குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி

காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். காசியில் இருக்கும் அதே கால பைரவர் சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்திலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள் காசு இல்லாவிட்டால் குண்டடத்துக்கு வாருங்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் அருளியிருக்கிறார். மூலவர் விடங்கீஸ்வரர். அம்பாள் விசாலாட்சியம்மன். தலவிருட்சம் இலந்தை மரம். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் இக்கோவில் உள்ளது. விடங்கி முனிவர் தவம் இருந்து கட்டிய கோவில் ஆகையால் விடங்கீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இங்குள்ள சுப்ரமண்யர் சிலையில் முருகனின் வாகனமான மயிலின் தலை வழக்கத்துக்கு மாறாக இடப்பக்கம் நோக்கி இருக்கிறது. சூரசம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம் இது

இந்து வனம் அரச மரங்களும் இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லை என்று தவித்த முனிவர் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற விஸ்வநாதர் முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும் அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார். நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். கோபத்தின் உச்சிக்கே போன வடுக பைரவர் அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். கீச் கீச் என கத்தியபடி அந்த விநாடியே மாண்டான் சீசகன். காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர் மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படும் முன் பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி ஆலயம் எழுப்பினார். எட்டு பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் கொன்ற இடம் என்றே வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில் குண்டடம் என்று மருவிவிட்டது.

பஞ்ச பாண்டவர்கள் இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது திரெளபதி மேல் அரக்கன் ஒருவன் ஆசை கொண்டதால் கோபப்பட்ட பீமன் அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான். இதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்கள் ரத்தக்காடு சாம்பல் காடு என்று உள்ளது. காலங்கள் கடந்தன. விடங்கி முனிவர் எழுப்பிய கோவில் வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்து விட்டது.

பிற்கால மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய் கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர சோழ பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும். கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள் இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு. அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார். அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். ஐயா எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள் என்றார். அந்த வியாபாரி இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு என்று பொய் சொன்னார். அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர். மறுநாள் வியாபாரி மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு ஏதோ ஒரு சந்தேகம் வந்து பாண்டிய மன்னன் மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார். வீரர்கள் அப்படியே செய்ய எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள் சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

வியாபாரி கதறினான் பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார். அதையெல்லாம் நம்பும் நிலையில் மன்னன் இல்லை. பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள் என்றான் கோபத்துடன். கதறினான் வியாபாரி. கொங்கு வடுகநாதா என்னை மன்னித்துவிடு என்று புலம்பி அழுதான். நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு என்றார். மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான். என்னுடைய பெண் பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன் நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன் என்றான் மன்னன். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள் தந்தையே என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும் தந்தையை நோக்கி நடந்து வந்தான். பரவசமடைந்த பாண்டிய மன்னன் என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று துதித்தான். வடுக பைரவர் நானும் விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன் என்று சொல்லி மறைந்தார் பைரவர்.

கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது பயறு பழையபடி மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு குண்டடம் சென்றான் மன்னன். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும் விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -23

பரதனும் சத்ருக்கனனும் அயோத்திக்குள் நுழைந்ததும் கண்ட காட்சி அவர்களை பயம் கொள்ளச்செய்தது. எப்போதும் கலகலவென்று மகிழ்ச்சியுடன் மங்கள வாத்தியங்களுடன் இருக்கும் அயோத்தி நகரம் இப்போது துக்கத்துடன் அமைதியாக இருந்தது. பார்க்கும் அனைவரது முகங்கிளிலும் துக்கமே தென்பட்டது. கவலையை அடக்க முடியாமல் இருவரும் விரைவாக அரண்மனை கோட்டை வாயிலுக்குள் நுழைந்தார்கள். அரண்மனை அலங்காரமில்லாமலும் சரியாக மெழுகி கோலமிடாமலும் இருந்தது. அனைவரும் துக்கத்தில் சாப்பிடாமல் பட்டியினியில் இருந்தது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. நடக்கக்கூடாத விபரீதம் எதோ நடத்துவிட்டது என்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள். தசரதரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கு தசரதர் இல்லை. கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். பரதனைக்கண்டதும் கைகேயி ஒடிவந்து கட்டி அணைத்தாள். கைகேயியிடம் வீழ்ந்து வணங்கினான் பரதன்.

பரதனிடம் மகாராஜாவாக இருப்பாயாக என்று ஆசிர்வதித்தாள். என்ன ஆயிற்று இங்கு ஏன் அனைவரும் துக்கத்தில் இருக்கின்றார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தூதுவர்கள் அவசரமாக வர வேண்டும் இது வசிஷ்டர் ஆணை என்று சொன்னபடியால் விரைவாக வந்திருக்கின்றோம். அயோத்தி நகரம் முழுவதும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தந்தையை சந்திக்க அவரது மாளிகைக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. அவருக்கு எனது வணக்கத்தை செலுத்த வேண்டும் அவர் எங்கிருக்கின்றார். என்ன நடந்தது. நடந்தவற்றை கூறுங்கள் என்று கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தான் பரதன்.

உன் தந்தை உலகத்தில் பிறப்பவர்கள் அடைய வேண்டிய சுகபோகங்களை அனைத்தையும் அனுபவித்துவிட்டார். பெரும் பாக்கியவானான அவர் பெரும் புகழை பெற்றார். செய்ய வேண்டிய பெரும் வேள்விகள் அனைத்தையும் செய்து முடித்தார். இந்த மண்ணுலகில் உடல் எடுப்பவர்கள் எல்லாம் இறுதியில் சென்று சேர வேண்டிய இடத்திற்கு உன் தந்தை சென்றுவிட்டார் என்றாள். தந்தை மடிந்தார் என்ற செய்தி கேட்டதும் குழந்தை போல் தரையில் வீழ்ந்து கதறிபதறி அழுதான் பரதன். அவனிடம் கைகேயி இந்த வையகத்தை ஆளும் அரசன் ஒருவன் இறந்தவர்களை எண்ணி இப்படி தரையில் விழுந்து புலம்ப கூடாது. அது அரசனுக்கு அழகில்லை. தருமமும் வேள்வியும் செய்யும் பதவியில் அமரப்போகிறாய். உன் முகம் சூரியனைப்போல் ஜோதியாக பிரகாசிக்கறது. உனக்கு ஒரு குறையும் இல்லை. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள ராஜ பதவியை ஏற்றுக்கொண்டு இந்நாட்டை ஆள்வாயாக. மனக்கலக்கத்தை விட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்து நில் என்றாள். பரதனுக்கு கைகேயி கூறியதன் பொருள் புரியவில்லை.

என்னுடைய சகோதரன் ராமருக்கு நான் வந்து விட்ட செய்தியை அனுப்புங்கள். அறம் அறிந்த அண்ணன் தந்தைக்கு சமமானவர். வணக்கத்திற்குறிய அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்றான். இனி எனக்கு அவர் தான் புகலிடம் என்றான். மேலும் நான் திரும்பி வருவதற்கு முன்பாகவே உயிர் போகும்படியாக என்ன நோய் தந்தையை பீடித்தது. அவர் இறப்பதற்கு முன்பாக ஏதேனும் ஆணையிட்டிருந்தால் சொல்லுங்கள். அதனை நான் செய்து முடிக்கிறேன் என்றான்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -22

தசரதர் கௌசலையிடம் நீ என் கண்களுக்கு தெரியவில்லை. மரணம் என்னை நெருங்குகிறது. ராமர் திரும்பி வரும் வரையில் என் உடம்பில் உயிர் இருக்காது. தபஸ்வியின் தந்தையிட்ட சாபத்திலிருந்து நான் தப்ப முடியாது. மார்பு அடைக்கிறது. கௌசலை சுமித்ரை ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்த தசரதரின் வார்த்தைகள் அடங்கி மூச்சு நின்றது. அடிக்கடி தசரதர் மயக்கம் அடைவதும் பின்பு எழுவதுமாக இருந்தபடியால் அவர் உயிர் பிரிந்தது யாருக்கும் தெரியவில்லை. கௌசலையும் சுமித்ரையும் அந்தப்புரத்தில் ஓர் மூலையில் அழுதபடியே தூங்கிவிட்டனர். காலை விடிந்தது. அரண்மனை வழக்கப்படி அரசனை எழுப்ப அவரது அறைக்கு வெளியே ஊழியர்கள் இறை நாமத்தை பாடி வாத்தியங்கள் வாசித்தனர். நீண்ட நேரம் வாசித்து பாடியும் அரசன் எழுந்திருக்கவில்லை. அரசன் எழுந்ததும் அவரது தேவைக்கான பணிகளை செய்யும் பணியாட்கள் வெகுநேரம் காத்திருந்து விட்டு அரசனின் அறைக்குள் நூழைந்தனர். அரசன் உயிரற்று கிடப்பதை கண்டார்கள். அரண்மனை முழுவதும் செய்தி பரவியது. மூன்று மனைவியர்களும் துக்கம் தாங்காமல் அழுதார்கள். கௌசலை தசரதரின் கையை பிடித்துக்கொண்டு மகனும் பிரிந்து சென்றுவிட்டான். கணவரும் இறந்துவிட்டார். நான் இனி அனாதையாக உலகில் வாழதேவையில்லை ஆகவே தசரதருடன் உடன்கட்டை ஏறுவேன் என்று கதறினாள்.

ராமர் லட்சுமணனும் காட்டிற்கு சென்றுவிட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் தாத்தா வீட்டில் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அரசருடைய புதல்வர்கள் யாரும் அருகில் இல்லை. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. வசிஷ்டரிடம் செய்தியை சொல்லி அவரது கருத்துக்களை கேட்டார்கள். வசிஷ்டர் முதலில் விரைவாக செல்லும் குதிரை வீரனை பரதனிடம் அனுப்பி தசரதர் இறந்த செய்தியை சொல்லாமல் விரைவாக பரதனும் சத்ருக்கனனும் உடனே அயோத்திக்கு வரவேண்டும் இது வசிஷ்டர் உத்தரவு என்ற செய்தியை மட்டும் சொல்லுமாறு அனுப்பிவைத்தார். அடுத்து பரதனும் சத்ருக்கனனும் வரும் வரையில் தசரதரின் உடலை மூலிகை எண்ணை கொப்பரையில் போட்டு பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டார்.

அடுத்த நாள் அதிகாலையில் பரதனுக்கு சோகம் ததும்பிய கனவு ஒன்று கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். கனவைப்பற்றி மனக்குழப்பம் அடைந்தான். அதேநேரம் அயோத்தி குதிரை வீரனும் கைகய நாட்டிற்கு வந்து பரதனிடம் செய்தியை சொன்னான். கனவு கண்ட குழப்பத்தில் இருந்த பரதன் வசிஷ்டர் உத்தரவை ஏற்று சத்ருக்கனனை அழைத்துக்கொண்டு தாத்தாவிடமும் மாமாவிடமும் விடை பெறுவதற்கான நேரம் கூட இல்லாமல் உடனடியாக அயோத்திக்கு கிளம்பினார்கள். சகோதரர்கள் இருவரும் குதிரை சவாரியில் நிபுணர்கள். அயோத்திக்கு விரைந்தனர். கைகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வரும் வழியெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருவரும் வந்தார்கள். அயோத்தியில் எதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று இருவருக்கும் புரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. குழப்பத்துடனேயே பயணம் செய்தனர். தந்தை தாய் அண்ணன் என்று அனைவரையும் பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமும் பயம் கலந்த குழப்பம் ஒரு புறமுமாக சிந்தித்துக்கொண்டே அயோத்தி எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள்.

இறைவன் கணக்கு

பலருக்கு அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் இருக்கிறாரோ என்ற வருத்தம் ஏற்படும். நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று வருத்தப்படுவோம். அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் இறைவன் கணக்கு யாருக்குத் தெரியும் என்பார்கள். சிறு கதை ஒன்று இதற்கான தெளிவினைக் கொடுக்கும்.

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம் பெருத்த மழை. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்றார் வந்தவர். இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இருக்கின்றது. இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ளலாம் என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும். நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். மூன்று ரொட்டிகளை கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் மட்டுமா என்று வாதிட்டார். மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டதக்கது என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம் என்றார். சுமுகமான முடிவு எட்டாததால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்ப்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்டவர் மன்னா இது அநியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார். அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி அதற்கு இதுவே அதிகம் என்றார். கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -21

தசரதர் கௌசலையிடமும் சுமித்ரையிடமும் பல வருடங்களுக்கு முன்பு தான் சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். சிறுவயதில் பலவகையான வில்வித்தைகளை கற்றேன். அதில் ஒன்று சத்தம் வரும் திசையை நோக்கி குறி பார்த்து அம்பு எய்வது. அதில் தேர்ச்சி பெற்றேன். ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றிருந்தேன். நீண்ட நேரம் வேட்டையாடியதில் இரவு வந்துவிட்டது. ஆற்றில் இரவு தண்ணீர் குடிக்க விலங்குகள் வரும். தண்ணீர் குடிக்கும் போது தண்ணீரின் சத்தத்தை வைத்து விலங்குகளை நோக்கி அம்பு செலுத்தி பரீட்சித்துப்பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஒரு யானை தண்ணீர் குடிக்கும் சத்தம் போல் கேட்டது. உடனே சத்தத்தை வைத்து குறிபார்த்து அம்பு எய்தேன். என்னுடைய அம்பு சரியான குறியை தாக்கியது. ஆஆஆ என்று ஒருவனின் சத்தம் கேட்டது. மனிதக்குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே தண்ணீர் எடுக்க வந்த என்னை கொன்று விட தீர்மானித்துவிட்டார்களே என்று பரிதாபக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.

அங்கு ஒரு தபஸ்வி உடல் முழுவதும் ரத்தம் படிந்த கரையோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து வீசிய ஒளி என்னை சுடும் போல் இருந்தது. என்னை யார் கொல்ல துணிந்தார்கள். நான் விரதவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது தந்தைக்கும் தாய்க்கும் கண் தெரியாது. நான் இறந்தவுடன் இனி எப்படி அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று புலம்பினான். அவர் முன்னிலையில் சென்றதும் பாவி நீயா என் மீது அம்பெய்தாய். உன்னால் நான் இறக்கப்போகிறேன். நான் தண்ணீர் கொண்டு வருவேன் என்று கண்ணில்லாத என்னுடைய தாய் தந்தையர் வீட்டில் எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். நான் இங்கே இறப்பதே என் தாய் தந்தைக்கு தெரியாமல் போய்விடும். தெரிந்தாலும் அவர்களால் இங்கு வர இயலாது. நீ யார் என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் யானை நீர் அருந்திக் கொண்டிருக்கின்றது என்று எண்ணி அம்பெய்தேன் இருட்டில் நீ தான் என்று தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்றேன். அதற்கு அவன் என்னுடைய தாய் தந்தையரிடம் சென்று அவர்களிடம் சரண்டைந்துவிடுங்கள். இல்லையென்றால் அவரின் கோபம் என்னை எரித்துவிடும் என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான்.

தருமப்படி அவர் சொல்வதே சரியானது என்று முடிவு செய்து அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்றேன். அவரின் பெற்றோர் மிகவும் வயோதிகர்களாகவும் நகர முடியாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் சாப பயத்தினால் மிகவும் தயங்கி அவர்களிடம் நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி உங்கள் திருஉள்ளம் எப்படியோ அதன்படி எனக்கு சாபம் கொடுங்கள் மகா பாதகத்தை செய்த நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். தந்தை பேச ஆரம்பித்தார். நீ செய்தது மிகப்பெரிய பாவம். ஆயினும் தெரியாமல் செய்தாய். தைரியமாக என்னிடம் வந்து சொல்லவும் செய்தாய். ஆகையால் பிழைத்தாய். எங்களை அங்கே அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களை அங்கே தூக்கிசென்றேன். மகனுக்குரிய சடங்குகளை செய்துவிட்டு சிதை முட்டினார்கள். நாங்கள் அனுபவிக்கும் புத்ர சோகத்தை நீயும் அனுபவிப்பாயாக என்று சொல்லிவிட்டு அவர்களும் சிதையில் இறங்கி உயிர் நீத்தார்கள். அவரின் சாபமே என்னை இந்த புத்ர சோகத்தில் தள்ளிவிட்டது. முதியவர்களுக்கு புத்ர சோகத்தை உண்டாக்கிய பாவம் இப்போது என்னை கொல்ல போகிறது என்று மயக்கமடைந்தார்.

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. வேதவியாசர் அருளிய நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

  1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]
  2. கலியுகத்தில் பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]
  3. ஆண்களும் பெண்களும் வெறும் உடல் சுகத்திற்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். [பாகவத புராணம் 12.2.36)
  4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலி குருமார்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]
  5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]
  6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்று அறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]
  7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]
  8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.[பாகவத புராணம் 12.2.9]
  9. கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]
  10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]
  11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]
  12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]
  13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]
  14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]
  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழி பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்ல பல விதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -20

அயோத்தியில் தசரதர் தேரோட்டி சுமந்திரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். ஒரு வேளை மனதை மாற்றிக்கொண்டு ராமர் சுமந்தரனோடு திரும்பி வந்துவிடுவான் என்ற மனக்கோட்டையில் இருந்தார். அயோத்தி நகரை சுமந்திரன் நெருங்கினான். வழக்கமாக நகரத்தில் இருந்து வரும் சத்தம் ஒன்றும் இல்லாமல் பாழடைந்த ஊரைப்போல அமைதியாக இருந்தது அயோத்தி. ரதம் கோட்டை வாயிலை நெருங்கியதும் மக்கள் சுமந்திரனிடம் ராமர் எங்கே அவரை எங்கே விட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவனை சுற்றிக்கொண்டார்கள். ராமர் கங்கை கரையில் ரதத்தை விட்டு இறங்கி என்னை அயோத்திக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். மூவரும் கங்கை கரையை கடந்து வனத்தில் தனியாக நடந்து சென்று விட்டார்கள் என்றான் சுமந்திரன். மக்கள் அனைவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள். பெண்களின் அழுகை சத்தம் ராஜவீதிகள் முழுவதும் சுமந்தரனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. துக்கத்தினால் தனது முகத்தை மறைத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தான் சுமந்திரன்.

தசரதரின் அறைக்குள் நுழைந்தான் சுமந்திரன். அங்கே குற்றுயிராக இருந்த தசரதரிடம் ராமர் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லினான் சுமந்திரன். தசரதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். அப்போது கௌசலை தசரதரைப்பார்த்து கடுமையாக பேசினாள். உங்கள் சத்தியத்தை காப்பாற்ற வனத்திற்கு மகனை அனுப்பிவிட்டீர்கள். என்னுடைய துக்கத்தில் யார் பங்கெடுத்துக்கொள்வார்கள். உங்களுடைய துக்கத்தை பார்த்து நான் ஆறுதல் அடைந்து கொள்ளமுடியுமா? இங்கு கைகேயி இல்லை நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக பேசுங்கள். உலகமே வியக்கும் வண்ணம் வீரனாக இருக்கும் என் மகனை காட்டில் விட்டு வந்த தங்கள் தேரோட்டி வந்து நிற்கின்றார். அவரிடம் ஒன்றும் பேசாமல் இருக்கின்றீர்கள். ராமர் எங்கே எப்படி இருக்கின்றார் என்று விசாரியுங்கள் என்று கோபமாக கூறினாள். புத்திர சோகத்தில் இருக்கும் தசரதரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் கௌசலை கடுமையாக பேசினாள்.

சுமந்திரன் கௌசலையிடம் சமாதானமாக பேசினான். தேவி மனக்குழப்பத்தை விட்டு தைரியமாக இருங்கள். அயோத்தில் இருப்பது போலவே ராமர் வனத்திலும் ஆனந்தத்துடன் இருக்கிறார். லட்சுமணன் ராமருக்கு பணிவிடைகள் செய்து தன் தரும வாழ்க்கையின் பயனை அடைந்து வருகிறார். சீதை பிறந்தது முதல் காட்டில் இருந்ததைப்போலவே ராமருடன் சந்தோசத்துடன் இருக்கிறாள். உதய சந்திரனைப்போலவே சீதையின் முகத்தில் அழகு சிறிதும் குறையவில்லை. குழந்தையை போல் பயம் இல்லாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றாள். வனவாசத்தில் அவர்களை பார்ப்பது அரண்மணை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர்களை பார்ப்பது போலவே இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் உண்மை. உலகத்திற்கு ஒரு பாடமாக தருமத்தை வாழ்ந்து காண்பிக்கின்றார்கள். அவர்களின் தவம் உலகத்தில் பெரும் புகழுடன் என்றென்றும் நிற்கும் என்று கௌசலையை ஒருவாறு சமாதானப்படுத்தினான். கௌசலை சமாதானமடைந்தாலும் தசரதரை நிந்தித்துக்கொண்டே இருந்தாள்.

மகிழ்ச்சி

புத்தர் தனது சீடர்களை மக்களுக்கு தனது உபதேசங்களை ஊர் ஊராக சென்று சொல்லுமாறு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லவில்லை. காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார். நான் எந்த ஊருக்கு செல்ல வேண்டும். புத்தர் சிரித்தபடி சொன்னார். உனது விருப்பம் நீயே தேர்வு செய் என்றார். ஒரு ஊரின் பெயரை சொல்லி அங்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார் காஷ்யபர். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார் புத்தர். அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ தியான உணர்வோ இல்லாதவர்கள் அந்த பொல்லாதவர்களிம் போக விரும்புகிறாயா என்று கேட்டார் புத்தர். ஆமாம் அங்கு செல்லவே விரும்புகின்றேன் என்றார் காஷ்யபர். உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம் என்றார் புத்தர்.

அந்த ஊருக்குள் சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். மிகவும் மகிழ்ச்சியடைவேன் ஏனென்றால் அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி எனது பணியை ஆரம்பிப்பேன் என்றார்.

ஒருவேளை அவர்கள் உன்னை அடித்தால் என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே என்று இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியடைவேன் என்றார்.

ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டார். மேலும் மகிழ்ச்சியடைவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே என்றார் காஷியபர்.

நீ எங்கும் செல்ல முழுத்தகுதி பெற்றவன். நீ போய்வா காஷியபா என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர். எந்தச் சூழலையும் மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக் கொண்டால் அனைத்தையும் மகிழ்ச்சியாகவே காண முடியும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -19

பரத்வாஜர் முனிவரின் ஆசிரமத்துக்குள் வந்த மூவரையும் ஆசிரமவாசிகள் தக்க மரியாதை செய்து வரவேற்றார்கள். ராமர் உலக நன்மைக்காக அரிய பல பெரிய செயல்களை செய்ய அவதரித்திருக்கிறார் என்று பரத்வாஜ முனிவர் அறிந்திருந்தார். வந்த மூவரையும் வரவேற்ற பரத்வாஜர் அங்கு வந்த காரணத்தை கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு சித்ரகூடம் என்னும் மலையைப் பற்றி சொன்னார். தெய்வீக இடத்திற்கு நிகரானது என்று அந்த இடத்தின் பெருமையை சொல்லி ஆத்ம சாதனங்கள் செய்ய ஏற்ற இடம் அங்கு செல்லுங்கள் என்றார். சித்ரகூடத்திற்கு செல்லும் வழி அடர்ந்த காட்டுப்பகுதி என்றும் அதனை கடப்பதற்கான வழிமுறைகளையும் செல்லும் வழியில் இருக்கும் சில சிறப்பு வாய்ந்த இடங்களைப்பற்றியும் கூறினார் பரத்வாஜர். அன்று அரவு அங்கு தங்கி விட்டு அதிகாலையில் பரத்வாஜர் ஆசிரமத்தில் இருந்து சித்ரகூடம் என்னும் இடத்திற்கு கிளம்பினார்கள்.

ராமர் லட்சுமணனிடம் நீ முன்னால் சென்று சீதை கேட்கும் பூக்கள் கனிவகைகளை பறித்துக்கொடுத்து முன்னால் செல். ஆயுதத்துடன் பாதுகாப்பாக பின்னால் நான் வருகிறேன் என்றார். லட்சுமணன் செடி கொடிகளை வெட்டி வழி எற்படுத்திக்கொண்டே முன்னால் சென்றான். லட்சுமணனுக்கு பின்னால் சீதையும் அவளுக்கு பாதுகாப்பாக ராமர் பின்னால் சென்றார். செல்லும் வழியில் இருக்கும் பறவைகள் விலங்குகள் செடி கொடிகளைப்பற்றியும் மலர்களைப்பற்றியும் கேள்விகள் கேட்ட வண்ணம் சென்று கொண்டிருந்தாள் சீதை. அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே ராமர் அவள் பின்னால் வந்து கொண்டிருந்தார். மூவரும் உல்லாச பயணம் செல்வது போல மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பரத்வாஜர் குறிப்பட்ட பெரிய ஆலமரம் ஒன்று வந்தது. அந்த ஆலமரத்தடியில் பரத்வாஜர் வழிகாட்டுதலின்படி சீதை பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்தாள். நடுவே ஆறு ஒன்று குறிக்கிட்டது. பரத்வாஜர் கூறியபடி மரக்கட்டைகளை வைத்து சிறிய ஓடம் செய்து அதில் பயணித்து சித்ரகூட மலை அடிவாரத்தை அடைந்தார்கள். .

சித்ரகூடத்தில் வண்ணப்பூக்களும் செடிகளும் பூத்துக்குலுங்கின. பூக்கள் மலர்ந்து உதிர்ந்து நடக்கும் இடமெல்லாம் பூக்களாக இருந்தது. அந்த இடத்தை பார்க்க பார்க்க அந்த இடத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது. பழங்களும் கிழங்குகளும் நிறைய வளர்ந்திருந்தது. நீர் அருந்துவதற்கு மிகவும் சுவையுள்ளதாக இருந்தது. இந்த இடத்திலேயே குடில் அமைத்து தங்கிவிடலாம் என்றார் ராமர். சீதையும் லட்சுமணனும் அமோதித்தார்கள். லட்சுமணன் எல்லா வசதிகளுடன் காற்றுக்கு அசையாத பெரிய மழையை தாங்கும் வலிமை கொண்ட குடிலை கட்டி முடித்தான். ஐன்னலும் கதவுகளுடன் காற்றோட்டம் மிகுந்த வீடாக இருந்தது. சித்ரகூட மலைபிரதேசத்தில் நதிக்கரை ஓரத்தில் இந்திரன் சொர்க்கத்தில் வசிப்பது போல் மகிழ்ச்சியுடன் தங்கள் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தை ஆரம்பித்தார்கள்.

கர்மயோகம்

ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன் தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான். தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். உடனே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாகிவிட்டான். மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது தோழனின் நிலையைக் கண்டு கதறி அழுதான். இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம் மற்றொரு ஆள் சாபத்தை நீக்குமாறு வேண்ட எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குருவிடம் அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா என்று சொல்லிவிட்டு தன் குருவைத் தேடிச் சென்றார் சுதீவர். தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார் சுதீவர். அதற்கு குரு மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம் என்றார். அதற்கு சுதீவர் இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார். சுதீவா விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம் என்றார்.

சுதீவர் மாதவனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகிலே கிறங்கிப் போய் அவளையே உற்றுப் பார்க்க அதனால் கோபமடைந்த அந்தப் பெண் முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா உனக்கு வெட்கமாக இல்லையா என்றுகேட்டதும் சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. பெண்ணே உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம் நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய் என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள். பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழி கேட்டார். அதற்கு அவன் மாதவனுடைய பெண் மிக அழகானவள். அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று சுதீவர் சபித்துவிட்டு மாதவனின் வீட்டைக் கண்டு பிடித்தார். சுதீவரை மாதவன் வரவேற்று அமரச் செய்தார். என் குரு தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள் என்று கேட்டார். காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். கோபம், பொறாமை, ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன் என்றார் மாதவன்.

பூஜை புனஸ்காரம் தவம் இவை எதுவுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சுதீவர் நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா என்றார். கடவுள் என்னிலும் இருக்கிறார். மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் இருக்கிறார். அவரைத் தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை, தியானம், தவம் அனைத்தும் ஆகும் என்றார் மாதவன். சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது. நீங்கள் நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படக் கூறுகின்றீர்களா என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார். சுவாமி நான் உங்களைப் பற்றியோ உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன் என்றார் மாதவன் பணிவுடன். கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். உன்னைப் போன்ற நாஸ்திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய் என்று சாபமிட்டார். மாதவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் மாதவன் பணிவுடன் சுவாமி சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார். மாதவா என் சாபம் உனக்குப் பலிக்கவில்லை ஏன் என்று கேட்டார் சுதீவர்.

சுவாமி காட்டுவாசி அழகான இளம்பெண் வழியில் நீங்கள் கண்ட இளைஞன் ஆகியோருக்கு சாபம் கொடுத்ததினால் தங்கள் தவவலியை போய்விட்டது. எனக்கு மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன். அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும். உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம். அது பலிக்கும் என்றார். தனது செய்கைகளினால் அவமானம் அடைந்த சுதீவர் மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில் தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குருவிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார். தவத்தினால் பல சக்திகளை அடையலாம். கர்ம யோகத்தில் தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும் அனைவரையும் இறைவனாக பாவித்து உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்ட ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான் என்றார். குருவே இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடுமா என்று சுதீவர் சந்தேகம் கேட்டார். மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப்போது அதிகமாகி விட்டது என்றார் குரு. குருவே கோபத்தை குறைத்து நான் மீண்டும் காட்டுக்குத் தவம் புரியச் செல்கிறேன் என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறி விடைபெற்றார் சுதீவர்.