ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 21

அனுமன் கூறிய அனைத்தையும் கேட்ட பெண் தவசி இந்த குகையின் சக்தி உங்களுக்கு தெரியவில்லை. இதில் உள்ளே வந்த அந்நியர்கள் மறுபடியும் உயிருடன் வெளியில் செல்ல முடியாது. இங்கேயே வாழ்ந்து மாண்டு போவார்கள். இந்த குகையை விட்டு உங்களால் வெளியே போக முடியாது. நீங்கள் வந்த காரணம் பெருங்காரியமாக இருப்பதால் இங்கிருந்து வெளியேற உங்களுக்கு உதவி செய்கிறேன். நீங்கள் அனைவரும் கண்களை முடிக்கொள்ளுங்கள். எனது தவ வலிமையால் நீங்கள் சென்று சேர வேண்டிய சரியான இடத்திற்கு உங்களை சென்று சேர்க்கிறேன் என்றார். வானரங்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டனர். தவஸ்வி அவர்கள் அனைவரையும் தன் தவ வலிமையால் நாட்டின் எல்லையிலுள்ள ஒரு கடற்கரைக்கு கொண்டு சேர்த்தாள். அனைவரும் ஓர் கடற்கரையில் இருப்பதை உணர்ந்தார்கள்.

அனுமனிடன் அப்போது ஒரு வானரம் பேச ஆரம்பித்தான். சுக்ரீவன் நமக்கு கொடுத்த ஒரு மாத காலம் நிறைவடைந்தது. சீதையை பற்றிய எந்த தகவலும் அறிந்து கொள்ளாமல் இப்போது நாம் கிஷ்கிந்தைக்கு சென்றால் சுக்ரீவன் நமக்கு மரண நண்டனை விதிப்பான். எனவே நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒர் உபாயம் சொல்லுங்கள் என்று கூறினான். வானரம் சொன்னதை ஆமோதித்த அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமருடைய ஆணைக்கு பயந்து தான் சுக்ரீவன் எனக்கு யுவராஜா பட்டத்தை தர ஒப்புக் கொண்டான். சுக்ரீவனுக்கு என் மேல் அன்பு கிடையாது. அங்கே போய் உயிரை விடுவதை விட தவஸ்வி சுயம்பிரபாவினுடைய குகைக்குள் மறுபடியும் சென்று அங்கேயே சுகமாக வாழ்வோம். அங்கு நமக்கு வேண்டியது அனைத்தும் இருக்கிறது. அங்கு சுக்ரீவன் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாது. நாம் சந்தோஷமாக ஆயுள் முழுவதும் காலம் கழிக்கலாம் என்று கூறினான். அங்கதனை சொன்னதே சரி என்று பல வானரங்கள் கூறினார்கள்.

அனுமனுக்கு இந்த யோசனை சரி என்று தோன்றவில்லை. ஏன் இப்படி தகாத வார்த்தைகளை பேசுகிறீர்கள். நம்முடைய குடும்பங்களை விட்டுவிட்டு இந்த குகைக்குள் சாப்பிட்டு தூங்கி உயிர் வைத்துக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சுக்ரீவனுக்கு அங்கதனின் மேல் விரோதம் ஒன்றும் இல்லை. சுக்ரீவன் மிகவும் நல்லவன் அவனை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் சொல்வது போல் நாம் இப்போதிருந்து இந்த குகையில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தால் லட்சுமணனுடைய கோபத்தில் வரும் ஓர் அம்பிற்கு இந்த குகை தாங்காது. லட்சுமணன் ஒரு அம்பிலேயே இந்த குகையை பொடிப் பொடியாகி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவான். ஆகையால் இந்த யோசனையை விடுங்கள். சுக்கீரவிடத்தில் நடந்தவற்றைச் சொல்லி நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்றார் அனுமன்.

அனுமன் சொன்னதை கேட்ட அங்கதன் சுக்ரீவனுக்கு என் மீது இரக்கம் கிடையாது. வாலியை எப்படி கொன்றான் யோசித்துப் பாருங்கள். நான் உயிருடன் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி என்னை அழிப்பதே அவருடைய எண்ணம். எந்த அரசனும் தனது ராஜ்யத்துக்கு இடையூறாக இருக்கும் ஒருவரை எப்படி அழிப்பது என்று எண்ணுவார்கள். சுக்ரீவன் அது போலவே என்னை கொல்வான். என் தாய் ஏற்கனவே வாலியை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போது என்னையும் சுக்ரீவன் கொன்று விட்டால் என் தாய் என்ன ஆவாள் என்று எனக்கு தெரியவில்லை நான் என்ன செய்வேன் என்று கதறி அழ ஆரம்பித்தான். கிஷ்கிந்தைக்கு சென்று உயிரை விடுவதை விட நான் இங்கேயே என் உயிரே விடுகிறேன் என்று சொல்லி தர்ப்பைப் புல்லை கடல் மணலில் பரப்பி அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு உயிர் நீக்கும் சங்கல்பம் செய்து கொண்டு கிழக்கு முகமாக பார்த்து அங்கதன் அமர்ந்து கொண்டான். யுவராஜன் செய்த காரியத்தை கண்ட பல வானரங்களும் தாங்களும் அப்படியே உயிரை விடுகிறோம் என்று சங்கல்பம் செய்து கொண்டு அங்கதன் பின்னே அமர்ந்து விட்டார்கள்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 20

அனுமனும் அங்கதனும் அங்கே ஒரு பெரிய குகையை கண்டார்கள். இந்த குகைக்குள் இருந்து பல வகைப் பறவைகள் சந்தோசமாக வெளிவந்து கொண்டிருந்தன. குகைக்குள் இருந்து நல்ல வாசனையோடு காற்று வீசுவதை பார்த்து இந்த குகையில் தண்ணீர் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளே செல்வோம் வாருங்கள் என்று கூறினார்கள். குகைக்குள் இருட்டாக இருந்தது ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தால் வருந்திய வானரங்கள் வெகுதூரம் இருட்டிலேயே சென்றார்கள். குகையின் இறுதியில் வெளிச்சத்துடன் மிக ரம்யமான வனத்தை கண்டார்கள். மிக அதிசயமான தங்கத்தால் ஆன மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தை கண்டார்கள். அங்கே ஓரிடத்தில் மரவுரி தரித்த ஒரு பெண் தவஸ்வியை கண்டார்கள். அவரின் முகத்தில் இருந்த தேஜஸை பார்த்து வானரங்கள் நடுங்கினார்கள்.

அனுமன் அவரிடம் சென்று வணங்கினான். தாயே நாங்கள் சோர்வினாலும் தண்ணீர் தகத்தினால் உள்ளே வந்தோம். தங்களைக் கண்டு எங்கள் கூட்டத்தினர் பயப்படுகின்றார்கள். தங்களைப் பற்றியும் இந்த விசித்திர குகையைப் பற்றியும் தாங்கள் சொல்லி எங்கள் வானர கூட்டத்தின் பயத்தை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த பெண் தவஸ்வி நீங்கள் அனைவரும் மிகவும் களைப்பாகவும் பசியுடனும் இருக்கின்றீர்கள். முதலில் உங்கள் பசி தாகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு பேசலாம் என்று அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். அனைவரும் பசியாறி மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்பொது தவஸ்வி பேச ஆரம்பித்தாள். இந்த அழகிய அரண்மனை வானவர்களுடைய விஸ்வகர்மா மயன் கட்டியது. பிரம்மாவினால் சுக்ராச்சாரியாருக்கு உபதேசிக்கப்பட்ட சிற்பக் கலையை சுக்ராச்சாரியாரிடம் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து நன்கு கற்றவன். இந்த அரண்மனையை அவன் கட்டி வெகுகாலம் இங்கே வசித்து வந்தான். ஒரு முறை இந்திரன் மேல் ஏற்பட்ட பகையின் காரணமாக இந்திரன் அவனை வதம் செய்து விட்டான். அதன்பின் இந்த பொன்மயமான அரண்மனையை பிரம்மா ஹேமை என்பளுக்கு கொடுத்து விட்டார். இந்த இடத்திற்கு அவளே உரிமையாளர். இப்போது அவள் தேவலோகம் சென்று இருக்கிறாள். எனது பெயர் சுயம்பிரபா. இந்த இடத்தை காவல் காத்துக் கொண்டிருக்குக்கிறேன். இவ்வளவு பெரிய கூட்டமாக வந்திருக்கும் நீங்கள் யார் உங்கள் காரியம் என்ன ஏன் இந்த மாதிரி காடுகளில் திரிந்து களைத்து இருக்கின்றீர்கள் என்று கேட்டாள்.

அனுமன் பேச ஆரம்பித்தார். தசரத குமாரன் ராமர் இந்த உலகத்திற்கு அதிபதியானவர் தன் தம்பி மற்றும் மனைவியுடன் தன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக ராஜ்ய பதவியை விட்டு காட்டிற்குள் வனவாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராட்சசன் ஒருவன் ராமருடைய மனைவி சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். சீதையை தேடிக் கொண்டு ராமரும் லட்சுமணனும் வந்தார்கள். வன ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனானான். ராமருக்காக சீதையை தேடும்படி சுக்ரீவன் ஆணையிட்டு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தான். அவர் இட்ட ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைத்து காடுகளிலும் குகைகளிலும் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாகத்தாலும் பசியாலும் சோர்வினாலும் நாங்கள் இந்த குகைக்குள் வந்து சேர்ந்தோம். குகைக்குள் நீண்ட நாட்களாக தண்ணீரை தேடிக்கொண்டு இருந்ததில் சுக்ரீவன் எங்களுக்கு விதித்த மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் நாங்கள் சீதையை கண்டு பிடிக்கவில்லை. சுக்ரீவன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இட்ட வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாத காரணத்தினால் எங்களைக் கொன்று விடுவார் தயவு செய்து நாங்கள் விரைவாக வெளியில் செல்வதற்கான வழியை சொல்லுங்கள் என்று அனுமன் தவஸ்வியிடம் சொல்லி முடித்தார்.

ஸ்ரீரங்கம் வெள்ளையம்மாள்

750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. ஸ்ரீரங்கத்தையும் ஸ்ரீஅரங்கன் திருக்கோவிலையும் காக்க ஸ்ரீரங்க படைகளும் மக்களும் பல நாள் துலுக்கர்களுடன் போரிட்டனர். கோயிலுக்குள் புகுந்து விட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான பொன் வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். மதிப்பு மிக்க பொக்கிஷங்களைத் தேடி அங்கேயே சில காலம் தங்கி விட்டார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் தப்பி பிழைத்த ஸ்ரீரங்கத்து மக்கள். அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்க சம்மதித்து தளபதிக்கு செய்தி சொல்லி அனுப்பினாள். அன்று வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு இருட்டில் தனியாகச் சென்றாள். ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் கோயிலைக் கைப்பற்ற கொடூரமாக போரிட்ட களைப்பில் அதிகமாக மது அருந்தி மயங்கிக் கிடந்தனர். இதனால் பலரை எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.

ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்த தளபதி யாரது என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான். வணக்கம் தளபதியாரே கும்பிட்டாள் வெள்ளையம்மாள். நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே என்று அவளருகே வந்தான். தளபதியே இது அரங்கனின் வீடு. இங்கே என் அருகே நீங்கள் வராதீர்கள். என் இல்லம் வாருங்கள். இப்போது ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன் என்றாள். என்ன செய்தி என்றான் தளபதி. இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள். என்று கேட்டாள். எதிரிகளை வெற்றிகொண்டு செல்வங்களையும் பெண்களையும் மற்றும் அழகிகளையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம் என்றான் தளபதி. வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டாள். விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம் என்றான் தளபதி. நானும் அதற்காகவே வந்தேன். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும் முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். அதனை சொல்ல வேண்டுமானால் ஒரு நிபந்தனை அதை நிறை வேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன் என்றாள் வெள்ளையம்மாள். எங்கே இருக்கிறது என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன் என்றான் தளபதி.

புதையலை நான் தனியாக சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன் பிறகுதான் நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றாள். இவ்வளவு தானா சரி வா நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். நீ ஆசைப்பட்ட நகைகளைநீயே எடுத்துக் கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று சந்தோஷமாக சிரித்தான். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள் என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள். இங்கே தான் இருக்கிறது. ஆனால் மேலே போக வேண்டும் என்று அண்ணாந்து பார்த்தாள். சீக்கிரம் வா போகலாம் உடனே நான் புதையலைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்பட்டான். சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக் கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி அற்புத தரிசனம் வெள்ளையம்மா இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போது தான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள் என்று கேட்டான். அதோ அங்கே பாருங்கள் என்று கை நீட்டி ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தை காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான். கீழே தான் பொக்கிஷம் இருக்கிறதா பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய் என்று சொல்லி வாய் மூடுவதற்குள் சிணுங்கலாய் பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே தங்களது படைத் தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையாமல் ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி குவிந்த கரத்துடன் நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள். அவளுடைய உயிர் பிரிந்தது.

தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப் பெற்றனர். மேலும் ஸ்ரீரங்கத்தை காக்க வெளியிலிருந்து வந்த படைகளும் சேர்ந்து கொண்டன. தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள் பொன் பெண்களை அப்படியே விட்டு உயிர் பிழைத்த வீரர்கள் தப்பிஓடினர். ஸ்ரீரங்கமாநகரையும் கோவிலையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாக அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம் இப்போது வெள்ளைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளையம்மாள் தனது உயிர் பிரியும் தறுவாயில் இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும் போது கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும் திருக்கொட்டாரத்தில் இருந்து தீர்த்தம் மலர் மாலைகள் திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 19

ராமர் சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். இந்த உலகம் முழுவதும் ஒவ்வொரு திசைகளில் இருக்கும் நாடுகளையும் அதன் வழிகளையும் நேரில் பார்த்தது போல் உன் வீரர்களுக்கு விளக்கிச் சொன்னதை பார்த்தேன். அத்தனை நாடுகளையும் அதன் வழிகளையும் நீ எப்படி அறிந்து வைத்திருக்கிறாய். எப்போது அந்த நாடுகளுக்கு சென்றாய் என்று கேட்டார். அதற்கு சுக்ரீவன் வாலியால் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டதும் நான் செல்லும் இடங்கலெல்லாம் வாலி என்னை துரத்திக்கொண்டே வருவான். அவனுக்கு பயந்து உலகம் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறேன். இதன் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் காடுகள் அனைத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு நாள் மதங்க மகரிஷி ஆசிரமத்தைப் பற்றி அறிந்தேன். இந்த பிரதேசத்தில் வாலி நுழைந்தால் மகரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும் என்ற காரணத்தினால் இங்கு வர மாட்டான். மீறி வந்தாலும் எனக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று அங்கு பலகாலம் ஒளிந்திருந்தேன் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் சுக்ரீவன். சுக்ரீவன் வானரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஒரு மாத காலம் செல்ல ஆரம்பித்தது.

ராமர் இருக்குமிடத்தில் இருந்து சீதையை தேடிச் சென்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். வடக்கு கிழக்கு மேற்கு பக்கம் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தார்கள். காடுகள் மலைகள் ஆறுகள் நகரங்களிலும் ஜாக்கிரதையாக தேடிப் பார்த்து விட்டோம். சீதையை எங்கும் காணவில்லை. எங்களுக்கு சீதையை கண்டு பிடிக்கும் பாக்கியம் இல்லை. ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கியே சென்றிருக்கிறான். தென் திசை சென்ற அனுமனும் திரும்பி வரவில்லை. விரைவில் அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று எண்ணுகிறோம் என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தார்கள். வானரங்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராமர் அவர்களின் முயற்சியில் திருப்தி அடைந்தார்.

ராமர் தெற்குப் பக்கம் சென்ற அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று அனுமனின் வருகைக்காக காத்திருந்தார். தெற்குப் பக்கம் தேடிக் கொண்டு சென்றவர்கள் விந்தைய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்கள் எங்கும் சீதையை காணவில்லை. ஒரு பெரிய பாலைவனத்தை கண்டார்கள். அங்கும் தேடிப் பார்த்துவிட்டு அதனை தாண்டி வேறு இடம் சென்றார்கள். அங்கு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கனை கண்ட வானரங்கள் அவன் தான் ராவணனாக இருக்க வேண்டும் ராவணன் இங்கிருப்பதால் சீதை இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அரக்கனை நோக்கி சென்றார்கள். ஒரு பெரிய வானர கூட்டம் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அரக்கன் இன்று நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோசமாக அவர்களை பிடிக்க தாவினான். அங்கதன் அரக்கன் மேல் பாய்ந்து ஒர் அறை அறைந்தான். அந்த அடியை தாங்க முடியாமல் அரக்கன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான். ராவணன் இறந்தான் என்ற மகிழ்ச்சி அடைந்த வானரங்கள் அந்த காடு முழுவதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதை அங்கு இருப்பதற்காக ஒரு அறிகுறியும் அங்கு காணவில்லை. பிறகு வேறு இடத்தை தேடி சென்றார்கள். எவ்வளவு தேடியும் பயனில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு அமர்ந்து விட்டார்கள். அங்கதனும் அனுமனும் தைரியம் சொல்லி வானரங்களை உற்சாகப் படுத்தினார்கள். உற்சாகமடைந்த வானரங்கள் மறுபடியும் தேடி சென்றார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தது. சீதையைக் காணவில்லை. சுக்ரீவன் கடுமையான தண்டனை விதித்து விடுவானே என்ற பயத்தில் தேடிக் கொண்டே சென்றவர்கள் பசியாலும் தாகத்தாலும் சோர்வடைந்தனர்.

அமைதி

ஒரு முனிவரின் ஆசிரமத்திற்கு அரசர் ஒருவர் வந்து தங்கினார். அன்று இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த ஆசிரமத்தை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. நாய்கள் வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன.
அரசரால் தூங்கவே முடியவில்லை. அரசருக்கு கோபம் வந்தது. நாய்களின் சத்தத்திற்கு நடுவில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது என்று புலம்பினார்.

முனிவர் பொறுமையுடன் பதில் கூறினார். அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நாய்கள் உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ இங்கு கூடவில்லை. இங்கு அரசர் தங்கி இருப்பது நாய்களுக்கு தெரியாது. அதற்கான அறிவும் அந்த நாய்களுக்கு கிடையாது. அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள் தூங்குகிற வேலையைப் பாருங்கள் என்றார். நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால் நான் எப்படி தூங்க முடியும் என்றார் அரசர்

அதற்கு முனிவர் நீங்கள் அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அது போல் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல. உங்கள் எதிர்ப்பு உணர்வு மட்டுமே. நீங்கள் சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள். இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவதும் இல்லை. நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால் குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான் என்றார் முனிவர். உதவாக்கரை யோசனை என்று மனதுக்குள் பழித்தபடி போனார் அரசர். ஆனால் காலையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அரசர். ஆச்சரியம் எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன் என்றார் அரசர்.

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம் என்பது அவரவர்களால் அறியப்படுகிற ஒரு பொருள். இன்று வரை யாராலும் அதைப்பற்றி முழுவதுமாக சொல்ல முடியவில்லை. சொல்ல முடியாததன் காரணம் மனிதன் நூறு வருடங்கள் வாழ்கிறான் என்றால் ஆன்மாவின் தத்துவமோ கோடிக்கணக்கான வருடங்களாக இந்த உலகத்தில் வாழ்கிறது.

ஆத்ம ஞானத்ததைப் பற்றி கருத்துக்கள் சொல்வது குருடர்கள் யானையைத் தொட்டு தடவிப் பார்த்து தங்களது கருத்துக்களை சொல்வது மாதிரி தான் இருக்கும். யானையின் காலைத் தொட்டு பார்த்தவன் தூண் மாதிரி இருப்பதாகச் சொல்வான். அதன் காதை தொட்டு பார்த்தவன் முறம் மாதிரி இருப்பதாகச் சொல்வான். காதை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். காலை தொட்டுப் பார்த்தவன் சொல்வதும் நிஜம்தான். ஆனால் காதும் காலும் மட்டும் யானையாகாது. அவர்கள் கண்டது ஆத்ம ஞானத்தின் ஒரு பகுதி மட்டுமே.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 18

ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். இந்த கோடிக்கணக்கான அபூர்வ பலம் கொண்ட வானர சேனைகள் அனைவரும் உங்களுடைய சேனைகளை. நீங்கள் இடும் ஆணையை குறைவில்லாமல் செய்யும் பலம் மிக்கவர்கள். இவர்கள் அனைவரையும் உங்களுடைய சேனைகளாக கருதி தற்போது தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை உத்தரவிடுங்கள் அவர்கள் செய்து முடிப்பார்கள் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன். அதைக் கேட்ட ராமர் மகிழ்ச்சியடைந்து சுக்ரீவனை அணைத்துக் கொண்டார். ராமர் பேச ஆரம்பித்தார். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சீதை எங்கே இருக்கின்றாள்? அவளை தூக்கிச் சென்ற ராவணன் எங்கே இருக்கின்றான்? என்பதே கண்டு பிடிக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள வானர படைகளுக்கு உத்தரவிட வேண்டியது வானரங்களின் அரசனான நீ தான் சுக்ரீவா. நானும் லட்சுமணனும் அல்ல. எல்லாம் அறிந்து செய்ய வேண்டியதைச் செய்ய தெரிந்தவன் நீ உன் திட்டப்படியே நடக்கட்டும் என்றார் ராமர்.

ராமரின் உத்தரவுப்படி சுக்ரீவன் தனது சேனாதிபதிகளுடன் ஆலோசித்து ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவனை நியமித்து எட்டு திசைகளுக்கும் சென்று சீதையை தேட ஆணையிட்டான். சுக்ரீவன் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். நீ சீதையை கண்டு பிடிக்கும் ஆற்றல் உடையவன். உன் தந்தையின் வேகமும் நல்ல பலத்தையும் நீ பெற்றிருக்கிறாய். பலம் அறிவு உபாயம் அனைத்தும் உன்னிடத்தில் நிறைவுடன் இருக்கின்றது. எனவே சீதையை தேடும் இந்த பொறுப்பை உன்னிடமும் ஒப்படைக்கிறேன். உன்னைத் நான் இந்தப் பெரும் காரியத்தில் நம்பியிருக்கிறேன். உனக்குச் சமமாக வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ அங்கதனுடன் சென்று சீதை எங்கிருக்கிறாள் என்பதை அறிந்துவா என்று அனுமனுக்கு ஆணை பிறப்பித்தான் சுக்ரீவன். வடக்கே சதபலி என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். கிழக்கு பக்கமாக வினதன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். மேற்கே சுஷேணன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். தெற்கே அனுமன் அங்கதன் தலைமையில் சென்றார்கள். எப்படியாவது சீதையை கண்டுபிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் அதற்கான மன வலிமை உடல் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் கட்டாயம் திரும்பி வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிகக் கண்டிப்பாக ஆணையிட்டான் சுக்ரீவன். எட்டு திசைகளில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி செல்ல வேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தெளிவாக வானர கூட்டங்களுக்கு விளக்கிச் சொல்லி அனுப்பினான். எட்டு திசைகளுக்கும் வானர கூட்டங்கள் புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் எட்டு திசைகளுக்கும் பிரிந்து சென்றனர்.

ராமர் சீதையை கண்டு பிடிக்கும் காரியத்தை அனுமன் சரியாக செய்து முடிப்பார் என்று எண்ணினார். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதனை நீக்கி செய்து முடிப்பான் அனுமான் என்பதையும் உணர்ந்தார். அனுமனை தன்னருகே அழைத்தார் ராமார். தனது மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தார். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த மோதிரத்தை அவளிடம் நீ காட்டு இந்த மோதிரத்தை பார்த்தவுடன் நீ என்னுடைய தூதன் என்பதை அவள் அறிந்து கொள்வாள். விரைவில் அவளை மீட்பேன் என்ற செய்தியை அவளிடம் சொல்லி அவள் இருக்குமிடத்தை விரைவில் அறிந்துவா. நான் சீதையை மறுபடியும் அடையும்படி செய்வாயாக என்று ராமர் அனுமனிடம் கூறினார். விரைவில் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு தங்களை வந்து சந்திக்கிறேன் என்று ராமரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அனுமான்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 17

ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்பதே அறிந்த சுக்ரீவன் ராமரே நினைத்து மிகவும் பயந்தான். லட்சுமணனை சகல மரியாதையுடன் உள்ளே அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிட்டான். அந்தப்புரத்தின் உள்ளே வந்த லட்சுமணன் அங்கு ஆட்டம் பாட்டம் இசையுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்டு கோபம் கொண்டான். தனது வில்லின் நாணை இழுத்து சத்தம் எழுப்பி தனது கோபத்தை வெளிக் காட்டினான். அந்த சத்தம் கிஷ்கிந்தை நகரத்தையே நடுங்கச் செய்தது. நாணின் சத்தத்தை கேட்டதும் சுக்ரீவன் பயந்து எழுந்தான். லட்சுமணன் உண்மையில் மிகவும் கோபமாக வந்திருக்கிறான் என்ற அபாயத்தை உணர்ந்து தாரையிடம் உடனடியாக சென்று லட்சுமணனை சமாதானப்படுத்தும் படி கேட்டுக் கொண்டான். உலக அறிவிலும் சாமர்த்தியமான பேச்சிலும் தாரைக்கு நிகர் யாருமில்லை. அவள் லட்சுமணனிடம் சென்று மெதுவாக பேச ஆரம்பித்தாள். வெகு நாட்கள் பகைவன் தொந்தரவுடன் சுகங்கள் எதையும் அனுபவிக்காமல் துக்கத்துடனேயே வாழ்ந்து வந்த சுக்ரீவன் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த ராஜ்யத்தை பெற்றதும் அதில் உள்ள சுகங்களில் புத்தி மயங்கி அனுபவித்து வருகின்றான். அவன் மேல் கோபம் கொள்ள வேண்டாம். மயக்கத்தில் மூழ்கியிருக்கும் சுக்ரீவனை தெளிவுடன் இருக்கும் தாங்கள் மன்னிக்க வேண்டும். தங்களுக்கு கொடுத்த வாக்கை அவர் மறந்து விடவில்லை. பல இடங்களில் உள்ள வீரர்களை எல்லாம் இங்கு வந்து சேர சுக்ரீவன் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றான். அவர்கள் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். பிறகு சீதையைத் தேடும் வேலையையும் ராவணனை எதிர்த்து வெற்றி வரும் வேலையும் நடைபெறும். சுக்ரீவனை சந்தேகப்பட வேண்டாம். இப்போது அரசனை பார்க்க தாங்கள் உள்ளே வரலாம் என்று லட்சுமணனை அழைத்துச் சென்றாள். தாரையின் பேச்சால் கோபம் குறைந்த லட்சுமணன் உள்ளே நுழைந்ததும் சுக்ரீவன் தனது ஆசனத்தில் இருந்து இறங்கி வந்தான். முதலில் நான் எந்த குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டு பேசத் துவங்கினான்.

ராமருடைய நட்பினாலும் வீரத்தாலும் நான் இந்த ராஜ பதவியை அடைந்தேன். ராமன் எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். ராமருடைய பராக்கிரமத்தை அறிந்தவன் நான். என் துணை இல்லாமலேயே பகைவர்களை அழிக்கும் பலம் ராமருக்கு உண்டு என்று எனக்கு தெரியும். நான் என் சேனைகளுடன் அவரை பின்பற்றி செல்வேன். சீதையை தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும். நான் செய்த தாமதத்தை மன்னித்து விடுங்கள் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டான். இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த லட்சுமணன் ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து இந்த செய்தியை சொல்லி அவரின் துக்கத்தை போக்குங்கள் என்று லட்சுமணன் சுக்ரீவனிடத்தில் கேட்டுக் கொண்டான். சுக்ரீவனும் லட்சுமணனும் ராமர் இருக்குமிடம் சென்று அவரின் கால்களில் விழுந்து வணங்கி இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை திருத்திப் படுத்தினான்.

ராமர் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார். உன்னை போன்ற நண்பன் உலகத்தில் வேறொருவன் இல்லை. மேகங்கள் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது போல் என் உள்ளத்தை குளிரச் செய்துவிட்டாய். உன் நட்பை பெற்றது என் பாக்கியம். இனி ராவணன் அழிவது நிச்சயம் என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுக்ரீவன் சொல்லி அனுப்பிய அனைத்து வானர கூட்டங்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நிறங்களும் வடிவங்களும் கொண்ட வானரங்கள் மொத்தமாக வந்ததில் எழுந்த தூசியானது வானத்தை மறைப்பது போல் இருந்தது.

பர்வதமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சிவன் தலம் பர்வதமலை. இம்மலை மிகவும் தொன்மையானது. திரிசூலகிரி நவிரமலை சஞ்சீவிகிரி மல்லிகார்ஜுன மலை கந்தமலை தென் கயிலாயம் என்று வேறு பல பெயர்களும் உள்ளது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப் பற்றியும் அப்பகுதி மக்களைப் பற்றியும் குறிப்பிடும் ஒரு சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப் பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நூல் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப் பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது. இம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர் பிரமராம்பிகை கோவில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

இராவணனுக்கு எதிரான போரில் பிரம்மாஸ்திரத்தால் மயங்கிச் சரிந்த லட்சுமணனை காப்பாற்ற இமயத்திலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த போது அதிலிருந்து வீழ்ந்த சிறு பகுதியே இந்த பர்வதமலை. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்ற காரணத்தினால் இந்த மலைக்கு சஞ்சீவி மலை என்ற பெயரும் உண்டானது. ஒருமுறை அம்பிகை சிவனிடம் பூவுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆகிய நான்கையும் பெறுவதற்கு வழிபட வேண்டிய தலம் எது என்று கேட்டாள். சிவபெருமான் அம்பிகை கேட்ட கேள்விக்கு பர்வத மலையை அடையாளம் காட்டினார். உலக மக்களின் நலனுக்காகத் அம்பாள் தவமியற்றிய இந்த மலை அன்னை பார்வதியின் திருப்பெயரை கொண்டு பர்வத மலை என்று போற்றப்படுகிறது. அன்னை பார்வதி தவமியற்றியதன் காரணமாக மலைகள் அனைத்திலும் உயர்வான மலை என்ற பொருளும் பர்வத மலைக்கு உண்டு. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை மலைகளின் அரசன் என்று பொருள்.

மூலவர் மல்லிகார்ஜுனர் என்ற காரியாண்டிக் கடவுள் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். பக்தர்களே இறைவனை தொட்டு அபிஷேகங்கள் செய்து பூஜைகள் செய்யலாம். இறைவனை இப்போதும் பௌர்ணமி அன்று இந்திரன் வந்து விழிபட்டு செல்கிறான் என்கிறது கோவில் புராண வரலாறு. அம்பாள் பிரம்மராம்பிகை பர்வத ராணி என்ற பெயரில் மூலவருக்கு இடது புறம் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இரவு அம்பாள் கண்ணத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்பாள் உயரமாக காட்சி தந்து நேரில் வருவது போல் கோவில் கட்டிட அமைப்புகள் உள்ளது. சிவன் சந்நிதிக்கு வலப்புறம் உள்ள சந்நிதியில் விநாயகப் பெருமானும் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியரும் வீரபத்திரர் தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றனர். வீரபத்திரர் துர்க்கையம்மன் ரேணுகாதேவி சப்தகன்னியர் உள்ளனர். தீர்த்தம் பாதாள சுனைத் தீர்த்தம். இத்திருக்கோவிலின் மலை அடிவாரத்தில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் அன்னை பார்வதி அருள்புரிகிறாள். அருகில் சப்த முனிகள் உள்ளனர். மலையில் உள்ள தீர்த்த சுனையிலிருந்து நீர் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கிறது.

சிவபெருமான் கைலாயத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த போது அவர் தனது முதல் காலடியை பர்வதமலையில் வைத்தார். அதனைத் தாங்க முடியாமல் இந்த மலை அழுந்தியதால் தனது இரண்டாவது அடியை திருவண்ணாமலையில் வைத்தார். பர்வத மலையில் அண்ணாமலையாரின் திருவடி உள்ளது. மலை உச்சியில் ராட்சச திருசூலம் உள்ளது. இக்கோவிலுக்கு கதவுகள் இல்லை. பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து ஐந்நூறு அடி உயரம் கொண்டது. பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர். பச்சை அம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிமீ தூரம் நடந்து மலை அடிவாரத்திற்கு செல்லலாம். அங்கிருந்து சுமார் 1300 படிக்கட்டுகள் உள்ளது. அதனை தாண்டினால் அதன் பிறகு மலை ஏறுவது போல் ஒற்றை அடிப்பாதையில் கரடுமுரடான பாறைகள் எனச் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு மலையேற வேண்டும். விசுவாமித்திரர் குன்று என்ற பாறையிலிருந்து மேல் நோக்கிப் பார்த்தால் மலை உச்சியில் உள்ள கோவில் நன்கு தெரியும். மலை ஏறும் வழியில் உரல் வடிவில் ஒரு கற்பாறை அதில் ஒரு குழி உள்ளது. அதனால் அந்த இடத்திற்கு உரல் பாறை என்று பெயர். உரல் பாறையைக் கடந்து சிறிது தூரம் மேல் நோக்கிச் சென்றால் பாழடைந்த மண்டபம் உள்ளது. இதற்கு பாதிமண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தை அடைந்தால் மலை உச்சியை அடைவதற்கு பாதி தூரம் வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். அதனால் பாதி மண்டபம் என்று பெயர் வந்தது. அந்த மண்டபம் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது. சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும் விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

மலைக்குத் தென்திசையில் உள்ள கடலாடி என்னும் ஊரிலிருந்து ஒற்றையடிப் பாதை வழியில் வந்தாலும் இந்தப் பாதி மண்டபத்தை அடையலாம். இங்கிருந்து மேல்நோக்கிச் செல்லும் வழி செங்குத்தானது. இப்பகுதியை குமரி நெட்டு என்பர். மேலே சென்றால் சுழல்பாறை என்னும் பகுதியை அடையலாம். வட்ட வடிவமாக அமைந்துள்ள இரண்டு பெரும் பாறைகளுக்கு இடையில் வளைந்து ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும். இதனைக் கடந்தால் ஏணிப்படி வழி வரும். இரண்டு மலைகளுக்கு இடையில் கனமான தண்டவாளங்கள் உள்ளது. இந்தப் பாதையைக் கடந்து சென்றால் ஒரு கல்மண்டபத்தினை அடையலாம். இதற்கு தீட்டுக்காரி மண்டபம் என்று பெயர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் பாதாளச்சுனை என்ற சிங்கக் கிணறு சுனையைக் காணலாம். இதில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. அதன் வழியே சென்றால் ஓர் அதிசய உலகம் உள்ளதென்றும் அதை மனிதர்கள் காண வழியில்லை என்றும் புராண வரலாறுகள் உள்ளது. சித்தர்கள் இச்சுனையில் உள்ள சுரங்க வழியில் சென்று தவம் செய்வதாக வரலாறு உள்ளது. இந்தச் சுனை நீர் மருத்துவ குணம் கொண்டது. இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. சித்தர் பெருமக்கள் வாழ்ந்த பல குகைகள் உள்ளன. அந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த குகைக்குள் மக்கள் செல்லவே முடியாத படி பாதைகள் உள்ளது. அதைக் கடந்து மேல்நோக்கிப் பயணித் தால் கடப்பாறை என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதி மிகவும் செங்குத்தானது. இந்த மலைப் பாதையின் இருபுறமும் இரும்பு கடப்பாறைகள் பாறைக்குள் ஊன்றப்பட்டிருக்கும். அவற்றைப் பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். மேலே ஓரளவு சம வெளிப் பிரதேசத்தை அடையலாம். மலை ஏறும் பக்தர்கள் வழி தடுமாறும் சமயத்தில் அவர்களுக்கு உறுதுணையாக பைரவர் (நாய்) முன்னால் நடந்து சென்று வழிகாட்டுகிறது.

பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்றும் பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் ஆராதனை செய்தால் கீழே தரை மட்டத்தில் வருடம் முழுவதும் பூஜை செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறது தல புராணம். அடிக்கொரு லிங்கம் திருவண்ணாமலை என்று சொல்வது போல் பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை என்ற வாசகம் இருக்கிறது. இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் ஞானம் கைகூடும். திரிகால ஞானயோகம் கிட்டும் என்பது கோவில் புராண வரலாறு. திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் தென்பாதி மங்கலம் என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து மலை ஏறத் துவங்கினால் பத்து கிலோமீட்டர் தூரம். தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம். காஞ்சி மகா பெரியவர் கடந்த 1944ம் ஆண்டு மார்கழி முதல் நாள் கிரிவலம் செய்தார். பர்வதமலை முழுவதுமே தனக்கு ஈசனாக தெரிந்தபடியால் அடியவர்களிடமும் பர்வதமலை சாட்சாத் அந்த பரமேஸ்வரனே என்று கூறி மலை மேல் ஏறினால் அவரை மிதிக்க வேண்டி வருமே என்று பர்வதமலையை கிரிவலம் செய்தார்.

ராமாயணம் 4. கிஷ்கிந்தா காண்டம் பகுதி – 16

ராமர் தனது கோபத்தை வார்த்தைகளில் லட்சுமணனுக்கு புரிய வைத்தார். கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் அதன் காரணமாகவே விரைவில் அழிந்து போவான். எங்களுக்கு கொடுத்த வாக்கை மறந்து எங்களை ஏமாற்ற நீ விரும்பினால் உனக்கும் அதே கதி தான் உண்டாகும். வாலிக்காக காத்திருந்த மேலுலகம் உனக்காகவும் காத்திருக்கிறது தெரிந்துகொள். நீயும் மேலோகம் செல்ல விரும்புகிறாயா? ராமருடைய வில்லும் அம்பும் உனக்காக தயாராக இருக்கின்றது. நீயும் உன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக போகங்களை அனுபவித்து ராமருடைய கோபத்தை பெற்று விட்டீர்கள் என்ற செய்தியை கூறுவாய் என்று ராமர் லட்சுமணனை அனுப்பி வைத்தார். லட்சுமணன் தன் அண்ணனுடைய துயரத்தையும் கோபத்தையும் அப்படியே கேட்டுக்கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்ப முற்பட்டான். அப்போது ராமர் சில கணங்கள் லட்சுமணனின் பேசும் சுபாவத்தை யோசித்தார். லட்சுமணனை மீண்டும் அழைத்தார். சுக்ரீவனிடம் எனது கோபத்தை தெரியப்படுத்தும் போது கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம். நமது நண்பனாகி விட்டான். எனவே அவனது தவறை மட்டும் சுட்டிக்காட்டு என்று சொல்லி அனுப்பினார் ராமர். லட்சுமணனும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி கோபத்துடன் கிளம்பினான்.

லட்சுமணனுடைய கோபத்தையும் அவனது தோற்றத்தையும் அவன் கையிலிருந்த ஆயுதங்களையும் பார்த்து வானர காவலாளிகள் பயந்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்கள். எனவே கோட்டையை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டுமென்று ஆயத்தமானார்கள். அவர்களுடைய இந்த நடவடிக்கையை பார்த்த லட்சுமணனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது. சில வானரங்கள் ஓட்டமாக ஓடி அந்தப்புரத்தில் இருந்த சுக்ரீவனிடம் லஷ்மணன் கோபத்துடன் வில்லும் அம்புடன் வந்து கொண்டிருக்கிறான் யார் தடுத்தாலும் நிற்கவில்லை. யாராலும் அவனை தடுக்க இயலவில்லை என்றார்கள். சுக்ரீவன் அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடந்ததால் வானரங்கள் சொன்னது அவன் காதில் விழவில்லை. ராஜ சேவகர்களுடைய உத்தரவின் பேரில் அரண்மனையை காவலாளிகள் பலமாக நின்று யாரும் உள்ளே நுழையாமல் காவல் காத்தார்கள். இக்காட்சியை கண்ட லட்சுமணனுக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. தடையை மீறி லட்சுமணன் உள்ளே நுழைந்தான். லட்சுமணன் முதலில் அங்கதனை கண்டான். அவனை கண்டதும் லட்சுமணன் கோபம் ஓரளவு தணிந்தது. அங்கதனிடம் வானர ராஜவாகிய சுக்ரீவனிடம் நான் வந்திருக்கும் செய்தியை முதலில் சொல்வாய் என்று சொல்லி அனுப்பினார். அங்கதன் சுக்ரீவனிடம் விஷயத்தை தெளிவாக எடுத்து கூறினான். ஆனால் போக மயக்கத்தில் இருந்த சுக்ரீவனுக்கு எதுவும் புரியவில்லை. அங்கதன் மிகவும் வருத்தப்பட்டான். மந்திரிகளுடன் என்ன செய்வது என்று ஆலோசித்தான். அனுமன் உட்பட சில மந்திரிகள் உள்ளே சென்று சுக்ரீவனுக்கு விஷயங்களை நன்றாக எடுத்துக் காட்டி அவன் புத்தி தெளிவடையச் செய்தார்கள்

ராமனின் தம்பி லட்சுமணன் கோபத்துடன் வில் அம்புடன் வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் சுக்ரீவன் நான் ஒரு தவறும் செய்யவில்லை. என் நண்பர்களாகிய ராம லட்சுமணர்களுக்கு என் மேல் ஏன் கோபம் வந்தது. யாரோ விரோதிகள் ஏதோ சொல்லி அவர்களுடைய மனதை கெடுத்திருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். அதற்கு அனுமன் அரசே ராமனுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமருடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இது இப்போது சிறிது அபாயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. லட்சுமணனிடம் மன்னிப்பு கேட்டு இனி தாமதப்படுத்தாமல் ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றார் அனுமன்.