ராமாயணம் பால காண்டம் பகுதி -6

ராமன் நான்கு சகோதரர்களிலும் தர்மத்தை கடைபிடிப்பதில் மூத்தவனாக இருக்கிறான். இவன் மீது மிக அதிகமாக பிரியம் வைத்திருக்கிறேன். நான் எப்படி இந்த குழந்தையை தருவேன் என்று மீண்டும் மீண்டும் அனுப்ப மறுத்து யாகத்தை பாழ்படுத்த நினைக்கும் மாரீசன் சுபாகு என்ற அரக்கர்கள் யார் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கேட்டார். அவர்கள் ராவணனுடைய ஆட்கள் என்று விஸ்வமித்ரர் சொன்னதும் அப்படியென்றால் நான் ராமனை நிச்சயம் அனுப்பமாட்டேன் என்று உறுதியாக கூறினார் தசரதர். இதை கேட்ட விஸ்வாமித்ரர் உன்னுடைய ரகு குலத்தை பற்றி கூறுகிறேன் கேள் என்று சொல்லி ஆரம்பிக்கிறார்.

கௌத்ஸர் என்று ஒரு ரிஷி தனது குரு குல கல்வி முடிந்தவுடன் தனது குருவான வரதந்துவிடம் தங்களுக்கு குரு தட்சணை என்ன தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு குரு நீ நன்றாக படித்தாய் அதுவே எனக்கு திருப்தி அதுவே போதும் என தட்சணை வாங்க மறுத்து விட்டார். அனால் கௌத்ஸர் தன் குருவிடம் தாங்கள் எதுவேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். குருவும் பதினான்கு கோடி வராகன் கொண்டுவா என்று ஒரு வார்த்தை கூறிவிட்டார். உடனே கௌத்ஸர் ரகு மகாராஜாவிடம் கேட்கலாம் என்று வருகிறார். இந்த ரகு மகாராஜா அப்பொழுது தான் உலகத்தையெல்லாம் வெற்றி கொண்டு விஸ்வஜித் என்கிற யாகம் செய்து வெற்றி கொண்ட அனைத்து செல்வத்தையும் தானம் செய்துவிட்டார். அவரிடம் எதுவும் இல்லை. அதனை கண்ட கௌத்ஸர் திரும்ப செல்ல முனைந்தார். இதனை கண்ட ரகு மகராஜா அவரிடம் என்ன வேண்டும் தங்களுக்கு அரண்மனை வரை வந்துவிட்டு திரும்ப செல்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு கௌத்ஸர் எனக்கு பதினான்கு கோடி வராகன் எனக்கு தேவைப்படுகிறது அதை தங்களிடம் யாசிக்கலாம் என்று வந்த பொழுது தாங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டீர்கள் என்பதை அறிந்து திரும்பப் போகிறேன் என்கிறார்.

அதற்கு ரகு மகாராஜா இன்று ஒருநாள் இங்கு தங்குங்கள் நான் நாளை நீங்கள் கேட்டதை தருகிறேன் என்று கூறி கௌத்ஸரை தங்க வைக்கிறார். நாளை நாம் குபேரனை படையெடுப்போம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உறங்க சென்றார். இதனை அறிந்த குபேரன் ரகு மகாராஜா படையெடுத்தால் அவரை எதிர்ப்பது கடினம். இந்திரனுடைய வஜ்ராயுதமே ரகுவை ஒன்றும் செய்யமுடியவில்லை நாம் என்ன செய்ய முடியும் என்று பதினான்கு கோடி வராகனுக்கு மேலாகவே இரவோடு இரவாக ரகுவின் கஜானாவில் மழையாக பொழிந்துவிட்டார். அடுத்த நாள் காலையில் இதை அறிந்த ரகு மகாராஜா கௌத்ஸரிடம் இவை எல்லாவற்றையும் எடுத்துகொள்ளுங்கள் என்று வேண்டினார். அதற்கு கௌத்ஸர் இவை அனைத்தும் எனக்கு வேண்டாம் நான் கேட்ட பதினான்கு கோடி வராகன் மட்டும் எனக்கு போதும் அதனை என் குருவிற்கு தரவேண்டும் என்று அதனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். தன்னிடம் இல்லாத போதும் ரகு மகாராஜா கேட்டதை கொடுத்தார். நீயோ என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு நான் கேட்ட ராமனை கையில் வைத்துக்கொண்டு தர மறுக்கிறாய். உன்னுடைய ரகு குலத்தில் பிறந்த உனக்கு இது அழகா நான் வருகிறேன் என்று கோபமுடன் புறப்பட்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.