விஷ்ணு லட்சுமியுடன் கருடன்

ஒற்றைக் கல்லில் கருடன் விஷ்ணு லட்சுமி மற்றும் 8 பாம்புகள் என 11 கடவுள்கள் செதுக்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டில் ராமானுஜாச்சாரியாரால் நிறுவப்பட்ட சிலை இது. சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. கருட பகவான் ஒரு காலில் மண்டியிட்டு வலது கையில் விஷ்ணு பகவானனையும் இடது கையில் லட்சுமி தேவியையும் ஏந்தி நிற்கிறார். இடது கை சிறிது உயர்ந்த நிலையில் உள்ளது. இது லட்சுமியின் செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. மகாவிஷ்ணுவும் கருடனும் மகாலட்சுமியை நோக்கி தரிசனம் செய்கின்றனர். ஆனால் லட்சுமி தேவி நேராக அமர்த்த வண்ணம் தன்னை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். கருடன் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. அதைச் சுற்றி 8 பாம்புகள் அவரது அணிகலன்களாக உள்ளன. இது விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோவில். இடம்: கருடதேவஸ்தானம். கோலாதேவி கிராமம். கோலார் மாவட்டம். கர்நாடக மாநிலம்.

கற்பக விருட்சத்தை அருளிய விநாயகர்

தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில் விப்ரதன் என்று ஒரு விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். எந்த உயிர்களுக்கும் தீங்கிழைக்காமல் தர்மப்படி இறை நம்பிக்கையுடன் வாழ்ந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தான். நாட்டில் மழை இல்லாமல் வறட்சி வந்தது. காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் பட்டுப் போய் பாலைவனம் போல் காட்சி அளித்தது. தனது குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி வழிப்பறிக் கொள்ளையில் இறங்க முடிவு செய்தான். தர்மப்படி வாழந்து வந்த அவனை தடுத்தாட்கொள்ள இறைவன் எண்ணினார். தனது குடும்பத்தின் பசியை போக்கவே வழிப்பறியில் ஈடுபடுகிறேன் என்று இறைவனை வேண்டிக் கொண்டு முதல் நாள் வீட்டை விட்டு கிளம்பினான். இறைவன் தங்க ஆபரணங்களை அணிந்து ஒரு அந்தணன் வேடத்தில் அவன் முன்பு தோன்றினார். அவரை பின் தொடர்ந்தான் விப்ரதன். உடனே அந்தணன் ஓடினார். அவரைத் துரத்திக் கொண்டு விப்ரதனும் ஓடினான். அந்த வனத்தில் இருந்த பாழடைந்த ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து மறைந்தார் இறைவன்.

விநாயகர் கோயிலும் அருகில் இருந்த தெய்விகக் குளமும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அந்த இடத்தில் ஈர்க்கப்பட்ட அவன் அங்கேயே தங்கி விட்டான். உணவுக்கும் தண்ணீருக்கும் ஏதேனும் வழி பிறக்குமா என யோசித்தான். அப்போது அங்கு முனிவர் ஒருவர் வந்தார். அவரை வழிமறித்து கூரிய கத்தியை காட்டி இருப்பதை கொடுங்கள் என்றான் விப்ரதன். முனிவரோ சற்றும் பதறாமல் கருணை பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்த்தார். மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல் அந்தக் கருணைக்குக் கட்டுண்டு கத்தியை கீழே போட்டு அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி சரணடைந்தான். தன் கமண்டல நீரால் அவன் முகத்தில் தெளித்த முனிவர் அவனது புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்தார். என் பாபங்களைப் போக்கி அருளுங்கள் என வேண்டினான் விப்ரதன். உடனே முனிவர் அருகில் கிடந்த காய்ந்த மரக் கிளையை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

இந்த மரக்கிளையை இந்தத் தடாகத்தின் கரையில் நட்டு நான் உனக்கு மகா கணபதி காயதரீ மந்திரத்தை உபதேசிக்கிறேன். அந்த மகா கணபதி காயத்திரி மந்திரத்தை இந்த மரக்கிளை துளிர்விடும் வரை தொடர்ந்து ஜபித்து வா. இது துளிர்க்கும்போது உன் பாவம் நீங்கி புனிதனாவாய் தேவர்களைப்போல் உயர்ந்தவனாய் என அருளி மந்திரத்தை உபதேசித்தார் முனிவர். முனிவர் சொன்னபடி ஜபம் செய்ய ஆரம்பித்தான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன ஆகாரம் இன்றி அவன் செய்த தவத்துக்குப் பலனாக காய்ந்த அந்த மரக்கிளை துளிர்க்கத் துவங்கியது. கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன் முன் தோன்றிய விநாயகர் விப்ரத பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால் நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால் நீ புருசுண்டி என அழைக்கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம் கற்பக விருட்சமாகி விட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும் அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. என்ன வரம் வேண்டும் கேள் என அருளினார். இதில் சிலிர்த்தவன் தங்களின் திருவடியைச் சரணடையும் பாக்கியம் மட்டும் போதும் என்றான். தொடர்ந்து மக்களுக்கு நன்மை செய்து ஜபத்தை செய்து கொண்டிரு. உரிய காலம் வரும் போது எம்மை அடைவாய் என்று அருளி மறைந்தார் மகா கணபதி. யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாதபடி மக்களுக்கு தேவையானதை கற்பக மரத்தின் மூலம் பெற்று அனைவருக்கும் கொடுத்து ஜபத்தை தொடர்ந்தார் புருசுண்டி.

புருசுண்டியை ஆட்கொள்ள நினைத்த விநாயகர் அவரை சோதிக்க தேவேந்திரனை அனுப்பினார். தேவேந்திரன் புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம் கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத புருசுண்டி கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் கொடுத்தார். விநாயகர் தந்ததையே மனதார தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில் அங்கு தோன்றிய மகா கணபதி புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொண்டு அவருக்குப் பிறவா நிலையை அருளினார்.

இன்று விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் நாமத்தை துதித்து வேண்டியவர்களுக்கு வேண்டியதை தந்து விநாயகரின் அருளை பெற்று அவரின் பாதம் சரணடைவோம்.

தேவகி தாயாருடன் பாலகிருஷ்ணர்

கோவா மாநிலத்தில் மார்செல் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவகி கிருஷ்ணர் கோவிலில் மட்டுமே கிருஷ்ண பரமாத்மா தேவகி தாயாரின் இடுப்பில் அமர்ந்திருப்பார். கிருஷ்ணரின் குழந்தை வடிவத்துடன் அன்னை தேவகி வழிபடப்படும் ஒரு அரிய கோயிலாகும்.

அகத்தீஸ்வரர் கோயில்

அகத்தியர் தென்நாட்டில் பல இடங்களிலும் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார். அப்படி பிரதிஷ்டை செய்த கோயில்களில் சாரம் அகத்திஸ்வரர் கோயிலும் ஒன்று. அகத்தியா் தமது திருக்கரங்களினால் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத் திருமேனி ஶ்ரீஅகத்தீஸ்வரா் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அகத்தீஸ்வரா் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பிகையின்திருநாமம் ஶ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆகும். இந்த அன்னையின் திருவுருவச்சிலை தற்போது திருக்கோயிலில் இல்லை. காலவெள்ளத்தில் இச் சிலை சிதிலமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அக்காலத்தில் இந்த இடம் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது. இங்கு ஈசன் தன் தேவியோடு அகத்திய மகரிஷி முன் தோன்றி தன் திருமணக் கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினாா். ஈசன் மீது அகத்தியா் கொண்டிருந்த பக்தியின் சாரத்திற்கு சான்றாக இந்த திருத்தலம் சாரம் என்று அழைக்கப்பட்டது.

இக்கோயிலில் பிரம்ம சாஸ்தா முருகர் அருள்பாலிக்கிறார். பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரம்மனைச் சிறையிலிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கிய போது பிரம்மனுக்கு உரிய ஜபமாலையும் கமண்டலத்தையும் கொண்டாா் முருகப்பெருமான். கந்தனுக்குரிய இந்தத் திருவடிவம் பிரம்மசாஸ்தா என்று அழைக்கப்படுகின்றது. பிரம்ம சாஸ்தா என்று முருகப்பெருமானின் இந்த வடிவினை கந்தபுராணப் பாடல் குறிப்பிடுகின்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானை சுப்ரமண்யன் என்று வணங்குகிறோம். பிரம்மண்யன் என்றால் பிரம்மத்தை உணா்ந்த பரமஞானம் பெற்றவன் என்பது பொருளாகும். சு என்பது இதனை அதி உன்னதமான என்ற பொருளை மேலும் சிறப்பிக்கும் அடைமொழியாகும். பிரம்மத்தின் அதி உயா்வான நிலையை அடைந்தவன் சுப்ரமண்யன். அவனுக்கு மேலான ஞானம் தேஜஸ் வேறு இல்லை என்பது பொருள். எனவே தான் முருகப் பெருமானை ஞானக் கடவுள் என்று வணங்குகின்றோம்.

குளிகன் மற்றும் மாந்தியுடன் ஜேஷ்டாதேவியின் திருவுருவச் சிலை உள்ளது. இச்சிலை இத்தலத்தில் தற்போது ராஜமாதங்கி என்றும் சியாமள வராஹி என்றும் அழைக்கப்படுகின்றது.

பல்லவ மன்னா்கள் முருகனைப் பரமபாகவதன் பரம மகேஸ்வரன் பரம வைஷ்ணவன் பரம பிரம்மண்யன் என்று அழைத்ததாக செப்பேடுகள் தொிவிக்கின்றன. சோழ மன்னா்கள் காலத்தில் நிா்மாணிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் காணப்படும் அரிய இந்த பிரம்ம சாஸ்தாவின் சிலை பல்லவா்கள் காலத்தைச் சாா்ந்தது என்று வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். தொண்டை நாட்டில் ஆனூா் கந்தசாமி கோயிலிலும் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்திலும் புதுச்சோி மாநிலம் மதகடிப்பட்டு குண்டாங்குழி மகாதேவா் கோயிலிலும் பிரம்ம சாஸ்தா வடிவிலான முருகப்பெருமானின் சிலைகள் உள்ளன.

சாரம் ஶ்ரீஅகத்தீஸ்வரா் திருக்கோயிலில் சோழா் கால கல்வெட்டுகள் இரண்டு காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் பண்டைய அளவு கோலினைக் கல்வெட்டில் வடித்துள்ளனா். மற்றொரு கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்து மூன்றாவது ஆட்சியாண்டைக் குறிப்பதாகும். இக்கல்வெட்டில் இத்தலத்தின் பெயா் ஜெயங்கோவளநாட்டு சாரமான ஜெயங்கொண்ட சோழ நல்லூா் என்றும் ஈசனின் பெயர் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் கோயிலுக்கு நந்தா விளக்கேற்றுவதற்காக முப்பது பசுக்களை தானமாக வழங்கியதையும் சந்தி விளக்கெரிக்க பதினாயிரத்து எண்ணூறு காசும் கொடுத்து சூரிய சந்திரா் உள்ளவரை விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதையும் ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் திண்டிவனத்திற்கு அருகில் 8 கிமீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயில் தற்போது சிறிது சிறிதாக புணரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரட்டை நந்தி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் இங்கு 2500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இல்லை. உடைந்த நிலையில் காணப்படுகிறது.

ஒரு முறை விவசாயி ஒருவரின் நிலத்தில் மாடு ஒன்று மேய்ந்தது. ஆத்திரமடைந்த விவசாயி அந்த மாட்டின் காதையும் கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கற்சிலையான நந்தியின் கொம்பும் காதும் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. வந்தது. தெய்வ நந்தி என்பதை அறியாமல் செய்த தவறுக்கு விவசாயி வருந்தினார். அதற்கு பிராயச்சித்தமாக புதிய நந்தி சிலை ஒன்றை பழைய நந்தி சிலையின் பின்பாக பிரதிஷ்டை செய்தார்.

தீர்த்தீஸ்வரர் கோயில்

மூலவர் தீர்த்தீஸ்வரர். உற்சவர் தீர்த்தீஸ்வரர். கோயிலின் மூலவராகவும் உற்சகராகவும் தீர்த்தீஸ்வர சுவாமி அருள்பாலிக்கிறார். பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்கள் தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்ந்து தனது வழிபாட்டை செய்கிறது. அம்பாள் திரிபுர சுந்தரி. தீர்த்தீஸ்வரர் சன்னதியும் திரிபுர சுந்தரி தேவியின் சன்னதியும் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கிறது. தல விருட்சம் மகிழம் மரம். ஆலயத்தின் தல விருட்சமான மகிழ மரத்திற்கு அடியில் மாழ்வினை தீர்த்தர் சன்னதி உள்ளது. அவருடன் வீரபத்திரர் விசாலாட்சி மகாவிஷ்ணு ஒன்றாக அருள்பாலிக்கிறார்கள். திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீர ராகவப் பெருமாள் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பழமையான சிவன் கோவில் இது. வீர ராகவப் பெருமாள் கோயிலின் பெரிய கோயில் குளத்தை நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி தீர்த்தம் தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டில் மீண்டும் புணரமைத்து கட்டப்பட்டது.

கருவறையைச் சுற்றியுள்ள சுவரில் விநாயகர் தட்சிணாமூர்த்தி விஷ்ணு பிரம்மா துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரரின் கோஷ்ட உருவங்கள் உள்ளன. வரசித்தி விநாயகர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தர்ம சாஸ்தா பால தண்டாயுதபாணி நவக்கிரகம் நடராஜர் கால பைரவர் சன்னதிகளும் உண்டு. மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது இக்கோயில். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பு ஆகும்.

மது கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். திருமால் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால் திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. இதனால் இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றார் திருமால். இதனால் இறைவன் மால்வினை தீர்த்தர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் காஞ்சி மஹாபெரியவர் இங்கு ஒரு மண்டலம் தங்கி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் மகிழம் மரம் மால் வினை தீர்த்தரை வலம் வந்து வணங்கினால் மரத்தில் இருந்து மகிழம் பூ உதிர்வதுபோல் பக்தர்களது வாழ்விலும் துன்பங்கள் உதிரும் என்று அருளினார். சில காலம் முன்பாக பௌர்ணமி தினங்களில் சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை கனக குளிகை காலத்தில் ஓநான் வேலி சித்தர் என்பவர் எடுத்து மற்ற புண்ணிய தீர்த்தங்களோடு சேர்த்து திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் தீர்த்த பிரசாதமாக வழங்கினார். இந்த தீர்த்தத்தை பருகியவர்கள் தங்களது உடலில் உள்ள நோய்கள் பல நீங்கப் பெற்றார்கள்.

சாதிபிரல்ல அகஸ்தியேஸ்வரர்

சிவலிங்கத்தின் தலையில் சடாமுடி உள்ளது. சடாமுடியில் இருந்து வரும் தலைமுடி சிவலிங்கத்தின் பாணத்தில் தலையை சுற்றி பரந்து விரிந்திருக்கிறது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு வம்சங்களால் புணரமைக்கப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் உள்ளன. 9 ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்ட அம்மனா பேக்கடா கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டினார். இடம் கமலாபுரம் கடப்பா மாவட்டம். ஆந்திரப் பிரதேச மாநிலம்.

பக்தியின் உச்சம் அன்பு

லட்சுமி அம்மாள் என்கின்ற எச்சம்மாள் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். வினையின் காரணமாக அவரது கணவர் அவரது மகன் மற்றும் இரண்டு மகள்கள் அடுத்தடுத்து இழந்த நிலையில் விதி அவளை ரமணரின் முன்னிலையில் அழைத்துச் சென்று நிறுத்தியது. எச்சம்மாள் விருபாக்ஷா குகையில் ரமணரின் முன் ஒரு மணி நேரம் நின்றாள். அந்த ஒரு மணி நேரத்தில் அவளுடைய வேதனைப்பட்ட இதயமும் அதிர்ச்சியடைந்த மனமும் மாறியது. அவளின் மனம் அமைதியின் உச்சத்திற்கு சென்றது. ரமண மகரிஷியுடனான இந்த சந்திப்பிற்குப் பிறகு எச்சம்மாள் 1907 இல் திருவண்ணாமலையில் குடியேறினார். தினமும் சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு அவருக்கும் அவருடன் வசிப்பவர்களுக்கும் உணவு கொண்டு வரும் பணியை எச்சம்மாள் எடுத்துக் கொண்டாள்.

எச்சம்மாள் ஒரு முறை பகவானுடைய படத்துக்கு ஒரு லட்சம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதாக சங்கல்பித்தார். எவ்வளவு தேடியும் 50000 இலைகள் மட்டுமே அவளுக்கு கிடைத்தன. கடும் கோடை வேறு எங்கும் இலைகள் கிடைக்கவில்லை. வில்வ இலைகள் கிடைக்க அருள்புரியுமாறு ரமணரிடம் முறையிட்டார். உடனே ரமணர் உன் உடம்பை கிள்ளி பூஜை பண்ணு என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தூக்கி வாரிப் போட்டது. கிள்ளினால் வலிக்குமே என்றார். மரத்திலிருந்து இலையை கிள்ளினால் வலிக்காதா? என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தன் தவறு புரிந்தது. பகவானே முன்னேயே சொல்லி இருந்தால் அந்த ஐம்பதாயிரம் இலைகளை கிள்ளி இருக்க மாட்டேனே? என்றார். உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும்ன்னு தெரியும். இலைகளை கிள்ளினா அதுக்கு வலிக்கும்ன்னு தெரியாதா? இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா? என்றார் ரமணர்.

பூஜை என்பது இலைகளைக் கிள்ளியும் பூக்களைப் போட்டும் மாலைகளை அணிவித்தும் நைவேத்தியம் செய்தும் படைப்பதல்ல. இதெல்லாம் கண் தெரியாதவனுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல உதவும் கம்பு போல இறைவனின் அருகில் செல்ல உதவும். ஆனால் பக்தியில் முழுமையடைய வேண்டுமானால் எதிரே இருக்கும் இறைவன் அனைத்து உயிர்களுக்கும் இருக்கின்றான் என்று உணர்வதும் தனக்குள்ளேயே இருக்கின்றான் என்று உணர்வதும்தான் அந்த உணர்வில் அன்பை வெளிப்படுத்துவதே பக்தியின் உச்சம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. திருமந்திரம் பாடல் எண்: 270

சூரிய பகவான்

தேரோட்டி அருணா ஏழு குதிரைகள் கொண்ட தேரை ஓட்ட தேரில் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சூரிய பகவான். தேர் வேகமாக செல்வதை குறிக்கும் வகையில் சூரிய தேவனின் பின்னால் பறக்கும் அவரின் வஸ்திரம். இடம் வாராஹி தேயுலா கோவில். ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரிய கோவிலுக்கு வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள சௌராஷி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.