காளையுடன் இருக்கும் சிவனின் உருவத் திருமேனி ரிஷபாரூடர் என்று அழைக்கப்படுகிறது. காளையின் மீது நான்கு கரங்களுடன் சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தருகின்றார். இடம் அருள்மிகு கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோயில் திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம்.
கர்நாடகாவில் உள்ள ஹேமகுடா மலையின் வழியில் உள்ள ஹம்பியில் மிகப் பெரிய உருவத்தில் விநாயகர் சிலை உள்ளது. இவருக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர். கன்னடத்தில் சசிவ் காலு என்றால் கடுகு விதை என்று பொருள். இது கடுகு விற்பவரால் செதுக்கப்பட்டதால் அந்த சிலைக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர் வந்தது.
கஜலட்சுமி தேவியின் வித்தியாசமான சிற்பம். தாமரை பீடத்தில் இரு பக்கங்களிலும் பணிப் பெண்கள் இருக்கிறார்கள். இரு யானைகள் கலச நீரை அபிஷேகம் செய்ய பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் கஜலட்சுமி. இடம் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அரியலூர்.
முருகனும் தெய்வானையும் சுகாசனத்தில் உள்ளனர். இறைவனின் சிதைந்த நிலையில் வலக்கால் உள்ளது. கைகளில் தோள் வளைகளும் பட்டை வளைகளும் உள்ளன. உயரமான சடை மகுடம் சடைப் புரிகள் இருபுறமும் தோள்களில் தவழ்கின்றன.
முருகனின் இடப்புறம் அவரைப் போலவே வலக்காலைக் கீழிறக்கி இடக்காலைக் இருத்தி சுகாசனத்தில் தெய்வானை அமர்ந்திருக்கிறார். இவரது கால்களும் சிதைந்த நிலையில் உள்ளது. சிதைந்துள்ள இடக்கை தொடை மீதும் வலக்கையில் மலர் உள்ளது. செவிகளில் மகர குண்டலங்கள் கழுத்தைச் சரபளியும் பதக்க மாலையும் உள்ளன. தலையில் அணிந்துள்ள சிறிய அளவிலான கரண்ட மகுடத்தை மீறிய சடைப்புரிகள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இறைவனுக்காக தலையைச் சாய்த்தவாறு தேவியின் முகம் குனிந்திருக்கிறது. இடம் கந்தன் குடைவரை கோவில் (லாடன் கோயில்) ஆணைமலை மதுரை.
தெலுங்கானா மாநிலம் யதாத்ரி மாவட்டத்தில் உள்ள போங்கிர் கோட்டைக்கு செல்லும் படிகளுக்கு அருகில் இச்சிலை உள்ளது. பச்சை நிற பாசால்ட் சிற்பம் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மலையடிவாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணியின் போது தோண்டி எடுக்கப்பட்டு தற்போது போங்கிர் கோட்டையின் அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ளது. 850 ஆண்டுகள் பழமையான சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்த இந்த சிற்பம் புவனேஸ்வரி கோயிலின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. நாக பைரவர் அஷ்ட பைரவர்களில் ஒருவராவார். சிவனின் எட்டு உக்கிரமான பைரவ அவதாரங்கள் எட்டு திசைகளையும் பாதுகாத்து கட்டுப்படுத்துகிறார்கள். நாக பைரவா தெற்கு திசையின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.
திருநெல்வேல்லியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவராக விநாயகர் தனது துணைவியான நீல வாணியை தனது இடது மடிமீது வைத்து அருள் பாலிக்கிறார். வட இந்தியாவில் விநாயகரின் துணைவிகளாக சித்தி புத்தி இருவர் இருப்பார்கள். ஆனால் விநாயகர் துணைவி நீல வாணியை இக்கோயிலை தவிர வேறு எங்கும் காண முடியாது.
திருநெல்வேல்லியில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் உள்ள சுவர்ண ஆகார்ஸன பைரவர் தனது துணைவியான பைரவியை தனது இடது மடிமீது வைத்து அருள் பாலிக்கிறார்.
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வல்லம் என்ற ஊரில் சிறிய குன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவையாகும். பாறை முகப்பில் காணப்படுகிறார் இந்த விநாயகப் பெருமான்.
விநாயகர் இடக்காலை மடக்கி வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் விரிந்த அழகான காதுகள் திண்டு போன்ற அமைப்பின் மீது வைத்து சாய்ந்த நிலையில் அழகிய வடிவுடன் ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார்.