ராமாயணம் பால காண்டம் பகுதி -12

பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.

சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது என்று கங்கையின் வரலாற்றை ராமருக்கு விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார். மிதிலை நகரம் தூரத்தில் தென்பட்டது. மிதிலை நகரத்திற்கு முன்பு ஒரு ஆசிரமம் தென்பட்டது மிகவும் பழமையாகவும் யாரும் இல்லாததைப்போலவும் தென்பட்ட ஆசிரமம் ஓர் காலத்தில் சிறப்பானதாக இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டது. ஆசிரமத்தின் அருகில் ஓரு கல்லில் இருந்து ஒரு துளசி செடி வளர்வதை ராமர் கண்டார். குருவே இது மிகவும் வியப்பாக உள்ளது. எப்படி இங்கே அனைத்தும் தனித்து விடப்பட்டுள்ளது அப்படி இருந்தும் எப்படி ஒரு கல்லில் இருந்து துளசி செடி வளர்கிறது இது யாருடைய ஆசிரமம் இது. இந்த ஆசிரமத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகின்றேன் தாங்கள் கூறுங்கள் என்று கேட்டார்.

கோபம்

புத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவரைப் பார்த்தபோது அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். அதைத் துடைத்துக் கொண்டே புத்தர் வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா என்று அமைதியாக கேட்டார். புத்தருடன் இருந்த சீடர் ஆனந்தருக்குக் கோபம் வந்து விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்தால் அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன் என்றார். புத்தர் தனது சீடரிடம் சொன்னார் ஆனந்தா நாம் எல்லாம் சந்நியாசிகள் என்பதை மறந்து விட்டாயா இதோ இவரைப்பார் ஏற்கனவே இவர் கோபம் என்னும் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கிறார். அவருடைய கோபமான முகத்தைப்பார். அவர் உடல் ஆடுகிறது. கோபப்படும் முன் அவர் மகிழ்வுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கின்றாயா அவர் தன கோபத்தினால் பைத்தியமாக நிற்கிறார். இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்க முடியும்.

எனக்கு என்ன பெரிய கெடுதல் நேர்ந்து விட்டது. என் முகத்தை துடைப்பதில் எனக்கு சிரமம் ஒன்றும் இல்லை. நீ கோபப்படாதே. இல்லையெனில் அவருக்கு நேர்ந்த சிரமங்கள் எல்லாம் உனக்கும் நேரும். உன்னை நீயே ஏன் தண்டித்துக் கொள்ள வேண்டும். இவர் மீது கோபப்படாதே. மாறாக இரக்கப்படு என்றார். பின்னர் புத்தர் தன் மீது உமிழ்ந்தவரைப் பார்த்து நீ மிகவும் களைப்புடன் காணப்படுகிறாய். உன்னை நீயே தண்டித்துக் கொண்டது போதும். என்னிடம் நீ நடந்து கொண்டதை மறந்துவிடு வீட்டிற்குப் போய் ஓய்வெடு என்றார். அவன் மிகுந்த அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாதவனாக நின்றான். பின் அவன் புத்தரிடம் மன்னிப்புக் கேட்டான். புத்தர் சொன்னார் முதலாவதாக நான் உன் மீது கோபப்படவில்லை. பின் எதற்காக நான் உன்னை மன்னிக்க வேண்டும். இப்போது உன்னைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சி ஏனெனில் நீ உன் துன்ப நிலையிலிருந்து மீண்டு நிம்மதியுடன் காணப்படுகிறாய். மீண்டும் இத்தவறை யாரிடமும் செய்து உனக்குள் நீயே நரகத்தை உருவாக்கிக் கொள்ளாதே என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -11

விஸ்வாமித்ரர் தலைமையில் அனைவரும் கங்கை நதிக்கரையை அடைந்தனர். விஸ்வாமித்ரரிடம் கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது. கங்கையின் வரலாற்றை கூறுமாறு ராமர் கேட்டுக்கொண்டார். ஹிமவானின் மூத்த பெண் கங்கா தேவி. இளைய பெண் பார்வதி தேவி என்று சொல்லி கங்கா தேவியின் கதையை சொல்ல விஸ்வாமித்ரர் ஆரம்பித்தார். ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். அப்போது இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்து ஆலோசனை வழங்கினார்.

பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

சித்திகள்

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குரு மகனே ஏன் இவ்வளவு கடினப்பட்டு பதினான்கு வருடங்களையும் வீணாக்கி இருக்கிறாய். ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பான். நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார்.

இறைவனின் திருவடியை அடையும் வழியாக சித்திகள் மீது ஆசை கொண்டு யாரும் காலத்தை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.

ராமாயணம் பால காண்டம் பகுதி -10

வேதமந்திரங்களுடன் யாகம் துவங்கியது. முனிவர்கள் பலர் யாகத்திற்கு வேதமந்திரங்கள் சொல்லியும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை தந்தும் உதவினார்கள். யாக யாலையின் வடக்கு பக்கம் ராமரும் தெற்கு பக்கம் லட்சுமனனும் காவல் காத்து நின்றார்கள். ஐந்து நாட்கள் யாகம் சிறப்பாக சென்றது. ஆறாம் நாள் வானத்தில் கர்ஜனையுடன் மேக்கூட்டம் வருவது போல் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தாடகையின் மைந்தர்கள் மாரீசன் சுபாகு தலைமையில் அரக்கர்கள் கூட்டம் வந்தது. வந்தவர்கள் ஒன்று சேர்ந்து மாமிச துண்டுகளையும் கல்லையும் மண்ணையும் போட்டு யாகத்தை பாழ்படுத்த முனைந்தார்கள். ராமர் தனது அம்பினால் சரக்கூடம் ஒன்று கட்டி தீய பொருட்கள் ஏதும் யாகத்தில் விழாதவாறு பாதுகாத்தார். ஆக்னேய அஸ்த்திரத்தால் சுபாகுவை கொன்றார். மானவாஸ்த்ரம் என்ற அஸ்திரத்தை மாரீசன் மீது எய்தார். அந்த அம்பு மாரீசனை குத்தி கடலில் தூக்கி எரிந்தது. பல அரக்கர்கள் ஓடி ஒளிந்தார்கள். எதிர்த்தை அனைத்து அரக்கர்களையும் கொன்று யாகத்தை முழுமையாக ராமரும் லட்சுமனனும் காத்தார்கள். ஆறு நாட்கள் நடந்த யாகம் இனியாக நிறைவேறியது.

ராமரும் லட்சுமனனும் தங்களுக்கு கொடுத்த கடமையை சரியாக செய்து முடித்து விட்டார்கள். விஸ்வாமித்ரரிடம் சென்று யாகத்தை காத்து விட்டோம் என்று சொல்லி ராமரும் லட்சுமனனும் தங்கள் வணக்கத்தை தெரிவித்தார்கள். எல்லா உலகையும் தனக்குள் வைத்திருக்கும் கடவுளாகிய உனக்கு இந்த யாகத்தை காத்ததில் வியப்பேதும் இல்லை என்று சொல்லி ராமலட்சுமனர்களை விஸ்வாமித்ரர் வாழ்த்தினார்.

விஸ்வாமித்ரர் ராமரிடம் மிதிலாபுரி என்ற சிறப்பு மிக்க பட்டினத்தை ஜனகர் ஆட்சி செய்து வருகிறார். கல்வியில் மேன்மைமிக்கவராக திகழ்பவர். அவர் பண்பாட்டில் சிறந்த யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் அதிசயிக்கத்தக்க வில் ஒன்று வைத்திருக்கின்றார். யாகத்தை ஒட்டி சில நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். நிகழ்ச்சிக்கு பல நாட்டு ராஜகுமாரர்களும் வருகிறார்கள். யாகத்தில் கலந்து கொள்ள நமது சித்தாஸ்ரமத்துக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நமது ஆசிரமத்தை சேர்ந்தவர்களும் நானும் அங்கு செல்கிறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் வந்து யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்று ராமரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். தாங்கள் உத்தரவிட்டால் நிச்சயமாக தங்களுடன் வருகிறோம் என்று ராமலட்சுமனர்கள் விஸ்வாமித்ரரிடம் தெரிவித்தார்கள். ராமலட்சுமனர்கள் வருவதை எண்ணி ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். விஸ்வாமித்ரர் ராமலட்சுமனர் ஆசிரமவாசிகள் என அனைவரும் மிதிலைக்கு கிளம்பினார்கள்.

அனுபவம்

ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற வியாபாரிகள் ஓர் இடத்தில் ஒன்று கூடினார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அருகில் இருந்த பணியாளிடம் பார்த்து தங்கள் மொழியிலேயே தண்ணீர் கேட்டார்கள். பானி லாவோ என்றார் ஒருவர். தண்ணீர் கொண்டு வா என்றார் மற்றொருவர். இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளில் கேட்டனர். பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு என அனைவரின் மொழிக்கேற்ப வேறு வேறு ஒலிகள் அங்கு கேட்டது. அவர்கள் அனைவரும் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளை சொல்லி ஒரு பொருளை கொண்டு வர சொன்னதை உணர்ந்தார். ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவருக்கும் தண்ணீரைக் கொண்டு கொடுத்தார் பணியாள். ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டிருக்கின்றார்கள். வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார் மொழி தெரியாதவர்.

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரியவருகிறது. தண்ணீர் ஒரு பொருளே அதனை அறிந்தவர்கள் அவர்களுக்கு புரிந்த மொழிகளில் சொல்கிறார்கள். அதுபோல கடவுளும் ஒருவரே அவரவர்களுக்கு கிடைத்த அனுபவத்தில் ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள். கடவுளிடம் நெருங்க நெருங்க எல்லாக் கடவுளரும் ஒன்றே என்ற உண்மையை அனுபவத்தில் உணரலாம்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -9

விஸ்வாமித்ரரின் கட்டளையை கேட்ட ராமர் நான் கிளம்புபோது எனது தந்தை என்னிடம் விஸ்வமித்ரரின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று எனக்கு உத்திரவிட்டிருக்கின்றார். உங்கள் கட்டளையை நான் இப்போதே நிறைவேற்றுகின்றேன் என்று தனது வில்லில் இருக்கும் கம்பியை சுண்டினார். வில்லில் இருந்து வந்த சத்தத்தை கேட்டவுடன் இடி இடித்தாற் போல் சத்தமிட்ட தாடகை தனது குகையிலிருந்து வெளிப்பட்டு அங்கு வந்தாள். மானிடர்கள் மூவர் வந்திருக்கின்றார்கள் இன்று நமக்கு நல்ல சாப்பாடு என்று எண்ணி அவர்களை அழிக்க கல் மண் மரம் என கைக்கு கிடைத்த அனைத்தையும் தூக்கி அவர்கள் மீது எறிந்தாள். அப்போது ராமர் லட்சுமனனிடம் நான் இவளின் கைகள் மற்றும் காலை வெட்டி விடுகிறேன் வெட்டியவுடன் இவளால் எங்கேயும் போகமுடியாது என்று கூறினார். இதனை கேட்டதும் பயந்த தாடகை மறைந்திருந்து தாக்க தொடங்கினாள். இவள் கெட்ட எண்ணம் கொண்டவள் இவளிடம் கருணையை காண்பிக்காதே ராமா அவள் மறைந்திருந்து தாக்குகிறாள். இரவில் ராட்சசர்களுக்கு பலம் அதிகமாகிவிடும். ஆகவே விரைந்து அவளை அழித்துவிடு என்று விஸ்வாமித்ரர் ராமனை துரிதபடுத்தினார்.

ராமர் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எடுத்து விட்டார். அந்த அஸ்திரம் எங்கு இருந்து சப்தம் வருகிறதோ அதை தொடர்ந்து சென்று தாக்கும். மறைந்திருந்த அவளை அஸ்திரம் தாங்கியதும் அங்கிருந்து வானத்திற்கு தாவியவள் பெரிய உருவம் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தாள். ராமர் விட்ட அம்பு வானத்திலேயே அவள் மார்பை பிளந்து அவளை அழித்துவிட்டது. தாடகை அழிந்ததும் அவளது மந்திர சக்தி அனைத்தும் அழிந்தது. உடனே அந்த பிரதேசம் நந்தவனம் போல ஆகியது. இதனை கண்ட தேவர்களும் முனிவர்கள் உலக நன்மைக்காக செய்யும் பல வேள்விகளை இந்த தாடகை தடுத்து கெடுத்துவந்தாள். ராமரினால் இப்போது தாடகை அழிக்கப்பட்டாள். அனைவருக்கும் மகிழ்ச்சி. ராமனுக்கு அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுங்கள் ராமரினால் பெரிய காரியங்கள் பின்னாளில் நிறைய நடக்கப் போகிறது என்று விஸ்வாமித்ரரிடம் கூறி விட்டுச்சென்றார்கள்.

விஸ்வாமித்ரர் தனக்கு தெரிந்த எல்லா அஸ்திர சாஸ்திரங்களையும் ராமருக்கு உபதேசித்தார். பின்னர் அஸ்திரங்களை திரும்ப பெரும் மந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். அஸ்திர அதிதேவதைகள் அனைவரும் ராமர் முன்பு தோன்றி தாங்கள் அழைக்கும் போது தங்களுக்கு தேவையானதை செய்வோம் என்று உறுதியளித்துவிட்டு சென்றனர்.

விஸ்வாமித்ரர் தன்னுடைய ஆசிரமமான சித்தாஸ்ரமத்திற்கு இருவரையும் அழைத்து வந்தார். ஆசிரமத்திலுள்ள மற்ற ரிஷிகள் அனைவரும் தங்கள் யாகத்தை காக்க ராம லட்சுமனன் வந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் அதிவிரைவில் செய்யத் துவங்கினார்கள். யாகம் துவங்கும் முன் விஸ்வாமித்ரர் ராமரிடம் யாகம் முழுவதும் செய்து முடிக்க ஆறு நாட்கள் ஆகும். அந்த ஆறு நாட்களும் மௌனமுடன் இருக்கவேண்டும். ஆகவே விழிப்புடன் இருந்து காவல் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு யாகத்தை தொடங்கினார்.

குரு எப்படி இருக்க வேண்டும்

ஒரு சிறுவனுக்கு இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை. அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று சொன்னார். சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம் என்றாலும் சாமியாரை வணங்கிவிட்டுக் கிளம்பினார். அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன் தீமை எல்லாவற்றையும் விளக்கினார். அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சொன்னார். எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் யோசனை சொன்னார்.

பையனின் முகத்தில் மலர்ச்சி. அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் குழப்பம் தீரவில்லை. பையனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சாமியாரிடம் வந்தார். சாமியாரின் முகத்தில் கேள்விக்குறி. நீங்கள் இந்த புத்திமதியைப் போன வாரமே சொல்லியிருக்கலாமே சாமி என்றார். சாமியார் முகத்தில் புன்னகை. போன வாரம் எனக்கே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது அம்மா. நானே அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாதபோது எப்படி உங்கள் மகனுக்கு புத்தி சொல்ல முடியும் ஒரு வார காலத்தில் இனிப்பைக் குறைக்கப் பழக்கிக்கொண்டுவிட்டேன். அதனால் இப்போது தைரியமாகச் சொல்கிறேன். தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா என பார்ப்பது குருவின் பொறுப்பு என்றார். அம்மாவின் குழப்பம் தீர்ந்தது.

உன்னை முதலில் திருத்திக்கொண்டு ஊருக்கு புத்திமதி சொல் என்பதுதான் கதையின் சாரம். ஒரு குரு தன்னை எப்போதும் பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறருக்குச் சொல்லும் அறிவுரைகளைத் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்

ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். குருவே தவறு செய்து கொண்டு உபதேசம் செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது என்று கேட்டார் சீடர். ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றார் பரமஹம்ஸர். சீடருக்கு புரியவில்லை. பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது. சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை. துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை. குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும். குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது. சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும் கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -8

விஸ்வாமித்ரரும் ராம லட்சுமனனும் அதிகாலையில் எழுந்து சரயு நதியும் கங்கையும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. அந்த இடத்தின் அழகை பார்த்த ராமர் விஸ்வாமித்ரரிடம் இந்த இடம் மிகவும் ரம்யமாக இருக்கின்றது. இது என்ன இடம் என்று கேட்டார். அதற்கு விஸ்வாமித்ரர் இந்த ஆசிரமத்திற்கு சிவபெருமான் ஆசிரமம் என்று பெயர். சிவபெருமான் யோகத்தில் இருந்த இடம் இது. யோகத்தில் இருந்த சிவபெருமானின் யோகத்தை கலைக்க மன்மதன் முயன்ற போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனின் அங்கத்தை (உடல்) அழித்து காமதகனம் செய்தார். அதனால இந்த நாட்டிற்கு அங்க நாடு என்றும் இந்த இடத்திற்கு காமஷ்ரமம் என்று பெயர் என்றார். இந்த இடத்தில் சில ரிஷிகள் ஆசிரமம் அமைத்து தங்கி இருக்கிறார்கள் என்று அங்கு அழைத்து சென்றார். ஆசிரமத்திற்குள் மூவரும் சென்றனர். அங்கு இருந்த ரிஷிகள் தங்கள் ஞானகண்ணால் வந்திருப்பது விஸ்வாமித்ரரும் ராம லட்சுமனனும் என்று அறிந்து கொண்டு வரவேற்று உபசரித்து சராயு நதியை கடப்பதற்கு அவர்களுக்கு ஒர் படகை கொடுத்தார்கள்.

சராயு நதிதை கடந்ததும் அங்கு இருந்த இடம் பாலைவனம் போல் பயங்கரமாக தென்பட்டது. ஒரு பறவை மிருகங்களும் இல்லை. அந்த காட்டை கடங்கும் போது ராமர் லட்சுமனன் இருவரும் மிகவும் களைப்படைந்தனர். பசியும் தாகமும் அவர்களை பற்றிக்கொண்டது. இதனை கண்ட விஸ்வாமித்ரர் இரவு உபதேசித்த மந்திரத்தை அவர்கள் உச்சரிக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் இதனை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று வாழ்க்கை முறையை பயிற்சி கொடுத்தார். இருவரும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்ததும் களைப்பு பசி தாகம் நீங்கி ஆயிரம் யானைகளின் பலம் வந்தது போல் உற்சாகமடைந்தார்கள். இந்த இடம் ஏன் இப்படி இருக்கின்றது இங்கு ஒரு உயிரினம் கூட இருப்பதற்கான அறிகூறி இல்லையே என்று ராமன் விஸ்வாமித்ரரிடம் கேட்டார்.

இங்கு தாடகை என்று ஒரு யட்சினி இருக்கின்றாள். அவளுக்கு ஆயிரம் யானை பலம் அவ கோபத்துனால இந்த இடத்தை அழித்துவிட்டாள் என்று விஸ்வாமித்ரர் கூறினார். யட்சினிகளுக்கு அவ்வளவு பலம் இருக்குமா என்று ராமர் கேட்டார். அதற்கு விஸ்வாமித்ரர் சுகேதுன்னு ஒரு யட்சன் இருந்தான் அவன் பிரம்மாவிடம் தவம் செய்து ஒரு பெண் குழந்தையை வரமாக கேட்டான், பிரம்மா அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். அவனுக்கு தாடகை என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு சுகேது ஆயிரம் யானை பலம் கொடுத்தான். அவள் வளர்ந்து சுந்தன் என்ற ஒருவனை திருமணம் செய்தாள். அவளுக்கு மாரிசன் என்ற குழந்தை பிறந்தது. இந்த சுந்தன் அகத்திய முனிவரை தொந்தரவு செய்தான். அகத்தியர் அவனை அழித்து விட்டார். இந்த தாடகையும் மாரிசனும் அகத்தியரை அழிக்க எதிர்த்தார்கள். அகத்தியர் இருவரையும் ராட்சசர்களாக போங்கன்னு சபித்தார். ராட்சசர்களான தாடகையும் இந்த ஆக்ரமிப்பு செய்து கோபத்தில் இந்த இடத்தை அழித்துவிட்டாள். இப்பொழுது நீ இந்த தாடகையை வதம் செய்துவிடு. பெண்ணை அழிக்க வேண்டுமா என்று யோசிக்காதே இதற்கு முன் தர்மத்திற்காக இந்திரன் விரோசனன் என்ற பெண்ணை வதம் செய்திருக்கிறான். விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் செய்திருக்கிறார். அதுபோல் இந்த உலகத்துக்கு கெடுதல் நினைக்கின்ற பெண்அழிக்கலாம் தவறில்லை என்று விஸ்வாமித்திரர் ராமனுக்கு கட்டளை இட்டார்.