கந்தபுராணம் பகுதி -3

அந்த அன்பான வருடலில் ஆறுதல் பெற்று திரும்பினார் காஷ்யபர். அங்கே அவரது தந்தை பிரம்மா நின்று கொண்டிருந்தார். காஷ்யபா இதென்ன கோலம் மன்மதனின் இலக்குக்கு தப்பியவர்கள் யாருமுண்டோ? நீயும் அவ்வாறே சிக்கினாய். நடந்ததைப் பற்றி கவலைப்படுவதில் என்றுமே பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கேள். இந்த தந்தையின் சொல்லை மதித்து நட. நீ காம வயப்பட்டு உலகத்திற்கே கேடு இழைத்து விட்டாய். உன்னால் அசுரகுலம் தழைத்து விட்டது. இந்தப் பாவத்தைப் போக்க சிவபெருமானால் தான் முடியும். இந்த பாவ விமோசனத்திற்காக அவரைக் குறித்து கடும் தவம் செய் புறப்படு என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். காஷ்யபரும் ஒருவாறாக தன்னைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு போய் விட்டார்.

அன்னை மாயையால் தூண்டி விடப்பட்ட பத்மாசுரன் உள்ளிட்ட இரண்டு லட்சம் அரக்கர்களும் ஆராவாரக்குரல் எழுப்பியபடி அன்னை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். எதிரே சுக்ராச்சாரியார் வந்து கொண்டிருந்தார். அசுரர்களின் குருவாக இருந்தாலும் இப்படி சிங்கம், ஆடு, யானைத் தலைகளைக் கொண்ட அசுரர்களை அவர் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இவ்வளவு கொடூரமான குரல்களையும் கேட்டதில்லை. அவரே சற்று ஆடிப்போய் விலகி நின்றார். அப்போது பத்மாசுரன் அவரிடம் நீங்கள் யார்? எங்களைக் கண்டு ஏன் ஒதுங்கி நிற்கின்றீர்கள்? என்று உறுமல் குரலுடன் கேட்டான். சுக்ராச்சாரியார் நடுங்கியபடியே அடேய் நீங்கள் யார்? அசுர சிங்கங்களா? என்றார். ஆம் நாங்கள் அசுரர்கள் தான். ஏன் எங்களைப் பற்றி விசாரிக்கின்றீர்கள்? என்ற சூரபத்மனிடம் அடேய் சீடர்களே நான் தான் உங்கள் குலத்திற்கே குரு. அசுரேந்திரனின் மகள் மாயாவின் பிள்ளைகள் தானே நீங்கள்? என்றார் சந்தேகத்துடன். பத்மாசுரன் ஆம் என்றான். குருவே தங்களைக் கண்டது எங்கள் பாக்கியம். எங்களை ஆசிர்வதியுங்கள் என்றான். இரண்டு லட்சம் சூராதி சூரர்களும் அசுர குருவிடம் ஆசிபெற்றனர்.

பின்னர் சில மந்திரங்களை சூரபத்மனுக்கு உபதேசித்தார். அவை அவர்களுக்கு பலமளிக்கும் மந்திரங்கள் பின்னர் அவர்களிடம் விடை பெற்று புறப்பட்டார். புதிய சக்தி பெற்ற சூரர்கள் இன்னும் வேகமாக நடந்து வடத்வீபம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கே யாகமாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பத்தாயிரம் யோஜனை பரப்பில் யாகசாலை அமைக்கப்பட்டது. இக்கால அளவுப்படி ஒரு யோஜனை என்றால் 8 மைல் (12.8 கி.மீ). அதாவது ஒரு லட்சத்து 28 ஆயிரம் கி.மீ பரப்பில் இதை அமைத்தான். யாகமாலையின் நடுவில் ஆயிரம் யோஜனை சதுரமும் ஆழமும் கொண்ட யாக குண்டத்தை அமைத்தான். அதைச் சுற்றி இதே அளவில் 108 அக்னி குண்டங்களையும் அதையும் சுற்றி ஓரளவு சிறிய அளவில் 1008 குண்டங்களையும் நிர்மாணித்தார். இப்பணி முடியுவும் இவர்களின் தாய் மாயா யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்தாள். அதில் கற்பூரத்தில் குருந்து எருமைகள், ஆடுகள், லட்சம் பசுக்கள் உள்ளிட்ட அனைத்தும் அடக்கம் இந்த பொருட்கள் இருந்த தூரம் மட்டும் 3 ஆயிரம் யோஜனை பரப்பு இருந்தது. இந்த பொருட்களெல்லாம் அக்னி குண்டத்தில் ஹோமப் பொருட்களாக போடப்பட்டன. யாகம் செய்ய ஆரம்பித்தனர். உண்ணாமல் உறங்காமல் பத்தாயிரம் வருஷங்கள் சிங்கமுகன் 108 குண்டங்களிலும் தாரகாசுரன் 1008 குண்டங்களிலும் யாகத்தை நடத்தினர். அந்த பரமேஸ்வரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. பத்தாயிரம் ஆண்டும் கடந்து விட்டது. பத்மாசுரன் எழுந்தான். தன்னைத் தானே வெட்டிக் கொண்டு அந்த ரத்தத்தை அக்னி குண்டத்தில் பொழிந்தான். அதைப் பார்த்த தாரகாசூரனும் சிங்கமுகனும் அவ்வாறே செய்தனர். சிங்கமுகன் ஒரு படி மேலே போய் தன் தலையை அறுத்து குண்டத்தில் போட்டான். தேவர்கள் மகிழ்ந்தார்கள். சிங்கமுகன் தொலைந்தான் என்று.

ஆனால் புதுப்புது தலைகள் முளைத்தன. அவற்றைத் தொடர்ந்து வெட்டி அக்னி குண்டத்தில் அவன் போட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். எதற்கும் பரமேஸ்வரன் அசைந்து கொடுக்காதைதைக் கண்டு கோபித்த சூரன் சிவபெருமானே என் பக்தி நிஜமானதென்றால் என்னையே ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி யாக குண்டத்திற்குள்ளேயே குதித்து உயிர் விட்டான். அண்ணனின் துயர முடிவு கண்டு ஏராளமான அசுரர்களும் ஆங்காங்கே இருந்த குண்டங்களில் குதித்தனர். சிங்கமுகன் அக்னி குண்டத்தில் குதிக்கப் போன வேளையில் ஒரு முதியவர் அங்கே வந்தார். மக்களே நீங்களெல்லாம் யார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார் சிங்கமுகன் அவரை வணங்கி தங்களைப் பார்த்தால் அந்த சிவனே வந்து விட்டதாகத் தோன்றுகிறது. முதியவரே நாங்கள் காஷ்யபரின் புதல்வர்கள் அசுர சகோதரர்கள் பரமேஸ்வரனிடம் வரங்கள் பெற இங்கே யாகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாண்டுகள் கடந்தும் அவர் வரவில்லை. நானும் சாகப் போகிறேன் என்றான். அதற்கு முதியவர் கவலை வேண்டாம் மகனே நீங்கள் நினைத்தது இப்போதே நடக்கப் போகிறது. பரமசிவன் வரும் காலம் நெருங்கி விட்டது என்றார். சற்றே தலை குனிந்து முதியவராய் வந்தவர் வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. முதியவராக வந்து கங்கையைச் சிந்தி யாக குண்டத்தை அணைத்தார் சிவபெருமான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.