ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 412

கேள்வி: அறப்பணிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் மனம் தொய்வடைகிறது. அப்போது என்ன செய்ய வேண்டும்? அடுத்து கர்மவினை ஒரு மனிதனை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்படி புரிந்துகொள்வது?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் ஒரு மனிதன் தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும். புண்ணிய காரியங்களை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அறச்செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். சத்தியநெறியில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். பரிபூரண சரணாகதி பக்தியை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ்ந்தாலும் கூட எதாவது ஒரு துன்பம் வந்து மனம் சோர்ந்து விடுகிறதே? விரக்தியடைந்து விடுகிறதே? இறை பக்தியே வீண் என்பது போலெல்லாம் தோன்றுகிறதே? இத்தனை உருகி உருகி இறைவனை வணங்கினாலும் துன்பம்தான் வருகிறது என எண்ணுவது மனதின் இயல்பு. அப்பொழுது மௌனமாக தனக்குள்ளே சிந்திக்கவேண்டும் உண்மைதான்.

எத்தனையோ தர்மங்களை ஒருவன் செய்திருக்கலாம். எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்து கொண்டிருக்கலாம். எத்தனையோ விதமான பூஜைகளை செய்யலாம். வாழ்க்கையை தொண்டாகவே மாற்றி வாழலாம். தியாக செம்மலாகவே வாழலாம். ஆனாலும்கூட அவனுக்கும் முன் ஜென்ம முன் ஜென்ம பாவவினைகள் இருக்கிறதல்லவா? அது வந்து வாட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரி இத்தனை செய்தும் இப்படியொரு துன்பம் வந்திருக்கிறதே? இவையெல்லாம் செய்யாதிருந்தால் இதே துன்பத்தின் தாக்கமும் அளவும் எந்தளவிற்கு இருந்திருக்கும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தர்ம வழியில் சத்திய வழியில் பக்தி வழியில் சாத்வீக வழியில் பிறருக்கு நல்லதை நினைக்கின்ற செய்கின்ற வழியில் வருகின்ற மனிதனுக்கு துன்பம் வந்தாலும் இறைவன் தலையிட்டு அதனை எப்படியெல்லாம் குறைக்க முடியுமோ குறைத்து அது விதியே ஆனாலும் மாற்றித் தருகிறார். இதற்கு நம்பிக்கைதான் முக்கியம். இதனையும் தாண்டி மனம் விரக்தி அடைந்துவிட்டால் அமைதியாக யாருடனும் பேசாமலும் ஏதாவதொரு ஆலயம் சென்று அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு இட்டம் போல் விருப்பம் போல் சில ஆத்மாக்களின் நியாயமான தேவைகளை எப்படியாவது நிறைவேற்றி விடுவோம் என்று போராடி தர்ம காரியத்தை செய்தால் உடனடியாக மறுதினமே மாற்றங்கள் வந்து நல்லதொரு சூழல் ஏற்படும். எனவே இதனை நன்றாக புரிந்து கொண்டு இந்த தர்ம சூட்சுமத்தை நன்றாக செய்ய நன்மை உண்டு. குறிப்புக்காக கூறுகிறோம். இதையே உதாரணமாக பிடித்துக்கொள்ளக் கூடாது.

சில மனிதர்கள் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக பறவைகளை சிறைபிடித்து விற்பனை செய்வார்கள். இவற்றை வாங்கி உகந்த வனாந்திரமான இடத்திலே சுதந்திரமாக பறக்க விட்டால் எத்தனை மன இறுக்கமும் ஒருசில தினங்களில் மாறிவிடும். பறவைகளை பறக்கவிடு என்பதற்காக மெனக்கெட்டு ஒரு பறவையை பிடித்து அதன் சிறகுகளை நறுக்கி அதனை பற என்றால் அது பாவமாகும். பறவையை வெளியே விடு என்றால் என்ன பொருள்? பறவை எப்படி சிறைபட்டு நொந்து இருக்கிறதோ அப்படி எத்தனையோ ஆண்களும் பெண்களும் சில வேதனையான விஷயங்களை வெளியே சொல்லாமல் இருப்பார்கள். சில நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதே சமயம் அதற்கான சூழல் இராது. தனமும் இராது. அவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்னர் அந்த உதவியை செய்ய வேண்டும். குறிப்பாக இடர்பாட்டில் வேதனையில் இருக்கின்ற பெண்களுக்கு இன்னும் சரியாக கூறப்போனால் எங்கெல்லாம் பெண்கள் துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களின் நியாயமான துன்பங்களையெல்லாம் யார் தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு இறையருள் பரிபூரணமாக உடனடியாகவே கிட்டும் என்பதை யாங்கள் கூறுகிறோம். அதைப்போல யாரையும் துன்புறுத்தக்கூடாது. குறிப்பாக பெண்களை எந்த விஷயத்திலும் யாரும் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் அதே இறையருள்தான்.

ஆனாலும்கூட இவையெல்லாம் தெரிந்தாலும் என்னுடைய சூழ்நிலை நான் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளை செய்தால் அதன் விளைவுகளை அவன் எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இதுபோல் நல்விதமான வழிமுறையை தர்மத்தை பின்பற்றிக் கொண்டே வந்தால் பாவ கர்மாக்கள் குறையும். பாவ கர்மாக்கள் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எவ்வாறு ஒரு மனிதன் புரிந்து கொள்ள முடியும்? என்றால் சினம் குறைந்து விடும். பொறாமை இல்லாத மனோநிலை வந்து விடும். ஆற்றாமை இராது. யார் மீதும் எதற்காகவும் ஆத்திரமும் எரிச்சலும் வராது. தனக்கு தீமை செய்த மனிதன் மீது கூட அன்பு பெருகும். இப்படியொரு மனம் யாருக்கு மெல்ல மெல்ல வளர்கிறதோ அவர்களுக்கு பாவங்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே இருக்கிறது என்று பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 411

கேள்வி: புற்றுநோயால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரிடம் நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது இன்னுரையில் வருமா? இது சரியா? தவறா?

வள்ளுவன் கூற்றைத்தான் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். எனவே பிறருக்கு தீங்கைத் தராத எதுவும் பொய்யல்ல. எனவே இதுகுறித்து குழப்பமே வேண்டாம்.

கல்லேஸ்வரர்

தாமரை பீடத்துடன் கூடிய பெரிய கல்பீடத்தின் மீது உமாமகேஸ்வரர் தோற்றத்தில் சிவபெருமான் பார்வதிதேவியுடன் இரண்டு பறக்கும் வித்யாதரர்களுடன் காட்சி அளிக்கின்றார். இடம் கல்லேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 410

கேள்வி: பிறருக்கு இன்னுரைதானே திருமூலர் திருமந்திரத்தின் விளக்கம்:

இன்னுரை என்ற சொல்லிற்கு இனிமையான உரை நல்ல சாத்வீகமான வாக்கு அன்பு ததும்புகின்ற வாக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். இருந்தாலும்கூட நல்ல நண்பர்கள் அல்லது பெற்ற குழந்தைகள் இவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கடினமான வார்த்தைகளை வேறு உள்நோக்கம் இல்லாமல் பயன்படுத்தும் பொழுது அதும் இன்னுரையாக மாறிவிடுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பிணிக்கு இனிப்பு பண்டம் எதிரி என்றால் அந்த இனிப்பு பண்டமே விஷமாக மாறிவிடுகிறது. அதே பிணிக்கு கசப்பு பண்டம் மருந்து என்றால் அது மருந்தாக மாறி பிணியில்லாமல் செய்து விடுகிறது. நிலைமை இவ்வாறிருக்க இனிமையாக பேசுகிறேன் பிறரை எப்பொழுதும் நன்றாகவே ஆராதிக்கிறேன் என்று அவர்களை தவறான பாதைக்கு இட்டு சென்றால் அது இன்னுரை அல்ல. பேசுகின்ற வார்த்தை பேசுகின்ற மனிதனுக்கும் பிறருக்கும் நன்மையை தரத்தக்கதாய் உண்மையான வார்த்தையாக இருக்கும் பட்சத்தில் அனைத்து நன்மைகளும் உள்ளடக்கிய வேறு தீய உள்நோக்கம் இல்லாத வாக்கே இன்னுரையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 409

கேள்வி: பட்டினத்தாரின் முன்வினைப்பயன் கழுமரம் பற்றி:

பல்வேறு மனிதர்களுக்கு பாவ வினைகளால் அடுத்தடுத்து துன்பங்கள் வருகிறது. ஆனால் ஞானிகளுக்கும் தேவதை வர்க்கங்களுக்கும் ஏது கர்மவினை? என எண்ணலாம். அவர்களுக்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க பல்வேறு தருணங்களில் கர்மவினை இல்லை என்றாலும் பூமியிலே மனிதனாக பிறந்தால் நல்லவனாக வாழ்ந்தாலும் ஊழ்வினை வந்து உறுத்தூட்டும் என்பதை பிற மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு கர்மவினை தன்னை தாக்கியதாக நாடகம் ஆடுவார்கள் ஞானிகள். இதுபோல் பார்க்கும் பொழுது பிரகலாதன் வாழ்க்கையிலே என்ன கர்ம வினை இருக்க முடியும்? ஆனால் அதுபோல் பிரகலாதன் இராகவேந்திரராக அவதாரம் செய்தபோது இராகவேந்திரர் பட்ட துயரமெல்லாம் பலர் அறிந்ததே. எதற்கு இராகவேந்திரர் வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடக்கவேண்டும்? எனவே இதையெல்லாம் கர்மவினையோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

ஒரு வார்த்தைக்காக முன்வினை என்று பாடலிலே பட்டினத்தான் கூறியிருக்கலாம். ஆயினும்கூட அந்த முன்வினையையும் தாண்டி அங்கே தெய்வ நாடகம் இருக்கிறது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும்.

கைலாசமலையை தூக்கிய ராவணன்

சிவனும் பார்வதியும் கைலாச மலையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த கைலாச மலையை ராவணன் தனது அகங்காரத்தினால் தூக்க முயற்சிக்கிறார். சிவபெருமான் தன்கால் கட்டை விரலால் லேசாக அழுத்த மலைக்கு அடியில் ராவணன் சிக்கி துன்பப்படுகிறான். இறுதியில் தன்னுடைய அகங்காரம் சென்றவுடன் இறைவனை புகழ்ந்து பாடல்கள் பாட இறைவன் அவருக்கு ஒரு வெல்ல முடியாத வாள் மற்றும் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தை வழங்கி ஆசிர்வதித்தார். இந்த வரலாறு கர்நாடாக மாநிலம் ஹொய்சளேஸ்வரர் கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

காளிங்கநர்த்தனம்

கிருஷ்ணர் யமுனை ஆற்றில் வாழ்ந்து வந்த காளிங்கன் எனும் நாகத்தின் மீது ஆடிய நடனத்தினைக் குறிக்கும் சுதைச்சிற்பம். இடம் ஹசராராமர் கோவில் ஹம்பி கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 408

கேள்வி: ஸ்வஸ்திக் சின்னத்தை மனதில் எண்ணும் போது நம்மை எதிர்க்கும் நபர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை பற்றி:

இறைவனின் கருணையாலே ஓம்காரத்தையும் நினைத்து பிரார்த்தனை செய்தால் பலனுண்டு. இதுபோல் சேவற்கொடியை வேலினை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்தாலும் பலனுண்டு. இங்கு எந்த இலச்சினை (சின்னம்) என்பது முக்கியமல்ல. மனோபாவம்தான் முக்கியம். எனவே எந்த மனோபாவத்தில் பிரார்த்தனை செய்கிறாயோ அதை உறுதியோடு உள்ளன்போடு நம்பிக்கையோடு செய்தால் கட்டாயம் பலனுண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 407

கேள்வி: மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாளின் மகிமை :

இதுபோல் கண் நோய் என்றால் மனிதனுக்கு புறக்கண்தான் ஞாபகம் வருகிறது. மனிதனிடம் இருக்கக்கூடிய அகக்கண்ணை திறந்து அவன் ஞானக்கண்ணை திறந்து உண்மையான வாழ்க்கை எது? இறைவனை புரிந்துகொள்வது எப்படி? என்று வழிகாட்டக்கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று. கேதுவின் தாக்கம் கடுமையாக இருப்பவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதும் ஒன்று. உலகியல் ரீதியாக கூறப்போனால் புறக்கண்ணில் நீண்டநாள் பிரச்சினை இருப்பவர்கள் சென்று வணங்கக் கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று.

மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் ஆலயத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.