நம: பார்வதி பதயே

சிவன் கோயில்களில் நம: பார்வதிபதயே என ஒருவர் சொல்ல ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் அவருக்கு மகாதேவன் என்று பெயர்.

பூலோகத்தில் உமாதேவியிடம் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் இறைவனை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தார். இவர் ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாக அழிந்து விட்டது. அதாவது உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும் என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார். அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே என்றார் திருஞானசம்பந்தர். அரன் என்றால் சிவன். சிவ நாமம் உலகம் முழுவதும் சூழ துயர்கள் அனைத்தும் தீரும்.

நம: பார்வதீபதயே என்று ஒரு பெரியவர் சொல்ல உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு அம்மையப்பனைத் துதித்து ஹர ஹர மகாதேவா என்று சொன்னால் அனைத்து தீயவைகளும் அழிந்து போகும்.

Image result for நம: பார்வதி பதயே"

மாணிக்கவாசகர்

This image has an empty alt attribute; its file name is image-6.png

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.

பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.

திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன் பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். மேலும் பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்து கொண்டிருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் திருக்கோவையார் என்ற பெயருடன் இருக்கிறது. பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது. தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர். அப்போது மன்னன் தனது ஊமை மகளையும் அழைத்து வந்தான். வந்தவர்கள் தில்லையில் தங்கி நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம் என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள்.

அந்தணர்கள் கலக்கமுற்றார்கள். அன்று இரவு தில்லை நடராஜர் அந்தணர்கள் கனவில் வந்து தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள் அவன் வெல்வான் என்று கூறினார். அந்தணர்கள் திருவாதவூரரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தனர். வாதம் நடந்தது. புத்தபிட்சுக்கள் தோற்றனர். இதனைப் பொறுக்காத புத்தபிட்சுக்கள் திருவாதவூரரைத் திட்ட ஆரம்பித்தார்கள். இதனை கேட்ட திருவாதவூரர் சரஸ்வதியை வேண்ட புத்தபிட்சுக்கள் அனைவரும் ஊமைகளாயினர். அதனைக் கண்ட இலங்கை மன்னன் பேசுவோரை ஊமை ஆக்கும் ஆற்றல் இருந்தால் ஊமையைப் பேச வைக்கும் ஆற்றல் இருக்குமல்லவா என்று கூறித் தனது மகளை பேச வைக்கும் படி கூறினார். திருவாதவூரரும் இறைவனை வேண்ட மன்னனின் மகள் பேச ஆரம்பித்தாள். இதனைக்கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர். பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது. மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார். புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே திருச்சாழல் என்னும் பதிகமாக அமைந்தன.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -6

அஸ்தினாபுரத்திற்கு கௌரவர்கள் திரும்பிப் போய்க் கொண்டிருந்த பொழுது பாண்டவர்கள் படைத்திருந்த சௌபாக்கியங்களைப் பார்த்து தனக்கு வந்துள்ள பொறாமை குறித்து துரியோதனன் கர்ணனிடமும் சகுனியிடமும் விவாதித்தான். பாண்டவர்களின் நிறைந்த செல்வத்தையும் பரந்த சாம்ராஜ்யத்தையும் தங்களது சுய முயற்சியினால் தானே பெற்றுள்ளார்கள் என்று சகுனி துரியோதனனுக்கு சமாதானம் சொன்னான். துரியோதனன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பாண்டவர்கள் அடைந்த முன்னேற்றத்தையும் செல்வப் பெருக்கையும் தன்னால் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. எதிரிகளின் ஆக்கத்தை பார்த்துக் கொண்டு இருப்பதை விட மாய்ந்து போவதே மேல் என்று வெளிப்படையாக துரியோதனன் சகுனியிடம் சொன்னான். இப்பொழுது சகுனியின் துர்புத்தி வெளியாயிற்று. பாண்டவர்களை வெல்ல நம்மால் இயலாது. ஆக சூதாடுவது ஒன்றே சரியான உபாயமாக இருக்கும். யுதிஷ்டிரனுக்கு சூதாட்டத்தில் பயிற்சி போதாது. ஆயினும் அவன் அதை ஓரளவு சூதாட விரும்புகின்றான். சூதாட்டத்தில் எனக்கு வேண்டியவாறு திறமை உள்ளது. ஆகையால் சூதாடி பாண்டவர்களை ஏமாற்றி நாடு நகரம் அவர்களது செல்வம் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று சகுனி துரியோதனனிடம் கூறினான். துரியோதனனும் இதனை ஆமோதித்தான்.

அஸ்தினாபுரம் திரும்பிய பிறகு துரியோதனன் விரைந்து தனது தந்தையிடம் சென்றான். பாண்டவர்களின் செல்வம் தம்முடைய செல்வம் மற்றும் இரு தரப்பினரிடமும் படைத்திருந்த ராஜ்யங்களில் உள்ள பாகுபாடுகளை தந்தையிடம் அவன் விளக்கிக் கூறினான். நம்மை விட பலமடங்கு இந்திரப்பிரஸ்தம் மேலோங்கி மிளிர்ந்து இருக்கின்றது. அவர்களை போரில் வெற்றி பெற்று இந்திரப்பிரஸ்தத்தை நம்மால் பெற இயலாது. ஆகவே இந்த இந்திரப்பிரஸ்தத்தை சூதாடி அதிகரித்துக் கொள்ள அனுமதி தாருங்கள் என்று தந்தையின் அனுமதியை துரியோதனன் வேண்டி நின்றான்.

திருதராஷ்டிரன் இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. துரியோதனன் கூறிய அனைத்திற்கும் தடை போட்டார். ஆனால் துரியோதனின் பிடிவாதத்திற்கும் சினத்திற்கும் சூழ்ச்சிக்கும் இறுதியில் திருதராஷ்டிரன் சம்மதித்தார். சூதாடுவதற்க்காக மாளிகை ஒன்றை விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. அத்திட்டம் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. திருதராஷ்டிரன் பாண்டவர்களை அழைத்து வரும்படி விதுரருக்கு உத்தரவிட்டார். புதிதாக கட்டியுள்ள மண்டபத்தில் உற்றார் உறவினர்களோடு அளவளாவி விளையாடுவது அந்த அழைப்பின் நோக்கம் என்றான். ஆனால் இந்த ஏற்பாடு விதுரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களும் கௌரவர்களும் அவரவர்களுடைய ராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து இருக்கின்றனர். பகடை விளையாட பாண்டவர்களை கூப்பிடுவlன் வாயிலாக பகையும் வேற்றுமையும் வளரும். இந்த விளையாட்டு வினையாக முடியும் என்று விதுரர் எச்சரிக்கை செய்தார். ஆனால் திருதராஷ்டிரன் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. அரசகுமாரர்கள் ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்காக பகடை விளையாடுவது பழக்கம் என்றும் புதிதாக கட்டப்பட்டு இருக்கின்ற மண்டபத்தை பார்க்க பாண்டவர்களை அழைத்து வர வேண்டும் என்று விதுரருக்கு திருதராஷ்டிரன் உத்தரவிட்டான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -5

கிருஷ்ணன் சிசுபாலனுடன் சண்டையிட போகிறேன் என்று சொல்லி சிசுபாலனை நோக்கி செல்வதை பார்த்து அரசர்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள். யுதிஷ்டிரன் துயரத்தில் இருந்தான். பீஷ்மர் புன்னகையுடன் இருந்தார். கிருஷ்ணன் சிசுபாலன் மீது கொண்டிருப்பது கோபம் அல்ல. அனுக்கிரக மூர்த்தியாக நின்று கொண்டு சக்கராயுதத்தை சிசுபாலன் மீது கிருஷ்ணன் ஏவினான். சக்கராயுதம் சூரியப் பிரகாசத்தோடு வெட்டவெளியில் சுழன்று சென்று சிசுபாலனுடைய தலையை அவன் உடம்பில் இருந்து விடுவித்தது. சக்கராயுதம் பிறகு கிருஷ்ணன் கையில் வந்து அமர்ந்தது. சிசுபாலனுடைய மேனியிலிருந்து ஒளி ஒன்று கிளம்பி கிருஷ்ணனின் பாதங்களில் வந்து ஒதுங்கியது. இந்த சிசுபாலன் வேறு யாருமில்லை வைகுண்டத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன் விஜயன் ஆகிய இருவருள் இவன் முன்னவன் ஆவான். மகாவிஷ்ணுவின் ஆணைக்கு உட்பட்டு அவருக்கு எதிராக எடுத்த மூன்றாவது பிறவியை முடித்துக் கொண்டு அவன் கிருஷ்ணனிடம் தஞ்சம் அடைந்தான்.

ராஜசூய யாக்ஞம் மங்களகரமாக முடிந்தது என்று கூற முடியாது. வேந்தர்களில் பலர் அதிருப்தி அடைந்திருந்தனர். பொருந்தாத சில சகுனங்கள் தென்பட்டன. உலகுக்குக் கேடு காலம் வந்து கொண்டிருக்கின்றது என்று ரிஷிகள் கூறினர். இத்தகைய சூழ்நிலையில் யுதிஷ்டிரன் சக்கரவர்த்திக்கு எல்லாம் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தைப் பெற்றான்.

துரியோதனன் சகுனி கர்ணன் ஆகிய கௌரவர்கள் அஸ்தினாபுரத்திற்கு உடனே திரும்பிப் போகவில்லை. மயனால் அமைக்கப்பட்டு இருந்த மாளிகையை நன்கு ஆராய்ந்து பார்க்க அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் தங்கியிருந்தார்கள். பாண்டவர்களும் அவர்களை அன்புடன் உபசரித்து வந்தார்கள். விருந்தினர்களாக தங்கியிருந்த அவர்களை மகிழ்விக்க பல பல இடங்களை காட்டினார்கள். இந்த மாளிகையினுள் வியப்புக்குரிய வேலைப்பாடுகள் பல இருந்தது. அவர்கள் அவைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்தார்கள். நீண்ட நடைபாதை ஒன்றின் வாயிலாக நடந்து கொண்டிருந்த பொழுது துரியோதனன் தடாலென்று தண்ணீருக்குள் விழுந்து முழுவதும் நனைந்து போனான். ஏனென்றால் தண்ணீரின் மேற்பரப்பில் முற்றிலும் நிலம் போன்று தென்பட்டது. வேறு ஒரு இடத்தில் துரியோதனன் வாயிலின் மேல் படியின் மீது தலையை மூட்டிக் கொண்டான். அதற்குக் காரணம் வாயில்படி இருந்தும் அது கண்ணுக்குப் புலனாகவில்லை. இதைப்போன்ற வியப்புக்குரிய அமைப்புகள் பல அந்த மாளிகையினுள் அமைந்திருந்தது. கௌரவர்கள் ஏமாற்றம் அடைந்த பொழுதெல்லாம் நகைப்புக்கு ஆளானார்கள். அவர்கள் இதனை விளையாட்டாக பொருட்படுத்தவில்லை. வெறுப்புடனும் பொறாமையுடனும் பார்த்தார்கள். ஆனால் அதை துரியோதனன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. விளையாட்டாக எடுத்துக் கொண்டது போன்று பாசாங்கு பண்ணினான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -4

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் முதல் மரியாதைக்கு ஏற்றவர் யார் என்னும் வினா எழுந்தது. பாட்டனாராகிய பீஷ்மரும் பாண்டவர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். வந்திருந்தவர்களில் கிருஷ்ணனை தலை சிறந்தவன். கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய தெளிவான முடிவு. அதன்படியே சகோதரர்கள் மிக இறைவனாகிய சகாதேவன் கிருஷ்ணனுக்கு பாத பூஜை செய்து பிறகு புஷ்பங்களை கொண்டு வழிபாடு செலுத்தினான்.

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிசுபாலன் என்பவன் எழுந்து நின்றான். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைப் பார்த்து உரத்த குரலில் கடகடவென்று சிரித்தான். அடுத்தபடியாக பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் பொருந்தாத பொன் மொழிகள் பேசி அவமானப்படுத்தினான். அதன் பிறகு கிருஷ்ணனையும் ஆடு மேய்ப்பவன் என்று கூறி அவமானப்படுத்தினான். தெய்வ பொலிவுடன் இருந்த இடம் திடீரென்று கீழ்நிலைக்கு மாறியது குறித்து யுதிஷ்டிரன் திகைத்துப் போனான். பீமன் கோபாவேசத்துடன் குமுரிக் கொண்டிருந்தான் சகாதேவனுடைய கண்கள் செக்கசெவேல் என்று நிறம் மாறின. அவரவர் பாங்குக்கு ஏற்ப அவையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு விதங்களில் மனம் குழப்பினர். ஆனால் பீஷ்மர் கிருஷ்ணர் இருவர் மட்டும் எக்காரணத்தை முன்னிட்டும் குழப்பம் இல்லாத சாந்தமூர்த்திகளாக அமர்ந்திருந்தனர்.

சிசுபாலன் பேசுவதை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான். அனைவரையும் அவமானப்படுத்தி கொண்டே இருந்தான். பொருந்தாத பொருந்தாத சொற்களைக் கூறி கிருஷ்ணனையும் பாண்டவர்களையும் அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான். அடுத்தபடியாக ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு சபையை விட்டு வெளியேறினான். அவனுடைய செயலுக்கு உடந்தையாய் இருந்த வேறு சில வேந்தர்களும் அவனோடு வெளியேறினர். வெளியே நின்று கொண்டு சிசுபாலன் கிருஷ்ணனுக்கு சிறிதாளவாவது ஆண்மையை இருந்தால் அவன் என்னோடு சண்டைக்கு வரட்டும் என்று அறைகூவினான்.

கிருஷ்ணர் சபையில் எழுந்து நின்று அனைவரையும் பார்த்து இந்த ராஜசூய யாக்ஞம் இனிதே நிறைவேற வேண்டும் என்று நான் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் இந்த சிசுபாலன் என்னை அவமானபடுத்துகின்றான். அவன் என் மீது சொல்லும் நூறு அவமானங்களை சகித்துக் கொண்டு இருப்பேன் என்று அவனுடைய அன்னைக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது அவமானத்தின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் சென்று விட்டது. மேலும் அவனோடு நான் சண்டையிட வேண்டும் என்று அழைக்கின்றான். அவனோடு சண்டையிடப் போகிறேன் என்று கிருஷ்ணன் சிசுபாலனின் நோக்கி சென்றார்.