மகாலக்ஷ்மி கோவில்

மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மகாலக்ஷ்மி

சூரியக் கதிர்கள் கோலாப்பூர் மஹாலக்ஷ்மியின் கோவிலின் வாசல் வழியாக மெதுவாகப் பயணித்து மகாலக்ஷ்மியின் கால் முதல் தலை உச்சி வரை அவள் மீது படர்ந்து தனது வழிபாட்டை செய்தது.

நீரினில் மூழ்கியிருக்கும் சிவலிங்கம்

புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல். இங்கு குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் நவால்சுனை என்ற ஒரு சுனை உள்ளது. இந்த சுனையானது சுமார் 10 அடி ஆழம் கொண்டது. இதன் அடியில் ஒரு பக்கத்தில் குடவறையில் சிவலிங்கம் உள்ளது. இந்த சுனையில் எப்போதும் தண்ணீர் இருப்பதால் இந்த சிவலிங்கம் தண்ணீரிலே மூழ்கிய நிலையிலேயே இருக்கும். மலையை குடைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சுனையின் உள்ளே தண்ணீருக்குள் ஒரு மண்டபத்தில் சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு 28 வருடத்திற்கு ஒருமுறை பூஜை நடத்தபட்டு வருகிறது.

இந்த சுனையில் 2018 ம் ஆண்டு முழு கொள்ளளவு நீரையும் மின் மோட்டார் மூலம் நீர் முழுவதும் வெளியேற்றபட்ட பின்பு சிவலிங்க திருமேனியாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பூஜை வழிபாடு ஆரம்பித்தவுடன் பாதாளத்தில் இருக்கும் இறைவனின் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகளாக நீரினில் மூழ்கியிருக்கும் இந்த இறைவனின் சிவலிங்கத் திருமேனியானது துளி கூட பாசியடையாமல் இருந்தது. சுற்றெங்கிலும் இருக்கும் பாறை மலை எல்லாம் பாசிபடர்ந்துள்ள நிலையில் இந்த சுனையின் உள்ளே இருக்கும் சிவலிங்க திருமேனி மட்டும் புதிதாக காட்சியளிக்கிறது. பூஜைகள் முடிந்து அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்து சுனை தண்ணீரில் நிரம்பி சிவலிங்கம் மறைந்தது. குடவறை சிவலிங்கம் 1876 ம் ஆண்டு புதுக்கோட்டை மன்னரின் மனைவி சுனை நீரை இறைத்து வழிபட்டதாக கல்வெட்டு உள்ளது. அதன் பிறகு யாரும் நார்த்தாமலை குடவறை சிவலிங்கத்தை பார்த்து வழிட்டதாக கல்வெட்டுகள் இல்லை. இதன் ஒரு பக்கத்தில் குடவறையிலேயே ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த குடவறையும் அதில் மலையையே குடைந்து சிவலிங்கம் வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கும் வரலாற்று ஆய்வாளர்கள் இது பல்லவர்கள் அல்லது முத்தரையர் மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

விஷ்ணு சிலை

பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள விஷ்ணு சிலை

மத்திய பிரதேசத்தின் உமாரியா பகுதியில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்கா புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் விஷ்ணு கிழக்குப்பக்கம் தலை வைத்து மிகவும் அமைதியான முறையில் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் சிலை 12 மீட்டர் நீளத்துடன் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விஷ்ணு படுத்த நிலையில் ஒரு காலை நீட்டிய படியும் ஒரு காலை மடக்கி வைத்தபடியும் இருக்கிறார். விஷ்ணுவின் தலைக்கு பின்புறம் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

ராமாயண இதிகாசத்தில் இந்தப் பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இலங்கை போருக்குப் பிறகு இந்த இடம் ராமரால் லட்சுமணனுக்கு பரிசளிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. புராண நூல்களின் படி திரேதா யுகம் காலத்திலிருந்தே இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காலங்களில் உள்ள நாகரிகங்களின் எடுத்துக்காட்டுகளாக நிறைய குகை ஓவியங்கள் மற்றும் பிற அடையாளங்கள் உள்ளன. பூங்காவின் உள்ளே உள்ள கோவில் கட்டமைப்புகள் அக்காலத்தில் விஷ்ணு வழிபாடுகளும் சிவலிங்க வழிபாடுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ராமாயண கதைகளின் சிற்பங்கள் மற்றும் பந்தாவதீஷ் கோவில் கருவூலம் விஷ்ணுவின் அவதாரமான வராக அவராதம் மீன் அவதாரம் ஆமை அவதாரம் ஆகிய மூர்த்திகள் உள்ளது. பூங்கா மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் ராமாயண காலத்திலிருக்கும் சிற்பங்களாக உள்ளது.

மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும் நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி அப்படியே கீழே விழுந்துவிட்டார்.

நண்பர் அவர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால் விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் கீழே இருந்து எழுந்தார். சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும் சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது என்று முடித்தார்.

கருத்து: பிரச்சனைகள் வரும் போது நாம் அதை கண்டுகொள்ளாமல் நமது வேளையை மட்டும் செய்தோமானால் அது நம்மை விட்டு ஓடிவிடும்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -14

கௌதம மகரிஷி தினந்தோறும் அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்துகொண்டான். ஒருநாள் விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். தனது கணவர் தான் வந்திருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கமானான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பினார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததே புரிந்துகொண்டார். உடல் முழுவதும் உனக்கு பெண் உருப்பாக போகட்டும் என்று அவனை சபித்தார். கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். நீ அவரை வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த தவறினால் அறியாமால் தவறுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை என விஸ்வாமித்திரர் கூறினார். விஸ்வாமித்திரர் கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். கௌதமரும் அகலிகையும் ராமருக்கு உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் ராமர்.

சொர்க்கம்

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு கதை ஒன்றைச் சொன்னார். ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன் ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று எண்ணி அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன் அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன் ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான் எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும் என்றார் குரு.

ராமாயணம் பால காண்டம் பகுதி -13

ஓர் காலத்தில் அருளுக்கும் அழகுக்கும் பெயர் பெற்றதாக இந்த ஆசிரமம் இருந்தது. இந்த ஆசிரமத்தின் தலைமையில் இருந்தவர் கௌதம மகரிஷி ஆவார். அவரது மனைவியின் பெயர் அகலிகை. இவள் பிரம்மனின் மானசீக மகளாவாள் இவளது பெயருக்கு மாசு அற்றவள் என்றும் தனது உடலில் அழகில்லாத பகுதி சிறிது இல்லாதவள் என்று பொருள். தேவலோகத்தில் இருந்த ஊர்வசி தான் தான் அழகு என்று எண்ணி அகங்காரம் கொண்டிருந்தாள். அவளது ஆணவத்தை அடக்க பிரம்மா நீரிலிருந்து அகலிகையை மிக அழகுடன் படைத்தார். அவளை மணக்க அனைவரும் போட்டி போட்டனர். எனவே சுயவர போட்டி நடத்த பிரம்மா முடிவு செய்தார். அகலிகையை மணக்க சுயவர போட்டி நடந்தது. யார் முதலில் முன்பும் பின்பும் தலை உள்ள பசுவை மூன்று முறை முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்ற போட்டியை பிரம்மா வைத்தார். முன்னும் பின்னும் தலை உள்ள பசு மூன்று உலகத்திலும் எங்கும் இல்லை ஆகவே வேறு ஏதேனும் சொல்லுங்கள் என்று தேவர்கள் பிரம்மாவிடம் கோரிக்கை வைத்தார்கள். மூன்று உலகத்தையும் யார் முதலில் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கே அகலிகை என்று இரண்டாவது போட்டியை பிரம்மா அறிவித்தார். இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் யார் முதலில் வெற்றி பெருக்கின்றார்களோ அவர்களுக்கு அகலிகை மனைவியாவாள் என்று பிரம்மா அறிவித்தார்.

இந்திரன் மாய வேலைகள் செய்து அகலிகையை அடைய எண்ணியிருந்தான். தேவர்கள் அவர்களுக்கான வாகனத்தில் மூன்று உலகத்தையும் சுற்ற போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். நடப்பது அனைத்தையும் எட்டி நின்று பார்த்தார் நாரதர். கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகலிகை. ஆகவே அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நாரதர் திட்டம் திட்டினார். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசு அப்போது கன்றை ஈன ஆரம்பித்தது. பசுவின் பின்புறம் கன்றின் முகம் முதலில் தோன்றியது. உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை மூன்று முறை வலம் வரச்செய்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். நாரதர் கௌதம மகரிஷியை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமர் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டார். எனவே கௌதமருக்கு அகலிகையை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்

பிரம்மதேவரும் அகலிகையை கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு சதானந்தர் என்று பெயர் வைத்தார்கள். ஜனக மகாராஜாவின் புரோகிதராக இருப்பவர் இந்த சதானந்தாரே ஆவார். இந்திரன் மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்மதேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால் அகலிகைக்குத் திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். மனதிற்குள் வன்மத்தை வளர்ந்த இந்திரன் எப்படியும் அகலிகையை அடைய வேண்டும் என்று திட்டம் திட்டினான். தினந்தோறும் அகலிகையையும் கௌதம மகரிஷியின் செயலையும் நோட்டமிட்டான் இந்திரன்.

ஆசை

நண்பர்கள் இருவர் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது வெள்ளத்தில் ஓர் கம்பளி மூட்டை மிதந்து செல்வது கண்டனர் ஒருவன் ஆசையினால் அதை பிடித்து தனதாக்கிக் கொள்ள நினைத்து ஆற்றில் குதித்து கம்பளி மூட்டைப் பிடித்துக்கொண்டான். அப்போது ஆற்றின் வேகத்தில் கம்பளி மூட்டை அவனை அதனுடன் இழுக்க ஆரம்பித்தது. போராடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து கரையில் இருந்த நண்பன்

கம்பளி மூட்டை போனால் போகிறது அதை விட்டு விட்டு நீ கரையேறு என்றான். அப்போது கம்பளி மூட்டையை பிடித்துக்கொண்டிருந்தவன் சொன்னான். இது கம்பளி மூட்டையல்ல கரடி நான் விட்டாலும் அது என்னை விட மறுக்கிறது என்றான். உயிர்கள் பொருள்களின் மீது ஆசை வைத்து அவற்றைப் பிடித்துக்கொண்டவுடன் அதன்பிடியில் சிக்கித் திண்டாடுகின்றார்கள். முடிவில் பிடித்த ஆசைகளை துறக்க நினைத்தாலும் அவர்களால் அது முடிவதில்லை. ஆசையின் பிடியில் அவர்கள் கட்டுண்டு விடுகின்றனர். ஆசையும் பாசமும் அவர்களை துறப்பதாக இல்லை.