினாலும் இரவு கிருஷ்ணர் கொடுத்த வேணுகானதினாலும் உற்சாகத்துடன் போர் செய்தனர். கௌரவ படையின் விகர்ணன் துச்சாதனன் தேர்கள் மற்றும் குதிரைகளை யுதிஷ்டிரர் மற்றும் சிகண்டிகை தூள் தூள் ஆக்கினர். விகர்ணனும் துச்சாதனனும் பின்வாங்கினார்கள். மற்றொரு புறம் நகுல சகாதேவ சகோதரர்களும் அபிமன்யுவும் சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ் ஆகியோரை கலங்கடித்தனர். அபிமன்யுவின் ஆற்றல் வெளிப்பட தொடங்கியது. பாண்டவர்களின் படையில் அபிமன்னு என்பவனின் மிகபெரிய ஆற்றல் மெதுவாகவும் அதே சமயம் வலிமையாகவும் உருவாகிகொண்டிருப்பது அன்று கௌரவர்களுக்கு தெரிய வந்தது.