உன்னுடைய எதிரிகள் உன்னை நிந்தித்துப் பலவிதமான சொல்லத் தகாத வார்த்தைகளை கூறுவார்கள். உன் திறமையை பழிப்பார்கள். அதைவிட அதிகம் துயரம் கொடுக்கக் கூடியது வேறு என்ன இருக்கும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
உன்னுடைய எதிரிகளான கௌரவர்கள் உன்னை கோழை என்றும் மரணத்திற்கு பயந்தவன் என்றும் இதுநாள் வரை நீ தவம் செய்து யுத்தம் செய்து பெற்ற உன்னுடைய புகழை கலங்கப்படுத்தி சொல்லத் தகாத வார்த்தைகளால் பேசுவார்கள். மேலும் இதற்கு முன் நீ செய்த யுத்தம் அனைத்திலும் திறமை இல்லாதவர்களுடன் யுத்தம் செய்து வென்றிருக்கிறாய். இப்போது திறமையுள்ளவர்களுடன் யுத்தம் செய்தால் தோற்று விடுவோம் என்று பயந்து ஓடுகிறாய் என்று உனது திறமையை பழிப்பார்கள். உனது வாழ்க்கையில் இந்த தகாத வார்த்தையை விட துயரம் கொடுக்ககூடிய வார்த்தை வேறு ஒன்று இருக்காது என்று ஆகவே இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
இந்த போரில் உள்ள மகாரதர்கள் இது வரையில் உன்னை மிகவும் உயர்வாக மதித்து வந்தார்கள். இப்போது நீ யுத்தம் செய்யாமல் சென்று விட்டால் நீ பயம் காரணமாக யுத்தத்தை விட்டு சென்று விட்டாய் என்று எண்ணுவார்கள். அவர்கள் முன்பு நீ தாழ்ந்த நிலையை அடைவாய்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த குருசேத்திரப் போரில் யுத்தம் செய்வதற்காக பல மகாரதர்கள் என்று சொல்லக்கூடிய வீராதி வீரர்கள் இரண்டு பக்கமும் வந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பாக நீ செய்த யுத்தத்தில் உனது வீரத்தை பார்த்து உன்னை மிகவும் உயர்வாக மதித்து வந்தார்கள். இப்போது யுத்தகளத்திற்கு நீ வந்ததும் பாசத்தின் காரணமாக யுத்தம் செய்ய மாட்டேன் என்று திரும்பி சென்று விட்டால் உயிர் பயத்தின் காரணமாகவே நீ சென்று விட்டாய் நீ கோழை என்று உன்னை தாழ்த்திப் பேசுவார்கள். அனைவரின் முன்னிலையிலும் நீ தாழ்ந்த நிலையை அடைவாய். இது உன் உயர்ந்த நிலைக்கு சரியானது இல்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்ட காலம் உன்னைப் பற்றி நீங்காத பழியை பேசுவார்கள். பல புகழை உடைய உன்னைப் போன்றவனுக்கு இப்படிப்பட்ட அவச்சொற்கள் மரணம் போன்றது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த தர்ம யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் நீண்டகாலம் உன்னை இகழ்ந்து கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். தர்மத்தின் வழி நிற்பவன். யாராலும் செய்ய முடியாத பல மேலான தவங்கள் செய்து பல அஸ்திர சாஸ்திரம் கற்றவன். தைரியம் மிகுந்தவன் என்றெல்லாம் பெரும் புகழ் பெற்ற உனக்கு உலக மக்களின் இந்த இகழ்ச்சியான அவச் சொற்களும் பழிச் சொற்களும் மரண அவஸ்தையை கொடுக்கும். ஆகவே இந்ந பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் இந்த யுத்தத்தை செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
இந்த தர்மத்தோடு கூடிய யுத்தத்தை நீ செய்யவில்லை என்றால் அப்போது குல தர்மத்தையும் புகழையும் இழந்து பாவத்தை பெறுவாய்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இந்த தர்ம யுத்தத்தை அர்ஜூனனாகிய நீ செய்யவில்லை என்றால் இத்தனை வருடங்களாக தர்மத்தை காத்து நிற்கும் உனது குல தர்மத்தை நீ விட்டவன் ஆவாய். நீ இத்தனை நாட்கள் பல நல்ல காரியங்கள் மற்றும் பல யுத்தங்கள் செய்து சேர்த்து வைத்த புகழையும் இழந்து விடுவாய். நீ உனது கடமையில் இருந்து விலகியவன் ஆவாய். இதனால் நீ நீங்காத பாவத்தை பெறுவாய் ஆகவே யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்
அர்ஜூனா தர்ம யுத்தம் என்ற இந்த அபூர்வமான நிகழ்வு உனக்கு தானகவே அமைந்துள்ளது. இது போன்ற தர்ம யுத்தங்கள் மோட்சத்தின் கதவுகளை திறக்கவல்லவை ஆகும். இத்தகைய தர்ம யுத்தத்தை பாக்கியமுடைய ஒரு சில க்ஷத்திரர்கள் மட்டுமே பெற முடியும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
பேராசைக்காகவோ சுய நலத்திற்காகவோ அல்லது நாட்டையும் அதிலுள்ள சுகங்களையும் அடைந்து புகழ் பெற வேண்டும் என்பதற்காகவோ இந்த யுத்தத்தை பாண்டவர்களாகிய நீங்கள் செய்யவில்லை. தர்மம் நிலை பெற வேண்டும் என்று அதர்மத்திற்கு எதிரான யுத்தம் இது. இந்த யுத்தம் நீ தேடிச் சென்றோ நீ விரும்பியோ வரவில்லை. தானாகவே உனக்கு அமைந்திருக்கிறது. இந்த யுத்தத்தில் உன்னைப் போலவே பேராசைக்காகவும் சுய நலத்திற்காகவும் இல்லாமல் தர்மத்திற்காக யுத்தம் செய்து இறந்து போகும் வீரர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய தர்ம யுத்தங்கள் பாக்கியமுடைய க்ஷத்திரர்களுக்கு மட்டுமே அமையும். உனக்கு அதற்கான பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆகையால் யுத்தம் செய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
அவ்வாறே தன்னுடைய சுயதர்மம் என்று பார்த்தாலும் நீ பயப்படக்கூடாது. ஏனெனில் க்ஷத்திரியன் ஒருவனுக்கு தர்மத்தின் வழி நடக்கின்ற போரைக் காட்டிலும் வேறு ஒரு நன்மை தரும் கடமை கிடையாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இப்போது தொடங்கியுள்ள இந்த யுத்தத்தில் உயிர்களை கொல்வது என்பது தவிர்க்க இயலாது. இவ்வாறு கொல்வது அந்த உயிர்களை வதை செய்வது போன்றதாகும் என்று எண்ணி உனக்கு விதிக்கப்பட்ட கடமையை நீ விடக்கூடாது. இறப்பவர்களைப் பற்றி நீ கவலைப்படாதே. ஏனெனில் அவர்கள் இந்த உடலை விட்டாலும் வேறு உடலுக்குள் சென்று விடுவார்கள். உனது வாழ்வில் யுத்த தர்மம் என்பது க்ஷத்திரியனுக்குரிய தர்மமாகும். யுத்த தர்மத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நீ வருந்துவது உனக்கு தகாது. க்ஷத்திரியனுக்கு தர்மத்திற்காக நடைபெறும் யுத்தம் என்பது இயற்கையாகும். இந்த யுத்தங்கள் தர்மத்தை நிலைநாட்டவும் மக்களை காக்கவும் ஆகும். அதன் விளைவாக நாட்டை கைப்பற்றுதல் நிகழ்கிறது. இது தர்மமான செயலே ஆகும். க்ஷத்திரியன் ஒருவனுக்கு இப்படிப்பட்ட தர்ம யுத்தத்தை விட வேறு எதுவும் நன்மை தராது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
அர்ஜூனா எல்லோருடைய உடலிலும் இருக்கும் ஆத்மா யாராலும் கொல்ல முடியாதவன். ஆகவே இந்த உயிர்களுக்காக நீ வருத்தப்பட வேண்டாம்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
ஓரிடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு நகன்று செல்லும் உயிரினங்கள் முதல் ஒரே இடத்தில் இருக்கும் தாவரங்கள் வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் இருக்கும் உடல் மற்றும் அதன் உறுப்புகளை அழிக்க முடியுமே தவிர அதற்குள் இருக்கும் ஆத்மாவை அழிக்க முடியாது. இந்த போரில் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டாலும் அவற்றின் உடல் தான் அழிகின்றதே தவிர உடலுக்குள் இருக்கும் ஆத்மா அழிவதில்லை. ஆகவே இந்த உயிர்களுக்காக நீ வருத்தப்பட வேண்டாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
பலரில் ஒருவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்பாக பார்க்கிறான். பலரில் ஒருவர் மட்டுமே இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக பேசுகிறார். பலரில் ஒருவன் மட்டுமே இந்த ஆத்மாவைப் பற்றி வியப்பாக கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறான். அப்படி ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் அவன் ஆத்மாவைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மாட்டான்.
இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?
பலரில் ஒருவன் இந்த ஆத்மாவை வியப்பாக பார்க்கிறான் இதன் கருத்து என்ன?
உலகில் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆத்மா இருக்கிறது அது அழியாதது நித்தியமானது என்று தனது மனம் புத்தி அறிவு ஆகியவற்றால் தேடி சிந்தனை செய்து தெரிந்து கொண்டவர்கள் பலரில் ஒருவனே. தெரிந்து கொண்டதும் அவன் அதனை வியப்பாக பார்க்கிறான். அவனால் ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்று மட்டும் தெரிந்து கொள்ள முடியுமே தவிர ஆத்மாவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆத்மாவனது உணரக்கூடிய பொருள் ஆகும். அறிந்து கொள்ள முடியாதது.
இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?
பலரில் ஒருவர் இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக பேசுகிறார் இதன் கருத்து என்ன?
இந்த உலகில் உள்ள எண்ணற்ற மனிதர்களில் ஒருவர் தான் செய்யும் பெரும் தவம் காரணமாக தனது பாவங்களை முழுமையாக தீர்த்து ஞானியின் உயர்ந்த நிலையை அடைந்து ஆத்மாவை காண்கிறார். அந்த ஆத்மாவின் தன்மைகள் இது வரை உலகில் உள்ள பொருட்களின் தன்மைகளையும் தத்துவத்தையும் விட மாறுபட்டதாகவும் இதுவரை காணததாகவும் காண்கிறார். இதனை தனது சீடர்களுக்கோ அல்லது தகுதியானவருக்கோ ஆத்மாவின் தத்துவத்தை போதிக்கும் போது எத்தனை தத்துவங்களை உதாரணம் காட்டி ஆத்மாவின் தத்துவத்தை விளக்கினாலும் பரிபூரணமாக ஆத்மாவின் தத்துவத்தை விளக்கிச் சொல்ல அவரால் முடியாது. ஏனெனில் ஆத்ம தத்துவத்திற்கு இணையான வேறு தத்துவம் எதுவும் உலகில் இல்லை. ஆத்ம தத்துவத்தை சொற்களால் சொல்லி புரியவைக்க முடியாது. ஆகவே ஞானியானவர் எத்தனை உதாரணங்களை காட்டி ஆத்மாவின் தத்துவத்தை போதித்தாலும் அதனை வியப்பாகவே பேசுகிறார். ஆனாலும் அவரால் அதன் தத்துவத்தை முழுமையாக விளக்கிச் சொல்ல முடியாது. ஏனெனில் ஆத்மாவை சொற்களால் சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஆத்மா உணரக்கூடிய பொருள் ஆகும்.
இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?
ஒருவர் இந்த ஆத்மாவின் தத்துவத்தை வியப்பாக கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் இதன் கருத்து என்ன?
பலரில் ஒருவன் இது நாள் வரை தான் கண்ணால் கண்ட உடம்பும் அதன் உறுப்புகளுமே நான் என்று தெரிந்து வைத்திருக்கிறான். ஞானியின் போதனைகள் வழியாக ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அவன் தெரிந்து வைத்திருந்த அனைத்தும் அழியக்கூடியது என்றும் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த உடம்பிற்குள் அழியாத பொருளாகிய ஆத்மா என்று ஒன்று உள்ளது அது அழியாதது என்றும் அவன் ஞானியிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது வியப்புடன் கேட்கிறான்.
இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி?
ஆத்மாவை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தாலும் அவன் ஆத்மாவைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மாட்டான். இதன் கருத்து என்ன?
ஆத்மாவானது பாவங்கள் கர்மங்களை அனைத்தும் தீர்ந்த பிறகு உணரக்கூடிய பொருளாகும். அதனை கேட்டு தெரிந்து கொள்ள முடியாது.
இந்த உயிர் என்பது பிறப்பதற்கு முன்னால் தென்படுவதில்லை. இறந்த பின்னரும் தென்படுவதில்லை. இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தென்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் ஏன் அதனை நினைத்து வருந்த வேண்டும்?
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
தூங்கும் போது கனவில் தோன்றும் உருவம் தூக்கம் கலைந்ததும் போய் விடும். கனவிற்கு முன்பும் அந்த உருவம் இல்லை. கனவிற்கு பின்பும் அந்த உருவம் இல்லை. தூங்கும் காலத்தில் மட்டும் ஒரு விதமான மாயையில் அந்த உருவம் தெரியும். அது போலவே இந்த உலகத்தில் பார்க்கும் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் உயிரினங்கள் அனைவரும் பிறப்பதற்கு முன்பாக பார்க்க முடியாதவர்களாகவும் அறிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் வாழ்வதற்கு உரிய காலம் வந்ததும் அவர்களுக்கு உடல் மற்றும் அவற்றிற்கான உறுப்புகள் அனைத்தும் தோன்றுகிறது. வாழும் காலம் முடிந்ததும் அவர்களின் உடல் அவற்றின் உறுப்புகள் அனைத்தும் அழிந்து போகிறது. அதன் பிறகு அவர்களை பார்க்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வாழும் வாழ்க்கை கனவில் வரும் மாயை போன்றது. இவர்களை நினைத்து நீ வருந்த வேண்டியதில்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
இதன்படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம். இறந்தவனுக்கு பிறப்பு நிச்சயம். இந்த நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது ஆகும் இதற்காக நீ வருந்துதல் தகாது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மண்ணை வைத்து பானை செய்து உபயோகப்படுத்தலாம். பானை உடைந்தால் மீண்டும் அது மண்ணோடு மண் ஆகிறது. அந்த மண்ணில் மீண்டும் புதிய பானை செய்யலாம். அது போல் இறப்பு பிறப்பு என்பது எப்போதும் இருக்கும் ஒரு பொருளின் நிலை மாறுபாடே ஆகும். இந்த உலகத்தில் பிறந்தவைகள் அனைத்தும் இறப்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதே போன்று இறந்தவைகள் அனைத்தும் மீண்டும் பிறப்பது உறுதி. இறப்பு பிறப்பு என்ற சுழற்சி தவிர்க்க முடியாதது இது இயற்கையாகும். ஆகவே அர்ஜூனா நீ வருத்தப்படாதே என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.