ராமர் சீதை திருமணம் முடிந்த பின் தசரதன் மிதிலையில் சில நாட்கள் தங்கினார். விஸ்வாமித்திரர் ராமனுக்கு வேதங்களில் சில ராஜ நீதிகளை கற்று கொடுத்தார். பிறகு விஸ்வாமித்திரர் தவம் செய்வதற்காக இமய மலைக்குச் சென்று விட்டார். ஜனகர் ராமனிடம் என் மகள் சீதை உன் மனைவியாகி விட்டாள். இப்போது நீ செல்லும் தரும நெறியில் உன்னுடன் துணையாக இருப்பாள். உன் நிழல் போலவே எப்போதும் உன்னுடன் இருப்பாள் என்று கூறி சீதையை ராமனுடன் அனுப்பினார். தசரதர் தமது சுற்றமும் பரிவாரங்களும் சூழ ஜனகரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது நாட்டிற்கு புறப்பட்டார். ஜனகர் 4 பெண்களுக்கும் சீதனம்தந்து அறிவுரை கூறி வழியனுப்பினார். ராமர் சீதையுடன் தனித் தேரில் புறப்பட்டார்.
அயோத்திக்கு சென்று கொண்டிருக்கும் போது வழியில் நான்கு பக்கமும் இருந்து பறவைகள் அபசகுனமாக கத்த தொடங்கியது. விலங்குள் அனைத்தும் வலதுபக்கமாக சென்றது. பூமி நடுங்க காற்று பலமாக அடிக்க மரங்கள் கீழே சாய்ந்து கொண்டும் இருந்தது. இதனைக்கண்ட தசரதர் வசிஷ்டரிடம் சகுனம் சரியில்லாமல் இருக்கிறது. எனது மனம் படபடக்கிறது இந்த சகுனத்திற்கு என்ன பலன் என்று கேட்டார். அதற்கு வசிஷ்டர் பறவைகளின் சத்தத்தில் உள்ள ஒலிக்குறிப்பில் இருந்து தெய்வ சங்கல்பமாக அபாயகரமான ஆபத்து ஒன்று விரைவில் வர இருக்கிறது. ஆனால் விலங்குகளின் நடவடிக்கையில் இருந்து பார்த்தால் அந்த ஆபத்து நீங்கிவிடும் ஆகவே பயம் கொள்ள தேவையில்லை என்று ஆறுதலான வார்த்தைகளை தசரதரிடம் தெரிவித்தார்.
ஜமதக்னியின் புதல்வரான பரசுராதர் அங்கே வந்தார். பரசுராமர் வந்ததை கவனித்த முனிவர்களில் ஒருவர் சத்ரிய குலத்தவரான தசரதர் குலத்தை அழிக்க வந்திருக்கின்றார் பரசுராமர் என்று கூறினார். இதனை கேட்ட வசிஷ்டர் தன் தந்தையை கொன்ற சத்ரியர்களை கொல்ல சபதம் செய்து சூரிய குலத்தின் 21 தலைமுறைகளை அழித்து விட்டு சத்ரியர்கள் மீதான வெறுப்பையும் கோபத்தையும் விட்டவர் பரசுராமர். ஆகவே இப்போது அதற்காக வந்திருக்க மாட்டார் என்று கூறினார். வசிஷ்டர் மற்றும் அங்கு உள்ள முனிவர்களின் உபசாரத்தை ஏற்றுக்கொண்டார் பரசுராமர்.
பரசுராமரைக் கண்ட தசரதர் இவரால் ராமருக்கு ஆபத்து ஏதும் வந்து விடுமோ என்று அஞ்சினார். ராமரிடம் வந்த பரசுராமர் உன்னுடைய அற்புதமான ஆற்றலை பற்றி கேள்விப்பட்டேன். சிவவில்லை உடைத்த உனது செயல் மிகவும் ஆச்சரியமானது. எண்ணிப்பார்க்க முடியாதது. அதனை அறிந்ததும் எனது தந்தையால் கொடுக்கப்பட்ட விஷ்ணு வில்லை கொண்டு வந்திருக்கின்றேன். இந்த வில்லை வளைத்து நாணேற்றி உன்னுடைய சொந்த பலத்தை எனக்கு காட்டு. இந்த வில்லில் நாண் எற்றுவதில் உன் தோள் வலிமையை நான் கண்டபின் உன் வீரத்தை அங்கிகரிக்க உன்னுடன் தனி ஒருவனாக போர் புரிகிறேன் என்றார்.