பிரம்ம ரிஷி பட்டத்தை பெற்ற விஸ்வாமித்திரருக்கு வசிஷ்ட மகரிஷி தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தன் வாயால் பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரர் என்று அழைக்கவேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. இதனை தன் சுய அறிவினால் பெற்றுவிட முடியும் என்று தன் சத்திரிய குல அரச குணத்தால் அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக பயன்படுத்தினார். விஸ்வாமித்திரை சிறந்த பிரம்ம குல ரிஷியாக மாற்ற இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும் அறிவில் சிறந்தவளுமான மேனகையை அனுப்பினான்.
மேனகை அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து மேல் நிலைக்கு செல்ல ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தாள். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன் கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார். அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். இப்போது உணர்வு நிலைக்கு வந்த விஸ்வாமித்ரர் தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதாலும் தன் தவ பலன்களை அனைத்தும் விரயமானதால் மேனகையை விசுவாமித்திரர் சபித்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். விஸ்வாமித்திரர் தனது மனைவி மக்களை விட்டுவிட்டு கடுந்தவம் செய்வதற்காகத் தனிமையான இடம் ஒன்றைத் தேடிச் சென்று விட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்த விஸ்வாமித்ரர் உண்ணாமல் மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்து கடும் தவம் புரிந்தார்.
அப்போது நாட்டில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. விஸ்வாமித்ரரின் குடும்பத்தினருக்கு தேவையான உணவு கிடைக்காமல் அவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். விஸ்வாமித்திரரின் குடும்பத்தினர் பட்டினி கிடப்பதை அறிந்த சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன் சத்தியவிரதன் அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உணவினைத் தேடிக் கொண்டு போய்க் கொடுத்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வசிஷ்டர் வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று அவனின் கண்ணில் பட்டது. அந்தப் பசுவைத் திருடிக் கொண்டு சென்ற அவன் அதைக் கொன்று அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் சாப்பிட்டான்.
பசு காணாமல் போனதை அறிந்த வசிஷ்டர் நடந்ததை தனது ஞான திருஷ்டியால் கண்டறிந்தார். அவர் காட்டிற்குள் இருந்த சத்தியவிரதனைச் சந்தித்து பசுவைக் கொல்வது பாவம் அதை கொன்று இறைச்சியையும் சாப்பிட்டு மிகப்பெரிய பாவம் செய்து விட்டாய் என்றார். பசிக்கு உணவில்லாத போது பசு மட்டுமல்ல எதைக் கொன்று சாப்பிடுவதும் தவறில்லை உங்களுடைய அறிவுரை எதையும் கேட்க நான் தயாராக இல்லை என்றான் சத்தியவிரதன். கோபமடைந்த வசிஷ்டர் நல்லுரையைக் கேட்காதது பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காக திரிசங்கு (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் என்று சத்தியவிரதனுக்கு சாபம் கொடுத்தார்.