ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 418

ஆஞ்சனேயர் வாய்பொத்தி இருப்பதின் தாத்பர்யம் என்ன ?

இறைவனின் கருணையைக்கொண்டு யாம் கூறவருவது யாதென்றால் இதுபோல் முற்றிய கதிர் வளைந்தே இருக்கும். நிறைகுடம் தழும்பாது என்பார்கள். அதைப்போல பரிபூரண ஞானத்தன்மையும் பரிபூரண இறையாற்றலை உள்ளே உணர்ந்து கொண்ட எந்தவிதமான ஆத்மாவும் அல்லது இறையின் அம்சம் தானாக இருந்தாலும்கூட பணிந்து ஒன்றுமே இல்லாத நிலையில் தான் ஒன்றுமேயில்லை என்பதுபோல் காட்டிக் கொள்வதுதான் பெரியதின் விளக்கம். என்றுமே பெரியது சிறியதாக இருக்கும். சிறியது பெரியதாக இருக்கும். இதனால்தான் தமிழ் எழுத்திலே சிறியது சிறியவர் என்று சொல்லும் பொழுது அங்கே பெரிய எழுத்தையும் பெரியது என்று கூறும் பொழுது அங்கே சிறிய எழுத்தையும் எழுதுகின்ற வழக்கம் வந்தது. எனவே ஒரு மனிதன் வளர வளர ஒரு ஆத்மா வளர வளர தனக்குள் அதிக ஆற்றல் இருப்பதாக தற்பெருமை பேசாமல் அப்படியாக நயந்து நயந்து பணிந்து பணிந்து எந்தளவிற்கு பணிய முடியுமோ அப்படி பணிவதே சிறப்பாகும். எனவே ஆஞ்சனேயர் யார்? முக்கண்ணன் யார்? முக்கண்ணன் வேறு ஆஞ்சனேயர் வேறா? அதிருக்க நிலையிலே அதுபோல் பேதங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்று பட வேண்டும் என்ற கருத்திலே முக்கண்ணனாகிய நான் ஆஞ்சனேயராக இருந்தாலும் கூட மஹாவிஷ்ணுவின் அவதாரத்திற்கு முன்னால் பணிந்து தாழ்ந்து இருக்கிறேன் என்பதுதான் பொருள். எனவே உயர ஒரு மனிதன் பணிய வேண்டும் என்பதின் உட்பொருளே இது.

திருவிளையாடல் புராணம் முன்னுரை

சிவபெருமான் தன்மீது பக்தி கொண்ட அடியவர்கள் மற்றும் சிற்றுயிர்கள் மீது திருவிளையாடல்கள் நிகழ்த்தி தனது அன்பையும் கருணையும் அவர்களுக்கு அருளும் வரலாறே திருவிளையாடல் புராணம் ஆகும்.

திருவிளையாடல் புராண‌மானது தமிழ் கடவுளான முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப்பட்டு பின் அகத்தியரின் மூலம் மற்ற முனிவர்கள் அறிந்து கொண்டனர். நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி கூறினார். அதை சனத்குமாரர் வியாசருக்கு கூறினார். அதனை வியாசர் கந்த புராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியம் நூலில் வியாசர் இயற்றினார். பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை தமிழில் பாடியுள்ளார். திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம் மதுரைப் புராணம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் வடமொழி நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மூன்று புராண நூல்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றப்படுகின்றன. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் இறைவனாரின் வலது கண்ணாகவும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும் போற்றி சிறப்பிக்கப் படுகின்றன.

மொத்தம் நான்கு திருவிளையாடல் புராணங்கள் உள்ளது.

  1. திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் இதனை பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றினார்.
  2. கடம்பவன புராணம் இதனை தொண்டை நாட்டு இலம்பூர் வீத நாத பண்டிதர் இயற்றினார்.
  3. சுந்தரபாண்டியம் இதனை தொண்டை நாட்டு வாயர்பதி அனதரியப்பன் இயற்றினார்.
  4. திருவிளையாடல் புராணம் இதனை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையால் புராணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் தோன்றியவர். இவருடைய தந்தையார் மீனாட்சி சுந்தரதேசிகர் ஆவார். பரஞ்சோதி முனிவர் தமிழ் மொழி வட மொழி திருமுறைகள் சித்தாந்த சாஸ்திரங்கள் ஆகியவற்றை நன்கு கற்றுணர்ந்தவர். தம் தந்தையிடம் சிவதீட்சை பெற்றவர். சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டு பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு மதுரையில் மீனாட்சி சோமசுந்தரரை தரிசித்து மதுரையில் தங்கியிருந்தார். அப்போது மீனாட்சியம்மன் அவருடைய கனவில் தோன்றி இறைவனின் திருவிளையாடல்களை தமிழில் பாட கட்டளையிட்டார். மீனாட்சி அம்மனின் ஆணைக்கு இணங்க ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் தமிழுக்கே உரிய தான செய்யுள் நடையில் சத்தியாய் எனத்தொடங்கும் திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். இதில் 3363 செய்யுள்கள் உள்ளன. இந்நூல் மதுரையின் தலபுராணமாகவும் போற்றப்படுகிறது

  1. காப்பு
  2. வாழ்த்து
  3. நூற்பயன்
  4. கடவுள் வாழ்த்து
  5. பாயிரம்
  6. அவையடக்கம்
  7. திருநாட்டுச்சிறப்பு
  8. திருநகரச்சிறப்பு
  9. திருக்கையிலாயச்சிறப்பு
  10. புராணவரலாறு
  11. தலச் சிறப்பு
  12. தீர்த்தச் சிறப்பு
  13. மூர்த்திச் சிறப்பு
  14. பதிகம் ஆகிய இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன. 344 வது செய்யுள் முதல் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிறது.

திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம் கூடற்காண்டம் திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும் கூடற்காண்டத்தில் 30 படலங்களும் திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.

திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

  1. இந்திரன் பழி தீர்த்த படலம்
  2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
  3. திருநகரங்கண்ட படலம்
  4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்
  5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்
  6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
  8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
  9. ஏழுகடல் அழைத்த படலம்
  10. மலையத்துவசன் அழைத்த படலம்
  11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
  12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்
  13. கடல் சுவற வேல் விட்ட படலம்
  14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
  15. மேருவை செண்டால் அடித்த படலம்
  16. வேதத்திற்கு பொருள் அருளிச்செய்த படலம்
  17. மாணிக்கம் விற்ற படலம்
  18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
  19. நான்மாடக்கூடல் ஆன படலம்
  20. எல்லாம்வல்ல சித்தரான படலம்
  21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்
  22. யானை எய்த படலம்
  23. விருத்த குமார பாலாரன படலம்
  24. கால் மாறி ஆடிய படலம்
  25. பழி அஞ்சின படலம்
  26. மாபாதகம் தீர்த்த படலம்
  27. அங்கம் வெட்டின படலம்
  28. நாகம் எய்த படலம்
  29. மாயப் பசுவை வைத்த படலம்
  30. மெய் காட்டிட்ட படலம்
  31. உலவாக்கிழி அருளிய படலம்
  32. வளையல் விற்ற படலம்
  33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்
  34. விடை இலச்சினை விட்ட படலம்
  35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
  36. இரசவாதம் செய்த படலம்
  37. சோழனை மடுவில் வீட்டிய படலம்
  38. உலவாக் கோட்டை அருளிய படலம்
  39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
  40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
  41. விறகு விற்ற படலம்
  42. திருமுகம் கொடுத்த படலம்
  43. பலகை இட்ட படலம்
  44. இசை வாது வென்ற படலம்
  45. பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்
  46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
  48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
  49. திருவால வாயான் படலம்
  50. சுந்தரப் பேரன் செய்த படலம்
  51. சங்கப்பலகை கொடுத்த படலம்
  52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
  53. கீரனைக் கரையேற்றிய படலம்
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
  55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
  57. வலை வீசின படலம்
  58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
  59. நரி பரியாக்கிய படலம்
  60. பரி நரியாக்கிய படலம்
  61. மண் சுமந்த படலம்
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்
  64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 417

ஔவையார் சொன்ன அற்புதம் நின்ற கற்பகக் களிறே இதற்கு விளக்கம்:

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறும் முன் ஒவ்வொரு வாசகம் வாக்கியம் இதுபோல் பக்தி பாடல்கள் பாசுரங்கள் இவற்றின் பொருள் என்பதும் அர்த்தம் என்பதும் வெளிப்படையாக தெரிவது ஒன்று உள்ளொன்று இருப்பது ஒன்றாகும். மனிதர்கள் அதற்கு அர்த்தம் கற்பிப்பது என்பது வேறு. மகான்கள் அதை வேறு வகையில் புரிந்துகொள்ள என்றுமே அர்த்தம் கற்பிப்பார்கள். இதுபோல் முழுக்க விநாயகப் பெருமானின் தன்மையையும் பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவில் இருக்கின்ற பொழுது அந்த ஓம்கார தத்துவத்தை அந்த வடிவம் உணர்த்தி அந்த வடிவத்தையே தொடர்ந்து தியானம் செய்து தியானம் செய்து அந்த வடிவத்தின் தன்மையாய் தானும் மாறுகின்ற அந்த செயல்தான் அற்புதமாகும்.

அந்த அற்புதமாய் நின்ற கற்பகக் களிறே என்று அதுபோல் விநாயகப் பெருமானின் அற்புதமான அந்த ஆற்றலை பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவத்தில் செய்கின்ற லீலா வினோதங்களை விநாயகப் பெருமானின் அந்த வடிவத்தால் மனிதனுக்குள் ஏற்படக்கூடிய ஆன்மீக மெய்ஞான மாற்றங்களை அதோடு மட்டுமல்லாமல் முழுமையான நல்விதமான பற்றற்று மிகவும் லோகாய ஆசைகளில் சிக்கி உழல்கின்ற மனிதனுக்கு அதையெல்லாம் தாண்டி அதுபோல் ஒரு ஞான நிலை சட்டென்று கிட்டுவதற்கு அதுபோல் வழிமுறையை கற்பிக்கின்ற அருளுகின்ற விநாயகப் பெருமானையே அற்புதம் என்றும் களிறே என்றும் பிராட்டி (அவ்வை) போற்றுகிறாள். அதோடு மட்டுமல்ல எல்லோரும் அவசரமாய் சுந்தரரின் முக்திமோட்ச நிலையை தரிசிக்கும் வேளையிலே இதுபோல் பிராட்டியும் நல்விதமாய் ( திருக்) கோவிலூர் தன்னிலே அவசரகதியாய் பூஜை செய்யும் பொழுது மூத்தோனும் தடுத்தாட் கொண்டு சுந்தரனுக்கு முன் உன்னை அழைத்து யாம் செல்வோம் என்று கூறிய அந்த வாசகத்தின் பொருளால் சிலிர்த்துப் போன பிராட்டியின் வாசகமப்பா இது. இதைத்தாண்டி எந்தவிதமான பொருள் கூறினாலும் அது மனிதனின் விருப்பமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 416

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் எமை நாடும் சேய்கள் ஏன் மனித குலம் முழுவதும் எல்லா உயிரினங்களும் நலமாய் வாழ பாவ எண்ணங்கள் இல்லாது வாழ பாவத்தின் பிடியிலிருந்து விலகி வாழ இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் இதுபோல் நல்விதமாய் ஹஸ்தம் (அஸ்த நட்சத்திரம்) மீன் ஓடும் காலம் இதுபோல் இறைவனின் அருள் ஆணையால் யாம் எம் சேய்களுக்கு சில வாக்குகளை கூற இருக்கின்றோம் நலமாய். நலமாய் வாழத்தான் உயிர்கள் எண்ணுகின்றன. நலமாய் வாழத்தான் மாந்தனும் எண்ணுகிறான். நலமாய் வாழ வேண்டும் என எண்ணுகின்ற மாந்தன் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று நாங்களும் நாள்நாளும் கூறிக் கொண்டே இருக்கிறோம். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்தாலும் நலமில்லாமல் வருகிறதே? என மனிதன் விரக்தி கொண்டே வாழ்கிறான். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ என்றென்றும் யாங்கள் அருளாணையிட்டாலும் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்து வாழ மாந்தர்களுக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கின்றன. அத் தயக்கம் யாவற்றையும் விட்டுவிட்டு என்ன விளைவுகள் நடந்தாலும் நலம் எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ இதுபோல் மீண்டும் அதுபோல் நலத்தை நினைவூட்டி நலமாய் அனைவரும் வாழ இறைவனருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இயம்புகிறோம் இதுபோல் மனம் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமாகும். இயம்புகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமானது இதுபோல் விதவிதமாய் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம் ஒடுங்கினால் தொடரும் எண்ணங்கள் அற்ற நிலை வரும். எண்ணங்களற்ற நிலை ஒரு மனிதனுக்கு எப்பொழுது வருகிறதோ அன்றுதான் அவன் பின்னங்கள் இல்லாது வாழக்கூடிய வழியை அறிவான். எனவே எவ்வித எண்ணங்களும் இல்லாத நிலையை நோக்கி மனிதன் செல்வது என்பது எடுத்த எடுப்பிலேயே கடினம் என்றுதான் பக்திவழி கூறிக் கொண்டே இருக்கிறோம். பக்தியும் தர்மமும் சத்தியமும் ஒருநாள் கட்டாயம் மனிதன் எண்ணுகின்ற நிரந்தர நிம்மதியை, நிரந்தர சந்தோஷத்தை தரும். ஆனால் அதுவரை மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது இந்த உலகினால் ஆசாபாசங்களால் பந்தபாசங்களால் பற்றால். ஆசையால் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே இவற்றையெல்லாம் விடு என்று கூறுவதைவிட மாந்தர்களின் போக்கிலேயே ஆன்மீக வழிமுறைகளை போதித்து இதுபோல் பல்வேறு விதமான சடங்குகளையும் பூஜை முறைகளையும் கூறி அந்த வழியிலிருந்து மெல்ல மெல்ல அவன் மேலேறி வரவேண்டும் என்றுதான் யாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும்கூட எத்தனைதான் நுணுக்கமாய் யாங்கள் வெளிப்படையாய் தெளிவாய் உரைத்தாலும் யாங்கள் எந்த நோக்கிலே உரைத்தாலும் அந்த நோக்கிலே புரிந்து கொள்ளாமல் போவதுதான் மனிதர்களின் தன்மையாகும்.

யாங்கள் எதை எதற்காக எப்படி கூறுகிறோம்? என்பதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனம் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் விரைவில் இறையருளை பரிபூரணமாக பெற்றுவிடுவான். இதுபோல் மனதிலே ஒரு மனிதனுக்கு கள்ளமும் சூதும் சூழ்ச்சியும் இல்லாத நிலையிலே அவன் இறையருளைப் பெறுவது எளிதாகும். சுயநலமும் சூழ்ச்சியும் சந்தேகமும் ஆளுமை சிந்தனையும் அகங்காரமும் யாரிடம் இருந்தாலும் இறையருளைப் பெறுவது கடினமாகும். எனவே எமை நாடும் சேய்கள் நாள்நாளும் எமது வாக்கின் போக்கை சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு கூறுகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த இடத்தில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? என்ன வழிமுறைக்காக கூறுகிறோம்? அதனை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்பதை நன்றாக சுய ஆய்வு செய்து புரிந்து புரிந்து புரிந்து எமது வாக்கை அசைபோட்டு அசைபோட்டு அந்த வழியில் மேலேற இறைவன் அருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து இறை பக்தியும் பரிபூரண சரணா பக்தியும் இந்த சரணா பக்தி என்பது சரணாகதியிலிருந்து வருவதாகும். சரணாகதி பக்தி இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு எந்தவிதமான நிம்மதியும் சட்டென்று வந்துவிடாது. எனவேதான் எந்தவிதமான ஐயமுமின்றி சரணாகதி பக்தியை ஒருவன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரணாகதி பக்தி வளரவேண்டும் என்றால் ஒரு மனிதனிடம் கூடுமானவரை குற்றங்களும் குறைகளும் இல்லாமல் இருத்தல் அவசியம். குற்றங்கள் இருந்தாலும் அவற்றை உள்ளுணர்ந்து மெல்ல மெல்ல திருத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்வதைவிட பலர் முன் அந்தத் தவறை எவனொருவன் ஒத்துக்கொள்கிறானோ அவன்தான் எமது வழியில் வர தகுதி பெற்றவனாவான். எனவே நல்விதமாய் சிந்தனையை வளர்த்து சிந்தனையை கூர்மையாக்கி எமது வழிமுறையை புரிந்துகொண்டு வர பரிபூரண நல்லாசியை இத்தருணம் கூறுகிறோம்.

திருநீற்றின் மகிமை

ஒரு ஏழை அன்றாட உணவிற்கே ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் பொய் பேச மாட்டான். சோம்பேறியும் அல்ல. முன் ஜென்ம பிரதிபலன் அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. ஒருநாள் தன் வாழ்வினை நொந்து நடந்து கொண்டிருந்தான். அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா எனக்கு சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் மேனி முழுதும்? என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு அதன் அடையாளமே இது. நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அறியவும். இன்னும் உயிருள்ளவரை இதுவே மகாலெட்சுமி அம்சம். இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நான் மிகவும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்யவேன் என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான். சிவனடியாரும் சரியப்பா நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான் நம் குல வழக்கப்படி பூச முடியாது. அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டும் என முடிவு செய்து அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில் உறங்கினான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவர் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார். இதனை அறிந்த அவன் நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? என்று எண்ணி குயவன் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் அதிகாலை மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராத விதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் பார்த்தான். அப்போது ஏழை குயவனின் நெற்றியிலிருந்த திருநீற்றை தூரத்திலிருந்து பார்த்ததும் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கத்தினான். உடனே குயவன் உண்மையாகவே பார்த்து விட்டாயா என்று கேட்டான். ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன் எனக் கூறினான். உடனே குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைபிடித்து தூக்கு ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக்கூறினான். அப்போது தான் புதையல் விஷயம் ஏழைக்கு புரிந்தது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே பாதி தங்கம் கிடைத்ததே இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ என்று தன் குல வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 415

நாங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது லிங்க ஸ்வரூபத்தை வணங்குவதா? அல்லது சுடரை ஆராதிப்பதா? எதில் ஒன்றுபடுவது?

இறைவனின் கருணையைக் கொண்டு யாம் கூறுவது என்னவென்றால் இறையை உணர்வதற்கு உண்டான கரணங்களே புறத்தோற்றங்களே இத்தனையும். ஆலயமாக இருக்கட்டும் தெய்வ வடிவங்களாக இருக்கட்டும். அங்கே நடக்கின்ற புற சடங்குகளாக இருக்கட்டும் தீப ஆராதனையாக இருக்கட்டும் ஒலிக்கின்ற மணியாக இருக்கட்டும். மனிதரின் மனோநிலையும் மன பக்குவமும்தான் இறைவனை உணர்வதற்கு உண்டான ஒரு கருவியாகும். உதாரணமாக உரத்து மந்திரங்களை சொன்னால்தான் சிலருக்கு இறைவனை வழிபட்ட திருப்தி ஏற்படும். அப்படி ஒரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறு செய்துவிட்டுப் போகட்டும். சிலருக்கு மனதிற்குள் மந்திரத்தை உச்சரித்தால்தான் இறைவனை திருப்தியாக வழிபட்ட ஒரு நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மனிதன் அப்படியே வணங்கிவிட்டு செல்லட்டும். இன்னும் சிலருக்கோ இன்னவன் கூறியதுபோல கண் மூடி மௌனமாக இருந்தால்தான் இறைவனை வணங்கியது போல் தோன்றும்.

இறைவன் காட்சி தந்தது போலவும் தோன்றும். அப்படியொரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறே செய்துவிட்டுப் போகட்டும். இது மனிதன் வளர வளர மாறக் கூடிய நிலையாகும். எனவே கருவறையின் முன்னால் நிற்க வேண்டும் விழி மூடவேண்டும் அல்லது விழி திறக்க வேண்டும் அல்லது லிங்க ஸ்வரூபத்தையோ அம்பாளையோ பார்க்க வேண்டும் அல்லது ஆராதனையை காதால் கேட்க வேண்டும். மந்திரங்களை கேட்க வேண்டும் அல்லது தீப சுடரை உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி எதையும் நாங்கள் கூறவில்லை. மனதில் இறை பற்றிய சிந்தனை இருக்கிறதா? இறைவனை இந்த வடிவத்தில் பார்த்தால் என் மனம் ஏற்றுக் கொள்கிறது என்று ஒரு மனிதனுக்கு ஒரு வடிவம் பிடித்திருக்குமே? அந்த வடிவத்தை மனதில் கொண்டுவந்து வைத்து விட்டால் போதும். இறை சிந்தனை இருந்தால் போதும். விழி மூடி வாய் மந்திரங்களை உச்சரிக்க உடலெங்கும் திருநீறு பூசியிருக்க சிந்தனை எங்கோ இருந்தால் அதனால் பலனேதுமில்லை. அங்கே ஒரு கணமாவது வேறு சிந்தனை ஏதுமில்லாமல் அதுபோல் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை லிங்க வடிவமாகவோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எண்ணினால் மனம் சிக்கென்று பிடித்துக் கொள்கிறதோ அந்த வடிவத்தில் நினைக்க பிடித்துக் கொள்ள நன்மையாகும் அதே வழிபாடாகும்.

Spiritual evolution is achieved by yoga and striving. Devotees perform tapas, holding pots of fire, meditating for long hours, rolling around the temple in hot sand and carrying kavadi. Devas bless their efforts from the inner planes, while the baser worlds remain below and apart.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 414

கேள்வி: அன்னை லோபாமுத்திரை வாக்கு அருள வேண்டும்:

இறைவனின் கருணையாலே இதுபோல் சூழல் இறைவன் அருளால் நிகழும் பொழுது கட்டாயம் நடக்குமப்பா. யாம் முன்னரே கூறியதைதான் மீண்டும் நினைவூட்டுகிறோம். எம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான் என்று பார்க்க எம் சேய்கள் பழக வேண்டும். இதுபோல் பெண்பால் லோபா முத்திரையாக யானும் ஆண்பால் அகத்தியனாக அன்னையும் இருந்து அருள்பாலிப்பது உண்மை. எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் இங்கு ஆண் பெண் பேதங்கள் யாருக்கும் தோன்றாது.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த போது ஆபரணங்கள் தலையில் கீரிடத்துடன் உடன் வயிற்றில் சிறிது தொந்தியுடன் முதல் சிற்பத்தில் இருக்கிறார். இறைவனின் திருவடி தீட்சை பெற்று சிவனடியார் ஆன பின்பு ருத்திராட்ச மாலையுடன் தொந்தி இல்லாமல் கைகள் கட்டிக் கொண்டு பணிவுடன் 2 வது சிற்பத்தில் இருக்கிறார். இடம் ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோவில் திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 413

கேள்வி: காஞ்சியில் தாங்கள் வழிபட்ட சாளக்ராமத்தினால் ஆன ஸ்ரீ ராம சக்ரம் சூட்சுமத்தைப் பற்றி சொல்லுங்கள்:

இறைவனின் கருணையைக் கொண்டு பல்வேறு விதமான சக்கரங்கள் குறிப்பாக யந்திரங்கள் செம்பில் கனகத்தில் வெள்ளியில் இருந்தாலும் இதுபோல் சிறப்பிலும் சிறப்பு தூய்மையான கருங்கல்லிலே செதுக்கப்பட்ட சக்கரங்கள். இவற்றிலிருந்து சில ஆற்றல்கள் வருவது உண்மைதான். இவற்றை நன்றாக புரிந்துகொள்வது மனிதர்களுக்கு சற்றே கடினம்தான். இருந்தாலும் சுருக்கமாக யாங்கள் கூறுகிறோம். இதுபோல் எதாவது ஒரு காரணத்தால் குழந்தைகளை பிரிந்திருக்கும் பெற்றோர் கணவனை பிரிந்திருக்கும் பெண்டிர் இதுபோல் எதாவதொரு பிரிவு வாட்டுகின்ற கர்மவினை இருக்கின்ற மனிதர்கள் இதனை வழிபட்டால் பிரிவால் ஏற்பட்ட சோகம் மெல்ல மெல்ல மாறும்.