விஷ்ணு சிலை

பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள விஷ்ணு சிலை

மத்திய பிரதேசத்தின் உமாரியா பகுதியில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்கா புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் விஷ்ணு கிழக்குப்பக்கம் தலை வைத்து மிகவும் அமைதியான முறையில் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் சிலை 12 மீட்டர் நீளத்துடன் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விஷ்ணு படுத்த நிலையில் ஒரு காலை நீட்டிய படியும் ஒரு காலை மடக்கி வைத்தபடியும் இருக்கிறார். விஷ்ணுவின் தலைக்கு பின்புறம் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

ராமாயண இதிகாசத்தில் இந்தப் பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இலங்கை போருக்குப் பிறகு இந்த இடம் ராமரால் லட்சுமணனுக்கு பரிசளிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. புராண நூல்களின் படி திரேதா யுகம் காலத்திலிருந்தே இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காலங்களில் உள்ள நாகரிகங்களின் எடுத்துக்காட்டுகளாக நிறைய குகை ஓவியங்கள் மற்றும் பிற அடையாளங்கள் உள்ளன. பூங்காவின் உள்ளே உள்ள கோவில் கட்டமைப்புகள் அக்காலத்தில் விஷ்ணு வழிபாடுகளும் சிவலிங்க வழிபாடுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ராமாயண கதைகளின் சிற்பங்கள் மற்றும் பந்தாவதீஷ் கோவில் கருவூலம் விஷ்ணுவின் அவதாரமான வராக அவராதம் மீன் அவதாரம் ஆமை அவதாரம் ஆகிய மூர்த்திகள் உள்ளது. பூங்கா மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் ராமாயண காலத்திலிருக்கும் சிற்பங்களாக உள்ளது.

ஆதி நடராஜர்

சிவதாண்டவத்தில் உன்னதமான ஆனந்த தாண்டவம் புடைப்பு சிற்பமாக நீளம் அகலம் 40 செமீ அளவில் சிறியதாக செதுக்கப்பட்டுள்ளது. நடனமாடும் சிவனின் கையில் உடுக்கை இல்லை. காலடியில் முயலகன் இல்லை. சிவனின் இரு காதுகளிலும் ஒரே விதமான குழைகள். தீச்சட்டி இடதுகையில் இல்லாமல் வலது கையில் ஏந்தப்பட்டிருக்கிறது. எப்போதும் அவர் கழுத்தைச் சுற்றியிருக்கும் நல்லபாம்பு கழுத்தில் இல்லாமல் தனியாகத் தரையில் படம் எடுத்தபடி இருக்கிறது. இந்தச் சிறிய சிற்பத்தில் வலது புறத்தில் ஒரு சிவகணம் முக்காலியில் அமர்ந்து ஒருபக்க மேளம் ஒன்றைத் தட்டிக் கொண்டிருக்கிறார். இடம் அவனிபஜன பல்லவேஸ்வரம் கோவில் (ஸ்தம்பேஸ்வரர் கோவில்) சீயமங்கலம் திருவண்ணாமலை.

அக்கமாதேவி குகை லிங்கம்

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நல்லமலை குன்றில் அக்கமாதேவி குகைகள் அமைந்திருக்கிறது. 150 அடி ஆழம் கொண்ட சரித்திர சிறப்பு வாய்ந்த அக்கமாதேவி குகையில் இந்த லிங்கம் காணப்படுகிறது.

சதிதாண்டவமூர்த்தி

சிவபெருமான் தட்சனின் மகள் சதிதேவிதை திருமணம் செய்ததைக் கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த தன்மகள் சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தார். இதனால் சதி தேவியார் யாகத்தை அழிக்க யாககுண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார். ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு ஆட்டின் தலையை பொருத்தினார். பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். அப்போது அவர் ஆடிய ருத்ரதாண்டவமே சதிதாண்டவமூர்த்தி எனப்படுகிறது. இதனைக் கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.

இந்த அரிய சோழர்கால சிற்பம் தற்போது கேரள மாநிலம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது.