நடனத் தோரணையில் ஒய்யாரமாக நிற்கின்ற துர்கை என்று அழைக்கப்படும் கொற்றவை. இடம் சோமேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

நடனத் தோரணையில் ஒய்யாரமாக நிற்கின்ற துர்கை என்று அழைக்கப்படும் கொற்றவை. இடம் சோமேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.
மூவுலகத்தையும் அளந்த வாமன அவதாரமெடுத்த பெருமான் மூன்றாவது அடியை எங்கு வைக்க எனக் கேட்க மகாபலிச்சர்க்கரவர்த்தி தனது தலையின் மேல் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளச் சொன்ன காட்சி. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் மயிலாடுதுறை.
மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது. மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். அவன் 12 வயதை எட்டியபோது யம தூதர்கள் மார்க்கண்டேயனை அழைத்துச் செல்ல வந்தார்கள். அவன் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை தீவிர பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தான். இதனால் அவனது உயிரை தூதர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த யமன் நேரில் வந்து மார்க்கண்டேயனைச் சுற்றி தனது கயிற்றை வீசினார். அந்த கயிறு சிவலிங்கத்தைச் சுற்றி விழுந்து மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. யமனின் இந்தச் செயல் சிவபெருமான் பக்தனைக் காக்க யமனை காலால் உதைத்தார். மஹாமிருதுஞ்சய மந்திரத்தின் சக்தியால் மார்க்கண்டேயனை சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக வந்து மரணத்திலிருந்து பாதுகாத்தார்.
மஹாமிருத்யுஞ்சய மந்திரம் என்பது மூன்று வார்த்தைகளின் கலவையாகும். மஹா என்றால் பெரியது. மிருத்யுன் என்றால் மரணம். ஜெயா என்றால் வெற்றி. மரணத்திலிருந்து பெரிய வெற்றி என்று பொருள். காலனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்த காலசம்ஹாரமூர்த்தியின் இந்த சிற்பம் கருப்பு சலவைக்கல்லால் ஆனது. இடம் பீகார்.
தன்னை சரணடைந்தவர்களின் குறைகளை அவர்கள் மனதில் நினைத்த மாத்திரத்தில் வந்து அருளும் கருணை உள்ளம் கொண்ட நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் காட்சி. தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு ஆணவம் தலைக்கேறி ஹரி என்ற கடவுள் எங்கே? என்று பிரகலாதனை துன்புறுத்த நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் கூறினான். அருகிலிருந்த தூணை இரண்யகசிபு எட்டி உதைக்க தூணில் நரசிம்மரின் பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்மரின் சிற்பம். இடம் சிகாகிரீசுவரர் கோவில் குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக சீதை தந்த கணையாழியை ராமரிடம் கொடுக்கும் அனுமன். இந்த சிற்பத்தில் ராமர் ஒரு கால் மீது இன்னோரு கால் மடக்கி வைத்து அமர்ந்திருப்பதும் தனது அம்புகளை வைக்கும் அம்பறாத்தூணியில் அம்புகள் இருப்பது தெளிவாகத் தெரியும் வண்ணம் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் திருக்கோவில். மயிலாடுதுறை மாவட்டம்.
கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்
தன்னைத்தானே அர்ச்சிக்கும் மூர்த்தி சதாசிவ வடிவமாகும். அகவழிபாடு செய்பவர்களுக்கு அவரது உடம்பே சதாசிவமாயும் சதாசிவ லிங்கமாயும் நிற்கும். உருவம் அருஉருவம் (லிங்கம்) என இரண்டு நிலைகளை பார்க்கும் வண்ணமும் அருபத்தை உணரும் வண்ணமும் இத் திருவுருவம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரிலும் அரியலூர் மாவட்டத்தில் மேலப்பழுவூரிலும் சிவலிங்கத்தைத் தோளில் சுமந்தவாறு காட்சி தரும் அரிய சதாசிவனின் சிற்பங்கள் உள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள துலிஸ்கையோ கிராமத்தில் அமைந்துள்ளது இந்த விநாயகர். இந்த 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை மூன்று மீட்டர் உயரமுடைய ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டது.
ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயிலில் ஒற்றைக்கல் தூணில் கால சம்ஹார மூர்த்தி அருள்பாலிக்கிறார். இடம் சிவகங்கை மாவட்டம் இரணியூர்.
கின்னரர் என்பவர்கள் இந்து தொன்ம இயலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும் இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச் சிலைகளும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகிறது. இடம் போரோபுதூர் கோவில். மத்திய ஜாவா மாகாணம் இந்தோனேசியா.