பீமனுடைய மைந்தன் கடோத்கஜன் கௌரவ படைகளை அழிப்பதில் தனது கவனம் முழுவதையும் செலுத்தினான். பொழுது புலர்வதற்கு முன்பாக கௌரவ படைகள் அனைத்தையும் அவன் ஒருவனே அழித்து விடுவான் போலிருந்தது. கடோத்கஜனை எதிர்த்து கர்ணன் சீற்றத்தோடு போர் புரிந்தான். கடோத்கஜன் கையாண்ட மாய விசித்திரமான போர் முறைகளை சமாளிக்க கர்ணனால் இயலவில்லை. விதவிதமான ஆயுதங்களை கடோத்கஜன் மீது பிரயோகித்தான் கர்ணன். கடோத்கஜன் விதவிதமான வடிவங்களை எடுத்து அந்த ஆயுதங்களை பயனற்றவைகள் ஆக்கினான். கடோத்கஜன் ஒரு வேளை தரையில் தென்பட்டான். அடுத்த நொடி பொழுதில் அவன் வானத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு வேளை கண்ணுக்கு தென்பட்டான். அடுத்த வேளை அவன் இருக்குமிடம் தெரியாது தன்னை மறைத்துக் கொண்டான். இந்த மாய வேலைகளுக்கிடையில் அவனது ஆயுதங்கள் கௌரவர்களை அழித்து கொண்டிருந்தது. கடோத்கஜனை கொல்லாவிட்டால் தங்கள் படைகள் அனைத்தும் அது விரைவில் அழிந்து போகும் என்ற குரல் சேனை தலைவரிடம் இருந்து கிளம்பியது.
கடோத்கஜனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான். படை வீரர்கள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்த துரியோதனன் கர்ணனிடம் இந்திரனிடம் இருந்து பெற்றிருந்த சக்தி அஸ்திரத்தை பயன்படுத்துமாறு வேண்டினான். கர்ணன் அதை தான் அர்ஜூனனுக்காக வைத்துள்ளதாகவும் அந்த அஸ்திரம் இல்லாமலே கடோத்கஜனை தன்னால் கொல்ல முடியும் என்று கூறினான். துரியோதனனுக்கு பயம் மேலிட்டதால் அவன் மீண்டும் கர்ணனிடம் சக்தி அஸ்திரத்தை பயன்படுத்துமாறு வற்புறுத்தினான். தன் நண்பனால் கட்டாயபடுத்தப்பட்ட கர்ணன் வேறு வழியின்றி தன் சக்தி அஸ்திரத்தை எடுக்க முடிவு செய்தான். சக்தி அஸ்திரம் மிகவும் வலிமையானது. அந்த சக்தி அஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த முடியும். பயன் முடிந்தவுடன் அது மீண்டும் இந்திரனிடமே சென்று விடும். அதை அர்ஜூனனைக் கொல்ல கர்ணன் இந்த அஸ்திரத்தையே முழுமையாக நம்பியிருந்தான்
சக்தி அஸ்திரத்தை தன் வில்லில் பூட்டி கடோத்கஜனை இலக்காக குறிவைத்து அஸ்திரத்தை விடுத்தான் கர்ணன். காற்றை கிழித்து கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தது சக்தி அஸ்திரம். தனக்கு வரப்போகும் ஆபத்தை கடோத்கஜன் அறிந்து கொண்டான். ஆகவே ஒரு பெரிய மலையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு வானத்தில் மேல்நோக்கி போய் நின்றான். சக்தி அஸ்திரம் இலக்கு தவறாமல் கடோத்கஜனின் நெஞ்சை பிளந்து தான் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்துவிட்டு இந்திரனிடம் திரும்பி சென்றது. சக்தி அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட கடோத்கஜன் கௌரவப்படைகள் மீது விழுந்தான். கடோத்கஜன் எடுத்திருந்த மிகப்பெரிய மலையின் வடிவம் கௌரவர்களுடைய ஒரு அக்ஷௌஹினி படையை நசுக்கி விட்டது. ஒரு அக்ஷௌஹினி படை அழிந்ததுடன் தங்கள் கூட்டம் தப்பித்துக்கொண்டது என்று கௌரவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இனி எப்படி அர்ஜூனனைக் கொல்வது என்ற கவலையில் மூழ்கினான் கர்ணன். பாண்டவர்களோ பதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும் பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர். அர்ஜுனன் காப்பாற்றப் பட்டான் என்று கிருஷ்ணர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சி அடைந்தார். இந்த அளவில் இழப்புகள் போதும் என்று உணர்ந்த கிருஷ்ணர் சங்கை முழங்கினார். சங்கு முழங்க பதினான்காம் நாள் இரவு போர் முடிந்தது.