ரீசிக முனிவரிடம் இரண்டு பிரசாதங்களையும் வாங்கிக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய் நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ சாப்பிட வேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ சாப்பிடு. மரத்தையும் அதற்கேற்றாற் போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காகவும் இந்நாட்டின் எதிர்கால அரசனுக்காகவும் இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் மாற்றி சாப்பிட்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.
சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்ப்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்று நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி சாப்பிட்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.
மனம் மாறிய முனிவர் ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறக்கும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார். அவருக்கு கௌசிகன் என்று பெயர் வைத்தார்கள். தனது தந்தைக்கு பிறகு அரசனான கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு தன் படை பலத்துடன் வேட்டையாட சென்றார். காட்டில் இருந்த வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்ட கௌசிகன் அங்கு சென்றார். வந்த அனைவரையும் வரவேற்ற வசிஷ்டர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்தார். தனிமையில் காட்டில் இருக்கும் ஒரு முனிவரால் உடனடியாக இவ்வளவு பெரிய படைக்கு எப்படி உணவு இவரால் கொடுக்க முடிந்தது என்று கௌசிகன் ஆச்சரிப்பட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தான். வசிஷ்டரிடம் இருந்த கேட்டதை கொடுக்கும் நந்தினி என்னும் காமதேனு பசுவால் வசிஷ்டர் அனைவருக்கும் விருந்தளித்தார் என்பதை தெரிந்து கொண்டு வசிஷ்டரிடம் இருந்து நந்தினி காமதேனு பசுவை எப்படியாவது கொண்டு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினார்.