மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -3

யுதிஷ்டிரன் மேரு மலையின் உச்சியை அடைந்தான். அவனுடன் வந்த நாயும் அவன் பின்னே வந்து சேர்ந்தது. அப்போது இந்திரன் தன்னுடைய விமானத்தில் யுதிஷ்டிரனை அழைத்து செல்ல யுதிஷ்டிரன் முன்னிலையில் வந்து இறங்கினான். இந்திரன் யுதிஷ்டிரனை பார்த்து தங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். தாங்கள் விமானத்தில் ஏறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு யுதிஷ்டிரர் வழியில் வீழ்ந்து மடிந்து போன தன்னுடைய சகோதரர்களும் திரௌபதியும் என்ன கதியை அடைந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு சொர்க்கலோகம் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் அவர்கள் ஒவ்வொருவராக வீழ்ந்த போது நீ ஏன் அவர்களை திரும்பிப் பார்க்கவில்லை என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரன் அவர்களை திரும்பி பார்த்திருந்தால் நானும் வீழ்ந்திருப்பேன். மேலான லட்சியத்தை நாடிச் செல்லும் ஒருவன் பந்த பாசத்தை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்தினாலோ திரும்பிப் பார்ப்பானாகில் அவன் மேற்கொண்டு முன்னேற்றம் அடையமாட்டான். இது வாழ்வைப் பற்றிய கோட்பாடு ஆகும். மேலான சொர்க்கத்திற்கு செல்லும் லட்சியத்தை நாடிச் சென்று கொண்டிருந்தேன். ஆகையால் திரும்பிப் பார்க்கவில்லை என்று கூறினான்.

உனது சகோதரர்களும் திரௌபதியும் வீழ்ந்த போது பீமனிடம் அதற்கான சரியான காரணத்தை சொன்னாய். அந்த காரணங்களை முன்னிட்டு அவர்கள் உடலோடு சொர்க்கத்திற்குப் வர தகுதியற்றவர்கள் ஆனார்கள். சூட்சும உடலோடு அவர்கள் ஏற்கனவே சொர்க்கத்திற்கு வந்திருக்கின்றார்கள். நீ அறநெறி பிறழாது இருந்த காரணத்தினால் உடலுடன் சொர்க்கம் வர தகுதி உடையவனாக இருக்கிறாய். ஆகையால் நீ விமானத்தில் ஏறுவாயாக என்று இந்திரன் கூறினான். யுதிஷடிரன் விமானத்தில் ஏற முயன்ற பொழுது யுதிஷ்டிரனுடன் வந்த நாய் விமானத்தில் ஏற முயன்றது. அப்போது இந்திரன் இந்த நாய்க்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று தடுத்தான். இதைப்பார்த்த யுதிஷ்டிரன் என்னை நம்பி இந்த நாய் வந்திருக்கின்றது. இதற்கு அனுமதி இல்லையென்றால் என்னை நம்பி வந்த இந்த நாயை புறக்கணித்துவிட்டு நான் வரமாட்டேன் என்று கூறினான். அதற்கு இந்திரன் இந்த நாயோடு இந்த உலகத்தில் இருக்க விரும்புகிறாயா அல்லது ஏற்கனவே அங்கு சென்றுள்ள உன் சகோதரர்களுடன் சொர்க்கத்தில் இருக்க விரும்புகின்றாயா என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் அனைத்து விலங்குகளையும் தெய்வீகம் வாய்ந்தவைகளாகவே தான் கருதுகிறேன். என்னை நம்பி வந்த நாயை புறக்கணிப்பது தர்மமாகாது. தர்மத்தின் படி நடக்க என்னுடன் பிறந்தவர்களையும் சொர்கத்தையும் துறக்க நான் தயாராக இருக்கின்றேன். என்னை நம்பி வந்த நாயை விட்டு வரமாட்டேன் என்று உறுதியுடன் கூறினான்.

யுதிஷ்டிரன் இவ்வாறு கூறியதும் நாய் எழில் நிறைந்த தர்மதேவதையாக மாறியது. மகனே உன்னை நான் பெரிதும் பாராட்டுகிறேன் முன்பு ஒரு தடவை நச்சுப்பொய்கை கரையில் உன்னை நான் சோதித்தேன். சொந்த சகோதரர்களுக்கும் மாற்றாந்தாய் சகோதரர்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் நடந்து கொண்டாய். இப்பொழுது விலங்குகள் மேல் வைத்திருக்கும் கருணையை நான் ஆராய்ந்தேன். உன்னுடைய பரந்த மனப்பான்மையை முற்றிலும் நான் பாராட்டுகின்றேன். நீ இந்திரனோடும் என்னோடும் சொர்க்கலோகம் வருவாயாக இந்த உடலோடு வரும் தகுதி உனக்கு உண்டு என்று விமானத்திற்குள் வரவேற்றார். இந்த அதிசயத்தை காண விண்ணவர்கள் அங்கு ஏராளமானவர்கள் கூடினார்கள். யுதிஷ்டிரன் அவர்களை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.

மகாபிரஸ்தானிக பருவம் முற்றியது அடுத்து சுவர்க்க ஆரோஹன பருவம்.

பானுதாச ருக்வேதி

பானுதாச ருக்வேதி என்பவர் மகாராஷ்டிர அந்தணர். ஔரங்காபாத் அருகேயுள்ள பைதான் என்னுமிடத்தில் பிறந்தவர். வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் வசித்த இடம். பானுதாசர் சிறுவயதில் படிப்பில் மிக மந்தமாக இருந்தார் எனவே தந்தையின் ஏச்சுக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருந்தது. ஒருநாள் மனம் வெறுத்து அருகேயிருந்த சூரிய நாராயணன் கோயிலில் அன்ன ஆகாரமின்றி இரண்டு நாட்கள் அமர்ந்து விட்டார். மூன்றாம் நாள் ஒளிப்பிரகாசமாக வந்த ஒரு பெரியவர் சிறுவனிடம் பாலைக் கொடுத்து அருந்தச் சொன்னார். அவ்வாறு ஐந்து நாட்கள் பாலருந்தியவர் ஞானசூரியனாக வெளியே வந்தார். பகவத்பக்தி பஜனை என்று நாட்கள் நகர்ந்தன.

இளைஞனானதும் ஆடைகள் விற்கும் தொழில் புரிந்தார். நியாயமாக விற்றதால் நன்கு வியாபாரமானது. ஒருநாள் வாரச்சந்தையில் விற்பனையை முடித்து விட்டுத் திரும்பிய அவர் அன்றிரவு ஒரு சத்திரத்தில் தங்கினார். அப்போது பஜனை சத்தம் கேட்கவே சக வியாபாரிகளிடம் உடமைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு சென்று விட்டார். அவர்கள் பானுதாசர் மீது பொறாமை கொண்டவர்கள். எனவே அவரது குதிரையை அவிழ்த்துவிட்டனர். ஆடைப்பொதியை வேறிடத்தில் ஒளித்து வைத்தனர். பணத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு படுத்துவிட்டனர். அப்போது அங்குவந்த கொள்ளைக்கூட்டத்தினர். அவர்களை அடித்து இருந்த பொருட்கள் அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். பஜனை முடிந்து பானுதாசர் திரும்பிவர எதிரில் வந்த ஒருவர் உன் குதிரையும் பணமும் வைத்துக்கொள் என்று ஒப்படைத்துவிட்டு துணிப்பொதி மறைத்து வைக்கப்பட்ட இடத்தையும் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார். பானுதாசருக்கு எதுவும் புரியவில்லை. அவர் சத்திரத்துக்கு வந்ததும் சக வியாபாரிகள் நடந்ததையெல்லாம் கூற இறைவனே வந்தார் என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார்.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் சன்னதிக்கு வந்தபோது விட்டலனின் அழகில் மயங்கினார். அவரை எடுத்துச்சென்று தமது பிரதேசத்தில் அனகோந்தி என்னுமிடத்தில் (தற்போதைய ஹம்பி) பிரதிஷ்டை செய்துவிட்டார். பண்டரிபுரத்தில் உள்ளவர்கள் பானுதாசரிடம் விட்டலன் இல்லாக்குறையைச் சொல்லி மனம் வருந்தினார்கள். பானுதாசர் ஹம்பி சென்றார். ஒரு திருவிளையாடல் மூலம் இறைவன் பானுதாசரின் பெருமையை அரசனுக்கு உணர்த்த நெகிழ்ந்த கிருஷ்ணதேவராயர் விட்டலன் விக்ரகத்தை திரும்பக் கொடுத்ததோடு பிரதிஷ்டை வைபவத்திலும் கலந்து கொணடார். இன்றைக்கு பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் பானுதாசரால் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டவரே.

மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -2

பாண்டவர்கள் இருந்த மணல் திட்டு எல்லா பக்கங்களிலும் விரிவடைந்திருந்தது. அதற்கு வடக்கே பர்வதராஜன் என்று அழைக்கப்பட்ட மேருமலை இருந்தது. அந்த மேரு மலையிலிருந்து சொர்க்கத்திற்கு மேல் நோக்கிப் போவது அவர்கள் போட்டிருந்த திட்டம். அந்த மணல் திட்டை தாண்டியதும் துரௌபதி தரையில் வீழ்ந்து மடிந்து போனாள். இதனை கண்ட பீமன் யுதிஷ்டிரனிடம் துரோபதி வீழ்ந்து விட்டாள் அதற்கு காரணம் என்ன என்று கேட்டான். திரௌபதி அனைவரிடத்திலும் அன்பு வைத்திருந்தாள். எனினும் அவளுடைய ஆழ்ந்த அன்பு அலாதியாக அர்ஜுனன் மேல் வைத்திருந்தாள். இந்த பாரபட்சத்தை முன்னிட்டே அவள் வீழ்ந்து மடிந்தாள் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு சகாதேவன் வீழ்ந்து மடிந்து போனான். சகாதேவனின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். சாஸ்திர ஞானத்தில் தனக்கு நிகரானவர் யாருமில்லை என்ற கல்விச் செருக்கு சகாதேவனிடத்தில் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு நகுலன் வீழ்ந்து மடிந்து போனான். நகுலன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். தன் மேனி அழகை பற்றிய செருக்கு அவனிடத்தில் அதிகம் இருந்தது. அந்த செருக்கினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு அர்ஜுனன் வீழ்ந்து மடிந்து போனான். அர்ஜுனன் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். நிகழ்ந்த குருஷேத்திர போரில் போர் வீரர்கள் அனைவருக்கும் கடமைகள் இருந்தன. ஆனால் அர்ஜுனன் தன்னுடைய காண்டிபத்தின் மேல் இருந்த பற்றினாலும் நம்பிக்கையினாலும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு எதிரிகள் அனைவரையும் தானே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்திருந்தான். அந்த எண்ணத்தினால் மடிந்து போனான் என்று திரும்பி பார்க்காமல் பதில் அளித்து விட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

சிறிது தூரம் சென்ற பிறகு பீமன் விழுந்தான். எனக்கு அழிவு காலம் வந்து விட்டது நான் என்ன குற்றம் செய்தேன் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் கேட்டான். உன்னுடைய உடல் பலத்தை குறித்து நீ படைத்திருந்த செருக்கே உன்னுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்று திரும்பி பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்து போய்க் கொண்டிருந்தான். பீமனும் உயிர் நீத்தான். இப்பொழுது யுதிஷ்டிரன் மட்டும் தனியாக மேல் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இத்தனை நேரம் இவர்கள் பின்னே வந்து கொண்டிருந்த நாயும் யுதிஷ்டிரனை பின்தொடர்ந்து சென்றது

உயர்ந்த எண்ணம்

ஓர் ஊரில் ஒரு திருடன் இருந்தான். நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருடுவது அவன் வழக்கம். திருடித் திருடி அவன் திருட்டுத் தொழிலில் தேர்ந்தவனாகி விட்டான். எல்லா வீட்டிலும் திருடியவன் அரண்மனையில் அரசனிடத்தில் ஏதாவது திருடிவிட வேண்டும் என்று ஒரு நாள் தோன்றியது. அரண்மனையில் புகுந்து யாரிடமும் அகப்படாமல் அரசனுடைய பொருளைத் திருடிக்கொண்டு வந்துவிட்டால் தான் பெரிய திறமைசாலி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று அவன் நினைத்தான். திட்டமிட்டபடி அவன் ஒரு நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்தான். எப்படியோ அரண்மனைக் காவலாளிகள் கண்ணில் படாமல் உள்ளே நுழைந்து விட்டான். அரசனுடைய படுக்கையறை அருகிலும் சென்று விட்டான். அப்போது அரசன் அரசியுடன் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடித்து உறங்கட்டும் என்று திருடன் வெளியே ஓர் இருட்டு மூலையில் ஒளிந்து காத்துக் கொண்டிருந்தான்.

அந்த அரசன் தெய்வபக்தியுடையவன். தெய்வபக்தியைக் காட்டிலும் அவனுக்கு சிவனடியார் பக்தி அதிகம். தெய்வத்தை வணங்குகின்ற பக்தர்களை அந்த அரசன் தெய்வமாகவே எண்ணி வணங்குவான். அந்த அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந்தாள். இளவரசியான அந்த மகள் திருமண வயதை அடைந்தாள். அதனால் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அரசி ஆசைப்பட்டாள். அன்று இரவு தன் மகள் திருமணத்தைப் பற்றி அரசனிடம் பேசத் தொடங்கினாள். அரசே நம் மகள் திருமண வயதையடைந்துவிட்டாள். விரைவில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை ஒருவனைப் பார்க்க வேண்டும் என்றாள் அரசி. நம் மகளுக்கு நாம் பார்க்கும் மாப்பிள்ளை ஒரு தெய்வ பக்தராக இருக்க வேண்டும். நம் ஊர் ஆற்றங்கரையிலே சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு நம் மகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் பிறந்த நம் மகளைத் தெய்வபக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே விரும்புகிறேன் என்றான் அரசன். தங்கள் விருப்பமே என் விருப்பம் என்றாள் அரசி. நாளையே நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான் அரசன்.

அதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு உறங்கி விட்டார்கள். வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டு ஒரு திட்டம் போட்டான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நாளை ஆற்றங்கரைக்குப் போய் சாமியார்களோடு சாமியாராய் உட்கார்ந்துவிடலாம். வாய்ப்பு இருந்தால் இளவரசியின் கணவன் ஆகிவிடலாம். அதனால் அரசருக்கு வாரிசும் ஆகிவிடலாம் என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பிதந்திரமாய் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.

மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரையில் சாமியார் வேடத்துடன் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அரண்மனை அதிகாரிகள் வந்தார்கள். ஆற்றங்கரையில் மரங்களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனை நோக்கித் தொழுதுகொண்டிருந்த ஒவ்வொருவரிடமாகச் சென்றார்கள். ஐயா தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் அரசருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக்கூறியும் அந்தச் சாமியார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்துவிட்டதைக் கவனித்த திருடன் தான் உடனே ஒப்புக்கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முதலில் மறுத்து விட்டான். ஆனால் அதிகாரி மேலும் மேலும் வேண்டியபோது இப்பொழுது ஒப்புக் கொள்ளலாமா இன்னும் சிறிது நேரங்கழித்து ஒப்புக்கொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டே பதில் பேசாமல் இருந்தான்.

அதிகாரிகள் அரசனிடம் திரும்பிச் சென்றார்கள். மன்னவா எந்தச் சாமியாரும் இளவரசியைத் திருமணம் புரிய ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் இளம் வயதுடைய ஒரு சாமியார் இருக்கிறார். தாங்களே நேரில் வந்து கேட்டுக்கொண்டால் ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளக் கூடும் என்றார்கள். இதைக் கேட்ட அரசன் உடனே ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சாமியார் வேடத்தில் இருந்த திருடனிடம் வந்தான். தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான். திருடன் அப்பொழுது சிந்தித்தான். சாமியார் வேடத்தில் இருக்கும் என்னை அரசனே வந்து கெஞ்சுகிறான். வேடத்தில் இருக்கும்போதே இவ்வளவு பெருமையிருந்தால் உண்மையான சாமியாராக இருந்தால் எவ்வளவு பெருமையுண்டாகும். அரசன் மகள் எனக்கு வேண்டாம். இன்று முதல் நான் உண்மையான சாமியாராகவே ஆகிவிடுகிறேன். இனி எனக்கு எல்லாம் கடவுளே என்று மனந்திருந்திய திருடன் அரசன் மகளை மணக்க மறுத்து விட்டான். அரசன் திரும்பச் சென்று விட்டான். அந்தத் திருடனோ உண்மை பக்தனாகி பிற்காலத்தில் ஒரு பெரிய மகான் ஆகிவிட்டான்.

நீதி: உயர்ந்தவர்களைப் போல் வேடம் போடுபவர்களுக்கு சில சமயங்களில் உயர்ந்த எண்ணங்களும் உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் ஒருவனை உயர்நிலைக்குக் கொண்டு செல்லும்.

மகாபாரதம் 17. மகாபிரஸ்தானிக பருவம் பகுதி -1

வியாசர் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் ஐவரும் உலகை விட்டு செல்லும் மனப்பான்மையில் ஒன்றுபட்டனர். தங்களுடைய வையக வாழ்வு பூர்த்தி ஆகி விட்டது எனவே இவ்வுலக வாழ்வில் இருந்து விலகிக் கொள்ளும் காலம் தங்களுக்கு வந்துவிட்டது என முடிவு செய்தனர். அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தின் மீது அபிமன்யுவின் மகன் பரீட்சித்துவை அரசனாக முடி சூட்டினர். அதே விதத்தில் துவாரகையின் அழிவிலிருந்து தப்பித்து கொண்ட வஜ்ரன் என்னும் ராஜகுமாரனை இந்திரப்பிரஸ்தத்துக்கு அரசனாக்கினார். இந்த இரண்டு இளம் ராஜகுமாரர்களை பாதுகாக்கும் பொறுப்பு உத்திரைக்கு வந்து அமைந்தது. குரு வம்சத்திலே எஞ்சியிருந்த யுயுத்ஸீ என்னும் ஒரு போர் வீரனை ராஜகுமாரர்கள் இவருக்கும் காப்பாளனாக நியமித்தனர். கிருபாச்சாரியார் இந்த இரண்டு ராஜா குமாரர்களுக்கும் ஆச்சாரியராக பொறுப்பேற்றார்.

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் தலைமை பட்டணத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கத்திற்குப் போக தீர்மானித்தார்கள். தபஸ்விகளுக்கு உண்டான ஆடைகளை அணிந்து கொண்டு வயதுக்கு ஏற்றவாறு யுதிஸ்திரன் முதலிலும் மற்றவர்கள் முறைப்படி பின் தொடர்ந்து சென்றார்கள். இறுதியாக துரோபதி அவர்களுக்கு பின்னால் சென்றாள். அவளின் பின் ஒரு நாய் பின் தொடர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு பகடை விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு சென்றார்களோ அதே பாங்கில் அவர்கள் இப்போது புறப்பட்டுப் போனார்கள். இந்த இரண்டு தடவைகளிலும் நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள். பாண்டவர்களோ முன்பு துயரத்திலும் தற்போது பேரின்பத்திலும் சென்றர்கள். அர்ஜூனன் தன்னுடைய காண்டீபம் என்னும் வில்லையும் அம்பு இருக்கும் அம்பாரத்தூணிகளையும் தன்னுடனே கொண்டு சென்றான். அர்ஜுனன் அதன் மீது வைத்திருந்த பற்றே அதற்கு காரணமாக இருந்தது

பாண்டவர்கள் முதலில் கிழக்கு திசை நோக்கி சென்றார்கள். கிழக்கே கடற்கரையை காணும் வரை அவர்களின் பயணம் இருந்தது. கடற்கரையை எட்டிய பிறகு அவர்கள் முன்னிலையில் அக்னிதேவன் தோன்றினான். பல வருடங்களுக்கு முன்பு காண்டவ வனத்தை அழிப்பதற்கு அர்ஜூனனுக்கு தேவையான காண்டீப வில்லையும் அம்பு வைக்கும் அம்பாரத் தூணிகளையும் சமுத்திர தேவனிடம் பெற்று அர்ஜூனனுக்கு அளித்தேன். இந்த ஆயுதங்களை வைத்து அர்ஜூனன் பல அரிய சாதனைகளை செய்திருக்கின்றான். இனி இந்த ஆயுதங்கள் அருஜூனனுக்கு தேவையில்லை. ஆகவே அவற்றை திருப்பி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அக்னி தேவன் கூறியதை சகோதரர்கள் அனைவரும் ஆமோதித்தார்கள். உடனே அர்ஜூனன் அம்பையும் அம்பாரத்தூணிகளையும் கடலுக்குள் போட்டான். இச்செயலின் விளைவாக உலக பந்தபாசங்கள் அனைத்தும் அவனை விட்டு அகன்று போயிற்று.

பின்பு தென் திசையை நோக்கி சென்று பின் தென் மேற்கு திசையில் சென்று வடதிசையில் பயணிக்க ஆரம்பித்தார்கள். இதன் வாயிலாக இந்த புண்ணிய பூமியை அவர்கள் முறையாக வலம் வந்து இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இமயமலையின் சிகரங்கள் வானளாவி இருந்தது. அந்த பள்ளத்தாக்குகள் வழியாக நடந்து சென்று மலைத்தொடரின் வடக்கே இருந்த மணல்திட்டை அடைந்தார்கள்.

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானம் அளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக, பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று அதைத் தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது. மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார் மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை. பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன். அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல் அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் இந்தப் பாவம் யாரை சேரும்? குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்க வேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும் என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அந்த நாட்டிற்கு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். அத்துடன் அவள் அந்த அந்தணர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்தப் பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி துன்பம் இழைக்காதவரைப் பற்றி சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாக்கூடாது.

மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -3

துவாரகையில் இருந்து பெண்கள் குழந்தைகள் அர்ஜூனன் தலைமையில் அஸ்தினாபுரம் செல்லும் வழியில் கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களை கொள்ளையடித்தனர். அவர்களை துணிச்சலை குறித்து அர்ஜுனன் நகைத்தான். உடனே திரும்பி ஓடாவிட்டால் திருடர்கள் அத்தனை பேரும் அழிந்து போவீர்கள் என்று அர்ஜுனன் எச்சரிக்கை செய்தான். ஆனால் இந்த எச்சரிக்கையை கொள்ளையர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் போக்கில் அவர்கள் பொருட்களை சூறையாடினார்கள்.

அர்ஜுனன் அக்கணமே தன்னுடைய வில்லின் அம்பை பொருத்தி சண்டையிட முன் வந்தான். ஆனால் அவனது ஆயுதம் செயலற்றுப் போனது. அவன் கற்ற அஸ்திர மந்திரங்கள் அனைத்தும் மறந்து போனது. மகாபாரதப் போரில் தலை சிறந்த வில்லாளியாக இருந்த அர்ஜுனன் இபொழுது ஆதரவற்ற சாதாரண மானிட நிலைக்கு வந்துவிட்டான். பெண்கள் சிலரை மட்டும் ஏதோ ஒரு பொக்கில் தன்னால் இயன்றவரை காப்பாற்றினான்.

பெண்களில் பெரும்பான்மையோர் கைவசம் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதைக்குறித்து அர்ஜுனன் மிகவும் வேதனைப்பட்டான். துவாரகையிலிருந்து அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தவர்களுக்கு வசிப்பதற்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட்டன. ருக்மணி சத்தியபாமாவும் காட்டிற்கு சென்று தவம் புரிந்து தங்கள் வாழ்க்கையை முடிக்க தீர்மானித்து காட்டிற்கு சென்றனர்.

பலராமனும் கிருஷ்ணனும் இல்லாத இந்த நிலவுலகம் நிர்மூலமாகி விட்டதை அர்ஜுனன் உணர்ந்தான். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் குழப்பத்துடன் இருந்த அர்ஜூனன் முன் வியாசர் தோன்றினார். அவருக்கு பணிவுடன் தனது வணக்கத்தை தெரிவித்தான். தான் கற்றிருந்த அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் எல்லாம் மறைந்து போயிற்று. ஆற்றல் அற்றவனாக நிற்கின்றேன். பெண்களை காப்பாற்ற இயலாமல் போயிற்று இதற்கான காரணம் என்ன என்று தனக்கு தெளிவு படுத்துமாறு வியாசரிடம் அர்ஜூனன் கேட்டான்

கருத்து மிக நிறைந்த விஷயத்தை அர்ஜுனனுக்கு எடுத்து வியாசர் விளக்கினார். பாண்டவர்களாகிய நீங்கள் மண்ணுலகிற்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியது. கிருஷ்ணனும் பலராமனும் வந்த காரியம் முடிவுற்றது. இனி வரும் காலத்திற்கு நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் இவ்வுலகத்திற்கு தேவை இல்லை. நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் எல்லாம் தனது வேலை முடிந்ததும் தங்களுக்கேற்ற தேவதைகளிடம் போய்ச் சேர்ந்து விட்டது. ஆகையால் அனைத்தும் உனக்கு மறந்து போயிற்று. இனி நீயும் உன் சகோதரர்களும் இந்த உலகை விட்டுப் புறப்படுங்கள் என்று வியாசர் அர்ஜுனனிடம் கூறினார்

மௌசல பருவம் முற்றியது அடுத்து மகாபிரஸ்தானிக பருவம்

தொடரும்………….