தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 267 திருக்கோகர்ணம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 267 வது தேவாரத்தலம் திருக்கோகர்ணம். மூலவர் மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர். இங்கு இறைவன் கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கமாக சுயம்பு லிங்கமாக கொட்டை பாக்கு அளவு பாணமாக அருளுகிறார். இங்குள்ள கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம். அகத்தியர் இவருக்கு பூஜை செய்துள்ளார். அம்பாள் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும். தீர்த்தம் கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி. இந்த மூன்று தீர்த்தம் போக 30 தீர்த்தங்கள் உள்ளது. தலமரம் சரக்கொன்றை. இங்கு உள்ள ஆத்ம லிங்கத்திற்கு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு பூஜை செய்வார்கள். இந்த லிங்கத்தை இராவணனிடமிருந்து விநாயகர் மீட்டுத் தந்தார். ஓரடி உயரமுள்ள சாளக்கிரம ஆவுடையார் மீது சொர்ண ரேகையுடன் நடுவில் குழியோடு இந்த ஆத்ம லிங்கம் காட்சி தருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பீடத்தை அகற்றி பூஜித்து பக்தர்கள் தரிசனத்திற்கும் வைக்கிறார்கள். இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது.

தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான வெளிப் பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் உள்ளார். அம்பாள் சன்னதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம் உள்ளது. உட்புறம்ம காபலேஸ்வரர். கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர், ஆதிகோகர்ணேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதற்கு சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடம் என பெயர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் சிவலிங்கபாணம் உள்ளது. விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பிராகாரத்தில் விநாயகர், மகிஷாசுரமர்த்தினி சன்னதிகள், விநாயகர், யானை முகத்துடனும் இரண்டு திருக்கரங்ளோடும் நின்ற கோலத்தில் துவிபுஜ விநாயகராகக் காட்சி தருகின்றார். இவர் முடியில் யானைத் தலையில் இருப்பது போல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்று புராண வரலாறு கூறுகிறது. கைலாயத்தில் சிவன் மலை வடிவிலும் அம்பிகை நதி வடிவிலும் காட்சி தருவதைப்போல இத்தலத்தில் சிவன் மலையாகவும் அம்பிகை நதியாகவும் அருள் புரிகின்றனர். அம்பாளே இங்கு நதியாக இருக்கின்றார்.

இக்கோயிலின் முன்புறம் நதியும் அதற்கடுத்து மலையும் இருக்கிறது. சிவன் மலையாக வீற்றிருக்கும் தலங்களில் கிரிவலம் செல்வார்கள் ஆனால் இங்கே நதி இருப்பதால் கிரிவலம் செல்ல முடியாது. இத்தலத்தில் செய்யப்படும் ஒரு புண்ணிய காரியம் கோடி மடங்கு செய்ததற்கான பலன் தரும் என்கிறது தலபுராணம். முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை சிறப்பாக நிறைவேற்ற சிவன் கடும் தவம் இருந்தார். அப்போது அவரது நெற்றியிலிருந்து ருத்ரன் வெளிப்பட்டார். படைக்கும் தொழிலை சிறப்பாக செய்ய ருத்ரனே தகுதி வாய்ந்தவர் என்று அவரை வேண்டினார். ருத்ரரும் ஒப்புக்கொண்டு தான் படைக்கும் சகல ஜீவராசிகளும் நல்ல குணத்துடனும் பலத்துடனும் விளங்க பாதாள உலகம் சென்று கடும் தவம் இருந்தார். இதற்குள் 3 யுகங்கள் கழிந்து விட்டன. எனவே பிரம்மா தானே உயிர்களை படைக்க தொடங்கினார். இதையறிந்த ருத்ரர் பயங்கர கோபத்துடன் பாதாள உலகிலிருந்து பிரம்மனிடம் வந்தார். ஆனால் அவரால் படைக்கப்பட்ட பெரிய உலகம் குறுக்கிட்டது. அவர் அதை நொறுக்கத் தொடங்கினார். பயந்து போன பூமாதேவி இறைவா தாங்கள் தயவு செய்து கோபம் குறைந்து தங்கள் உருவை சிறிதாக்கி கொண்டு என் காதின் வழியாக மெதுவாக வாருங்கள் என கூறினாள்.

பூமாதேவியின் வேண்டுதலை ஏற்ற ருத்ரன் கட்டை விரல் அளவில் உடலை சிறிதாக்கி கொண்டு அவள் காதின் வழியே வெளியே வந்து பூமாதேவியே நான் பாதாள உலகில் இருந்து வெளியே வருவதற்கு நீ கருப்பையாக இருந்ததனால் இந்த இடம் ருத்ரயோனி என்றும் அதற்கு காரணமான நீ கோ (பசு) என்றும் உனது காது கர்ணம் என்றும் வழங்கப்படும் என்றார். அன்றிலிருந்து இத்தலம் கோகர்ணம் ஆனது. எனவே இத்தலத்தை காது துவார தலம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதாள உலகில் இருந்து வெளியில் வந்த ருத்ரன் பிரம்மனின் படைப்பில் அதிருப்தியடைந்து பிரம்மாவின் படைப்புக்களை அழிக்க பூதகணங்களை தோற்றுவித்தார். இதையறிந்த விஷ்ணு ருத்ரனே பிரம்மனை மன்னித்தருள வேண்டும். அவரது படைப்புக்களை பிரளய காலத்தில் மட்டும் அழித்து அருள்புரிய வேண்டும். அத்துடன் நீங்கள் இத்தலத்தில் இருந்து வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தந்தருள வேண்டும் என்றார். ருத்ரனும் அதை ஏற்றார். அன்றிலிருந்து இத்தலம் ருத்ரபூமி ஆனது.

ஒருமுறை பிரம்மா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்போது ருத்ரனின் கோபத்திற்கு ஆளாகி கவுரி என்ற பெயரில் நதியாக ஓடிக்கொண்டிருந்த பார்வதி அவரது வலக்கையில் தோன்றினாள். பிரம்மா அவளிடம் நீ விரைவில் ருத்ரனின் மனைவி ஆவாய் என்றார். அவரை அடைவதற்காக பக்தியுடன் தாமிர பர்வத மலையில் நதிவடிவில் தவமிருந்தாள். இவளது பக்திக்கு மகிழ்ந்த ருத்ரன் அவளை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு அந்த இடம் வைவாஷிக பர்வதம் (கல்யாண கிரி) என்று அழைக்கப்பட்டது. அம்பிகை தாமிர கவுரி ஆனாள். இந்த நதி கோயிலுக்கு எதிரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள பிராணலிங்கத்தின் பெருமையை கேள்விப்பட்ட ராவணன் அதை இலங்கை கொண்டு செல்வதற்காக கயிலை மலை வந்து சிவனை வேண்டி கடும் தவம் இருந்தான். இதையறிந்த நாரதர் சொர்க்கலோகம் சென்று இந்திரனிடம் ராவணன் இந்த லிங்கத்தை கொண்டு சென்றால் தேவர்கள் பலமிழப்பார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்றார். உடனே இந்திரன் தேவர்களுடன் கைலாயம் சென்றான். அதற்குள் ராவணன் தன் தவத்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். ஈசன் இந்த லிங்கத்தை ராவணனிடம் கொடுக்கும் முன் ராவணா நடந்து தான் இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்துடன் எந்தக்காரணத்தை கொண்டும் இதை கீழே வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது திரும்ப வராது என கூறி அனுப்பியிருந்தார்.

இரவணனிடமிருந்து அந்த லிங்கத்தைக் கைப்பற்ற எண்ணிய விஷ்ணு ராவணன் சந்தியா வந்தனம் செய்வதில் காலம் தாழ்த்த மாட்டான் என்பதை அறிந்து கணபதியை அழைத்து நீ பிரமச்சாரி வேடத்தில் ராவணன் இருக்குமிடத்தில் சுற்றித்திரி. ராவணன் சந்தியாவந்தன நேரம் வந்தவுடன் லிங்கத்தை கீழே வைக்காமல் உன்னிடம் கொடுப்பான். நீ அவனிடம் லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத சமயத்தில் நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அப்போது நீ வராவிட்டால் லிங்கத்தை கீழே வைத்து விடுவேன் என்று சொல் என்றார். இவ்வாறு கூறிய விஷ்ணு தன் கரத்தை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் நிறுத்தினார். அப்போது மாலை வேளை போல் சற்றே இருள் சூழ்ந்தது ராவணன் சந்தியா வந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அப்போது தேவர்கள் மூன்று உலகங்களின் பாரத்தையும் அந்த பிராண லிங்கத்தின் மீது செலுத்தினர். இந்த லிங்கத்தின் பாரம் தாங்க முடியாத கணபதி மூன்று முறை ராவணனை அழைத்தார். அப்படி அழைத்தும் ராவணன் வராத காரணத்தினால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது. இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர்.

சந்தியாவந்தனம் முடித்து வந்த ராவணன் லிங்கம் கீழே வைக்கப்பட்டிருந்ததை கண்டு மகாபலம் உடையவர் இந்த இறைவர் எனக் கூறி அந்த சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டி பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். விநாயகர் உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனினர். பிறகு தேவர்கள் தேவசிற்பியை அழைத்து லிங்கத்தை சுற்றி கோயில் அமைத்தனர். அதுவே கோகர்ண சிவன் கோயிலாகும். அதன் அருகிலேயே கணபதி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் தலையில் இப்போதும் இரவணன் குட்டிய பள்ளம் அடையாளமாக உள்ளது. பிரம்ம தேவர், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த கோவிலை மயூரசர்மா என்ற அரசன் கட்டி உள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 266 திருஅஞ்சைக்களம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 266 வது தேவாரத்தலம் திருஅஞ்சைக்களம். புராணபெயர் திருவஞ்சைக்குளம், கொடுங்கலூர். மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர். இங்கு இறைவன் மிகச்சிறிய சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இறைவன் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். அம்பாள் உமையம்மை. தீர்த்தம் சிவகங்கை. தலமரம் சரக்கொன்றை. தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். கேரள பாணியில் கோயில் அமைந்துள்ளது. கோயில் வாசல் மேற்கு நோக்கி உள்ளது. துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன. உள்ளே குளம் உள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடிவெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுள்ளது. கோஷ்டமூர்த்த அமைப்பு இல்லை. விமானத்தில் யோக நரசிம்மர் உக்கிரரூபத்தில் உள்ளார். இங்குள்ள நடராஜர் சேரமான் பெருமாள் பூசித்தது. பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் திருவஞ்சைக் களத்து சபாபதி என்றெழுதப்பட்டுள்ளது.

கிழக்கு ராஜகோபுர முன்புறத்தில் நுழையும்போது பக்கக்கற்சுவரில் யானை உருவங்கள் வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும் எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்குச் செல்லும் போது வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடைக்கு யானை வந்த மேடை என்று பெயர். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்ற மேடை ஆகையால் இந்த பெயர் வந்தது. கேரள வழிபட்டு தந்திரமுறையில் இத்திருக்கோயிலில் வழிபாடுகள் நடந்தாலும் வருடத்தில் ஒருநாள் சுந்தரர் கயிலை சென்ற ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை நடைபெறுகின்றது. ஏகாதசருத்ரம் சங்காபிஷேகம், ம்ருத்யுஞ்சஹோமம் இக்கோயிலில் நடைபெறுகிறது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒரு நாள் மன்னன் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்கவில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிர சேரமான் முன்பு ஈசன் தோன்றி வருந்தாதே மன்னா என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய் மறந்து விட்டேன். எனவே தான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகி விட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய மன்னன் தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பை ஏற்று திருவஞ்சிக்குளம் சென்று சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர். பின் சேரமன்னனுடன் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார்.

சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. அங்குள்ள இறைவனிடம் இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். சேரமன்னன் தன் உள்ளுணர்வால் சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் குதிரையில் ஏறியமர்ந்து அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத குதிரை விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது. சுந்தரர் சென்று கொண்டிருக்கும் போதே பாடல்கள் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். சேரமன்னனும் கயிலாயம் சென்றடைந்தார் இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார். இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும். இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வம். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 265 மாகாளம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 265 வது தேவாரத்தலம் மாகாளம். புராணபெயர் இரும்பை மாகாளம். மூலவர் மாகாளேஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் குயில்மொழிநாயகி, மதுரசுந்தரநாயகி. அம்பாள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல் தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாள். இதனால் அம்பாளுக்கு குயில்மொழி நாயகி என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தம் மாகாள தீர்த்தம். தலமரம் புன்னை. இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் உள்ளது. அவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம் காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டு இத்தலமான இந்த இரும்பை மாகாளம். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் உள்ளது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிக்கின்றது.

கோவில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. இங்குள்ள விமானம் ஏகதள விமானம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் வலது புறம் விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இக்கோலம் நடராஜரின் சந்தோஷ கோலம் ஆகும். இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன் அம்பாள் நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. பிராகார சுற்றுச் சுவர் உட்புறம் முற்றிலும் விதவிதமான உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன். அங்கங்கே ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. கருவறை முன்புறச் சுவர் முழுவதும் செப்புத் தகட்டால் வேயப்பட்டு தங்கமுலாம் பூசியது போன்று பளபளப்புடன் திகழ்கிறது. துவாரகாலகர்கள், மாகாளர் உருவம், கடுவெளிச்சித்தர் உருவம் செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.

சிவனிடம் வரம் பெற்ற அம்பன் அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி மகாகாளி அவதாரம் எடுத்து தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள் இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும் தெற்கே மயிலாடுதுறை பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் மகாகாளநாதர் என்ற பெயர் பெற்றார்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலம். அவனது ஆளுகைக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியை குணசீலன் என்னும் குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவனது எல்லையில்தான் இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் இருந்தது. அதை சிறந்த முறையில்பராமரித்து வழிபட்டு வந்தான். இந்நிலையில் குணசீலனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. மழையின்றி பயிர்களெல்லாம் கருகின. குடிமக்கள் தவித்தனர். இதைக் கண்டு கவலையுற்ற குணசீலன் மாகாளேஸ்வரர் ஆலயத்திற்குச்சென்று இவ்வளவு கொடிய பஞ்சத்திற்குக் காரணம் என்ன என்று மனமுருகிவேண்டி நின்றான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய மாகாளேஸ்வரர் மன்னா நம் ஆலயத்தின் எதிரே குளக்கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் கடுவெளிச்சித்தர் எனது பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்த வண்ணம் தவம் செய்துகொண்டிருக்கிறார். அவரைச்சுற்றி புற்று வளர்ந்து அவர் உடலின் பெரும்பகுதியை மூடிவிட்டது. அந்தநிலையிலும் உக்கிரமான தவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த தவாக்னியின் வெப்பத்தால்தான் இத்தகைய வறட்சி ஏற்பட்டுள்ளது. அவரது தவம் கலைந்தால் தான் மழை பொழியும். அதே சமயம் அவரது தவத்தை பலவந்தமாகக் கலைத்தால் சித்தரின் கோபத்துக்காளாகி அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். எனவே ஏதேனும் உபாயத்தைக் கையாண்டே தவத்தைக் கலைக்க வேண்டும் என்று கூறி மறைந்துவிட்டார்.

தூக்கம் கலைந்து எழுந்த மன்னன் நீண்ட நேரம் யோசித்து சித்தரின் தவத்தை பலவந்தமாக இல்லாமல் கலைக்க பெண்களால் தான் முடியும் என்று முடிவு செய்தான். பொழுது புலர்ந்ததும் கோவிலில் நடனமாடும் சுந்தரவல்லியை அழைத்து மன்னன் தன் எண்ணத்தைக் கூறினான். அதைக் கேட்டு சுந்தரவல்லி மிரண்டு போனாள். எனினும் மன்னன் கட்டளையை மீற முடியாதென்பதால் கடுவெளிச் சித்தர் தவம் செய்யும் இடத்திற்குச் சென்று வணங்கி நின்றாள். சித்தர் கண் விழிப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லாதிருப்பதை உணர்ந்த சுந்தரவல்லி அவரைத் தொட்டு தவத்தைக் கலைக்கலாமா என்று யோசித்தாள். அவ்வாறு செய்தால் சித்தரின் கோபம் தன்னை எரித்து விடும். செய்யாமல் போனாலும் மன்னரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். என்ன செய்யலாம் என்று புரியாமல் தவித்த சுந்தரவல்லி மன்னரின் கோபத்துக்கு ஆளாவதை விட சித்தரால் எரிக்கப்பட்டால் மோட்சமே கிட்டும் என்றெண்ணி அவரது தவத்தைக் கலைக்க முடிவு செய்தாள். அவரையே நெடுநேரம் கவனித்தபடி அவள் நின்றிருந்தபோது அரச மரத்திலிருந்து ஒரு இலை சித்தரின் கையில் விழ அவர் அதைத் தன் வாயிலிட்டு மென்று தின்றார். இதைப் பார்த்த சுந்தரவல்லி சித்தர் அரச இலையையும் காற்றையும் உட்கொண்டே தவத்தைத் தொடர்ந்து வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அவள் மறுநாள் உப்பும் காரமும் சேர்த்த அப்பளத்தை அரச இலை அளவுக்குச் செய்து எடுத்து வந்து சித்தரின் கையில் வைத்தாள். அதை அவர் வாயிலிட வழக்கத்திற்கு மாறான சுவையிருப்பதை உணர்ந்து மெல்ல கண் திறந்தார். அப்போது அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கிய சுந்தரவல்லி சுவாமி அரசர் உத்தரவுப்படி நான் இவ்வாறு நடந்து கொண்டேன். என்னை மன்னித்தருளி என் பாத பூஜையை ஏற்க என் இல்லத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அவ்வாறே அவளை மன்னித்த கடுவெளிச் சித்தர் அவள் இல்லத்திற்குச் சென்று சுந்தர வல்லியின் பாத பூஜையை ஏற்றார். பின்னர் சித்தரிடம் மன்னன் நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும் மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார்.

சித்தரின் தவம் பலவந்தமின்றி கலைந்ததால் வானம் இருண்டது. தொடர்ந்து ஒரு வாரம் அடைமழைபெய்தது. ஏரி குளங்கள் நிரம்பின. ஆறுகள் பெருக்கெடுத்தன. மக்கள் மகிழ்ச்சியோடு விவசாயப் பணிகளைத் துவக்கினர். பஞ்சமும் நீங்கியது. சில மாதங்களுக்குப்பின் மாகாளேஸ்வரருக்கு மிகச் சிறப்பாக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஐந்தாம் நாள் உற்சவத்தில் மன்னன் குணசீலன் கலந்து கொண்டு சிறப்பித்தான். அன்று நடன அரங்கில் சுந்தரவல்லியின் நடனம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மன்னனுடன் திரளான மக்களும் கண்டு களித்துக் கொண்டிருந்த அந்த நடனத்தைக் காண கடுவெளிச்சித்தரும் வந்திருந்தார். ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சுந்தரவல்லியின் காற்சலங்கை கழன்று விழுந்தது. அதைக் கண்ட கடுவெளிச்சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி நொடிப்பொழுதில் அங்கு சென்று கழன்று விழுந்த சலங்கையை எடுத்து சுந்தரவல்லியின் காலில்கட்டினார். இதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு நடன மங்கையின் காலை சித்தர் தொடலாமா என்று கடுவெளிச் சித்தரைப் பழித்தனர். அதைக் கண்டு கோபமுற்ற சித்தர் மனித வாழ்க்கை நிலையற்றது என்ற கருத்தில் ஒரு பாடலைப் பாடி மாகாளேஸ்வரர் சந்நிதி முன் சென்று இதற்கெல்லாம் காரணம் இவர் தான் என்று மாகாளேஸ்வரரை கோபத்துடன் நோக்கினார். சித்தரின் கடும் கோபத்தினால் சிவலிங்கம் மூன்றாகப் பிளந்தது. அதிலிருந்து பார்வதி தேவியுடன் தோன்றிய சிவபெருமான் அனைவருக்கும் காட்சி தந்து மறைந்தார்.

இதைக் கண்ட மன்னனும் மக்களும் கடுவெளிச் சித்தரின் மகிமையை உணர்ந்து தங்கள் பிழையைப் பொறுத்தருளுமாறு அவரிடம் மன்னிப்பு வேண்டினர். மேலும் பிளந்த லிங்கத்தை ஒன்றாகச் சேர்க்கும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சித்தர் ஒரு பாடலைப் பாட, பிளவுபட்ட மூன்று பகுதிகளும் ஒன்றிணைந்தன. பின்னர் செப்புத் தகடால் அந்த லிங்கத்தை பந்தனம் செய்தார் சித்தர். இந்த லிங்கம் தான் இன்றளவும் இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் மூலவராக உள்ளார். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சி நடந்த சில காலத்திற்குப் பின் அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன் பிளவுபட்ட லிங்கத்திற்கு மாற்றாக வேறொரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய எண்ணி காசியிலிருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வந்தான். அதைப் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது என்னை அப்புறப்படுத்த வேண்டாம் என்று இறைவன் அசரீரி மூலம் ஆணையிட மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டு காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வேறொரு பகுதியில் பிரதிஷ்டை செய்தான். இந்த லிங்கத்தை தற்போது அம்பாள் சந்நிதியின் கிழக்குப் பகுதியில் காணலாம். பொதுவாக உடைந்த லிங்கத்திற்கு பூஜை செய்யக்கூடாது என்பது ஆகம விதியாகும். ஆனால் அதற்கு விலக்காக இரும்பை மாகாளேஸ்வரருக்கு மட்டும் இன்றளவும் பூஜை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இரும்பை மகாகாளேஸ்வரரர் திருக்கோயில் சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்து கட்டப்பட்டது. சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரர் ஊர்த்தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர், பட்டினத்தார் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 264 ஒழுந்தியாப்பட்டு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 264 வது தேவாரத்தலம் ஒழுந்தியாப்பட்டு. புராணபெயர் திருஅரசிலி. மூலவர் அரசலீஸ்வரர், அரசிலிநாதர், ஆலாலசுந்தரர், அஸ்வத்தேஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும் சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர். அம்பாள் பெரியநாயகி, அழகியநாயகி. அம்பாள் பெரியநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்த கோலத்தில் இருக்கிறாள். தீர்த்தம் வாமன தீர்த்தம், அரசத் தீர்த்தம். தலமரம் அரசமரம். கோவில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு 3 நிலை இராஜகோபுரமும் ஒரு பிராகாரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், நவக்கிரகம், சண்டேசுவரர் நால்வர் ஆகியேரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் உள்ளார். பொதுவாக வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி ஆகிய பிற கோஷ்ட மூர்த்திகளின் சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்கு பின்புறத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மரங்களில் சிறந்த அரசமரத்தடியில் இறைவன் எழுந்தருளியதால் இத்தலம் அரசிலி என்று பெயர் பெற்றது. வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்காக பல தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது ஒரு அரசமரத்திற்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஒய்வெடுத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரும் அரசமரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர் இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்து கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன் அரசமரத்திற்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர் அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். அரசமரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால் தலத்திற்கு அரசிலி என்றும் இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. வாமதேவ முனிவருக்குப் பின் பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டு போயிற்று.

சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகிலுள்ள மற்றொரு சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் செய்து வந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்து வரும் பணியை செய்து வந்தான். ஒரு சமயம் பணியாள் நந்தவனத்திற்கு சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்கு திரும்பிய பணியாளன் மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விபரத்தை கூறினான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்ற போது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான். மலர்களை அதிகாலையில் யாரோ பறித்து சென்று விடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன் அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்திற்கு சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்திற்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன் கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட காவலர்கள் விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரசமரத்தின் பொந்திற்குள் சென்று மறைந்து கொண்டது. மன்னன் மரத்திற்குள் அம்பு எய்தான். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. மான் அம்பால் தைக்கப்பட்டிருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்கு பதில் பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. லிங்கம் பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன் சிவனை வேண்டினான். சிவன் மன்னனுக்கு காட்சி தந்து மான் வடிவில் அருள்புரிந்தது தான் என்று உணர்த்தியதோடு மன்னனுக்கு புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான். சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும் இத்தல இறைவனிடம் அளவில்லாத பக்தியுடன் வழிபட்ட தலம். இந்த இந்திரசேனன் மகள் அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி சேர்ந்த தலம்.

சாளுவ மன்னனும் இத்தலத்தில் பிரதோஷ விரதமிருந்து பேறு பெற்றுள்ளான். கருவறை வெளிச்சுவரில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து கோப்பரகேசரி வர்மன் காலத்தியதாகச் சொல்லப்படும் கல்வெட்டுக்கள் உள்ளன. இத்திருக் கோயிலில் உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விக்ரம சோழதேவர், குலோத்துங்க சோழ தேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் இங்கு சிலகாலம் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 263 திருவக்கரை

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 263 வது தேவாரத்தலம் திருவக்கரை. புராணபெயர் வக்ராபுரி. மூலவர் சந்திரமௌலீஸ்வரர், சந்திரசேகரேஸ்வரர், பிறைசூடிய எம்பெருமான். இறைவன் இங்கு சுயம்புலிங்கமாக அருள்பாளிக்கிறார். சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் திருமேனி மும்முகத்துடன் உள்ளார். சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் எனப்படும். தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன. இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் ஆகும். லிங்கத்தின் மூன்று முகங்களும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோரின் முகங்களைக் குறிக்கிறது. அம்பாள் அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, சந்திர தீர்த்தம். வராக நதிக்கரையில் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் இடப்பக்கம் வக்கிரகாளி உருவம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் வடக்கு நோக்கிய அஷ்டபுஜகாளி கோவில் உள்ளது.

அஷ்டபுஜகாளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்ர ராஜ எந்திரம் உள்ளது. சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருக்கரங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலை இடத் தோளிலிருந்து இறங்கி கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. காளியின் சந்நிதிக்கு எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். இந்த லிங்கத்திற்கு வக்கிர லிங்கம் என்ற பெயரும் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேரே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரிய கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபுறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது. 2 வது கோபுரம் வழியே உள் நுழைந்து உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதியும் முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் காணலாம். கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள், விநாயகர், ஆறுமுகர், துர்க்கை உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. துவார பாலகர்கள் இருபுறமும் இருக்கின்றனர். உள்சுற்றில் நால்வர் சந்நிதி உள்ளது. சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்களாக வரிசையாக உள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது.

குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்து இப்பகுதியை ஆண்ட வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசுரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால் அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள். வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள். வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் 2 வது பிராகாரத்தில் மேற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார். வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கிறது. வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்கு மேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பு வக்கிரதாண்டவம் ஆகும். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன.

நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது. காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும். இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.
இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் அதே தோற்றததோடு இன்று கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள பழைய செங்கல் கட்டுமான கோயில்களை கற்றளிகளாக மாற்றிக் கொண்டே வந்தவர் ராஜ ராஜனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்கள். திருவக்கரையில் உள்ள வக்கிரகாளி அம்மன் ஆலயத்தை திருப்பணி செய்து கொண்டிருந்த போது நான்கு பனை உயர அளவிற்கு தஞ்சையில் ஒரு கோயிலை ராஜ ராஜன் எழுப்புகிறான் என்ற செய்தி கேட்டு தன்னுடைய பங்களிப்பாக ஏதாவது வழங்க வேண்டும் என்று ஒரு நந்தியை பரிசாக திருவக்கரையிளிருந்து வராக நதிக்கரை வழியாக அனுப்பி வைக்கிறார். நந்தி வராக நதியில் சென்ற போது பெரு வெள்ளம் வந்து ஆற்றில் சிக்கிக்கொண்டு தஞ்சைக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கி விட்டது. தஞ்சை பெருஉடையாருக்கு எதிரே கம்பீரமாக உட்கார வேண்டிய நந்தி தற்போது திருவக்கரை அருகில் உள்ள சன்னியாசி குப்பம் என்ற இடத்தில் நின்று கொண்டுள்ளது. திருஞானசம்பந்தர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 262 அச்சிறுபாக்கம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 262 வது தேவாரத்தலம் அச்சிறுபாக்கம். புராணபெயர் அச்சுஇறுபாகம். மூலவர் ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இறைவன் இங்கு சுயம்புலிங்கமாக அருள்பாளிக்கிறார். அம்பாள் இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். தலவிருட்சம் சரக்கொன்றை. தீர்த்தம் தேவ, பானு மற்றும் சங்கு தீர்த்தம். சிவனின் பிறபெயர்கள் அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். கோவில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது. உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை உள்ளார். கோஷ்ட மூர்த்த சோமாஸ்கந்தருக்குக் கீழே, நாகமொன்று சிவலிங்கத்தை வழிபடுவது, காரைக்காலம்மை தலையால் நடப்பது, கண்ணப்பர் கண்ணைப் பெயர்க்கும்போது இறைவனின் கைவெளிப்பட்டுத் தடுப்பது, ஒரு தலையுடன் இருமான்கள் போன்ற சிற்பங்கள் ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான் தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும் தன்னையும் மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான். முனிவரும் அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன் என்று கூறினார். சீனிவாசர் அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கின்றனர்.

வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் அச்சுமுறி விநாயகர் என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்.

அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு விநாயகர் துதி பாடி பிறகு தான் திருப்புகழ் பாடத் தொடங்கினார். விநாயகர் துதியில் முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார். பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது ரத்தம் வெளிப்பட்டது. உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன் உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு திரிநேத்ரதாரி எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும் அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன் சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். புரியாத மன்னன் காரணம் கேட்டான். உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே உங்களுக்கு காட்சி தந்த உமை ஆட்சீஸ்வரருக்கு பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும் எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு பிரதான கருவறையுமாக வைத்து கோயில் கட்டினேன் என்றார் திரிநேத்ரதாரி. பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்கிறது. கண்ணுவ முனிவர் கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 261 திருக்கழுகுன்றம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 261 வது தேவாரத்தலம் திருக்கழுகுன்றம். புராணபெயர் கழுகுன்றம், வேதாசலம், கதலிவனம். மூலவர் வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர். இறைவன் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். அம்பாள் சொக்கநாயகி, திரிபுரசுந்தரி. தீர்த்தம் சங்குத் தீர்த்தம்.. தலவிருட்சம் வாழை. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற திருமுறைத் தலங்கள் 44. அவற்றில் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்றாகும். வேதமே மலையாய் இருப்பதால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. மலைமேல் ஒரு கோயிலும் மலையின் கீழே ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. மலை மேல் இருக்கும் கோவில் திருமலை என்றும் ஊருக்குள் இருக்கும் கோவில் தாழக்கோயில் என்றும் அழைக்கப்பபடுகிறது. மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும் தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும் அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்தார். அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது. 565 படிக்கட்டுகளுடன் மலை மீது உள்ள மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும் 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் இராஜகோபுரம் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும் அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இல்லை. இறைவன் மட்டுமின்றி இறைவியும் சுயம்பு ஆகும். கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது.

பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாயுச்சியம் (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) பதவிக்காக தவம் இருந்தனர். தவத்தின் முடிவில் முடிவில் இறைவன் தோன்றி சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) பதவியாக வரம் தந்து இப்பதவியில் சில காலம் இருங்கள் பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்து இறைவனுடன் வாதிட்ட புத்திரர்களை கழுகுருவம் அடைக என்று சாபமிட்டார். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். கழுகுகளுக்கு உணவு கொடுக்கும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. முதல் யுகத்தில் சாபம் பெற்ற சண்டன் பிரசண்டன் என்னும் கழுகுகளும் இரண்டாம் யுகத்தில் சம்பாதி ஜடாயு என்னும் கழுகுகளும் மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன் மாகுத்தன் என்னும் கழுகுகளும் நான்காம் யுகத்தில் சம்பு ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. இறைவனின் வரத்திற்கு சாரூபம் (இறைவனின் உருவை ஒத்த நிலையடைதல்) ஏற்ப இந்த கழுகுகள் இறைவனாகவே பக்தர்களால் வழிபடப்பட்டன. கழுகுகள் இராமேஸ்வரத்தில் ஸ்னானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு பட்சி தீர்த்தம் என்றும் திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று. சில வருடங்கள் முன்பு வரை இக்கழுகுகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு சென்று கொண்டிருந்தது. இப்போது அவைகள் வருவதில்லை.

மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வரலாம். ஆயினும் கீழே இறங்குவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது. அவ்வழியே இறங்கி வந்தால் பல்லவர் மகேந்திரவர்மன் காலத்திய கி.பி. 610 – கி.பி. 640 குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது. கோவிலினுள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது. ஊருக்குள் இருக்கும் 2வது கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம் ஆகும். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. 4 கால் மண்டபத்தையடுத்து 2 வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும் போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும் கரையில் நந்தியும் உள்ளது.

மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் உள்ளார். 2வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பிகைக்கு தினமும் பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு என வருடத்தில் மூன்று நாட்கள் மட்டும் திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. நடராச சபை உள்ளது. உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர் அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து 63 நாயன்மார்களும் உள்ளனர். பைரவர் வாகனமின்றி உள்ளார்.

இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான். தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலை மீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது. தாங்கவே முடியாத வெப்பம் மறுநாள் கருவறை திறக்கும்போது இருக்கும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது. 10.11.1930 நடந்த போது ஆராய்சியாளர்கள் ஆராய்ந்து இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

சங்கு தீர்த்தம் கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து கொடுத்தார் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது. 2011 ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும். சங்கு கரை ஒதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

நீராழி மண்டபமும் நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் உள்ளன. 1. இந்திர தீர்ததம். 2. சம்பு தீர்த்தம். 3. உருத்திர தீர்த்தம். 4. வசிட்ட தீர்த்தம். 5. மெய்ஞான தீர்த்தம். 6. அகத்திய தீர்த்தம். 7. மார்க்கண்ட தீர்த்தம். 8. கோசிக தீர்த்தம். 9. நந்தி தீர்த்தம். 10. வருண தீர்த்தம். 11. அகலிகை தீர்த்தம். 12. பட்சி தீர்த்தம். சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம். வேதமே மலையாக அமைந்த தலம். கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம். சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்துள்ளார்கள். இறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றி பாடிய தலம். மாணிக்கவாசகருக்கு இறைவன் காட்சி தந்த தலம். மாணிக்கவாசகர் இத்தலத்தைப்பற்றி திருவாசகத்தில் பாடியிருக்கிறார். என் உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பாடி புகழப்பெற்ற தலம். இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் தலபுராணம் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலம் உலகளந்த சோழபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். சுந்தரர், அருணகிரிநாதர், பட்டினத்தார், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 260 திருவடிசூலம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 260 வது தேவாரத்தலம் திருவடிசூலம். புராணபெயர் திருஇடைச்சுரம், திருவிடைச்சுரம். மூலவர் ஞானபுரீஸ்வரர், இடைசுரநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார். இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. அம்பாள் கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை. அம்பாள் பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். தீர்த்தம் மதுரா தீர்த்தம். தலவிருட்சம் வில்வம். பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.

கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரம் வலம் வரும் போது கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதி உள்ளது. பிரகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சம் வில்வமரம் உள்ளது. இந்த வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது. தெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. சந்நிதிக்குள் நுழைந்தால் ஒரே இடத்தில் நின்றபடி இறைவன் இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர். வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர் சந்நிதியும் வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும் வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள திருஞானசம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய திருஞானசம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய திருஞானசம்பந்தரிடம் இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். அவரிடம் இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன் அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய திருஞானசம்பந்தர் அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் திருஞானசம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்து விட்டான். திகைப்படைந்த திருஞானசம்பந்தர் சிவபெருமானை வேண்ட சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை காட்சிகுளம் என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன் அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து வலது காலை பின்னே வைத்தபடி நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில் காட்சி தருகிறாள். சிவன் இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் காரணம் கேட்டாள். திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் திருஞானசம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான் அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள். சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார். பழைமையான கருங்கல் கட்டமைப்புடைய திருக்கோயில் இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள பாடலில் இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

மூன்று கால் சித்தர்

உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர்.

அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார். இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .

அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திருப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார். முனிவரும் அப்பனே என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார். அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.