வள்ளியை மணம் முடிக்க வள்ளிமலைக்கு வயோதிக வடிவில் சென்றார் முருகர். அங்கு தினைப் புனத்தில் வேடனாகவும் வேங்கை மரமாகவும் விருத்தனாகவும் வேடமிட்டு லீலைகள் பல செய்து அவளை மணம் புரிய விரும்பி காதல் மொழிகளைப் பேசினார். வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார் முருகர். அவர் யானை வடிவில் வந்து வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி வயோதிகராக வந்த முருகனை அணைத்துக் கொண்டாள் வள்ளி. இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இதனை அற்புதமாக விளக்கும் சிற்பக்காட்சி தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புற சுவற்றில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.