ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 628

கேள்வி: இறைவனை வணங்க சிறப்பான காலம் நேரம் ஏதும் உண்டா?

இறைவனை வணங்க காலம் நாழிகை ஏதும் இல்லைப்பா. மனிதன் விருப்பத்திற்கேற்ப எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம். அது வணங்குகின்ற மனிதனின் மன நிலையைப் பொறுத்தது. மனதிலே எழுகின்ற பக்தி நிலையைப் பொறுத்தது. இதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.

சிவ வடிவம் – 63. இரத்தபிட்சா பிரதானமூர்த்தி

சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்து நானே பெரியவன் என்ற அகந்தையுடன் இருந்தார் பிரம்மா. பிரம்மாவைப் போல் யாரும் அகந்தை கொள்ளக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான் பைரவரின் ரூபத்தை எடுத்து பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை திருகி எடுத்தார். பிரம்மாவின் தலையிலுள்ள மண்டை ஓடு அவரது கைகளிலேயே ஒட்டிக் கொண்டது. சிவகணத் தலைவர்களுடன் வனம் சென்ற பைரவர் அங்கிருந்த முனிவர்கள் ரிஷிகள் தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அவர்களின் உடம்பிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். அடுத்து வைகுந்தம் சென்றார். பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் சிவகணங்களுடன் சென்று திருமாலிடம் இரத்தத்தை கேட்டார். திருமால் தனது நகத்தினால் நெற்றியினை கீறி ஒரு ரத்த நரம்பிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார். இவ்வாறு முனிவர் ரிஷிகள் தவசிகள் தேவர்கள் திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்று கபாலத்தில் இருந்த அகந்தையையும் கர்வத்தையும் அழித்தார் பைரவர் ரூபத்தில் இருந்த சிவபெருமான். கபாலத்தில் இருந்த அகந்தை அழிந்தவுடன் கபாலமானது சிவபெருமானின் கையை விட்டு நீங்கியது. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க இரத்தத்தை பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இந்த மூர்த்தி காசியில் இருக்கிறார்.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

ஏலவார்குழலியை கரம் பற்றி ஏகாம்பரேஸ்வரர்

சிவபெருமான் ஏகாம்பரநாதராகவும் பார்வதிதேவி ஏலவார்குழலியாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் விஷ்ணு பகவான். இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அமைந்துள்ள நாகரத்தார் மண்டபத் தூண்.

சிவ வடிவம் – 62. பிரார்த்தனா மூர்த்தி

தாருவன முனிவர்கள் தாங்கள் செய்யும் தவத்தாலும் யாகத்தாலும் எதனையும் சாதிக்கலாம். சிவபெருமானை வணங்கத் தேவையில்லை என்ற எண்ணத்துடன் சிவபெருமானை வணங்காமல் செருக்குடன் இருந்தார்கள். அவர்களது மனைவிமார்களிடம் தாங்களே கற்பில் சிறந்தவர்கள் தங்களின் கற்பின் வலிமையால் இறைவனை வணங்காமலேயே எதையும் பெறலாம் என்ற அகந்தை இருந்தது. இவர்களது செருக்கை அழிக்க இறைவன் எண்ணம் கொண்டார். அவர்கள் செருக்கை அழிக்க சிவபெருமான் பிட்சாடனராக உருமாறி முனிவர்களின் மனைவியர் முன்பு நடந்தார். இறைவனின் அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவியர்கள் அவரின் பின்பாக நடக்க ஆரம்பித்தார்கள். திருமால் மோகினி அவதாரம் எடுத்து முனிவர்கள் முன்பு சென்று நடந்தார். முனிவர்களும் தங்களது யாகத்தையும் தவத்தையும் விட்டு மோகினி ரூபத்தின் பின்பாக நடக்க ஆரம்பித்தார்கள். தங்களது மனைவிமார்கள் பிட்சாடணரின் பின்பாக நடப்பதைப் பார்த்ததும் சுய உணர்விற்கு வந்த முனிவர்கள் இதற்கெல்லாம் சிவபெருமானே காரணம் என்று தங்களின் தவவலிமையால் தெரிந்து கொண்டார்கள். உடனே அபிசார வேள்வி நடத்தி அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் அனைத்தையும் சிவபெருமான் மீது பிரயோகித்தனர். அனைத்தையும் அழித்தார் சிவபெருமான். முயலகன் என்னும் அசுரனை யாக வேள்வியிலிருந்து வரவழைத்து சிவபெருமான் மீது ஏவினார்கள். சிவபெருமான் முயலகனை தன் காலின் கீழே போட்டு அவன் மேல் திருநடனம் புரிந்து தவத்தாலும் யாகத்தாலும் எதனையும் சாதித்து விட முடியாது என்பதை தாருவன முனிவர்களுக்கு உணர்த்தி அவர்களின் செருக்கை போக்கினார்.

இச்செய்தியை அறிந்த உமாதேவியார் தாமே சக்தியாக உள்ளோம். சிவபெருமான் தன்னை அழைக்காமல் திருமாலை மோகினியாக்கி அழைத்து சென்று விட்டாரே என்று எண்ணி சிவபெருமானோடு ஊடல் கொண்டாள். சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்த சிவபெருமான் அதனைப் போக்க நினைத்தார். சக்தியிடம் சென்று தேவி எனது ஒரு சக்தியான நீ செய்கின்ற வேலையைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். என் துணைவியாக கையில் நீயும் ஆணுருவம் கொள்கையில் திருமாலாகவும் யுத்தக் களத்தில் துர்க்கையாகவும் கோபத்தில் காளியாகவும் உருமாறுகின்றீர்கள். எனவே திருமால் காளி துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்ந்து கொள் என்றார். உடனே உமாதேவியார் கோபம் மறைய இறைவா தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக் காட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். உடன் சிவபெருமானும் ஆடிக் காட்டினார் இந்த நடனமே கௌரி தாண்டவம் ஆகும். உமாதேவியார் தனது ஊடலுக்கு பலமுறை இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் மன்னித்து தன்னுள் ஐக்கியப்படுத்தினார். உமாதேவியின் பிரார்த்தனையால் சிவபெருமான் தனது திருநடனத்தை மறுபடியும் அவர் முன் நிகழ்த்திக் காட்டினார். இம்மூர்த்தியே பிரார்த்தனா மூர்த்தி ஆவார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 627

கேள்வி: சிவனேனு இரு என்பதன் பொருள் என்ன?

சிவனேன்னு இரு என்பதை எதையும் செய்யாமல் இரு என மனிதன் எடுத்துக் கொள்கிறான். அப்படியல்ல ஒரு மனிதன் புறத்தோற்றத்திலேயே செயல்படாதது போல் தோன்றினாலும் அவன் ஆத்மா நன்றாக பலம் பெற்று வினைகளை எல்லாம் முற்றிலுமாக எரித்து பிறகு சதா பத்மாசனத்திலேயே அமர்ந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறையோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு சதா சர்வ காலமும் அந்த இறையோடு தொடர்பில் இருக்கும் பொழுது அந்த தவத்தின் பலன் ஒலி ஆற்றல் அலைகள் எல்லாம் அவன் சார்ந்திருக்கும் இடத்தை சுற்றி பல நன்மைகளை செய்யும். அப்படி இருப்பதற்குப் பெயர் சிவனேனு இரு என்பதன் பொருள் ஆகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 626

கேள்வி: மகான்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுமாடு என்ன?

மகான்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஒரு கஷ்டம் வரப்போவது தெரியாமல் வந்தபின் ஒரு மனிதன் அதில் சிக்கிக் கொள்கிறான். நடக்கப்போவது தெரிந்தும் அது இறைவன் செயல் என்று நாங்கள் அதில் சிக்கிக் கொள்வோம் இதுதான் மகானுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு.

ஆடுகளத்திலே விளையாடுவது மனிதர்கள்தான். நாங்கள் நடுவர்கள் தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான் எங்கள் கடமையை தவிர இப்படி ஆடு அப்படி ஆடு என்று ஆட்டம் தொடங்கும் வேண்டுமானால் சொல்லலாம். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நாங்கள் யார் பக்கமும் பேசக் கூடாது. எனவே வழிகாட்ட நாங்கள் என்றும் இருக்கிறோம். ஆனால் அந்த வழியில் செல்ல மனிதர்கள்தான் தயாராக இல்லை. உலகியல் பிரச்சனைகளை ஆன்மீகப் பிரச்சினைகளோடு இணைத்து குழப்புவதே மனிதனுக்கு இயல்பாகி விட்டது.

கங்காவதரணம்

கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இது பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர். ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி உடலைப் பின்புறமாக வளைத்து கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான சிற்பம் நுட்பமான யோக கலையை விளக்கும் கடினமான தாண்டவம்.

சிவனை மீன் வடிவில் வழிபட்ட திருமால்

சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.