இலகுலீசர்

சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தை தோற்றுவித்தவர். குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் இடத்தில் முதன் முதலில் தோற்றுவித்தவர். இவரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்று பெயர் பெற்றன. இவர் சிவபெருமானின் 28 ஆவது அவதாரமாகக் கருதப்படுபவர். இவரது சீடர்கள் கௌசிகர் கார்கி கௌதமன் ஆகியோரால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட பாசுபத சைவம் தமிழகத்தில் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வளரத் தொடங்கியது. இந்த சைவத்தை பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொள்வர். சாம்பலில் படுத்து உறங்கி சாம்பலில் நடனமாடி மாலைகளை அணிந்து கொள்வார்கள். லகுலீச பாசுபத சைவம் சார்ந்த கோயில்களில்தான் இவர்கள் தங்குவார்கள். சிற்பத்தில் லகுலிஷா நிர்வாண யோகியாக உள்ளார். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் உஜ்ஜைன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள திரிவேணி அருங்காட்சியகத்தில் உள்ளது.

கருடாழ்வார்

பாம்புகளுடன் கூடிய தலை மற்றும் கைக்கவசத்துடன் அஞ்சலி முத்திரையில் 11ஆம் நூற்றாண்டு கருடாழ்வாரின் சிதிலமடைந்த சிற்பம். இடம் இந்திய அருங்காட்சியகம். மேற்குவங்காளம் கொல்கத்தா.

சதுர்புஜ பைரவர்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள இந்து பௌத்த சிங்கசாரி கோவிலில் இருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சதுர்புஜ பைரவரின் கற்சிற்பம். நான்கு கரங்களில் சூலம் உடுக்கை குத்துவாள் மற்றும் உடைந்த கபாலம் ஏந்தியுள்ளார். முண்டமாலையுடன் கபாலத்தின் மீது தன் வாகனமான நாயுடன் கம்பீரமாக நிற்கின்றார்.

கபால விநாயகர்

மண்டை ஓடுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பகவான் விநாயகரின் 13 ஆம் நூற்றாண்டு சிற்பம். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிங்கோசரி என்ற இந்து கோயிலில் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது நெதர்லாந்தின் லைடன் வோல்கன்குண்டே அருங்காட்சியகத்தில் உள்ளது.

தடாதகைப்பிராட்டியார் – மும்முலை அம்மன்

ஸ்ரீ மீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம்  செல்லும் ஒர் அரிய  சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.

வராஹ அவதாரம்

தர்மசாலா ஜெய்பூர் நகரை சேர்ந்தது வராஹ அவதார சிற்பம். இந்த 10 ஆம் நூற்றாண்டு காலத்தைக் கொண்ட இந்த சிற்பம் தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில அருங்காட்சியகத்தில் உள்ளது.