வசிஷ்டரிடம் சென்ற கௌசிகன் தாங்கள் முற்றும் துறந்த முனிவர் தங்களுக்கு இந்த நந்தினி காமதேனு பசு தேவையில்லை. நாட்டை ஆளுகின்ற என்னிடம் இருப்பதே சரியானது. என்னிடம் இந்த பசு இருந்தால் நான் கேட்டதை பெற்று நாட்டிற்கு மேலும் நன்மை அளிக்க இயலும் ஆகவே இந்த பசுவை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். வசிஷ்டர் கொடுக்க மறுத்துவிட்டார். தங்களுடைய இந்த ஒரு பசுவுக்கு இணையாக 1000 பசுக்களை கொடுக்கின்றேன் கொடுங்கள் என்று கேட்டார் கௌசிகன். ஆனால் வசிஷ்டர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கௌசிகன் காமதேனு பசுவை பலவந்தமாக எடுத்துச்செல்ல முற்பட்டான். வசிஷ்டரின் தவபலனுக்கு முன்னால் தன் வலிமையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் படைகள் அனைத்தையும் அனுப்பி காமதேனு பசுவை எடுத்துச்செல்ல முற்பாட்டான். வசிஷ்டர் தன்னுடைய தண்டத்தை முன்னால் போட அனைத்து படைகளும் அழிந்து போனது.
அரசனின் படை பலம் அதிகார வலிமையை விட தவ பலனே அதிகம் என்பதை உணர்ந்தான் கௌசிகன். வசிஷ்டர் கௌசிக மன்னனிடம் பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் நீங்கள் பிரம்மரிஷியானால் காமதேனு பசுவை தருகிறேன் என்றார். தவம் செய்தாலும் சத்ரியனான தாங்கள் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று கூறினார். தவம் செய்து தன்னை வெற்றி கொண்ட வசிஷ்டரை போல் மிகப்பெரிய ரிஷியாக வேண்டும் என்றும் வசிஷ்டரே தன்னை பிரம்மமகரிஷி என்று அழைக்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் அதிகரித்தது.
சத்ரிய குலத்தில் தோன்றியதால் தவ பலனை பெற்று அதிகாரத்தினாலே அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் சுய அறிவால் அனைத்தையும் பெற்று விட நினைத்தார் கௌசிகன். கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிந்தார். இதை கண்ட பார்வதிதேவி கௌசிகன் முன் தோன்றி விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெறலாம் என்று அறிவித்து மறைந்தாள்.
பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைந்தான் கௌசிகன். எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைத்தான் கௌசிகன். தனது உடலையே திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்வதை கண்ட சிவசக்தியர் கௌசிகனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தனது உடலை திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்த போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி அதனை சிவசக்திக்கு உச்சாடனம் செய்தார். மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை) திரியாக்கி உச்சாடனம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. கௌசிகன் மன்னன்
தன் தவத்தினால் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு அளித்தார். விஸ்வம் என்றால் உலகம் மித்ரர் என்றால் நண்பன் உலகத்தின் நண்பன் என்ற பொருளில் சிவசக்தியர் கௌசிகனை விஸ்வாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்கள்.