பானுகோபனும் வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு புரிந்து விட்டது. எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான் அதிபயங்கர யுத்தம் நடந்தது. எங்கும் நெருப்பு பிடித்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. வெப்பத்தின் உக்கிரத்தில் கடலே வற்றிவிடும் போல் தோன்றவே. சமுத்திரராஜன் கலங்கி நின்றான். இந்த உலகத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என தேவர்களெல்லாம் முருகனிடம் சென்று வேண்டினர். அவர் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். இதே நிலை தான் சூரபத்மனுக்கும். இந்த அதிபயங்கர நெருப்பு உலகத்தையே அழித்து விட்டால் அதில் சிக்கி எல்லோருமே இறந்து விடுவோம். என்னாகப் போகிறதோ என நடப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.
இந்த நேரத்தில் அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால் எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன் வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை எய்தான். அது அதிவேகமாகப் பாய்ந்து வந்தது. அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான். வீரபாகு மூர்ச்சையான விபரம் முருகனுக்கு தெரிய வரவே அவர் கோபத்துடன் தன் வேலாயுதத்தை கடல் மீது வீசி எறிந்தார். அது கண்டு கடலரசன் நடுங்கினான். அந்த வேல் மோகனாஸ்திரத்தின் பிடிக்கு அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எல்லாரையும் விடுவித்தது.
கடலின் மேல்மட்டத்திற்கு வந்த பூதகணங்களும் வீரபாகுவும் முருகனை வணங்கினர். தன்னை மடக்கிப்பிடித்த பானுகோபனை அழிப்பேன். அல்லது தீக்குளித்து இறப்பேன் என வீரபாகு சபதம் செய்தான். பானுகோபன் வெற்றிக்களிப்பில் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு தூதுவன் வேகமாக வந்து வீரபாகு மீண்டும் தப்பி விட்டதைச் சொன்னான். அப்போது சூரனின் மகன் இரண்யன் வந்தான். தந்தைக்கு நல்ல புத்தி சொன்னான். சிவனால் தான் நாம் இவ்வளவு பாக்கியம் அடைந்தோம். அந்த சிவ மைந்தனையே அழிக்க துடிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. மேலும், அவனை அழிக்கவும் முடியாது. இந்த முயற்சியில் நம் அசுரகுலம் அழிந்து விடும் என எச்சரித்தான். பத்மாசுரனோ பெற்ற மகன் மீதே எரிச்சல்பட்டான். இப்படியெல்லாம் பேசினால் அவனை விழுங்கி விடுவதாகச் சொன்னான். இரண்யன் வேறு வழியின்றி வீரபாகுவை எதிர்த்துச் சென்றான். ஆவேசமாகப் போரிட்டான். ஆனால் தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்கு அடியில் மீன் வடிவில் ஒளிந்து கொண்டான். அடுத்து சூரனின் இன்னொரு மகனும் பத்ரகாளியின் பக்தனுமான அக்னிமுகன் போருக்கு கிளம்பினான். அக்னிமுகன் வீரபாகுவுடன் கடுமையாக மோதினான். முடிவில் அவனும் விண்ணுலகையே அடைந்தான்.