கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானம் அளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக, பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று அதைத் தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது. மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார் மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை. பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன். அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல் அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் இந்தப் பாவம் யாரை சேரும்? குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்க வேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும் என்றான். சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அந்த நாட்டிற்கு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். அத்துடன் அவள் அந்த அந்தணர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்தப் பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நீதி: சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி துன்பம் இழைக்காதவரைப் பற்றி சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாக்கூடாது.

மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -3

துவாரகையில் இருந்து பெண்கள் குழந்தைகள் அர்ஜூனன் தலைமையில் அஸ்தினாபுரம் செல்லும் வழியில் கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களை கொள்ளையடித்தனர். அவர்களை துணிச்சலை குறித்து அர்ஜுனன் நகைத்தான். உடனே திரும்பி ஓடாவிட்டால் திருடர்கள் அத்தனை பேரும் அழிந்து போவீர்கள் என்று அர்ஜுனன் எச்சரிக்கை செய்தான். ஆனால் இந்த எச்சரிக்கையை கொள்ளையர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் போக்கில் அவர்கள் பொருட்களை சூறையாடினார்கள்.

அர்ஜுனன் அக்கணமே தன்னுடைய வில்லின் அம்பை பொருத்தி சண்டையிட முன் வந்தான். ஆனால் அவனது ஆயுதம் செயலற்றுப் போனது. அவன் கற்ற அஸ்திர மந்திரங்கள் அனைத்தும் மறந்து போனது. மகாபாரதப் போரில் தலை சிறந்த வில்லாளியாக இருந்த அர்ஜுனன் இபொழுது ஆதரவற்ற சாதாரண மானிட நிலைக்கு வந்துவிட்டான். பெண்கள் சிலரை மட்டும் ஏதோ ஒரு பொக்கில் தன்னால் இயன்றவரை காப்பாற்றினான்.

பெண்களில் பெரும்பான்மையோர் கைவசம் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதைக்குறித்து அர்ஜுனன் மிகவும் வேதனைப்பட்டான். துவாரகையிலிருந்து அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தவர்களுக்கு வசிப்பதற்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட்டன. ருக்மணி சத்தியபாமாவும் காட்டிற்கு சென்று தவம் புரிந்து தங்கள் வாழ்க்கையை முடிக்க தீர்மானித்து காட்டிற்கு சென்றனர்.

பலராமனும் கிருஷ்ணனும் இல்லாத இந்த நிலவுலகம் நிர்மூலமாகி விட்டதை அர்ஜுனன் உணர்ந்தான். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் குழப்பத்துடன் இருந்த அர்ஜூனன் முன் வியாசர் தோன்றினார். அவருக்கு பணிவுடன் தனது வணக்கத்தை தெரிவித்தான். தான் கற்றிருந்த அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் எல்லாம் மறைந்து போயிற்று. ஆற்றல் அற்றவனாக நிற்கின்றேன். பெண்களை காப்பாற்ற இயலாமல் போயிற்று இதற்கான காரணம் என்ன என்று தனக்கு தெளிவு படுத்துமாறு வியாசரிடம் அர்ஜூனன் கேட்டான்

கருத்து மிக நிறைந்த விஷயத்தை அர்ஜுனனுக்கு எடுத்து வியாசர் விளக்கினார். பாண்டவர்களாகிய நீங்கள் மண்ணுலகிற்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியது. கிருஷ்ணனும் பலராமனும் வந்த காரியம் முடிவுற்றது. இனி வரும் காலத்திற்கு நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் இவ்வுலகத்திற்கு தேவை இல்லை. நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் எல்லாம் தனது வேலை முடிந்ததும் தங்களுக்கேற்ற தேவதைகளிடம் போய்ச் சேர்ந்து விட்டது. ஆகையால் அனைத்தும் உனக்கு மறந்து போயிற்று. இனி நீயும் உன் சகோதரர்களும் இந்த உலகை விட்டுப் புறப்படுங்கள் என்று வியாசர் அர்ஜுனனிடம் கூறினார்

மௌசல பருவம் முற்றியது அடுத்து மகாபிரஸ்தானிக பருவம்

தொடரும்………….

இறைவன் அருள்

ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு காட்டு வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர் அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். காட்டில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும் இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காட்டின் மத்தியில் செல்வந்தர் பெரிய கூடாரம் அமைத்து அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு கொடுப்பதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார். காட்டு வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனித தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து இறைவனை வணங்கி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். செல்வந்தர் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும் உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது. அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை.

அவர் இறைவனை வணங்கி தனது பூஜைகளை முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து இறைவனை வழிபட்ட பின்னர் அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார். ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் காட்டில் நீண்ட நேரம் யாரும் காணவில்லை. செல்வந்தர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் செல்வந்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை மனமார வரவேற்று உபசரித்த செல்வந்தர் சொன்னார். வாருங்கள் கை கால் கழுவி விட்டு இறைவனை வழிபடுங்கள். உணவு தயாராக இருக்கிறது என்றார். அதற்கு பயணி நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனை வணங்கியது இல்லை என்றான். செல்வந்தர் வருத்தத்தோடு சொன்னார். இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதை இறை பணியாகவே செய்து வருகிறேன். அதனால் இறைவனை வணங்காதவருக்கு நான் உணவு தருவதில்லை என்றார். அவன் உறுதியாகச் சொன்னான். இறைவனை வணங்கினால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை என்று அவன் பசியோடு அங்கிருந்து வெளியேறினான். பசியுடன் இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார்.

இரவில் அவரது கனவில் இறைவன் வந்தார். என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே என்றார். செல்வந்தருக்கு சுருக்கென்றது. கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வருகிறார் என்று எண்ணி மறு நாளில் இருந்து அவர் இறைவனை வணங்கினால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் என்ற பாகுபாடுகள் எதுவும் இறைவனுக்கு இல்லை. அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது. அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட எல்லாம் வல்ல இறைவன் அருள் இருக்கின்றது.

மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -2

குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு கிருஷ்ணர் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தான். தன்னுடைய மண்ணுலக வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை கிருஷ்ணன் அறிந்து கொண்டான். இவ்வையகத்தில் சாதிக்க வேண்டியவைகளை யாவும் முற்றுப்பெற்று விட்டன. தன் உடலை விட வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பதை கிருஷ்ணர் அறிந்தான்.

உல்லாசப் பயணமாக விருஷ்ணிகள் கடற்கரைக்கு போனார்கள். அங்கு அவர்களுடைய குடிவெறி வரம்பு கடந்து போயிற்று. அதன் விளைவாக அவர்களிடையே சச்சரவு உண்டானது. அது கைச்சண்டையாக உருவேடுத்தது. பிறகு ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல் கொம்புகளை பெயர்த்தெடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். ரிஷிகள் இட்ட சாபத்தின் விளைவாக நாணல் கொம்புகள் பயங்கரமான ஆயுதங்களாக மாறி இருந்தது. சிறிது நேரத்திற்குள் விருஷ்ணி குலத்தினர் முழுவதும் ரிஷிகள் இட்ட சாபத்தின்படி அழிந்தனர். பாற்கடலில் ஆதிஷேசனாக இருந்த பலராமன் இதனை கேள்விப்பட்டதும் தியானத்தில் அமர்ந்து தனது உடலை விட்டுவிட்டு மேலுலகம் சென்றடைந்தான்.

காந்தாரி இட்ட சாபத்தின் படி தன் இனத்தவரின் அழிவை கிருஷ்ணன் அமைதியோடு பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வனத்திற்குச் சென்றார். தன் உடலை விட்டுச் செல்லும் காலம் வந்துவிட்டது என்பதை கிருஷ்ணன் அறிந்து கொண்டார். தன் பாதங்களை வெளியே காட்டிய படி புல் தரையின் மீது யோக நித்திரையில் படுத்தார். பாதத்தை தவிர வேறு எந்த இடத்தில் அடித்தாலும் கிருஷ்ணனுக்கு மரணம் வராது. தூரத்திலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு கிருஷ்ணன் படுத்திருப்பது மான் போன்று காட்சி கொடுத்தது. ஒன்றோடு ஒன்று அமைந்திருந்த கிருஷ்ணனுடைய இரண்டு பாதங்களும் மானின் தலை போன்று காட்சி கொடுத்தன. இதனை கண்ட வேடன் ஒருவன் மான் என கருதி அம்பு எய்தான். அம்பின் நுனியில் கடற்கரையில் அகப்பட்ட இரும்புத்துண்டு இருந்தது. கிருஷ்ணனின் பாதத்தின் வாயிலாக வேடனின் அம்பு கிருஷ்ணரின் உடலுக்குள் பாய்ந்தது. வினைப்பயன் உடலை தாக்கியவுடன் கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய எதார்த்த நிலையை எய்தினார்.

துவாரகையில் நிகழ்ந்த பரிதாபகரமான நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணனுடைய தந்தையாகிய வாசுதேவர் தெரிவித்துவிட்டு தன் உடலை நீத்தார். துவாரகையில் எஞ்சியிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்து அஸ்தினாபுரத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் அளித்தான். உடனடியாக அர்ஜுனன் துவாரகை சென்று கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் செய்ய வேண்டிய சிரார்தம் கடமைகளை முறையாக செய்து முடித்தான். பின்னர் துவாரகையில் எஞ்சி இருந்த பெண்களையும் குழந்தைகளும் தன்னோடு அழைத்துக்கொண்டு அர்ஜுனன் அஸ்தினாபுரம் கிளம்பினான். துயரத்தில் மூழ்கியிருந்த சிறு கூட்டம் கிளம்பி துவாரகையை விட்டு வெளியே வந்தவுடன் துவாரகை கடலில் மூழ்கியது அனைவரும் அஸ்தினாபுரம் நோக்கி சென்றார்கள்

மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -1

கிருஷ்ணனுடைய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்றவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று அவர்களை அவர்களே பெருமை பாராட்டிக் கொண்டனர். அவர்களிடத்தில் கர்வம் வரம்பு கடந்து காணப்பட்டது. துவாரகைக்கு விருந்தினராக மூன்று ரிஷிகள் வந்தார்கள். வந்தவர்களை முறைப்படி வரவேற்க வேண்டும். ஆனால் விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்பற்குப் பதிலாக இவர்களுக்கு நாம் தான் பொருள் உதவி செய்து ஆதரிக்கின்றோம் என்ற மனப்பான்மையுடன் இருந்தனர். மேலும் அங்கு வந்த ரிஷிகளின் திறமையை சோதிக்க அவர்கள் எண்ணம் கொண்டனர்.

ஆடவன் ஒருவனுக்கு கருத்தரித்தது போல் பெண்பால் வேஷம் போட்டு அவனை ரிஷிகள் முன்னிலையில் நிறுத்தினர். இப்பெண்ணுக்கு ஆண் பிள்ளை பிறக்குமா அல்லது பெண் பிள்ளை பிறக்குமா என்று கேட்டார்கள். அதற்கு ரிஷிகள் இவனுடைய வயிற்றில் இருக்கும் இரும்பு துண்டு ஒன்று உங்களுடைய குலம் அழிந்து போவதற்கு காரணமாக இருக்கும் என்று சபித்தார்கள். அதிருப்தி அடைந்திருந்த ரிஷிகள் அக்கணமே அந்த இடத்தை விட்டு வெளியேறினர். குதுகலத்துடன் இருந்த இளைஞர்கள் இப்போது மனம் கலங்கினர். கர்ப்பிணி வேஷம் போட்ட ஆணின் வயிற்றில் கட்டியிருந்த துணி மூட்டையில் இரும்புத் துண்டு ஒன்று இருந்ததை பார்த்தார்கள். அதை பார்த்த பின் அந்த இளைஞர்களிடம் பயம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் அக்கணமே கிருஷ்ணனையும் பலராமனையும் நாடிச் சென்றனர். தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தை அவர்கள் இருவரிடமும் தெரிவித்தனர். இந்த இரும்புத் துண்டை தூளாக்கி சமுத்திரத்தில் போட்டுவிடும் படி பலராமன் அவர்களுக்கு தெரிவித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் தற்செயலாக தூளாகத இரும்பு துண்டு ஒன்றும் சிறிதளவு இரும்புத்தூளும் கடற்கரை ஓரத்தில் விழுந்தது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை. இரும்பை கடலில் போட்டபின்பு தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை தடுத்து விட்டதாக இளைஞர்கள் எண்ணினார்கள். பிறகு இந்த நிகழ்ச்சியும் அவர்கள் அறவே மறந்து விட்டனர். ஆனால் கிருஷ்ணன் அதன் விளைவை அவன் நன்கு அறிந்திருந்தான்

யாதவ குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகள் தங்களுடைய வாழ்வியல் முறையில் சீர்கேடு அடைந்து வந்தனர். இந்திரிய சுகபோகங்களில் அவர்கள் வரம்பு கடந்து ஈடுபட்டனர். சுகஜீவனமும் பெருமிதமான வாழ்வும் பரம்பொருளால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் என அவர்கள் எண்ணி மதுவிலும் காமத்திலும் விருஷ்ணிகள் உச்ச நிலையை அடைந்தனர். சிறிது காலத்திற்கு முன்பு விருஷ்ணிகள் மீது மூன்று ரிஷிகள் விட்ட சாபம் இப்போது வடிவெடுத்து வந்தது. கடலுக்குள் போடப்பட்ட இரும்புத் தூள்கள் நாணல்களாக வடிவெடுத்து உயர வளர்ந்திருந்தன. கடற்கரையில் இருந்த ஒரு இரும்புத் துண்டை வேடன் ஒருவன் கண்டெடுத்தான். அதை அவன் தனது அம்புக்கு கூறாக அமைத்துக்கொண்டான்.

சூரியன் அவதரித்த கதை

பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை செய்வதற்குத் துணையாக ஏழு ரிஷிகளைப் படைத்தார். அவர்களை சப்த ரிஷிகள் என்று அழைப்பார்கள். அவர்கள் மரீஷி, சுத்ரி, அங்கிரஸர், புலத்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்பவர் ஆவர். இவர்களுள் மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்தான் கச்யபர் எனப்பட்டார். மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாத்திரங்களையும் வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று தேர்ச்சி பெற்று ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். இவருடைய மனைவியின் பெயர் அதிதி. கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்த இளைவன் ஒரு நாடகம் ஆடினார்.

அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையிலும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால் அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின் அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு அன்னமிட முயன்றாள். வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான்.

அதிதி என்று பெயர் வைத்துக் கொண்டால் போதுமா? வந்தவரை எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால் வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்றாள். உனக்குக் கணவன்தான் முக்கியம் அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான் மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன் உனது கரு மிருதம் ஆகக் கடவது என்று கடுமையான சாபம் தந்தார் மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. இதனை கேட்ட அதிதி மயக்கமுற்றாள். விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார். மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி.

ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள். இவ்வாறு சூரியனின் அவதாரப் பெருமையை சாம்ப புராணம் என்னும் நூல் விளக்குகிறது.

சூரியனின் பெற்றோர்: காஷ்யப முனிவர், அதிதி.
சகோதரர்கள்: கருடன், அருணன்
மனைவியர்: உஷா, பிரத்யுஷா (சாயாதேவி)
மகன்கள்: எமதர்மன், சனீஸ்வரர், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்.
மகள்கள்: யமுனை, பத்திரை.

தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.