ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 655

கேள்வி: வான மண்டலத்தில் பல மாற்றங்கள் உதாரணமாக உத்தராயணம் தட்சிணாயனம் வளர்பிறை தேய்பிறை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விடியற்காலையிலே தோன்றும் விடிவெள்ளி மாறாமல் இருக்கிறதே அது எப்படி?

விடிவெள்ளியும் மாறிக் கொண்டுதான் இருக்கிறதப்பா. அதை கவனித்துப் பார்த்தால் புரியும்.

லலிதை

பிள்ளையார் முருகனுடன் லலிதை சிதிலமடைந்த நிலையில் சிற்பம். தற்போது பிரித்ததானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 ஆம் நூற்றாண்டு ஒடிசா கோயிலில் இருந்த சிற்பம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 654

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு தாய் தந்தை இருக்கிறார்கள் சில பிள்ளைகளை பெறுகிறார்கள் அதில். இரண்டு பிள்ளை உயர்ந்த பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறார்கள், இரண்டு பிள்ளை ஏதோ ஒரு காரணத்தால் சரியான நிலையில் இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்றால் அந்த தாய் தந்தை என்ன எண்ணுகிறார்கள் என்றால் நான்கும் நமது பிள்ளைகள் தான் இரண்டு நன்றாக வாழ்கிறது. இந்த இரண்டு நிலை எண்ணினால் மீதி இருக்கும் இரண்டு பிள்ளைகள் நன்றாக வாழ வைக்கலாமே என்று தானே எண்ணுவார்கள். அப்படி அல்லாமல் என்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள் உன்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள். நீ சரியாக படிக்கவில்லை அதனால் அவதிப்படுத்துகிறாய் நான் ஒன்றும் உனக்கு உதவ மாட்டேன் போ போ என்று நன்றாக இருக்கும் பிள்ளைகள் வட்டம் வரும் பிள்ளைகளை விரட்டினால் அது மேலிருந்த வாரியாக பார்த்தால் அறிவுக்கு ஏற்புடைய வாதமாக தெரிந்தாலும் ஈன்றோர்க்கு (பெற்றவர்களுக்கு) ஏற்றுக் கொள்ளப்படுமா. இவன் செய்வதால் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை என்ற நிலை இருக்கும்போது தாராளமாக செய்யலாம் என்று எண்ணுவது போல இருக்கின்ற பிள்ளை நன்றாக இருக்கிறது என்று பெற்றோர்கள் மகிழ்வார்களா அல்லது அவதிப்படும் பிள்ளைக்கு இவன் உதவுவில்லை என்று வேதனைப்படுவார்களா .

அதைப் போலதான் இறைவன் படைப்பில் அனைத்தும் இறைவனுக்கு பிள்ளைகளே. கருமத்தாலா அல்லது வேறு காரணத்தாலோ ஒருவன் அவதிப்படும்போது நன்றாக இருக்கின்ற மனிதன் அப்படி இல்லாத மனிதனுக்கு தன்னிடம் கிடைத்த உயர்ந்த பாக்கியத்தை வாய்ப்பை அவனுக்கும் தந்து வாய்ப்பிருக்கும்போது அவனுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அது செய்வது. தேவைப்பட்டால் அவனுக்கு சொந்தமாக ஏதாவது செய்து பிறர் கையை ஏந்த வேண்டிய நிலை இல்லாமல் வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை செய்வதுதான் உத்தமமான காரியம். இதை செய்வது ஒரு ஏழை மைந்தன் நல்லதொரு தொழில் வாய்ப்பை தருவது அல்லது அவனுக்கு உள்ள சரியான பிரச்சனைக்கு சரியான தீர்வை செய்வதோ சகஸ்ரம் சகஸ்ரம் சகஸ்ரம் (ஆயிரம் ஆயிரம் ஆயிரம்) யாகம் செய்வதை விட உயர்வு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 653

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே யாம் கூறுகிறோம் அப்பா அதிக அளவு தனம் இருப்பவன் தனவான் என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள் அப்படி அல்ல அதிகளவு தனம் இல்லை என்றாலும் கூட இருக்கின்றன பணத்தை பிறருக்கு பிறரின் குறிப்பு அறிந்து எவன் தருகிறானோ அவன்தான் மெய்யான தனவானாம் ஆவான். தனத்தை தானே வைத்துக் கொண்டிருக்கக் கூடியவன் உண்மையில் ஏழை தான் இதுபோல் மட்டும் அல்ல நாங்கள் அடிக்கடி கூறுவது போல இருப்பதை கொடுப்பது சிறப்பு இருப்பதை எல்லாம் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு ஆகும். எனவே கொடுக்கின்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அத்தனை பேரும் தனவான் மட்டுமல்ல. இந்த உலகில் அவன் தான் குபேரன் குபேரனுக்கு எல்லாம் குபேரன். ஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் கொடுப்பதற்கு பொருள் இல்லை என்று ஏங்குகிறானே அப்பொழுது அந்த உண்மையான ஏக்கமே அவன் ககரம் ககரம் கொடுத்ததற்கு சமமாகி இறைவன் அவனுக்கு அதற்குரிய புண்ணிய பலனை தந்து விடுகிறார். ஆனால் இறைவன் அருளால் ஒரு பிறவியில் செய்த புண்ணியத்தால் அதிகம் அதிகம் அழியக் கூடிய செல்வத்தை பெற்ற தனவான் இவையெல்லாம் பிறருக்கு தந்து விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் பிறரிடம் நிற்க வேண்டிய நிலை வரும் எனவே யாருக்கும் தரமாட்டேன் என்று வைத்திருக்கிறான். அவன் தான் உண்மையில் உலகில் பரம ஏழையாவான். அவன்தான் இருந்தும் வறுமையில் வாடுகின்ற மனிதன் ஆவான்.

சக்தி பீடம் 6. பர்வதவர்த்தினி – ராமேஸ்வரம்

சக்தி பீடத்தில் 6 ஆவது கோயில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி கோயிலாகும். ஊர் ராமேஸ்வரம். புராணபெயர் கந்தமாதனபர்வதம் திருவிராமேச்சுரம். அம்பாளின் பெயர் பர்வதவர்த்தினி. மலைவளர்காதலி என்ற பெயரும் உள்ளது. மலைவளர் காதலி என்று திருஞானசம்பந்தர் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார். சக்தி பீடங்களில் இத்தலம் சேதுசக்திபீடம் ஆகும். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளது. இந்த தீர்த்தங்கள் தேவிபட்டினம் திருப்புல்லாணி பாம்பன் தங்கச்சிமடம் மண்டபம் ஆகிய இடங்களில் உள்ளன.

அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி உள்ளனர். சந்தான விநாயகரும் சௌபாக்கிய விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமபிரானுக்கு கடலில் சேது பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன் நீலன் கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும் பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

ஒரு சமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். அம்பாள் பக்தரான ராயர் செய்த இந்த உப்பு லிங்கம் பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார். எனவே இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டது. அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்தது.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர் சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர் பிரம்மச்சாரி என்பதாலும் இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும் இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

முத்துராமலிங்க சேதுபதி மன்னர் இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களைக் கொண்ட இம்மூன்றாம் பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1770 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும் வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. 22 தீர்த்தங்கள்

1 மகாலட்சுமி தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம்
8 நள தீர்த்தம்
9 நீல தீர்த்தம்
10 கவய தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம்
12 கெந்தமாதன தீர்த்தம்
13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14 கங்கா தீர்த்தம்
15 யமுனா தீர்த்தம்
16 கயா தீர்த்தம்
17 சர்வ தீர்த்தம்
18 சிவ தீர்த்தம்
19 சாத்யாமமிர்த தீர்த்தம்
20 சூரிய தீர்த்தம்
21 சந்திர தீர்த்தம்
22 கோடி தீர்த்தம்.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தலங்களில் இத்தலமும் ஒன்று. விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

ராம அவதார காலத்தின் தொன்மை மிக்கது ராமேஸ்வரம். ராவணனை அழித்துவிட்டு சீதையையும் மீட்டுத் திரும்ப அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ராமர். ராமரின் வன வாசத்திற்கான பதினான்கு ஆண்டுகளின் நிறைவும் நெருங்கியிருந்தது. அயோத்தி திரும்ப எண்ணிய போது பிரம்மாவின் பேரனும் பேரரசனுமான ராவணனைக் கொன்றது பாவம் என்று அந்த பாவத்தைப் போக்க பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக சிவபூஜை செய்ய நினைத்தார் ராமர். இலங்கையிலிருந்து புறப்பட்டுக் கடலைத் தாண்டி ராமேஸ்வரம் நிலத்தைத் தொட்டதும் உடனடியாகச் சென்று இமயமலையிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வரும்படி அனுமனுக்கு ஆணையிட்டார். வேகமாக அனுமன் பறந்தார். அனுமன் திரும்புவதற்கு தாமதமானது. பூஜை வேளை நெருங்கிக் கொண்டிருக்க அனுமன் இன்னமும் வராத நிலையில் ராமர் அனுமனுக்காக காத்திருக்க கடற்கரை மணலிலேயே சீதாதேவி சிவலிங்கம் பிடித்தாள். அந்தச் சிவலிங்கத்திற்கு ராமர் பூஜையை நிறைவேற்றும் வேளையில் இன்னொரு சிவலிங்கத்தோடு அனுமனும் வந்தார். இப்போதும் ஆஞ்சநேயர் கொணர்ந்த சிவலிங்கத்திற்குப் பூஜைகள் நடந்த பின்னரே மூலவருக்குப் பூஜைகள் நடக்கின்றன. ராமேஸ்வரம் மிகவும் தொன்மையான தலம். ராமர் இங்கு சிவபூஜை செய்வதற்கு முன்னரே சிவசாந்நித்யம் பெற்ற தலம் இது. காரணம் இங்கு அம்பிகையின் அருள்வாசம் வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. உருவமும் வடிவமும் கடந்த நிலையில் சிவனும் சக்தியும் இங்கு சஞ்சரித்திருந்தார்கள். எனவேதான், சிவபூஜைக்கு ஏற்ற இடம் என்று இதனை ராமர் தேர்ந்தெடுத்தார்.

சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாச்சல கவிராயர் எழுதிய சேது பர்வதவர்த்தினியை பிள்ளைத் தமிழில் அம்பாள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்று பத்து வித பருவங்களில் வர்ணித்துப் போற்றப்படுகிறார். பலபட்டடை சொக்கநாத கவிராயர் இத்தலத்தின் மேல் தேவ உலா பாடியுள்ளார். நிரம்பவழகிய தேசிகர் இத்தலத்தின் வரலாறை சேது புராணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தின் மீது தேவாரப் பாடல்கள் புனைந்து சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 652

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு மனிதனானவன் தனக்கும் தன குடும்பத்திற்க்கும் செலவு செய்வது இயல்பு. தர்ம சிந்தனை என்பது பூர்விக புண்யம் இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு வரும். அந்த தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அந்த தர்மமே அவன் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால் ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும் எத்தனை அபிஷேகம் யாகங்கள் செய்தாலும் கூட அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால் இறை அருளை பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளை பெற வேண்டுமென்றால் பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஏன்? இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. தர்ம குணமும் பிறருக்கு உதவும் குணமும் இருந்து விட்டால் போதும். இவன் இறையை தேட வேண்டியதில்லை. இறை இவனை தேடி வந்து விடும். எனவே எவனுக்கு இறை அருள் இருககிறதோ அவனுக்குத்தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். பிறர் படுகின்ற கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற எண்ணம் வ௫ம். அது மட்டும் அல்லாது எவன் ஒருவன் அதிக அளவு தர்மம் செய்கிறானோ அவனிடம் இறையே கை ஏந்தும் என்பதற்கு கர்ணனே ஒ௫ சாட்சி. எனவே பிள்ளைகளுக்கு ஈன்றோர சொல்லி கொடுக்க வேண்டியது. இன்னும் சொல்ல போனால், சொல்லி கொடுக்க வேண்டியதே இல்லை. ஈன்றோர் பிள்ளைகளின் முன்னால் தானத்தை அள்ளி கொடுத்துக் கொண்டே போனால் அதை பார்க்கின்ற பிள்ளைகள் தானாகவே பிறருக்கு கொடுக்கின்ற மன நிலைக்கு வந்து விடும். ஒரு பிள்ளைக்கு நீ டாக்டர் ஆகு விஞ்ஞானி ஆகு என்று தான் சொல்லி கொடுக்கிறார்களே ஒழிய நீ பிறருக்கு உதவு என்று யாரும் சொல்லி கொடுப்பதில்லை. ஏன் என்றால் ஒருவன் உலகியல் ரீதியாக வெற்றி பெறுவதும் வெற்றி பெறாமல் போவதும் அவன் விதியாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு தொழிலை செய்து அவன் தன ஜீவனை நடத்தி கொள்ளலாம். ஆனால் தர்ம குணம் மட்டும் ஒருவனுக்கு எத்தனை புத்தகம் படித்தாலும் வந்து விடாது .பிறர் என்ன உபதேசம் செய்தாலும் வந்து விடாது. அது அவன் பிறப்பிலேயே வர வேண்டும். அதற்கு தாய் தந்தை புண்யம் செய்திருக்க வேண்டும். தாய் தந்தையின் முன்னோர்கள் புண்யம் செய்திருக்க வேண்டும்.

அக்னிபகவான்

அக்னிதேவர் ஒரு கையில் அக்கமாலையும் மறு கையில் அமுத கலசமும் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். தலையில் தீ ஜ்வாலாவுடன் நீண்ட தாடியுடன் இருக்கிறார். இடம்: சுந்தரேஸ்வரர் கோவில். மேலப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.

சோமஸ்கந்த மூர்த்தி

அரிய பழங்காலச் சிலை. அந்தச் சிற்பத்தில் இருக்கும் தன் சிறு குழந்தை கந்தனைப் பார்த்துக் கொள்ளும் அன்னை பார்வதி. சிவனின் உடையும் பார்வதியின் புடவையும் அலங்காரம் மிகவும் அருமை. இடம்: காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி கோயில்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 651

கேள்வி: ஸ்ரீபெரும்புதூர் அருகே 2000 ஆண்டு பழமை வாய்ந்த சிவாலயம் சிதிலமடைந்துள்ளது. அது எப்பொழுது கும்பாபிஷேகம் காணும்? யாரால்?

இறைவன் அருளால் பழமையான ஆலயம் என்று நாங்களும் கூறுகிறோம். மனிதர்களுக்கும் அது போன்ற ஆலயங்களுக்கு செல்வதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஒத்துக் கொள்கிறோம். தவறொன்றும் இல்லை. பழமை வாய்ந்த சிவாலயம் என்றாலே மனிதனுக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது உண்மையும் கூட. ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆலயம் முதலில் கட்டப்பட்டதா? அல்லது பூமி முதலில் படைக்கப்பட்டதா? இது போல் நிலையிலேயே பூமி முதலில் படைக்கப்பட்டு பிறகு உயிரினங்கள் தோற்றுவிக்கப்பட்டு பிறகு மனிதன் கூறியபடியே பரிணாம வளர்ச்சியில் மெல்ல மெல்ல மனிதன் வளர்ந்து இறைவனை உணர்ந்து ஆலயம் கட்டியதாக் கொண்டால் ஆலயம் பழமையானது என்றால் அதைவிட பழமையானது புவி. அந்தப் புவியே ஒரு ஆலயமாகவும் அதில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பிள்ளையாகவும் எண்ணி இந்த ஒட்டுமொத்த புவியையும் ஆலயமாக எண்ணி அந்த புவியை போற்றி பாதுகாத்தாலே அது மிகச்சிறந்த உழவாரப் பணியாகும். இருந்தாலும் இன்னவன் கூறிய ஆலயமும் விரைவில் சில ஆத்மாக்களால் நல்ல விதமாக சீரமைக்கப்பட்டு கலச விழா காணப்படும்.