முருகன் வயோதிக தோற்றத்தில்

வள்ளியை மணம் முடிக்க வள்ளிமலைக்கு வயோதிக வடிவில் சென்றார் முருகர். அங்கு தினைப் புனத்தில் வேடனாகவும் வேங்கை மரமாகவும் விருத்தனாகவும் வேடமிட்டு லீலைகள் பல செய்து அவளை மணம் புரிய விரும்பி காதல் மொழிகளைப் பேசினார். வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார் முருகர். அவர் யானை வடிவில் வந்து வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி வயோதிகராக வந்த முருகனை அணைத்துக் கொண்டாள் வள்ளி. இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இதனை அற்புதமாக விளக்கும் சிற்பக்காட்சி தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புற சுவற்றில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தலையுடன் அக்னிபகவான்


பஞ்சபூதங்களகளில் ஒருவரும் அட்டதிக்கு பாலகர்களில் தென்கிழக்குத் திசைக்கு உரியவரான இரண்டு தலைகள் கொண்ட அக்னிபகவான். துணைவியான சுவாகா தேவியுடன் ஆடு வாகனத்தின் மீது அமர்ந்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம்.

மானசாதேவி

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நாகராஜனான வாசுகியின் தங்கையும் ஜரத்காரு முனிவரின் மனைவியுமான மானசாதேவி. இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட்.

பிரம்ம யக்ஷன்

சாத்தனார் ஐயனார் அய்யனார் சாஸ்தா அரிகரபுத்திரன் ஐயன் பிரம்மசாத்தன் சாத்தன் சாத்தையா என்று பல பெயர்களை உடைய இவர் ஊர் தெய்வமாக வணங்கப்படுகின்றார். சமணர்களுடைய கோயில்களில் இவரை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாக சமணர்கள் இன்றும் இவரை வழிபடுகின்றனர். இடம் புஷ்பநாதர் ஜெயின் கோவில். திருப்பனமூர் திருவண்ணாமலை. காலம் 15 ஆம் நூற்றாண்டு.

வேணுகோபால்

பத்து முதல் பதினான்காம் ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்தியாவின் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய ஹொய்சாளர்களின் ஆட்சியின் போது பல கோயில்கள் கட்டப்பட்டது. இதில் ஒன்று மைசூர் அருகே உள்ள சோமநாதபுராவில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேசவா கோயில் உள்ளது. இக்கோயிலில் புல்லாங்குழல் வாசிக்கும் வேணுகோபாலனின் சிற்பம் உள்ளது.

பத்து கை வினாயகர்

பத்துக் கைகள் கொண்ட நடனம் ஆடும் விநாயகரின் சிதிலமடைந்த இந்த சிற்பம் மத்தியபிரதேசம் கஜுராஹோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

வாயு பகவான் வெவ்வேறு அவதாரங்கள்

ஒரே சிற்பத்தில் ஹனுமன் பீமன் மத்வாச்சாரியார். வெவ்வேறு யுகங்களில் வாயுபகவானின் வெவ்வேறான அவதாரங்கள். அனுமன் ஸ்ரீராமரிடமும் பீமன் கிருஷ்ணரிடமும் மத்வாச்சாரியார் வேதவியாசரிடமும் பக்தி கொண்டவர்களாக திகழ்ந்தனர். இடம் உடுப்பி கர்நாடக மாநிலம்.

அஜைக்க ஏகபாதர்

அஜ என்றால் பிறப்பில்லாதவர் என்றும் ஏகபாதர் என்றால் ஒரு காலுடையவர் என்றும் பொருள். ஒரு கால்களையுடைய இவர் பிறப்பில்லாத நிலையை அடைந்தார். இடம் பிகானேர் அருங்காட்சியகம் ராஜஸ்தான்.