ஆறுமுகன்

தமிழகத்தில் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் ஆறுமுகனை மயில் மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

முருகர் புராண சிற்பம்

முதல் இரண்டும் புவனேஸ்வரத்தில் வழிபடும் கோவில்களில் உள்ளவை. அடுத்த இரண்டும் ஒடிசா அருங்காட்சியகங்களில் உள்ளவை. காலகட்டம் ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். கையில் வேல், கழுத்தில் புலிநகம் கோர்த்த சங்கிலி. வாகனமான மயிலின் அழகு கூடிக்கொண்டே செல்கிறது. இடக்கையிலோ வலக்கையிலோ வேல். தலையின் ஜடாமுடி அலங்காரம் மிகத் தனித்தன்மை கொண்டதாக உள்ளது. சன்னவீரம் இல்லை. மூன்றில் பூணூல் உள்ளது. ஒன்றில் இல்லை.

சேனாபதி முருகர்

பிணிமுகம் என்ற யானையின் மீதேறி இருக்கும் குமரனை அர்ஜுன ரதத்தில் காண முடியும். இது தேவ சேனாபதி வடிவமாகும். தாரகன் சூரபத்மன் ஆகியோருடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும் நிலையாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

சோமாஸ்கந்தர்

மாகாபலிபுரத்தில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்று நாள் மட்டுமே. நான்காவது நாள் இளைஞனாகி விட்டான். இந்த சிற்பத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருப்பவர் மூன்று நாட்களே ஆன குழந்தை முருகப்பெருமான்.

பிரம்ம சாஸ்தா முருகர்

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு பிரமனின் படைப்புத் தொழிலைத் தான் கையிலெடுத்ததைக் காண்பிப்பதுதான் முருகனின் பிரம்ம சாஸ்தா முருகர். திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையின் காலமும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னானதே. இங்கே முருகனின் முகம் வெகுவாகச் சிதைந்துள்ளது. மார்பில் சன்ன வீரம் அணியவில்லை, ஆனால் பூணூலை நிவீதமாக வலது கைக்கு மேல் வருமாறு அணிந்துள்ளார். தலையில் வைத்துள்ள கிரீடம் முருகனைக் குறிப்பால் உணர்த்தி விடுகிறது. இடம் திருச்சி மலைக்கோட்டை. இன்னோரு முருகரின் சிற்பம் மகாபலிபுரம் திரிமூர்த்தி மண்டபத்தில் உள்ளது.

சிரித்த முகத்துடன் முருகன்

சுகாசனத்தில் வீற்றிருந்த கோலத்தில் முருகர் அருள் பாலிக்கிறார். தலையில் கரண்ட மகுடம். ஒரு கையில் அக்ஷர (அக்க) மாலை. இன்னொரு கையில் சக்தி ஆயுதம்.

சூரியன் விஸ்வகர்மாவிடம் சென்று தன் கடுமையான வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விஸ்வகர்மா சூரியனின் ஒரு சிறு பகுதியை உடைத்து சக்தி ஆயுதத்தை உருவாக்கினார். இதைக் கொண்டுதான் முருகர் மலைகளைப் பிளக்கிறார். எதிரிகளை அழிக்கிறார். முருகன் சன்னவீரம் என்ற குறுக்காகச் செல்லும் மார்புப் பட்டைகளை அணிந்திருக்கிறார். பாண்டியர்களின் கலைப் படைப்பில் உருவானது இந்த சிற்பம். இடம்: கழுகுமலை வெட்டுவான் கோவில். தூத்துக்குடி மாவட்டம்.

சங்கு சக்கரத்துடன் முருகர்

ஒருமுறை அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே அவர்களை அழிக்க சிவபெருமான் முருகபெருமானை அழைத்து அசுரர்களை வதம் செய்ய உத்தரவிட்டார். முருகர் அசுரர்களை வதம் செய்ய கிளம்பும் போது சிவபெருமானும் தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தார்கள். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்து ஆசி புரிந்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகபெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அவர் அருகில் வள்ளி தெய்வானை உள்ளனர். மயில் இடது புறமாக திரும்பி நிற்கிறது. இடம்: அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோவில். அழகாபுத்தூர் தஞ்சாவூர் மாவட்டம்.

சேனைகளின் தலைவன் முருகன்

தற்போது இருக்கும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதிகள் அக்காலத்தில் காந்தாரா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட போர்க் கோலத்தில் உள்ள முருகனின் சிலை. காலம் 2 ஆம் நூற்றாண்டு. தற்போது கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் உள்ளது.