ராமாயணம் பால காண்டம் பகுதி -29

பரசுராமர் கூறியதை கேட்ட தசரதர் தாங்கள் உலகையே வெல்லும் வலிமையுள்ளவர். ராமனோ சிறு பாலகன். ராமன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து அருளுங்கள். ராமன் உங்களுடன் போரிட்டு உங்களால் கொல்லப்பட்டால் ராமருடன் இல்லாத இந்த உலகத்தில் நான் என் உறவினர்களும் உயிருடன் இருக்க மாட்டோம். என்று பரசுராமரிடம் கேட்டுக்கொண்டார்.

தசரதர் கூறிய எதையும் கேட்காத பரசுராமர் ராமரிடமே பேசினார். உலகில் யாராலும் அழிக்க முடியாத இரண்டு வில் இருந்தது. ஒன்று சிவனுடைய வில் இரண்டாவது விஷ்ணுவின் வில். நீ துருப்பிடித்து போன சிவ வில்லை உடைத்து அனைவரிடமும் வீராதிவீரன் என்று பெயர் பெற்றுவிட்டாய். உனக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். நான் கொண்டு வந்திருக்கும் விஷ்ணுவின் வில்லான இந்த வில்லை வளைத்து நாண் ஏற்றி வீரன் என்று நிருபித்துக்காட்டு இல்லையேல் என்னுடன் போர் புரிந்து உன் வீரத்தைக்காட்டு. இரண்டில் ஒன்றை நீ செய்தே ஆகவேண்டும் இல்லையேல் இங்கிருக்கும் அனைவரையும் அழித்து விடுவேன் என்று கோபத்தோடு கூறினார். பரசுராமர் கூறியதை கேட்ட தசரதர் ராமருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி மயக்கமடைந்தார்.

ராமர் பரசுராமரை பார்த்து நீங்கள் அந்தணர் என்ற காரணத்தால் உங்களை வணங்குகின்றேன். உங்களிடம் இருக்கும் விஷ்ணுவின் வில்லை தாருங்கள் என்று வாங்கிய ராமர் அதனை வளைத்து நாண் எற்றினார். இப்பொழுது நாண் ஏற்றிவிட்டேன் நாண் எற்றி விட்டால் அம்பை அனுப்பியே ஆக வேண்டும் என்னுடைய இலக்கு என்ன சொல்லுங்கள் இப்போதே இலக்கை கூறிவைக்கின்றேன் என்றார் ராமர். இதனை கண்ட பரசுராமர் தங்களின் வீரத்தை ஏற்றுக்கொள்கின்றேன் என்னை மன்னியுங்கள் என்றார் பரசுராமர். அதற்கு ராமர் நான் உங்களை மன்னித்தாலும் இந்த விஷ்ணுவின் வில் மன்னிக்காது. வில்லில் நாண் ஏற்றிவிட்டேன். இதற்கு சரியான இலக்கை சொல்லுங்கள் என்றார். ராமா தாங்கள் யார் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். அம்பை என்னுடைய அகங்காரத்தின் மீது விடுத்து அழித்துவிடுங்கள். என்னுடைய அகங்கார தவவலிமை அனைத்தும் அழியட்டும் என்றார்.

ராமர் அம்பை விட்டு பரசுராமரின் அகங்கார தவவலிமைகள் அனைத்தையும் அழித்தார். அகங்காரம் அனைத்தும் அழிந்த பரசுராமர் ராமரை வணங்கி அவருக்கு ஆசி கூறிவிட்டு தவம் செய்ய சென்றுவிட்டார். ராமர் தசரதரின் மயக்கத்தை தெளிவித்து பரசுராமர் சென்று விட்டார். ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறினார். பரசுராமரை ராமர் வெற்றி பெற்றுவிட்டார் என்று எண்ணி மகிழ்ச்சியடைந்த தசரதர் ராமரை கட்டி அணைத்தார். அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.