கந்தபுராணம் பகுதி-25

சூரபத்மன் போர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில் அவனது மனைவி பத்மகோமளாவும் மகன் பானுகோபனும் வந்தனர். தந்தையின் மனநிலையை அறிந்த பானுகோபன் அப்பா நீங்கள் செய்தது கொஞ்சம் கூட முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை நான் அந்த முருகனிடம் ஆயுதங்களை இழந்து திரும்பினேன் என்பதற்காக என் வீரத்தை நீங்கள் குறைத்து எடை போட்டு விட்டீர்கள் போலும் நானும் சிறுவன் அந்த முருகனும் சிறுவன். நாங்கள் போட்டியிட்டு யார் தோற்றாலும் அவமானம் வரப்போவதில்லை. அங்கே வீரம் மட்டுமே பேசப்படும். நீங்கள் அப்படியா அண்டசராசரத்தை அடக்கியாளும் சக்கரவர்த்தியான நீங்கள் அந்த முருகனை வென்றால் ஒரு சிறுவனை வென்று விட்டதாக சூரன் கொக்கரிக்கிறான் என்றும் தோற்றுப்போனால் கேவலம் ஒரு சிறுவனிடம் போய் சூரன் தோற்றானே என்றும் தான் உலகம் பழிக்கும். எப்படிப்பார்த்தாலும் அது உங்களுக்கு அவமானத்தையே தேடித் தரும். கவலைப்படாதீர்கள் மீண்டும் நான் போகிறேன். அந்தச் சிறுவனை தூக்கி வந்து உங்கள் காலடியில் போடுகிறேன். அவனை ஒழித்து விடுங்கள். அந்த முருகன் இருக்கும் தைரியத்தில் திமிர்பிடித்து அலையும் பிரம்மாவையும் விஷ்ணுவையும் சிறையில் தள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஆவேசமாக சிரித்தான்.

பத்மாசுரன் அவனது வீரம் பொங்கிய பேச்சால் மகிழ்ந்தாலும் அன்புச் செல்வமே பானுகோபா நீ நினைப்பது போல் அந்த வடிவேலனை ஜெயிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவனை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். வேண்டுமானால் அவனுக்கு வலது கையாக இருக்கிறானே ஒரு தூதன் வீரபாகு அவனைப் பிடித்துக் கொண்டு வா என்றான் வீராப்புடன். பானுகோபன் தலையசைத்தான். ஒரு நொடியில் வருகிறேன் தந்தையே என்றவன் தாய் கோமளாவிடம் ஆசி பெற்று புறப்பட்டான். வீரபாகுவும் சாதாரணமானவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். அவனை வெற்றி கொள்ள சாதாரண அஸ்திரங்கள் போதாது. அவனை மயங்க வைத்து விட்டால் கட்டி வைத்து தந்தை முன் கொண்டு வந்து போடலாம் என்று எண்ணத்தில் தன் பாட்டி மாயையை நினைத்தான். இவள் காஷ்யப முனிவரின் மனைவியாக இருந்து அசுரகுலத்தை உருவாக்கியவள். சூரபத்மனின் தாய். பானுகோபன் நினைத்த மாத்திரத்தில் பாட்டி மாயை அவன் முன்னால் வந்தாள். பானுகோபா என் செல்லப் பேரனே வீரத்திருமகனே எதற்காக என்னை அழைத்தாய். என் அன்பு பேரனுக்காக எதையும் தருவேன் என்றாள்.

பானுகோபன் அவளிடம் எங்கள் குலத் தலைவியே என்னருமை மூதாட்டியே அசுரர் குலத்துக்கு முருகன் என்பவனால் ஆபத்து வந்துள்ளது. அவனது தூதனாக வந்த வீரபாகுவை கட்டியிழுத்து வரும்படி தந்தை கட்டளை இட்டிருக்கிறார். நீங்கள் தான் அசுர குலத்திற்கு வித்திட்டவர்கள். அந்த தேவர் படையை வெல்லும் ஆலோசனையும் ஆயுதமும் தந்தால் அவனைப் பிடித்து விடுவேன் என்றாள். பானுகோபா உங்களால் தேவர்களை வெல்ல முடியாமல் போனதற்கு காரணம் உண்டு. பிரம்மாவையும் விஷ்ணுவையும் அதிகமாக கொடுமைப்படுத்தி இருக்கிறீர்கள். அப்படியாக நிலையில் அவர்களை வெல்வது என்பது சாத்தியமல்ல இருந்தாலும் முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான் என்ற விதிகளின் அடிப்படையில் உனக்கு ஒரு அபூர்வமான ஆயுதத்தை தருகிறேன். இந்த மோகனாஸ்திரத்தை எய்தால் யாராக இருந்தாலும் மயங்கி விடுவார்கள். அந்த நிலையில் அவர்களை கட்டி இழுத்துப் போக வசதியாய் இருக்கும். வெற்றி உனதே என்று வாழ்த்தி பேரனை உச்சிமுகர்ந்து அஸ்திரத்தை கொடுத்து விட்டு மறைந்து விட்டாள். பானுகோபன் மகிழ்ச்சியுடன் சென்றான். முருகப்பெருமான் வீரபாகுவை அழைத்தார். வீரபாகு உன்னைத் தேடி சூரனின் மகன் பானுகோபன் வருகிறான். அவனை வெற்றி கொள்வது உனது கடமை. அவனிடம் உன்னை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் இருக்கிறது. நீ அதற்கு கட்டுப்பட்டால் அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் என்னிடம் இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம். போய் வா இம்முறை வெற்றிக்கனி உனக்குத்தான் என வாழ்த்தி வழியனுப்பினார். முருகனின் வாயாலேயே வெற்றி என சொன்ன பிறகு வீரபாகு அவரது தாழ்பணிந்து வணங்கி புறப்பட்டான். சேனைகள் அணிவகுத்துச் சென்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.