விஷ்ணுவும் கருடரும்

விஷ்ணு பகவானும் கருட பகவானும் தோழமையுடன் நிற்கும் சிற்பம். கருடன் மனித வடிவில் காட்டப்பட்டுள்ளார். இடம்: குன்றக்குடிகுடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

ஹேரம்பா கணபதி

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் அங்கீராச முனிவரால் வழிபட்ட இக்கோயில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ளது. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஹேரம்ப கணபதி 11 வது ஸ்வரூபம். பிரதான வலது கையில் அபய முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இடது கையினால் ஐஸ்வர்யத்தை கொடுக்கிறார். மற்ற கைகளில் கயிறு ஜப மணிகள் மாலா (ருத்ராஷகா) கோடாரி சுத்தி அவரது உடைந்த தந்தஆயுதம் மாலை பழம் மற்றும் மோதகம் ஆகியவற்றை வைத்திருக்கிறார். வெண்மை நிறத்துடன் சிங்கத்தின் மீது அமர்ந்துள்ளார். அசுர குருவான சுக்ராச்சாரியார் தனது பார்வையை மீண்டும் பெறுவதற்காக இங்கு சிவனை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. இடம் வெள்ளீஸ்வரர் கோயில் மயிலாப்பூர் சென்னை.

உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்

நாரதர் அளித்த சாபத்தினால் நளகூவரன் மணிக்கிரீவன் என்ற இரு தேவர்கள் மரங்களாக மாறி நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக் கொண்டே கண்ணன் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்ற போது மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது மரங்கள் வேரோடு சாய்ந்து அவைகளில் இருந்து நளகூவரன் மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றார்கள். இந்த நிகழ்வை விளக்கும் சிற்பமும் மண்டபத் தூணில் உள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.