தமிழகத்தின் கலையழகு மிக்க கோயில்களில் திருவிடைமருதூருக்கு சிறப்பிடம் உள்ளது. இங்கிருக்கும் மகாலிங்கேசுவரர் சன்னதி முன்பு இருக்கும் பாவை விளக்கின் நேர்த்தி அளவிட முடியாத அழகுடையது. சிறந்த வேலைப்பாடுகள் உடைய புடவையுடுத்தி சந்திர பிரபை சூரிய பிரபை நெற்றிச்சுட்டி நாகசடை வில்லை தோள்வளை பூமுகம் முத்தாரம் காரை அட்டிகை கைவளை கடகம் இடுப்பணி கால் கொலுசு மெட்டி என்று தலை முதல் கால் வரை மங்கல ஆபரணங்கள் பூட்டி முகம் கனிந்த சிரிப்புடன் நின்றிருக்கும் பாவை விளக்கின் அழகு கண் கொள்ளாதது. அவ்விளக்கிலிருக்கும் பாவை பற்றிய குறிப்புகள் அப்பீடத்தின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய அரசு குலத்தை சேர்ந்த அம்முனு பாய் என்பவர் தான் இந்த பாவை விளக்குப் பெண்மணி. பிரதாப சிம்மன் என்னும் தஞ்சை அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசனின் மாமன் மகளாகிய அம்முனு லட்ச தீபம் ஏற்றி மகாலிங்கேஸ்வரர் அருள் பெற்றதாக அதில் குறிப்புள்ளது. இதன் மூலம் அம்முனு தான் விரும்பிய மாமன் மகனை திருமணம் செய்துக் கொண்டு தன் வேண்டுதல் வழி தன்னையே பாவை விளக்காக சிலை செய்து இறைவனுக்கு சமர்பித்ததாக யூகங்கள் இருந்தன. ஆனால் உண்மை கதை வேறு. குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா சிலையின் கீழ் பொறிக்கப்பட்டிருந்த குறிப்புகள் துணைக் கொண்டு திருவிடைமருதூர் அரச குடும்பம் குறித்த ஏடுகள் மற்றும் தஞ்சை மராட்டியர் நூலகத்தில் கிடைத்த ஏடுகள் மூலம் அறிந்த உண்மை கதையை தனது ஆய்வின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். அமரசிம்மன் என்னும் மராட்டிய அரசனின் மகன் பிரதாப சிம்மன். அவர்கள் தஞ்சையில் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து திருவிடைமருதூர் மாளிகையில் வசிக்கின்றார்கள். முன்னரே மணமாகி குழந்தை இல்லாத பிரதாபசிம்மன் தன் மாமன் மகள் அம்முனு பாய் மீது காதல் கொள்கிறான். அம்முனுவும் பிரதாப சிம்மனை உயிருக்குயிராய் நேசிக்கிறாள். இவர்கள் அன்பு உற்றார்களால் அங்கீகரிக்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதாப சிம்மன் இறக்கிறான். பிரதாப சிம்மனை தன் மனதில் கணவராக எண்ணியிருந்த அம்முனு துறவு கொள்கிறார். தன் மனம் விரும்பியவனின் ஆத்ம மோட்சத்திற்காக மகாலிங்கேஸ்ரர் சன்னதியில் லட்ச தீபம் ஏற்றி அதில் ஒரு விளக்காக தன் மங்கல கோலத்தை வார்க்க செய்து வழிப்படுகிறாள் அம்முனு அம்மிணி. பின் தன் ஆயுள் வரை மகாலிங்கேஸ்வரர் ஆலய பணியில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுவதும் எண்ணற்ற பாவை விளக்குகள் உள்ளன. அவற்றிற்கு பின் இன்னும் எத்தனையோ கதைகள் அறியப்படாமல் இருக்கிறது.