வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டான் சத்தியவிரதன். ஆனால் மேலும் பசுவை கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் மேலும் பல பிறவிகள் எடுப்பாய் என்று சாபமிட்டு சென்று விட்டார் வசிஷ்டர். வசிஷ்டரின் கொடுத்த சாபத்தினால் சத்தியவிரதன் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் இரும்பு அணிகலன்களும் கருப்பு ஆடை அணிந்து திரிசங்கு என்ற பெயரில் உருமாறினான். பின்பு விஸ்வாமித்திரரின் குடும்பத்தினரைச் சந்தித்து வசிஷ்டர் தனக்கு அளித்த சாபம் பற்றி கூறி அதன் பிறகும் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து அந்தக் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில் விஸ்வாமித்திரர் தனது கடுமையான தவத்தால் பல வரங்களைப் பெற்றுத் திரும்பினார். அப்போது அவருக்கு பஞ்சத்தால் தன் குடும்பம் அடைந்த கஷ்டமும் சத்தியவிரதன் உதவி செய்ததும் அவனுக்கு சாபம் கிடைத்ததும் தெரியவந்தது. விஸ்வாமித்திரர் சத்தியவிரதனிடம் வசிஷ்டர் கொடுத்த சாபத்திலிருந்து உன்னை என்னால் விடுவிக்க முடியாது. ஆனால் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியை என்னால் காட்ட முடியும் என்றார்.
சத்தியவிரதனோ வசிஷ்டரின் சாபத்திலிருந்து விடுபடுவதை விட எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தாங்கள்தான் எனது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றான். வசிஷ்டர் எனக்குச் சாபம் கொடுப்பதற்கு முன் நான் பசுவைக் கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் இந்தப் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது என்றும் பசுவைக் கொன்று தின்ற பாவத்திற்கு நான் இன்னும் பல பிறவிகள் எடுக்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு இந்தப் பிறவியிலேயே மானிட உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விருப்பம். என் ஆசையை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லி விஸ்வாமித்திரரை வணங்கினான். வசிஷ்ட முனிவர் மீது பொறாமை கொண்டிருந்த விசுவாமித்திரர் சத்தியவிரதா நான் செய்த தவ வலிமையால் பெற்ற வரங்களைக் கொண்டு உன் விருப்பப்படி இந்த உடலுடனே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதற்கான வேள்வியைத் தொடங்கினார்.
விசுவாமித்திரர் செய்த வேள்வியின் பலனால் திரிசங்கு என்று பெயர் பெற்ற சத்தியவிரதன் விண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கினான். மானுட உடலுடன் ஒருவன் சொர்க்கம் நோக்கி வருவதைக் கண்ட வானவர்கள் இந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். இந்திரன் பூமியிலிருந்து மேலெழும்பி வந்து கொண்டிருந்த திரிசங்குவை வழியில் தடுத்து நிறுத்தினான். பின்னர் அவன் திரிசங்குவிடம் மானுட உடலுடன் ஒருவர் சொர்க்கலோகம் வருவது சரியான செயல் இல்லை. நீ பூலோகத்திற்குத் திரும்பிச் சென்று விடு என்று எச்சரித்தான். ஆனால் திரிசங்கு விஸ்வாமித்திரர் இருக்கும் தைரியத்தில் இந்திரனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான். இதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் திரிசங்கை எட்டி உதைத்தான். மறு நிமிடம் திரிசங்கு தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி செல்லத் தொடங்கினான். பயத்தில் திரிசங்கு விஸ்வாமித்திரரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான். விஸ்வாமித்திரர் உடனடியாக திரிசங்குவை வான் வெளியிலேயே நிற்கவைத்தார். பின்னர் திரிசங்கு உனக்காக நான் நீ தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என்று கூறி வேறொரு சப்தரிஷி மண்டலம் நட்சத்திரங்கள் முதலியவற்றை சிருஷ்டித்து புதிதாக தேவர்களையும் சிருஷ்டி செய்யப் போவதாக அறிவித்தார் விஸ்வாமித்ரர்.