இமயமலையில் பனியில் அக்குழந்தை உறைந்து இறந்துவிடும் என ராவணன் நினைத்தான். ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் சொல்லப்பட்டு மிதிலை நகரை அடைந்து அங்கு ஆற்றங்கரையோரம் மண்ணில் புதைந்தது. மிதிலையை ஆட்சி புரிந்தவர் ஜனகர். மகப்பேறு வேண்டி தங்க கலப்பையால் வேதமந்திரம் சொல்லி நிலத்தை உழுத பொழுது ராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. அப்பெட்டியில் மகாலட்சுமி போல் குழந்தை இருந்தது. குழந்தையை பார்த்து மகிழ்ந்த பூமாதேவியின் அம்சமாக அக்குழந்தைக்கு சீதை என்று பெயர் சூட்டினார். சில மாதங்கள் கழித்து ஜனகருடைய மனைவி சுநைனா கருவுற்று ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பெயர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு இரண்டு பெண்கள் பிறந்தார்கள். அவர்களுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்று பெயர் சூட்டினார்கள்.
ஒருநாள் நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சீதை வீசிய பந்து ஜனகர் பூஜை செய்யும் சிவன் வில்லின் அடியில் மாட்டிக் கொண்டது. ஊர்மிளை பந்தை எடுத்துப் போடு என்றாள் சீதை. அக்கா பந்து சிவ வில்லின் கீழ் அகப்பட்டுக் கொண்டது. இதை அறுபதினாயிரம் பேர் சேர்ந்து தான் தூக்கமுடியும் என்றாள் ஊர்மிளை. ஒர் பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேர் வேண்டுமா என்று கூறி கொண்டு அன்னம்போல் நடந்து சென்று தன் இடது கையால் வில்லை எடுத்து மூலையில் வைத்துவிட்டுப் பந்தை எடுத்தாள். ஆனால் வில்லை பழையபடியே எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள் சீதை. மறுநாள் ஜனகர் காலையில் பூஜை செய்ய வந்தபோது வில் மேடையில் இல்லாமல் மூலையில் வைத்து இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனே சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை என்றும் சீதை தன் தங்கையுடன் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் என்று கூறினான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சீதை, அப்பா நான் தான் வில்லை எடுத்து வைத்தேன் என்றாள். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்று கூறிவிட்டு வில்லை இடது கையால் எடுத்து இருந்த இடத்தில் வைத்துவிட்டாள்.
ஜனகருக்கு இந்த நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய இந்த வில்லை ஐந்து வயது சிறுமியான சீதை எவ்வித இடர்பாடுகள் இன்றி தன் இடது கையால் எடுத்து வைத்து விட்டாளே. இந்தப் பெண்ணை யாருக்கு திருமணம் செய்து கொடுப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார். வில்லை வளைத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து தருவதாகப் பிரகடன் செய்தார். பலர் வந்து முயன்றும் வில்லை வளைக்க முடியாமல் தோல்வியுற்றார்கள். சீதையின் திருமணம் மங்களகரமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார் ஜனகர்.
இந்த யாகம் இனிது நடைபெற்று முடிந்தமையால் இப்போது சுயவரம் நடக்கும் யார் இந்த வில்லை முறிக்கின்றீர்களோ அவர்களுக்கே சீதையை மணமுடித்து கொடுப்பதாக ஜனகர் சபையில் அனைத்து மன்னர்கள் முன்னிலையில் அறிவித்தார்.




