வேதமந்திரங்களுடன் யாகம் துவங்கியது. முனிவர்கள் பலர் யாகத்திற்கு வேதமந்திரங்கள் சொல்லியும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை தந்தும் உதவினார்கள். யாக யாலையின் வடக்கு பக்கம் ராமரும் தெற்கு பக்கம் லட்சுமனனும் காவல் காத்து நின்றார்கள். ஐந்து நாட்கள் யாகம் சிறப்பாக சென்றது. ஆறாம் நாள் வானத்தில் கர்ஜனையுடன் மேக்கூட்டம் வருவது போல் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தாடகையின் மைந்தர்கள் மாரீசன் சுபாகு தலைமையில் அரக்கர்கள் கூட்டம் வந்தது. வந்தவர்கள் ஒன்று சேர்ந்து மாமிச துண்டுகளையும் கல்லையும் மண்ணையும் போட்டு யாகத்தை பாழ்படுத்த முனைந்தார்கள். ராமர் தனது அம்பினால் சரக்கூடம் ஒன்று கட்டி தீய பொருட்கள் ஏதும் யாகத்தில் விழாதவாறு பாதுகாத்தார். ஆக்னேய அஸ்த்திரத்தால் சுபாகுவை கொன்றார். மானவாஸ்த்ரம் என்ற அஸ்திரத்தை மாரீசன் மீது எய்தார். அந்த அம்பு மாரீசனை குத்தி கடலில் தூக்கி எரிந்தது. பல அரக்கர்கள் ஓடி ஒளிந்தார்கள். எதிர்த்தை அனைத்து அரக்கர்களையும் கொன்று யாகத்தை முழுமையாக ராமரும் லட்சுமனனும் காத்தார்கள். ஆறு நாட்கள் நடந்த யாகம் இனியாக நிறைவேறியது.
ராமரும் லட்சுமனனும் தங்களுக்கு கொடுத்த கடமையை சரியாக செய்து முடித்து விட்டார்கள். விஸ்வாமித்ரரிடம் சென்று யாகத்தை காத்து விட்டோம் என்று சொல்லி ராமரும் லட்சுமனனும் தங்கள் வணக்கத்தை தெரிவித்தார்கள். எல்லா உலகையும் தனக்குள் வைத்திருக்கும் கடவுளாகிய உனக்கு இந்த யாகத்தை காத்ததில் வியப்பேதும் இல்லை என்று சொல்லி ராமலட்சுமனர்களை விஸ்வாமித்ரர் வாழ்த்தினார்.
விஸ்வாமித்ரர் ராமரிடம் மிதிலாபுரி என்ற சிறப்பு மிக்க பட்டினத்தை ஜனகர் ஆட்சி செய்து வருகிறார். கல்வியில் மேன்மைமிக்கவராக திகழ்பவர். அவர் பண்பாட்டில் சிறந்த யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் அதிசயிக்கத்தக்க வில் ஒன்று வைத்திருக்கின்றார். யாகத்தை ஒட்டி சில நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். நிகழ்ச்சிக்கு பல நாட்டு ராஜகுமாரர்களும் வருகிறார்கள். யாகத்தில் கலந்து கொள்ள நமது சித்தாஸ்ரமத்துக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நமது ஆசிரமத்தை சேர்ந்தவர்களும் நானும் அங்கு செல்கிறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் வந்து யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்று ராமரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். தாங்கள் உத்தரவிட்டால் நிச்சயமாக தங்களுடன் வருகிறோம் என்று ராமலட்சுமனர்கள் விஸ்வாமித்ரரிடம் தெரிவித்தார்கள். ராமலட்சுமனர்கள் வருவதை எண்ணி ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். விஸ்வாமித்ரர் ராமலட்சுமனர் ஆசிரமவாசிகள் என அனைவரும் மிதிலைக்கு கிளம்பினார்கள்.