மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -4

வியாசரின் அறிவுரைக்கு ஏற்ப யுதிஷ்டிரன் அர்ஜுனனை அரிய பெரிய செயலை செய்து முடிப்பதற்காக அவனை அனுப்பி வைத்தார். அர்ஜுனன் இமாலயத்தின் உட்பகுதியில் இருந்த இந்திரகிலம் என்னும் இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அங்கு இந்திரன் வயது முதிர்ந்த பிராமண வடிவத்தில் வந்து அர்ஜுனனிடம் மகாதேவனாகிய சிவனை நோக்கி கடும் தவம் புரியும் படி அறிவுறுத்தினார். அர்ஜுனன் புரிந்த தவம் மிகமிகக் கடினமானது. அவனுடைய கடினமான தவத்தின் போது கட்டுப்பாடின்றி காட்டுப் பன்றி ஒன்று அவன் மீது பாய்ந்தது. தன்னை காக்கும் பொருட்டு அம்பு ஒன்றை அவன் விலங்கின் மீது எய்தான்.

அதே வேளையில் வேடன் ஒருவன் தன் அம்பை அந்தப் பன்றியின் மீது எய்தான். வேட்டைக்காக வாய்ந்த பன்றியை தானே கொன்றதாக இருவரும் சண்டையிட்டனர். சண்டை பயங்கரமான விற்போராக வடிவெடுத்தது. அர்ஜுனன் அப்போராட்டத்தில் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் அதை முன்னிட்டு அவனுடைய ஊக்கம் குறையவில்லை. சிவலிங்கம் ஒன்றை களிமண்ணால் செய்து வைத்துக் கொண்டு சிவபூஜை பண்ணினான். பூமாலை ஒன்று அந்த லிங்கத்திற்கு சாத்தினான். தான் வெற்றி அடைய வேண்டுமென்று சிவனாரிடம் முழு மனதுடன் பிரார்தனை பண்ணினான். இப்பொழுது புதிய ஆற்றல் பெற்றவனாக சண்டையில் மீண்டும் ஈடுபட ஆயுத்தமானான்.

அப்போது அவன் சிவலிங்கத்திற்கு சாத்திய பூமாலை அந்த வேடன் கழுத்தில் அணிந்திருந்தை கண்டு வேடனாக வந்தவன் யார் என்பதை அக்கணமே அர்ஜூனன் அறிந்துகொண்டான். சிவனார் தாமே வேடனாக வேடம் தாங்கி வந்து இருக்கிறார் என்று அறிந்து அடிபட்ட மரம் போல் வீழ்ந்து வணங்கினான். இறைவனார் அவனை வாரி எடுத்து தழுவிக்கொண்டார். இறைவன் புரிந்த செயல் விஜயனை உண்மை விஜயன் ஆகவே ஆக்கிவிட்டது வெற்றிவீரன் என்பது விஜயன் எனும் சொல்லின் பொருள். அர்ஜூனனுடைய வல்லமையை ஆராய்ச்சி செய்த பார்த்த பிறகே பாசுபத அஸ்திரத்தை சன்மானமாக அவனுக்கு சிவபெருமான் வழங்கினார். இறைவன் கொடுத்த அந்த ஆயுதத்தை அர்ஜுனன் பணிவோடு ஏற்றுக்கொண்டான் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த யமன் வருணன் மற்றும் தேவர்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்களையும் அர்ஜுனனுக்கு கொடுத்தார்கள்.

இந்திரனுடைய ஆணையின் படி அவனுடைய சாரதி மாதலி ரதவிமானத்தில் அங்கு வந்து இறங்கி அர்ஜுனனை அவனுடைய தந்தையின் தேவலோகத்திற்கு அழைத்தான். அர்ஜூனனும் அந்த அழைப்புக்கு இணங்கி ரதத்தில் ஏறிக்கொண்டான். ரதம் மேலே கிளம்பியது. பல நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி அமராவதி என்னும் இந்திரனுடைய அற்புதமான நகரத்தை ரதம் சென்றடைந்தது. தேவர்கள் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்று அவனுடைய தெய்வீக தந்தை இந்திரனிடம் அழைத்துச் சென்றனர். இந்திரன் தன்னுடைய மண்ணுலக மைந்தனை விண்ணுலகத்தில் தனக்கு சமமாக தன்னுடைய சிம்மாசனத்தில் தனக்கு பக்கத்தில் அமரச் செய்தான். மண்ணுலக மைந்தன் அழகிலும் விண்ணுலக நடைமுறையிலும் தன்னுடைய தந்தைக்கு நிகராக திகழ்ந்தான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -3

காம்யக வனத்தில் வனவாசத்தை அமைதியோடு ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் இப்பொழுது அதை முற்றிலும் தங்களுடைய ஆன்ம பலத்திற்க்கான பயிற்சிக்கு பயன்படுத்தினார்கள். வசதி நிறைந்த மாளிகை வாழ்க்கைக்கும் கஷ்டம் நிறைந்த வன வாசத்துக்கும் இடையில் அவர்கள் எந்தவிதமான வேற்றுமையையும் கொள்ளவில்லை. ஆயினும் திரௌபதி தன் கணவரின் போக்கை அறிந்து கொள்ள திரௌபதியால் இயலவில்லை. இளையவர்கள் நால்வரும் யுதிஷ்டிரனுடைய சொல்லிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். தீங்கை எதிர்ப்பது க்ஷத்திரிய தர்மம் ஆகும். ஆனால் யுதிஷ்டிரனோ தன்னுடைய பகைமை பங்காளிகள் தன் மீது சுமத்திய கஷ்ட திசைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான். கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் கொள்வது க்ஷத்திரியனுக்குரிய ஆயுதமாகும். ஆனால் அத்தகைய கோபங்கள் எதையும் யுதிஷ்டிரன் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகவே இருந்தான். திரௌபதியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கணவரிடம் இருந்த இத்தகைய சிறுமைக்கு காரணம் என்னவென்று அவள் பணிவுடன் யுதிஷ்டிரனிடம் கேட்டாள். அவள் கேள்விக்கு அவளுடைய குற்றச்சாட்டிற்கு பீமனும் துரௌபதியுடன் சேர்ந்து கொண்டான்.

நாம் அனுபவிக்கின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நானே என்பதை ஒத்துக்கொள்கிறேன். நம் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவர் சொற்படி நாம் எப்படி நடக்குமோ அதே விதத்தில் பெரியப்பாவாகிய திருதராஷ்டிரருடைய சொல்லுக்கு அடிபணிந்து நடக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். சூதாட்டத்தில் எனக்கு விருப்பம் இருக்கிறது என்று பெரியப்பாவுக்கு தெரியும். அவர் அதை பயன்படுத்தி நாம் அனைவரையும் இந்த கதிக்கு ஆளாகியிருக்கிறார். பதிமூன்று வருட காலம் வனவாசத்தில் இருக்க வேண்டுமென்ற அவர் விதித்திருக்கின்ற நிபந்தனைக்கு நான் உட்பட்டுள்ளேன். இப்பொழுது என் போக்கை நான் மாற்றிக் கொண்டால் அது சத்தியத்திலிருந்து பிசகுவதாகும். உயிர் போவதாக இருந்தாலும் நான் அப்படி செய்யமாட்டேன். இந்த 13 வருட காலம் வனவாசம் பூர்த்தியாகட்டும். அதன் பிறகு நீங்கள் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள நான் அனுமதிக்கிறேன். இப்பொழுது நமக்கு வாய்த்துள்ள துன்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டும். இந்த பதிமூன்று வருட காலத்தில் நாம் புரிகின்ற தவத்தின் வாயிலாக சூதாடிய பாவத்திற்கு விமோசனம் தேடிக் கொள்வோம். இந்த விஷயத்தில் நாம் எல்லோரிடத்திலும் மன ஒருமைப்பாடு அமைந்திருப்பது மிகவும் முக்கியமாகும். என்று யுதிஷ்டிரன் கூறினான். அதைக் கேட்ட சகோதரர்களும் திரௌபதியும் யுதிஷ்டிரனுடைய தீர்மானத்திற்கு முற்றிலும் இசைந்தனர்.

பாண்டவ சகோதரர்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் பொழுது வியாச பகவான் அவர்கள் முன்னிலையில் எழுந்தருளினார். அவருடைய வருகை பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. அவரை வரவேற்று அவருக்கு உரிய மரியாதை செய்தனர். போர் நடை பெறுவது உறுதி என்றும் தன் கட்சிக்கு அரசர்களை சேர்த்துக்கொள்வதில் துரியோதனன் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறான். பீஷ்மரும் துரோணரும் அவன் பக்கத்தில் இருந்து போர் புரிய இசைந்து உள்ளார்கள். அவர்களுக்கு நெருங்கிய நண்பன் கர்ணன். இம்மூவரும் பரசுராமருடைய மாணாக்கர்கள். ஆகையால் துரியோதனன் பக்கம் அமைந்திருக்கின்ற சக்தி மிக்க ஆள்பலம் மிகவும் அதிகமாகும். இந்த காரணங்களை முன்னிட்டு பாண்டவர்களும் தங்களை பலப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அர்ஜுனன் வடதிசை நோக்கிச் சென்று தெய்வீக ஆற்றல் படைத்த அஸ்திரங்களை தேடிக் கொள்வது அவசியம் என்று அவர்களுக்கு புத்திமதி கூறிவிட்டு வியாசர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -2

விதுரர் பாண்டவர்களை பார்க்க காம்யக காட்டிற்கு சென்று அவர்களுடன் சிறிது நாட்கள் இருந்தார். சில வாரங்கள் சென்றன. திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்னதில் உண்மை இருக்கிறது என்று எண்ணி விதுரரை மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வரவழைத்தார். விதுரர் பாண்டவர்களை பார்க்க காம்யக காட்டிற்குச் சென்று அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த துரியோதனன் விதுரர் பாண்டவர்களை மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வரவழைக்க சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் என்று எண்ணினான். இந்த முயற்சி நிறைவேறினால் பாண்டவர்கள் மீண்டும் திரும்பி வந்து கௌரவர்களை தங்கள் பின்னணியில் இருக்கச் செய்வார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆகையால் எதிரிகளாக இருக்கும் பாண்டவர்களை காட்டிலேயே வைத்து கொன்று விட்டால் பிறகு எதிர்ப்பு இல்லாமல் இருக்கும் என்று துரியோதனன் சதி ஆலோசனை செய்தான்.

வியாசர் துரியோதனன் முன் தோன்றி பாண்டவர்களை அழிக்க மடமே நிறைந்த முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் மீறி செய்தால் சூழ்ச்சிகள் யாவும் நிறைவேறாது என்றும் அவனுக்கு எச்சரிக்கை செய்தார். அடுத்தபடியாக வியாசர் திருதராஷ்டிரனிடம் சென்று சுய அழிவுக்கு உண்டான சூழ்ச்சிகளில் துரியோதனன் ஈடுபட வேண்டாம் என்று அவனுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் அவன் செய்யும் காரியங்களுக்கு தடைகள் போட வேண்டும் என்று திருதராஷ்டிரனுக்கு புத்தி புகட்டினார்.

மைத்ரேய மகரிஷி நாடு முழுவதும் தீர்த்தயாத்திரை சென்று கொண்டிருந்த பொழுது காம்யக வனத்தில் வசித்து வந்த யுதிஷ்டிரனைச் சந்தித்தார். அஸ்தினாபுரத்தில் நிகழ்ந்த பகடை விளையாட்டின் மூலம் நடந்த அனைத்து விளைவுகளையும் கேட்டு அறிந்தார். பீஷ்மரும் திருதராஷ்டிரர் போன்ற பெரியவர்கள் இப்பாவச்செயல் நடைபெறுவதற்கு எவ்வாறு இடம் கொடுத்தார்கள் என்று அந்த முனிவர் வியந்தார். மகரிஷி அடுத்தபடியாக துரியோதனனை சந்தித்தார். பாண்டவர்களை அழிப்பதற்கு எந்த செயலில் ஈடுபட வேண்டாம் என்று அவனுக்கு புத்தி புகட்டினார். ஆனால் தற்பெருமையே வடிவெடுத்த துரியோதனன் தன் தொடைகளை தட்டி அவரை ஏளனம் பண்ணினான். இந்த செயலைக் குறித்து கோபம் கொண்ட மைத்ரேய மகரிஷி போர்க்களத்தில் பீமனுடைய கதையினால் உன் தொடைகள் தூளாக்கப்பட்டு மாண்டு போவாய் என்று சாபமிட்டார்.

கிருஷ்ணர் திருஷ்டத்யும்னன் மற்றும் பல உறவினர்கள் காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களை பார்க்க வந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்தது பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் ஓரளவு ஆறுதலை கொடுத்தது. பரிதாபகரமான பாங்கில் திரௌபதி கண்ணீர் வடித்து நடந்த அனைத்தையும் கிருஷ்ணனிடம் கூறினாள். திரௌபதி கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்ட கிருஷ்ணன் வினைப்பயனிலிருந்து பொல்லாத கவுரவர்கள் ஒருபொழுதும் தப்பித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் தக்க சமயத்தில் இந்த அடாத செயலுக்கு பழி வாங்கப்படுவார்கள் என்னும் உறுதிமொழியை திரௌபதியிடம் கொடுத்தார். தன் தங்கை சுபத்திரையையும் அவளுடைய மகன் அபிமன்யுவையும் தன்னுடைய சொந்த பாதுகாப்பில் வைத்திருக்க கிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். அதே விதத்தில் திருஷ்டத்யும்னன் தன் தங்கை திரௌபதியின் மகன்களாகிய உப பாண்டவர்கள் ஐவரையும் தன் பாதுகாப்பில் வைத்திருக்க ஏற்பாடு செய்தான்

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -1

காம்யக வனத்திற்கு சென்ற பாண்டவர்கள் தங்கி வாழ்வதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டார்கள். தினந்தோறும் முனிவர்களும் சான்றோர்களும் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து இவர்களை சந்தித்து கொண்டிருந்தனர். வருகின்றவர்களுக்கு தக்க முறையில் உணவு செய்து வைத்து உபசரிக்கும் பிரச்சனை ஒன்று உண்டாயிற்று. உலகனைத்துக்கும் உணவை கொடுக்கும் சூரிய பகவானிடம் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை யுதிஷ்டிரன் பக்திபூர்வமாக தெரிவித்தான். அவனுடைய பிரார்த்தனைக்கும் தவத்திற்கும் சூரியநாராயணன் இணங்கி அவனுக்கு ஓர் அட்சய பாத்திரத்தை கொடுத்தார். அன்றைக்கு உரிய உணவு வகைகளை சமைத்து அவைகளை அப்பாத்திரத்தில் போடுவது திரௌபதியின் கடமையாகும். அதன் பிறகு எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவை பாத்திரத்திலிருந்து அவள் எடுத்து வழங்கிக் கொண்டே இருப்பாள். உணவு வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதன் பிறகு யுதிஷ்டிரனின் தம்பிகள் நால்வருக்கும் அதிலிருந்து அவள் உணவு எடுத்துக் கொடுப்பாள். பீமனுக்கு ஏற்ற பெரும் உணவும் அதில் வளர்ந்து கொண்டே இருந்தது. தம்பிமார்கள் நால்வரும் உணவருந்திய பிறகு யுதிஷ்டிரன் உண்பான். இறுதியாக திரௌபதியும் உணவு உண்பாள். அதன் பிறகு அட்சயபாத்திரம் அன்றைக்கு காலியாகிவிடும் உணவை வளர்க்கும் சக்தி அன்றைக்கு அத்துடன் முடிவுறும். அதன் பிறகு அந்த சக்தி அடுத்த நாள் தான் வரும். பாண்டவர்கள் வனவாசம் இருக்கும் 12 வருடங்களுக்கு அட்சயபாத்திரம் இதன்படி உணவு வழங்கும் தன்மையை வைத்திருக்கும். பாண்டவர்களுக்கு இறைவன் அருளை சார்ந்திருந்த வனவாசமும் இனிதே நடைபெற்று வந்தது.

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரர் விதுரரிடம் பாண்டவர்கள் காட்டிற்கு சென்றது குறித்து மக்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு விதுரர் பாண்டவர்கள் காட்டிற்கு சென்றது குறித்து பொதுமக்களிடம் திருப்தி ஏதுமில்லை. அதிருப்தி மட்டுமே உள்ளது. துரியோதனனின் ஆட்சியை விட யுதிஷ்டிரரின் ஆட்சி மேலானது என்று மக்கள் பாண்டவர்களிடம் அன்பு வைத்திருக்கின்றனர். துரியோதனனிடம் மனஅமைதி இல்லை. அச்சம் அவனுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கிறது. காட்டில் பாண்டவர்கள் வருந்திக் கொண்டிருப்பதற்கு ஏற்ப கௌரவர்களுடைய பாவம் இங்கு அதிகரிக்கும். பாண்டவர்களை திருப்பி அழைத்து அவர்களுடைய ராஜ்யத்தை அவர்களுக்கே திருப்பி ஒப்படைப்பதே பொருத்தமானது. அப்படி செய்யாவிட்டால் கௌரவர்கள் பாண்டவர்களால் அழிந்து போவது நிச்சயம் என்று விதுரர் திருதராஷ்டிரரிடம் கூறினார்.

விதுரர் இவ்வாறு கூறியது திருதராஷ்டிரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களுக்கு விதுரர் நன்மை செய்கிறார். கௌரவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டார். அவருடைய எண்ணத்திற்கேற்ப கோபத்தோடு நாடு கடத்தப்பட்டவர்களிடத்தில் உனக்கு அன்பு மிக அதிகமாக இருக்கும் என்றால் நீயும் அவர்களோடு போய் சேர்ந்து கொள்ளலாம். எங்களோடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று திருதராஷ்டிரர் கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -19

சபை அடுத்த நாள் கூடியது. திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் பன்னிரண்டு வருடம் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு வருடம் யாருக்கும் தெரியாதபடி அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால் பாண்டவர்களுடைய நாடு செல்வம் அனைத்தும் அவர்ளுக்கு மீண்டும் திருப்பி அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்து காட்டிற்கு செல்ல உத்தரவிட்டார். மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்கு எப்படி உத்தவு இடுகிறாரோ அப்படி அடிபணிந்து நடந்து கொள்ள நாங்கள் ஆயத்தமாய் இருக்கிறோம் என்று அமைதியாக யுதிஷ்டிரன் கூறினான். அப்போது விதுரர் வயது முதிர்ந்த காரணத்தால் குந்திதேவி காட்டில் இருக்க இயலாது ஆகையால் குந்தி தேவி செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். திருதராஷ்டிரர் ஒப்புக்கொண்ட பிறகு விதுரர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குந்திதேவி காட்டிற்கு செல்லவில்லை. காம்யக வனத்திற்கு செல்ல முடிவெடுத்து திரௌபதி மற்றும் சகோதரர்களுடன் காட்டிற்கு செல்ல யுதிஷ்டிரன் தயாரானான்.

ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி தலையைத் தொங்கப் போட்டு செல்வதையும் அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் பாண்டவர்களின் நண்பர்கள் கவலையுடன் நிற்பதையும் குந்திதேவி கண்டாள். குந்திதேவி கிருஷ்ணரிடம் பாண்டவர்களை காக்குமாறு கேட்டுக்கொண்டாள். மனித வாழ்க்கையில் கடினமான காலங்கள் வரும். அந்த கடினமான காலத்தை பாண்டவர்கள் தங்கள் மேன்மை அடைவதற்காக பன்னிரண்டு வருட காட்டு வாழ்க்கையையும் ஒரு வருட அக்ஞாத காலத்தையும் பயனுள்ளதாக நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். யாம் எப்போதும் அவர்களுக்கு துணை இருப்பேன் என்று குந்திதேவியை கிருஷ்ணர் சமாதானம் செய்தார்.

அஸ்தினாபுரத்தின் முதன்மையானவர்கள் அங்கிருந்த சென்றதும் வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது. பூமி நடுங்கத் தொடங்கி பல அபசகுனங்கள் தென்பட்டது. அப்போது சபையில் அனைவருக்கும் முன்னால் தேவலோக முனிவர்களில் சிறந்த நாரதர் தோன்றி இன்றிலிருந்து பதினான்காவது வருடம் துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லிவிட்டு வானத்தில் கடந்து மறைந்தார். துரியோதனன் கர்ணன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி காப்பாற்றுமாறு கேட்டனர். அதற்கு துரோணர் பாண்டவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள் அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து மரியாதையுடன் என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

சபாபருவம் முற்றியது அடுத்து வன பருவம்

ராமேஸ்வரம் உப்பு லிங்கம்

இராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது. பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருக்கிறது. ஒரு முறை சிலர் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும் அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கூறினார். அவர் செய்த உப்பு லிங்கம் இப்போதும் உள்ளது.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -18

திரோபதியின் சபதத்தை கேட்ட பீமன் எழுந்து திரௌபதியின் இரு சபதத்தையும் நிறைவேற்ற நானும் என் கதையும் துணை நிற்போம் இது சத்தியம் என்றான். அர்ச்சுனன் திரௌபதியின் இந்த சபதத்திற்கு மூல காரணமான கர்ணனை என் காண்டீபத்திலிருந்து புறப்படும் பாணங்களினால் துளைத்து மடியச் செய்வேன் இது சத்தியம் என்றான். திருதராஷ்டிரன் இபோது திரௌபதியை சமாதானம் செய்தால் நிலமையை சீர் செய்யலாம் அவளது சபதத்தை திரும்ப பெற செய்யலாம் என்ற எண்ணத்துடன் திரௌபதி உனக்கு வரம் தருகிறேன் என்றான். அதற்கு திரௌபதி இந்த சபையில் சூதால் தோற்ற அவர்களை சூதாலேயே வென்று பெற்று விட்டேன். பாண்டவர்களுக்கு அவர்கள் இராஜ்யம் வேண்டும். அதை நான் வரமாகக் கேட்க முடியாது. அது அவர்கள் தேசம். க்ஷத்திரியர்களான பாண்டவ புத்திரர்கள் தங்கள் ராஜ்யத்தை யுத்தம் செய்து வென்று பெற்றுக்கொள்வார்கள். ஆகையால் இப்போது தங்களின் வரம் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

மன்னன் திருதராஷ்டிரன் யோசிக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் இப்போது சுதந்திரமானவர்கள். இப்போது மேலும் பேச்சை வளர்த்தினால் இன்றே யுத்தம் துவங்கிவிடும். இதற்கு உடனே அணை போட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு யுதிஷ்டிரா இங்கு சபையில் நடந்தவைகள் யாருக்கும் விருப்பமில்லாதவைகளாய் நடந்துவிட்டன. நாளை சபை கூடியதும் மறுபடியும் பேசலாம். இப்போது நீங்கள் ஐவரும் திரௌபயும் சென்று ஓய்வெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் வெளியேறியதும் பலரும் சபையை விட்டு தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

துரியோதனன் மற்றும் அவன் உடன் பிறந்தவர்கள் துரியோதனனின் நலம் விரும்பிகள் திருதராஷ்டிரரிடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்த மண்டபத்திலேயே இருந்தார்கள். பாண்டவர்கள் நாடு நகரம் செல்வம் இவைகள் அனைத்தும் இல்லையென்றாலும் இப்போது சுதந்திரம் ஆனாவர்களாக இருக்கின்றார்கள். திரோபதியின் சபதத்தை முன்னிட்டு பீமனும் அர்ஜூனனும் துரியோதனனையும் துச்சாதனனையும் கொல்வதாக சபதம் எடுத்திருக்கின்றார்கள். நாளையே அவர்கள் யுத்தத்திற்கு வந்தால் அனைவரும் அவர்களுக்கே துணை நிற்பார்கள். ஆகவே இதற்கு ஓர் தீர்வு காணவேண்டும் என்று விவாதிக்கின்றாரகள். இறுதியில் பாண்டவர்களை 12 வருடகாலம் வனவாசம் செல்ல வேண்டும். ஒரு வருடம் அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் அப்படி அவர்கள் செய்தால் பகடையில் தோற்ற நாடு செல்வங்கள் அனைத்தையும் அவர்களுக்கு திருப்பி கொடுப்பதாக சொல்லி காட்டிற்கு அனுப்ப வேண்டும். ஒரு வருட அக்ஞாத வாசத்தில் அவர்களை கண்டு பிடித்து விட்டால் மீண்டும் 12 வருட காலம் காட்டில் இருக்க வேண்டும். இதை திருதராஷ்டிரர் யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டும். மன்னரின் ஆணையை யுதிஷ்டிரன் தட்டமாட்டான். இதை செய்யாவிட்டால் பாண்டவர்கள் தாங்கள் எடுத்த சபதத்தின்படி யுத்தத்திற்கு வருவார்கள் என்று திருதராஷ்டிரரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள்.

Related image

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 212 திருவட்டத்துறை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 212 வது தேவாரத்தலம் திருவட்டத்துறை. புராணபெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை. மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி. தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு, நிவாநதி. ஒரு முறை வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது. இதனால் இன்றும் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளது. தலவிருட்சம் ஆலமரம். தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள லிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.

அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுடன் இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மயில் பின்பறம் உள்ளது. திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். திருஞானசம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது செல்வதை விட்டு நடந்தே சென்றார். திருஞானசம்பந்தர் தன் கால்கள் வழ்க்க நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் திருஞானசம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி திருஞானசம்பந்தர் கால்கள் வலிக்காமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை திருஞானசம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று திருஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.

மறுநாள் காலை திருநெல்வாயில் கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று திருஞானசம்பந்தரிடம் கொடுத்து அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். திருஞானசம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார். வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் நீவா என்று அழைத்துள்ளார்கள். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது. இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்டுள்ளார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 211 கரூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 211 வது தேவாரத்தலம் கரூர். புராணபெயர் கருவூர், திருக்கருவூர் ஆனிலை. மூலவர் பசுபதிநாதர், பசுபதிஸ்வரர் ஆநிலையப்பர். இரண்டடி உயரம் உள்ள இறைவன் சதுர ஆவுடையாராக சிறிது சாய்ந்த நிலையில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசி மாதத்தில் ஐந்து நாட்கள், பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது. கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக காட்சி தருகிறார். அம்பாள் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கிருபா நாயகி, சுந்தரவல்லி. தீர்த்தம் தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி (அமராவதி) நதி. தலவிருட்சம் வஞ்சி. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது.

புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இவ்வூரிலேயே பிறந்துள்ளார். கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோயிலில் லிங்கத்திற்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். இறைவனை காமதேனு வழிபட்டுள்ளார். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட பதி. எறிபத்த நாயனார் பிறந்த தலம். சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதார தலம்.

திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடனான முருகப்பெருமானது திருமண வைபவத்திற்கு முசுகுந்த சக்கரவர்த்திக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாக இத்தல புராணங்கள் கூறுகின்றன. கோயிலுக்குள் நுழையும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார் கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு சிவலிங்கத்தை நாவால் வருடுவது போலவும் அதன் பின் கால்களுக்கிடையில் பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. புகழ்ச்சோழர் மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நடராஜர் சன்னதியும், கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தியும் லட்சுமி சன்னதியும் அடுத்து ஆறுமுகர் சன்னதியும் உள்ளது. பதினென் சித்தர்களில் ஒருவரான சித்தர் கருவூரார் இத்தலத்துள் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டுள்ளார். பற்றற்றவராக வாழ்ந்திருந்த இவர் மீது அந்தண இனத்தைச் சார்ந்தவர்கள் வாம மார்க்கத்தைக் கடைப்பிடித்து மது, புலால் இவைகளால் பூஜை செய்வதாக மன்னரிடம் குறை கூற மன்னன் இவரிடம் எக்குறையும் காணாது குறை கூறியவர்களைத் தண்டித்தான். மீண்டும் மீண்டும் அந்தணர்கள் தொல்லை தரவே இவர் தைப்பூசத்தன்று ஆனிலையப் பருடன் ஐக்கியமாகி விட்டார். ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.

பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன் காமதேனுவிடம் நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப் போல் படைப்பு தொழில் செய்வாய் என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது. கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கன் உள்ளது. பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 210 கொடுமுடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 210 வது தேவாரத்தலம் கொடுமுடி. புராணபெயர் திருப்பாண்டிக்கொடுமுடி மூலவர் கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி, மலை கொழுந்திஸ்வரர். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் ஆகும். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, சௌடாம்பிகை, திரிபுர சுந்தரி, மதுரபாஷினி. தீர்த்தம் தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி. தலவிருட்சம் வன்னி. இத்தலத்தில் உள்ள ஆண் மரமாக கருதப்படும் வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள். வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது.

கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரஙளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைபுள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும். அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி உள்ளது.இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது.

ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்நு பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ ஒவ்வொன்றும் ஒரு தலமானது. சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறது. மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும் தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார். இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது.

அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சி தந்துள்ளார். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும் ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும் பெருமாளும் சிவபெருமானை வழிபடுகின்றனர். மலையத்துவச பாண்டியனின் மகனுக்கு பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டியபின் இக்குறை தீர்ந்தது. எனவே பாண்டியன் இக்கோவிலுக்கு மூன்று கோபுரங்களையும், மண்டபங்களும் கட்டி, மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். பாண்டிய மன்னனால் திருப்பணிகள் செய்யப் பெற்றதால் இத்தலம் பாண்டிக்கொடுமுடி ஆயிற்று. திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும் சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆனால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார். இங்குள்ள கல்வெட்டில் மலைக்கொழுந்தீசர் என்ற பெயருள்ளது. சுந்தரபாண்டியன் கேசரி காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. அகத்தியர், திருமால், பிரம்ம தேவர், பரத்துவாஜர், மலையத்துவச பாண்டியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.