உடல் என்னும் வண்டி

சந்தையில் இருக்கும் மாட்டு வண்டிக்கு உயிரும் இல்லை அறிவும் இல்லை. மாட்டுக்கு உயிர் உண்டு அறிவும் உண்டு வண்டிக்காரன் உயிருடன் இருக்கும் அறிவுள்ள மாட்டை உயிரில்லாத வண்டியுடன் பூட்டி தான் செல்ல வேண்டிய இடத்தை தீர்மானித்து வண்டியை செலுத்துவான். மாட்டிற்கு தேவையான உணவையும் தண்ணீரையும் வழியில் கொடுப்பான். ஒய்வு நேரத்தில் அதற்கு ஓய்வு கொடுப்பான். சில நேரங்களில் பாதை நன்றாக இருக்கும். மாடு சுலமாக செல்லும். சில நேரங்கிளில் கரடு முரடான பாதை வரும். அப்போது மாட்டினால் தூக்க முடிந்த அளவு மட்டுமே பாரத்தை வைத்து கரடு முரடான பாதையில் கொண்டு செல்வான். பாதை சரியில்லை என்றால் வேறு பாதையில் செல்வான். எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் எவ்வளவு பாரம் அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே. அறிவிருந்தும் அனைத்தையும் சுமந்து நடப்பது தானாக இருந்தாலும் மாட்டினால் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல

உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டி தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். மனிதன் இயங்கி ஒடிக்கொண்டே இருக்கின்றான். மனிதனுக்கு தேவையான உணவு தண்ணீர் அளித்துவிடுகின்றான். அவன் கர்ம விதிப்படி தாங்கும் அளவிற்கு சந்தோசம் துக்கம் கொடுக்கின்றான். எத்தனை பிறவி எத்தனை காலம் அனைத்தையும் தீர்மானித்து இயக்குபவன் இறைவன் ஒருவனே. இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை. இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.

ராமாயணம் பால காண்டம் பகுதி -7

வசிஷ்டர் விஸ்வாமித்திரர் செல்வதை தடுத்து நிறுத்தி தசரதருக்கு அறிவுறை கூற ஆரம்பித்தார். தாங்கள் தர்மிஷ்டன் என்று பெயர் பெற்றவர். வாக்கு கொடுத்து விட்டு அதனை மீறுதல் கூடாது. கொடுத்த வாக்கினை காப்பற்றவில்லை என்றால் இது வரைக்கும் தாங்கள் சேர்த்த புண்ய பலன்கள் எல்லாம் போய்விடும். விஸ்வாமித்திரர் பற்றி தாங்கள் அறிந்து கொள்ளுங்கள். விஸ்வாமித்திரர் அரசராக இருந்த பொழுது ஐநூறு அஸ்திரங்களை பற்றி முழுமையாக தெரிந்தவர். பரமேஸ்வரனை தவம் செய்து பல அஸ்திரங்களை பெற்றிருக்கிறார். தனக்கு தெரிந்த அனைத்தையும் ராமனுக்கு உபதேசிப்பார். தனது யாகத்தை தானே காக்கும் திறமை உள்ளவர் விஸ்வாமித்திரர் ஆனாலும் ராமனை தனது யாகத்துக்கு பணிவிடை செய்ய கேட்கிறார். இதன் வழியாக அரசகுமாரனாக இருக்கும் ராமனுக்கு வாழ்க்கை பயிற்சியை கொடுக்க அவர் முடிவெடுத்திருக்கின்றார். விஷ்வாமித்ரரின் பாதுகாப்பில் இருக்கும் போது ராமனுக்கு ஒரு ஆபத்தும் இல்லை தாங்கள் கவலை கொள்ளவேண்டாம் ராமனை அனுப்பி வையுங்கள் என்று எடுத்து கூறினார்.

வசிஷ்டர் கூறியவுடன் தசரதர் மனம் தெளிந்து ராமனையும் லக்ஷ்மனையும் அழைத்துவர கட்டளையிட்டார். நடந்ததை அறிந்த கௌசலை ராமனையும் லட்சுமனனையும் அழைத்து வந்தாள். ராமனுக்கு புதிதாக வந்த கடமையை தசரதர் எடுத்து விளக்கினார். ராமன் தத்தையின் ஆணையை தலைவணங்கி ஏற்றுக்கொண்டான். தசரதர் ராமர் லட்சுமனனின் கைகளை பிடித்து ராமன் லட்சுமனன் இருவரும் இணைபிரியாதவர்கள். இவர்களை பிள்ளைகளாக பெறுவதற்கு பல ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்து பெற்ற குழந்தைகள் இவர்கள். என் உயிராக இருக்கும் இவர்களை தங்களிடம் ஒப்படைக்கின்றேன். இவர்களை பாதுகாத்து தங்கள் யாகம் முடிந்ததும் என்னிடம் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று தழுதழுத்த குரலில் கூறி இரு மகன்களையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார். அப்போது சங்க வாத்தியம் முழங்கியது. வானத்தில் இருந்து புஷ்பமாரி பொழிந்தது. விஸ்வாமித்ரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ராமர் லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்ரரை வணங்கி அவரை பின் தொடர்ந்தார்கள்.

ராமன் எக்காரணத்திற்காக மண்ணுலகிற்கு வந்தானோ அக்காரியத்தை நிறைவேற்ற நல்ல பயிற்சியை வழங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விஸ்வாமித்ரருக்கு இருந்தது. தான் பெற்ற ஞானம் மற்றும் அரிய பெரிய அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ராமனை அழைத்து வந்தார். முதல் நாள் இரவை சராயு நதிக்கரையில் கழித்தனர். அப்போது இருவருக்கும் பலம் மற்றும் அதிபலம் என்னும் இரண்டு மந்திரங்களை விஸ்வாமித்திரர் உபதேசித்தார். இந்த மந்திரங்களை ஜபம் செய்வதின் பயனாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பு இருக்காது. பசியையும் தண்ணீர் தாகத்தையும் சிரமம் இல்லாமல் சமாளிக்கலாம். தூங்கும் போது யாரும் தாக்க முடியாது. விஸ்வாமித்ரரிடம் இருந்து இருவரும் கற்ற முதல் உபதேசம் இதுவாகும்.

குரு

பகவான் ஸ்ரீ ரமணர் வழக்கும் போல் தன்னுள் தானே ஆழ்ந்து ஆனந்த பரவசத்தில் மெள‌னமே மொழியாக அம்ர்ந்து இருந்தார். அப்போது ஊருக்குள் இருந்து ஒரு துக்க நிகழ்ச்சி நடந்தது. உண்மையில் அந்த துக்கத்தைப் பற்றி ஊருக்குள் மகிழ்ச்சியே ஏற்பட்டது. இறந்தவர் ஊருக்குள் பெரிய சண்டியர். கட்டப் பஞ்சாயத்து கந்து வட்டி அடிதடி அராஜகத்திற்குப் பெயர் போனவர் அவர். பலருடைய சொத்துக்களை அநியாயமாகப் பறித்துச் சாலையில் நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. தொழில்களைச் செய்யவிடாமல் பல குடும்பங்களைப் பட்டினியில் தள்ளி தற்கொலை வரை விரட்டியவர். ரமணர் அமைதியாக அமர்ந்திருந்தார். ஊருக்குள் இருந்து ஆஸ்ரமத்திற்குப் ப‌லரும் வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் வந்தவுடன் சுவாமி அந்தப் பாவி போய்விட்டான் என்று செய்தியாக சொன்னார்கள். ரமணர் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார். அடுத்த நபர் வருவார். அவரும் மீண்டும் தகவலை மகிழ்ச்சியுடன் சொல்வார். அப்போதும் ரமணர் எந்த சலனமும் இல்லாமல் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அமைதிகாத்தார். இது மாலை வரை தொடர்ந்தது சுமார் 50 பேராவது ரமணரிடம் இந்த ஒரே செய்தியை சொன்னார்கள் யாருக்கும் ரமணர் பதில் அளிக்கவில்லை முகத்தில் மகிழ்ச்சியோ துக்கமோ காட்டவில்லை.

ரமணர் கல்லைப்போல இருப்பதைக் காண்டு பக்தர்கள் சலிப்புக் கொண்டார்கள். அந்தி சாய்ந்த உடனே அந்த இறந்த நபருடைய பூத உடல் அவருடைய உறவினர்களால் மயானத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. அந்தத் துக்க‌ ஊர்வலம் ஆஸ்ரமத்தைத் தாண்டிச் சென்றது. ஆஸ்ரமத்திற்கு முன்னால் ஊர்வலம் வந்த போது ரமணர் எழுந்து நின்றூ மரியாதை செய்தார். மேலும் பூத உடலை நோக்கிக் கைகூப்பி வணங்கினார். பார்த்துக் கொண்டிருந்த ஒரு பக்தருக்குக் கோப‌மே வந்து விட்டது. சற்றும் தயங்காமல் தன் கோப‌த்தை கொட்டிவிட்டார் அந்த பக்தர். என்னங்க‌ சாமி அவனோ அயோக்கியன். அவனப் போயி கும்பிடறீங்களே அது ஏன்னு சொல்லுங்க சாமி என்றார். ரமணர் ஒன்றும் சொல்லவில்லை. பக்தர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் ஏன் ஏன் என்று கேட்டுப் பின் தொடர்ந்தார். அந்த பக்தரின் தொல்லை தாங்காமல் ரமணர் தன் மெள‌னத்தைக் கலைத்தார். இறந்தவர் என்னுடைய ஒரு குரு என்றார் ரமணர். அந்த சண்டியன் உங்களுக்கு குருவா ஆச்சரியப்பட்டார் பக்தர்.

அவரிடமிருந்து உடல் சுத்தம் பற்றி நான் அறிந்து கொண்டேன். நான் திருவண்ணாமலைக்கு வரும் போது எனக்கு 12 வயதுதான். அதுவரை வீட்டில் அம்மாதான் எனக்கு முதுகு தேய்த்து தண்ணீர் ஊற்றிக் குளிப் பாட்டுவார்கள். எப்படி குளிக்க வேண்டும் என்பது கூட அறியாத வயது எனக்கு. அப்போது அந்த நபர் குளத்தில் வந்து குளிப்பதை வேடிக்கை பார்ப்பேன். எப்ப‌டி நாமே முதுகைத் தேய்ப்ப‌து கைவிரல் கால் விரல் காது மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து பார்த்து தேய்த்துக் குளிப்பார். நானும் அதுபோல குளிக்க அவரைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன். எனவே அவர் எனக்கு உடல் சுத்தம் பற்றி அறிவுறுத்திய குரு ஆவார் என்றார். ரமணர் அளித்த விளக்கத்தைக் கேட்டு பக்தர்கள் அமைதியானார்கள்.

எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -6

ராமன் நான்கு சகோதரர்களிலும் தர்மத்தை கடைபிடிப்பதில் மூத்தவனாக இருக்கிறான். இவன் மீது மிக அதிகமாக பிரியம் வைத்திருக்கிறேன். நான் எப்படி இந்த குழந்தையை தருவேன் என்று மீண்டும் மீண்டும் அனுப்ப மறுத்து யாகத்தை பாழ்படுத்த நினைக்கும் மாரீசன் சுபாகு என்ற அரக்கர்கள் யார் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கேட்டார். அவர்கள் ராவணனுடைய ஆட்கள் என்று விஸ்வமித்ரர் சொன்னதும் அப்படியென்றால் நான் ராமனை நிச்சயம் அனுப்பமாட்டேன் என்று உறுதியாக கூறினார் தசரதர். இதை கேட்ட விஸ்வாமித்ரர் உன்னுடைய ரகு குலத்தை பற்றி கூறுகிறேன் கேள் என்று சொல்லி ஆரம்பிக்கிறார்.

கௌத்ஸர் என்று ஒரு ரிஷி தனது குரு குல கல்வி முடிந்தவுடன் தனது குருவான வரதந்துவிடம் தங்களுக்கு குரு தட்சணை என்ன தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு குரு நீ நன்றாக படித்தாய் அதுவே எனக்கு திருப்தி அதுவே போதும் என தட்சணை வாங்க மறுத்து விட்டார். அனால் கௌத்ஸர் தன் குருவிடம் தாங்கள் எதுவேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். குருவும் பதினான்கு கோடி வராகன் கொண்டுவா என்று ஒரு வார்த்தை கூறிவிட்டார். உடனே கௌத்ஸர் ரகு மகாராஜாவிடம் கேட்கலாம் என்று வருகிறார். இந்த ரகு மகாராஜா அப்பொழுது தான் உலகத்தையெல்லாம் வெற்றி கொண்டு விஸ்வஜித் என்கிற யாகம் செய்து வெற்றி கொண்ட அனைத்து செல்வத்தையும் தானம் செய்துவிட்டார். அவரிடம் எதுவும் இல்லை. அதனை கண்ட கௌத்ஸர் திரும்ப செல்ல முனைந்தார். இதனை கண்ட ரகு மகராஜா அவரிடம் என்ன வேண்டும் தங்களுக்கு அரண்மனை வரை வந்துவிட்டு திரும்ப செல்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு கௌத்ஸர் எனக்கு பதினான்கு கோடி வராகன் எனக்கு தேவைப்படுகிறது அதை தங்களிடம் யாசிக்கலாம் என்று வந்த பொழுது தாங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டீர்கள் என்பதை அறிந்து திரும்பப் போகிறேன் என்கிறார்.

அதற்கு ரகு மகாராஜா இன்று ஒருநாள் இங்கு தங்குங்கள் நான் நாளை நீங்கள் கேட்டதை தருகிறேன் என்று கூறி கௌத்ஸரை தங்க வைக்கிறார். நாளை நாம் குபேரனை படையெடுப்போம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உறங்க சென்றார். இதனை அறிந்த குபேரன் ரகு மகாராஜா படையெடுத்தால் அவரை எதிர்ப்பது கடினம். இந்திரனுடைய வஜ்ராயுதமே ரகுவை ஒன்றும் செய்யமுடியவில்லை நாம் என்ன செய்ய முடியும் என்று பதினான்கு கோடி வராகனுக்கு மேலாகவே இரவோடு இரவாக ரகுவின் கஜானாவில் மழையாக பொழிந்துவிட்டார். அடுத்த நாள் காலையில் இதை அறிந்த ரகு மகாராஜா கௌத்ஸரிடம் இவை எல்லாவற்றையும் எடுத்துகொள்ளுங்கள் என்று வேண்டினார். அதற்கு கௌத்ஸர் இவை அனைத்தும் எனக்கு வேண்டாம் நான் கேட்ட பதினான்கு கோடி வராகன் மட்டும் எனக்கு போதும் அதனை என் குருவிற்கு தரவேண்டும் என்று அதனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். தன்னிடம் இல்லாத போதும் ரகு மகாராஜா கேட்டதை கொடுத்தார். நீயோ என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு நான் கேட்ட ராமனை கையில் வைத்துக்கொண்டு தர மறுக்கிறாய். உன்னுடைய ரகு குலத்தில் பிறந்த உனக்கு இது அழகா நான் வருகிறேன் என்று கோபமுடன் புறப்பட்டார்.

கர்மா

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது ஆகும். அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் காரணமாக இந்த பிறவியில் நம்முடனே வரும் கர்ம வினையாகும். பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை ஆகும். இந்த கர்மா சிறிதாக இருந்தால் அதனால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும். பெரிதாக இருந்தால் அடுத்த பிறவியிலும் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியது இருக்கும். மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது ஆகும். இவ்விதம் மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.

இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது. நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். மனிதன் தாம் வாழும் காலத்தில் மெய், வாய், கண், காது, மூக்கு என ஐந்து புலன்களால் தூண்டப்பட்டு இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது கர்மவினைகள் உண்டாகிறது. முதலாவதாக எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையிலேயே அதனை தீர்க்க முடியும். இரண்டாவதாக நம் கர்ம வினைகளை தீர்க்கும் ஆற்றல் கொண்டவர் இறைவன் ஒருவரே. முதலில் நாம்முடைய கர்ம வினைகள் நீங்க இறைவனை பற்ற வேண்டும். இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவை

  1. யாதனம் – கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
  2. சிரவணம் – இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
  3. கீர்த்தனம் – இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி பஜனைகள் மூலம் கூட்டுப்பிரார்தனை செய்தல்.
  4. பூஜார்தனம் – அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.
  5. ஸ்துதி – இறைவனை போற்றி தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த ஐந்த விதமான சேவைகளை சிரத்தையுடன் செய்து வர நாம் அனுபவிக்கும் கர்ம வினைகள் அனைத்தும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறிதளவு துன்பத்துடன் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -5

ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள். குழந்தைகள் நால்வருக்கும் ஐந்து வயது ஆனதும் தசரதர் வசிஷ்டரிடம் சென்று நான்கு குமாரர்களுக்கும் வேதங்கள் மற்றும் எல்லாவிதமான கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான்கு குழந்தைகளும் கல்வியுடன் யானை குதிரை தேர் பயிற்சிகளுடன் வில் பயிற்சியும் வசிஷ்டரிடம் பயின்றார்கள். ராமனும் லட்சுமணனும் ஒருவரையொருவர் பிரியாமல் காடு மலை நதி என எங்கு சென்றாலும் சேர்ந்தே இருந்தார்கள். அதுபோலவே பரதனும் சத்ருக்கனனும் சேர்ந்தே இருந்தார்கள். இக்காரணத்தால் மக்கள் அனைவரும் ராம லட்சுமணன் என்றும் பரதன் சத்ருக்கனன் என்றும் அழைக்க ஆரம்பித்தார்கள். நால்வரும் கௌசலை, கைகேயி, சுமித்ரை மூவரையும் பாகுபாடு பார்க்காமல் தங்கள் தாய்போல இஷ்ட தெய்வம் போல் வணங்கி வந்தார்கள். ராமர் தம்பிகள் மூவரிடமும் தந்தைக்கு நிகராக நடந்து கொண்டார். தம்பிகள் மூவரும் ராமனை தந்தைக்கு நிகராகயாகவே கருதி மரியாதை செய்தார்கள். ராமருக்கு 12 வயது முற்றுப்பெற்றது.

ஒருநாள் அரசவையில் தசரதர் இருக்கும் போது விசுவாமித்ர மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தசரதர் அவருக்கு ஏற்ற சிம்மாசனத்தில் அமர வைத்து மரியாதை செய்து வணங்கினார். ராஜ்யத்தில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் ஆணையிடுங்கள் அதனை நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கூறினார். அதற்கு விஸ்வாமித்ரர் உலக நன்மைக்காக உத்தமயாகம் ஒன்று செய்யப்போகின்றேன். யாகத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு பாழ்படுத்த மாரீசன் சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தவவலிமையால் அவர்களை என்னால் சுலபமாக அழிக்க முடியும் ஆனால் மேலான லட்சியம் ஒன்றின் காரணமாக என் தவவலிமையால் அவர்களை அழித்து தவவலிமையை இழக்க விரும்பவில்லை. யாகம் செய்யும் போது காவல் காக்க போர் வீரன் ஓருவன் தேவைப்படுகிறான். சாமான்ய வீரனால் காவல் காக்க முடியாது. யாகம் முடியும் வரை 10 நாட்கள் உன்னுடைய புதல்வர்களில் ராமனை அனுப்பிவைப்பாயாக ராமனுக்கு ஒன்றும் நேராதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதனை கேட்ட தசரதர் நிலைகுழைந்து போனார். சிறிது நேரம் அமைதியான அவர் தடுமாற்றத்துடன் விஸ்வாமித்ரருக்கு பதில் கூறினார்.

ராமர் மிகவும் சிறியவன். ராமனுக்கு போர் செய்த அனுபவம் ஒன்றும் இல்லை. பாலகனான அவன் அரக்கர்களை எவ்வாறு எதிர்க்க இயலும். ஆகவே நானே தங்களுடன் வந்து யாகம் முடியும் வரை காவல் காத்து அரக்கர்களை அழிக்கின்றேன் என்றார். இதனை கேட்ட வசிஷ்டர் இந்திரனுக்கு நீ உதவி செய்வதற்காக அசுரர்களை அழித்து அவர்களை வெற்றி கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது இந்த அரக்கர்களை அழிக்க உன்னால் இயலாது தசரதா. இது ராமானால் மட்டுமே முடியும். உன்னுடைய புதல்வர்களுக்கு வரும் பெருமைகளையும் சிறப்புகளையும் தடுத்துவிடாதே. விஸ்வாமித்ரருடன் உன் புதல்வர்களை அனுப்புவை அவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.

ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்

விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் தொற்றுநோய் விஷ கிருமிகளால் மக்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இறை பற்று மிக்க சதாசிவராய மன்னர் இதனைக் கண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜ வைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தணரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார். மன்னரின் ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திர பாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து. கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12 வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கமும் அபிஷேக தீர்த்தமும் பக்தர்களுக்கு அருமருந்தாய் விளங்கி அனைவருக்கும் நன்மை செய்து நோய்களில் இருந்து காத்தது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். சில நாட்கள் கழித்து ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டு இடிபட்டது. இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்து வைத்தார்கள்.

இந்த இடத்தில் 1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானப் பணி நடந்தது. இப்பணி ஒரு கால கட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்து விட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் கோவில் மன்ற நிர்வாகி அகத்தியர் நாடி சோதிடர் திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்களை நாடினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட பாஷாண லிங்கம் பற்றி செய்தி வந்தது. அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு நாடி சோதிடர் பெருமுயற்சியுடன் குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது. திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்கள் தன்னிடம் கிடைத்த அந்த திமிரி பாஷாண லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார். இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சி

கடவுள் ஏன் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கவில்லை என்று சீடர் ஒருவர் குருவிடம் கேட்டான். அதற்கு குரு கடவுள் எல்லோரையும் ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வைத்திருக்கிறார். இருப்பதை விட்டு இல்லாததை நினைத்துக்கொண்டு எண்ணம்தான் மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு நிம்மதி இல்லை என்றார். சீடருக்கு புரியவில்லை விழித்தான்.

குரு அங்கிருக்கும் பாதி தண்ணீர் இருக்கும் டம்ளரைக் காட்டி இது என்ன என்று கேட்டார். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்று சீடர் பதில் சொன்னான். உடனே குரு பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்பவன் நிறையைக் காண்கிறேன். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்பவன் குறையைக் காண்கிறான். வாழ்க்கை என்பது கண்ணாடி மாதிரி. மக்கள் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்களோ அதுதான் மக்களுடைய வாழ்க்கையாக பிரதிபலிக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒன்றும் கிடையாது அனைத்தும் மாயை என விளக்கினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -4

பிராகசமூர்த்தியிடம் பெற்ற கலசத்தில் இருந்த அமிர்த நீரை மூன்று மனைவிகளுக்கும் கொடுக்குமாறு சிருங்கரிஷி தசரதரிடம் கட்டளையிட்டார். தசரதர் கலசத்தில் இருந்த அமிர்தத்தில் பாதியை முதல் மனைவி கௌசலைக்கும் மீதி இருந்த பாதியை கைகேயி, சுமத்ரைக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்தார். மூவரும் அருந்திய பிறகு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறிதளவு அமிர்தத்தை மீண்டும் கௌசலைக்கு கொடுத்தார். அப்போது சங்கு முரசுகள் முழங்க ஒரு வருடமாக நடைபெற்ற யாகம் இனிது நிறைவேறியது. யாகத்தில் ஈடுபட்ட அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் பொன் பொருள் பட்டாடைகள் கொடுத்து அனைவரையும் அனுப்பிவைத்தார். தசரதர் வசிஷ்டரையும் சிருங்கரிஷியையும் வணங்கி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.

சில நாட்கள் கழித்து மகாராணிகள் மூவரும் கருத்தரித்தனர். அந்த நேரத்தில் மூவரும் இறைவனுக்கு வழிபாடுகள் செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் சென்றது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி கடக ராசியில் புனர்பூச நடசத்திரத்தன்று கௌசலைக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயிக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் சுமத்ரா தேவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். தமக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ந்த தசரதன் ஏழு ஆண்டுகளுக்கு குடிமக்கள் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று அறிவித்தார். நாட்டின் தானிய கிடங்குகளையும் கருவூலத்தையும் திறந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார். அரண்மனையில் அன்னதானமும் கோ தானமும் வஸ்திரதானமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 3 வேளைகளிலும் கோவில்களில் அலங்கார ஆராதனைகள் செய்ய தசரதர் உத்தரவிட்டார். இளவரசர்கள் பிறந்ததை நாட்டு மக்கள் 12 நாட்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வசிஷ்ட முனிவரை தசரதர் அழைத்தார். ஓவியத்தின் அழகைப்போல் கரிய திருமேனியுடைய கௌசலையின் குழந்தைக்கு ராமன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். விரதத்தை கடைபிடித்து மெய்வழியைக்காட்டக்கூடிய கைகேயிக்கு பிறந்த குழந்தைக்கு பரதன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். சுமத்ரைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை தேவர்கள் வாழவும் அசுரர்கள் அழியவும் யாராலும் வெல்ல முடியாத புகழுடைய இக்குழந்தைக்கு லக்குவனன் என்று பெயரிடுவதாக அறிவித்தார் வசிஷ்டர். முத்து பிராகசிப்பது போல முகத்துடனும் தீமையை அழிக்கும் தகுதி பெற்ற இரண்டாம் குழந்தைக்கு சத்ருக்கன் என்றும் பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார்.

கைத்தடி

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டான்.

நடந்தவைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு துறவி அய்யா நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேன். இப்போது கைத்தடியை நழுவ விட்டதாக வருத்தப்படுகின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. எங்கிருந்தோ ஒரு கைத்தடி கங்கையில் மிதந்து வந்தது. இப்போதும் அது எங்கோ மிதந்து போய்க்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள். அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி அதை இழந்ததும் வருத்தப்படுகின்றீர்கள் என்றார்.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.