இந்து சமயத்தில் வேத வியாசர் தொகுத்த புராணங்கள் மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று கந்தபுராணம். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். இந்த அசுரர் குலத்தை என்ன முயற்சி செய்தாலும் தேவர்களின் புகழ் நிலைக்கு உயர்த்த முடியவில்லை. ஆனால் இப்போது அசுரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. தட்சனின் யாகத்தில் சிவன் பங்கேற்காத போது அவரது அனுமதியின்றி யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்கச் செய்திருக்கிறார். தேவர்கள் சக்தி இழந்துள்ள இந்த நல்ல சமயத்தில் அசுரர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்யலாம். தட்சனின் மகளும் சிவனின் பத்தினியுமான தாட்சாயணி தன் தந்தையை அசுரனாகும்படி சபித்திருக்கிறாள். அந்த தட்சணை இப்பிறவியில் நம் குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டால் இதைச் சாதித்து விடலாம். இந்த சிந்தனை ஓட்டத்தை செயல்வடிவாக்க எண்ணினார் சுக்ராச்சாரியார்.
பிரம்மாவின் புத்திரரான காஷ்யபருக்கும் அவரது தர்மபத்தனி அதிதிக்கும் பிறந்த அசுரக்குழந்தைகளை 66 கோடி பேரின் எதிர்காலம் சிறப்பாக இருக்க அவர் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்த அசுரக்குழந்தைகளில் முதலாமவன் அசுரேந்திரன் மங்களகேசினியின் தம்பதியரின் புதல்வி சுரஸையைத் தேர்ந்தெடுத்தார். இவள் சுக்கிராச்சாரியாருக்கு முகமலர்ச்சியுடன் பணி விடை செய்து வந்தவள். அவளுக்கு பல கலைகளைக் கற்றுக் கொடுத்து பெயரையும் மாயா என மாற்றிவிட்டார். அவளிடம் மாயா நம் குலம் தழைத்தோங்க வேண்டும் என்பது உன் தந்தை அசுரேந்திரனின் விருப்பம். அவர்கள் தேவர்களால் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள். இந்த அழிவைத்தடுக்க உன்னால் தான் இயலும். நாம் தேவர்களை அடக்கி நமது சாம்ராஜ்யத்தை ஈரேழு உலகிலும் நிலைநாட்ட வேண்டும். அது உன்னால் முடியும் என்றார். வியப்படைந்த மாயாவிடம் தன் திட்டத்தையும் விளக்கினார். குருநாதரின் கட்டளையை ஏற்ற மாயா தன் தந்தை அசுரேந்திரனிடம் இதுபற்றி சொல்ல அவனும் அகமகிழ்ந்து மகளை வாழ்த்தி அனுப்பினான்.
சுக்ராச்சாரியாரின் திட்டம் இதுதான். அசுரர்களின் தந்தையான காஷ்யபரை மாயா மயக்க வேண்டும். இன்னும் மிகச்சிறந்த அசுரர்கள் பலரை அவர் மூலமாக பெற வேண்டும் என்பதே அவரது திட்டம். மாயாவும் காஷ்யபர் இருந்த கானகத்திற்கு சென்றாள். தன் மாயசக்தியால் புதிய மாளிகைகளை அந்த கானகத்தில் எழுப்பினாள். அழகிய நந்தவனத்தை உருவாக்கினாள். மணம் பொங்கும் மலர்கள் அதில் பூத்தன. அந்த கானகத்தின் ஒருபகுதி அடையாளம் தெரியாமல் போனது. அந்த மாளிகையிலேயே தங்கியிருந்தாள் மாயா. அவள் எதிர்பார்த்தபடியே காஷ்யபர் அங்கு வந்தார். இந்த இடம் எப்படி இவ்வளவு அழகாக மாறியது. விஷ்ணு இங்கு வந்திருப்பாரோ? அந்த மாயவன் தான் இப்படி மாயச்செயல்கள் செய்திருப்பானோ? பிரம்மா தன் பிரம்மலோகத்தை இந்த பூமிக்கு மாற்றி விட்டாரோ? என்று மனதில் கேள்விகள் எழ ஆச்சரியத்துடன் மாளிகைக்குள் பார்த்தார். அங்கே ஒரு அழகு சுந்தரி நடமாடிக் கொண்டிருந்தாள். பூக்களில் அமரும் பட்டாம்பூச்சிகளை அவளது பட்டுக்கரங்களின் பிஞ்சு விரல்கள் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மான்போல் துள்ளித்துள்ளி விளையாடுவதைக் கண்ட காஷ்யபர் ஆஹா உலகில் இப்படி ஒரு அழகியா? இவளைப் போன்ற பேரழகியை இதுவரை பார்த்ததில்லை இனிமேலும் காண்போமா என்பது சந்தேகம் தான். இனி இப்பூமியில் ஒருநாள் வாழ்ந்தால் கூட போதும். ஆனால் இவளோடு வாழ்ந்து விட வேண்டும், என எண்ணியவராய் மாளிகைக்குள் சென்றார்.