ஐனகர் சிவவில்லை முறிப்பவர்க்கே சீதையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்ததும் சிவவில்லை பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். அறுபதினாயிரம் பேர் வில்லைச் இழுத்துகொண்டு வந்து வைத்தார்கள். அங்கு கூடியிருந்த மன்னர்கள் சிவவில்லை பார்த்தவுடன் அறுபதினாயிரம் பேர் சேர்ந்து இழுத்து வரும் வில்லை தூக்குவதற்கே கடினாமாக இருக்குமே என்று ஆற்றலின்றி அமர்ந்து இருந்தார்கள். ஒரு மன்னன் வில்லை பார்த்துவிட்டு வந்து ஆசனத்தில் அமர்ந்தான். அருகில் இருந்த மன்னன் வில்லை தூக்க வில்லையா என கேட்டான். அதற்கு அவன் வில்லை பார்க்கதான் போனேன் நான் வில்லை தூக்கப் போகவில்லை என்றான். இன்னொருவன் வில்லிடம் சென்று கைகளில் பிடிக்க முயற்சி செய்தான் அவன் கைகளுக்கு அந்த வில் அடங்கவில்லை. மற்றொருவன் வில்லை தூக்க முயன்று முடியாமல் அவமானத்துடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். ஒருவன் எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் என்றான். இன்னொருவன் சீதை எனக்கு தங்கை போன்றவள் என்றான். இவ்வாறு ஒரு காரணம் காட்டி எவரும் வில்லை வளைப்பதற்கு முன் வரவில்லை. இந்த வில்லை வளைத்தால் தான் பெண் தருவேன் என்பது முட்டாள் தனமாகும். இந்த வில்லை யாராலும் வளைக்க முடியாது. இந்த வில்லை வளைக்கப் போகின்றவனும் இல்லை. அதேபோல் சீதைக்கும் திருமணமும் ஆகாது என்று அங்கு கூடியிருந்தவர்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.
ஜனகரின் புரோகிதரான சதானந்தர் ராமரிடம் வந்து தற்போது ஜனகர் சீதையின் திருமணம் தடைப்பட்டு விடுமோ என பயம் கொண்டு இருக்கிறார். தாங்கள் இந்த சிவதனுசை வளைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார் சதானந்தர். விஸ்வாமித்ரர் ராமனைக் கடைக்கண்ணால் நோக்கி இந்த சிவதனுசு பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வலிமை இழந்து உள்ளது. இந்த தனுசு ராவணனை அழிக்க உதவாது. உனக்கு பரசுராமர் கோதண்டத்தை தருவார். இந்த வில்லை வளைக்க வேண்டாம். ஒடித்துவிடு என்று கூறினார். விஸ்வாமித்ரருடைய பார்வையின் பொருளைப் புரிந்து கொண்டு ராமன் அந்த சிவதனுசை நோக்கினான். தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தான். ராமர் சிவ்வில்லை முறிப்பதைக்காண தேவர்கள் வந்து ஆரவாரம் செய்து ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ராமர் வீரத்துடன் நடந்து சென்று அந்த வில்லை எடுத்து நாணைப் பிடித்து இழுத்தார். ஒரு நொடியில் வில் படார் என்று ஒடிந்தது. வில் உடைந்த ஓசையினால் பூவுலகம் எல்லாம் அதிர்ந்தன. எட்டுத் திசைகளிலும் வில் உடைந்த ஓசை கேட்டது. ராமருக்கு தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள். இதை பார்த்த ஜனகருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. மிதிலாபுரியிலுள்ள அனைவரும் ஆடி பாடி கொண்டாடினார்கள். என் உயிரினினும் மேலான என் மகள் சீதையை ராமருக்கு தருகிறேன் என்றார் ஜனகர். வில் உடைந்த சத்தம் அண்டம் முழுவதும் கேட்ட போதிலும் சீதை ராமரை நினைத்து மனமுருகி நினைத்துக் கொண்டிருந்ததாள் சீதைக்கு கேட்கவில்லை. அப்பொழுது நீலமாலை என்னும் தோழி ஓடி வந்து சீதையிடம் ராமன் வில்லை முறித்த செய்தியைக் கூறுகிறாள். அன்று விசுவாமித்திர முனிவருடன் மிதிலைக்கு வந்த ராமன் தான் வில்லை முறித்தான் என்றாள். நான் அன்று கன்னி மாடத்தில் இருந்து பார்த்த அந்த கார்வண்ணன் தான் வில்லை முறித்தவன் என்ற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தாள் சீதை.