சித்தர்கள்

  1. வல ஓரம் இருப்பவர் ஆந்திரா அணந்தப்பூரூக்கு அருகில் ஜீவசமாதி ஆன ஸ்ரீ ஏரிநாத சுவாமிகளின் சீடர் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள். இவர் வள்ள ளாரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவர் சென்னை திருவெற்றியூரில் ஜுவசமாதி பெற்றுள்ளார்.
  2. மையத்தில் இருப்பவர் நேபாள நாட்டு மன்னர். ஸ்ரீலஸ்ரீ ராஜாராம் சுவாமிகள். இவர் பிரம்ம நிலை உணரப்பெற்றவுடன் நொடியில் நாட்டை துறந்து உலக வாழ்வை விட்டு விலகியவர். இவர் நேபாளநாட்டிலேயே சமாதி ஆனவர்.
  3. இடஓரம் இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ சரவணானந்த பவர் இவர் பல ஆன்மயோகிகளுக்கு வழிகாட்டியாகவும் மன்னருக்கு நன்பராகவும் ஒருஆன்மஞான தூண்டு கோளாகவும் இருந்துள்ளார் இவர் இமயலைச்சரிவில் ஜீவசமாதி கொண்டுளார். இந்த இருவரும் ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி சுவாவாமிகளை சந்திக்க சென்னை வந்த போது கிடைக்கப்பட்ட படம் இது 18ம் நூற்றாண்டின் நிகழ்வு ஆகும்.

சக்குபாய்

பாண்டுரங்கனின் பக்தர்களான கங்காதர் ராவ் கமலாபாய் தம்பதி பண்டரிபுரத்தில் வசித்தனர். அவர்களின் மகள் சக்குபாய். சிறுமியான அவள் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாகத் தம்பூராவுடன் முதியவர் ஒருவர் பாடியபடி வந்தார். அவரது கால் இடறி மணல் வீடு சிதறியது. சக்குபாய் அவரைத் திட்டினாள். மன்னிப்பு கேட்டும் அவளது கோபம் தீரவில்லை. உன் கோபம் தணிய நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். தம்பூராவை எனக்கு தர வேண்டும் என்றாள். முதியவர் தம்புராவை கொடுத்ததோடு அதை எப்படி இசைக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்து ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை சிறுமியின் காதில் ஓதி இதனை செபிக்குமாறு தெரிவித்தார். அன்று முதல் விளையாட்டில் மனம் செல்லாமல் மந்திரம் செபிப்பதிலேயே அவளின் மனம் ஈடுபட்டது. திருமணம் செய்தால் இவள் மனம் மாறுவாள் என நினைத்தனர் பெற்றோர். டில்லியைச் சேர்ந்த மித்ருராவ் திருமணம் செய்து கொண்டார். எப்போதும் சக்குபாய் தியானத்தில் இருப்பதும் மந்திரம் ஜபிப்பதும் மாமியாருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை மாமியார் தன் மகனிடம் இவளை இருட்டு அறையில் கட்டிப்போடு என நிர்பந்தம் செய்தாள். தயக்கத்துடன் மித்ருராவும் மனைவியைக் கயிற்றால் கட்டி வைத்தார். அப்போது துறவி வடிவத்தில் தோன்றிய பாண்டுரங்கன் பிச்சை கேட்டு தெருவில் சென்றார். அவரை பார்த்தார் மித்ருராவ். அருகில் வந்த துறவி வருந்தாதே மகனே என் மந்திர சக்தியால் உன் பிரச்னை தீரும் என்றார். மனைவியின் நோயை உங்களால் தீர்க்க முடியுமா எனக் கேட்டார் மித்ரு ராவ். குணப்படுத்துவேன். இப்போதே ஆற்றங்கரைக்கு அழைத்து வா என்றார் துறவி. மனைவியுடன் சென்றார் மித்ரு ராவ். ஆற்றில் குளிக்கச் சொல்லிய பிறகு நல்ல மருமகளாக இருப்பதே பெண்ணுக்கு அழகு என அறிவுரை சொன்னார். அதன் பின் சக்குபாயிடம் நல்ல மாறுதல் ஏற்பட்டதை கண்ட மித்ருராவ் மகிழ்ச்சி அடைந்தார்.

பாண்டுரங்கன் கோவிலுக்கு சிலர் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் செல்ல சக்குபாயும் விரும்பினாள். ஆனால் அதற்கு மித்ருராவ் சம்மதிக்கவில்லை. சண்டை ஆரம்பமானது. கோபமடைந்த மித்ரு ராவ் சக்குபாயை துாணில் கட்டி வைத்தார். இதுவும் பாண்டுரங்கனின் லீலையே சக்குபாய் என பிரார்த்தனையில் ஈடுபட்டாள். சிறிது நேரத்தில் அவள் முன் மற்றொரு சக்குபாய் வந்தாள். பகவானே சக்குபாயாக காட்சியளித்தார். கட்டை அவிழ்த்து விட்டு பண்டரிபுரம் சென்று தரிசித்து வா என்றாள். அவளும் மகிழ்வுடன் புறப்பட்டாள். சக்குபாய்க்கு பதிலாக பகவான் துாணில் கட்டுண்டு விட்டார். பண்டரிபுரத்தில் சக்குபாய் தரிசித்தாள். பஜனை கோஷ்டியுடன் பாடினாள். பக்தியில் திளைத்ததால் குடும்பத்தையே மறந்தாள். வீட்டுத் துாணில் கட்டிருந்த சக்குபாய் சுவாமி என்னை மன்னியுங்கள். நான் இனி உங்கள் சொல்படி நடப்பேன். என்னை அவிழ்த்து விடுங்கள் என கணவரிடம் கெஞ்சினாள். கட்டை அவிழ்த்து விட்டார். அன்று முதல் சக்குபாய் (பகவான்) கணவருக்கும் மாமியாருக்கும் பணிவிடை செய்தாள். நாட்கள் கடந்தன.

பண்டரிபுரத்தில் இருந்த சக்குபாய் குடும்பத்தை மறந்து பக்தியில் ஈடுபட்டாள். பூக்களைப் பறித்து மாலையாக்கி பகவானுக்கு தினமும் சாத்தினாள். ஒரு நாள் பூப்பறிக்கும் போது பாம்பு தீண்ட மயங்கி விழுந்தாள். அங்கு இருப்பவர்கள் ஆபத்தான நிலையில் சக்குபாய் கிடக்கும் செய்தியை கணவரான மித்ருராவிடம் தெரிவித்தனர். அதே நேரம் வைத்தியராக தோன்றிய பகவான் விஷத்தை முறிக்க பச்சிலை கொடுத்து சக்குபாயைக் காப்பாற்றினார். அவளின் முன் சக்குபாயாக காட்சியளித்து நடந்தவற்றை நினைவுபடுத்தினார். தன் சுயரூபத்தை சக்குபாய்க்கு காட்டி வருந்தாதே வீட்டிற்கு செல் எல்லாம் நன்மையாக முடியும் என்று மறைந்தார். பண்டரிபுரத்திற்கு வந்த மித்ருராவ் சக்குபாயைக் கண்டதும் எங்கே என்ன செய்கிறாய் என ஆவேசமாகக் கேட்டார். உண்மையை சொன்னாள் சக்குபாய். இத்தனை நாளும் வீட்டு வேலைகளைச் செய்தவர் பகவான் என்ற உண்மையை அறிந்த மித்ருராவ் ஆச்சரியத்தில் சிலை போல நின்றார். தவறை உணர்ந்த அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டதோடு தனது குருவாகவும் ஏற்றார். அன்று முதல் இருவரும் பாண்டுரங்கனை வழிபட்டு முக்தி அடைந்தனர்.

நாமதேவர்

நாமதேவர் பண்டரிபுரத்தில் கிருஷ்ணரின் பக்தன். விட்டல விட்டல என்று பாண்டு ரங்கனின் நாமத்தை சொல்லி பஜனைகள் செய்வதையே தனது தொழிலாக வாழ்ந்து வந்தார். பாகவதர் ஒருவர் அவர் இருக்கும் அதே தெருவில் வசித்தவர். இருவரும் பஜனை செய்வதையே தங்கள் தொழிலாக செய்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். பாகவதற்கு நாம தேவருடன் தொடர்ந்து பஜனைகள் செய்வதற்கு விருப்பம் இல்லாமல் போனது. பஜனைகள் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை. ஆகவே லட்சுமியை ஆராதணை செய்து மந்தர சித்தி பெற்று பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் பாகவதற்குக் தோன்றியது. எனவே பாஜனை செய்ய செல்லாமல் எப்போதும் லட்சுமியை ஆராதணை செய்ய ஆரம்பித்தார். கடும் விரதம் உபாசனை மந்த்ரோச்சாடனம் பூஜையெல்லாம் செய்து லட்சுமியின் மனம் கனிய வைத்து அவளிடம் இருந்து ஒரு ஸ்பரிசக்கலை பெற்றுக் கொண்டார். அந்த கல்லின் மூலம் கண்ணில் கண்ட இரும்பு பொருள்களை எல்லாம் தொட்டு தங்கமாக்கினார். வீட்டில் இரும்பு தீர்ந்து போய் தெருவெல்லாம் கிடக்கும் ஆணி கம்பியெல்லாம் எடுத்து வந்து அவை தங்கமாக்கி தனதாக்கிக் கொண்டார். ஆனாலும் அவரது ஆசை பெருகிக் கொண்டே சென்றது. இதனால் நாமதேவருடன் பஜனைக்கு பல மாதங்களாக செல்லாமல் இருந்தார். பாகவதர் பஜனைக்கு வராததை எண்ணி நாமதேவர் மிகவும் வருந்தினார். விட்டலா இதுவும் உன் சித்தம் உன் விளையாட்டு என்று எண்ணிக் கொண்டு அமைதியாக இருந்தார்.

நாமதேவர் மனைவி ராஜாய் பாகவதர் மனைவிக்கு நெருங்கிய நண்பி. இருவரும் ஒன்றாகவே காலையில் சந்திரபாகா நதிக்கு சென்று ஸ்நானம் செய்து நீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்புவார்கள். ஒரு நாள் ராஜாய் பாகவதரின் மனைவியிடம் சிறிது நாட்களாக புதிய தங்க நகைகளாக அணிந்திருக்கிறாய். புது புடவையாக கட்டி வருகிறாய் எப்படி இதெல்லாம் என்று கேட்டாள். அதற்கு பாகவதரின் மனைவி பாகவதர் பாண்டுரங்கனை வழிபடுவதை விட்டு லட்சுமி குபேரன்னு நிறைய பூஜை மந்திர தந்திரமெல்லாம் செய்து இரும்பை தங்கமாக்கிற ஒரு கல்லை பெற்று விட்டார். அந்த கல்லாலே இரும்பை தொட்டாலே தங்கமாக மாறி விடுகிறது. இந்த செய்தியை யாரிடமும் சொல்லி விடாதே என்றாள். அனைத்தையும் கேட்ட நாமதேவர் மனைவி ராஜாய் எங்களது வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. பணம் சம்பாதிக்காமல் எப்போது பார்த்தாலும் பஜனை பஜனை என்று விட்டலன் நாமம் தான் வீட்டில் கேட்கிறது. நானும் எனது அம்மாவும் தான் தினமும் யாரிடமாவது யாசகம் பெற்று சமையல் செய்கிறோம். ஒரே ஒருநாள் எனக்கு அந்த கல்லை கொடு. வீட்டில் நிறைய துருபிடிச்ச இரும்பு இருக்கு அனைத்தையும் தங்கமாக மாற்றி விட்டு உன்னிடம் திருப்பி தந்து விடுகிறேன். இதனால் என் வீட்டிலும் வறுமை இல்லாமல் இருக்கும் என்று கல்லை கேட்டாள். பாகவதரின் மனைவியும் சம்மதித்து பாகவமருக்கு தெரியாமல் ராஜாய்யிடம் கல்லை கொடுத்தாள். நாமதேவரின் வீட்டில் இருந்த நிறைய ஊசிகளும் இரும்பு துண்டுகளும் தங்கமாயின. இதனை கண்ட நாமதேவர் தன் மனைவி இரும்பை தங்கமாக்குவதை கவனித்து பதறினார். விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். பண ஆசை தன் மனைவியையும் பாகவதரைப் போலவவே மாற்றி விடுவதை அறிந்து வாடினார். விட்டலா என்று கத்திக் கொண்டே அந்த மந்திரக்கல்லை ராஜாயிடம் இருந்து பிடுங்கி ஓடிய நாமதேவர் சந்திரபாகா நதியில் வீசி எறிந்தார். நதியின் ஆழத்தில் கல் விழுந்து மறைந்தது.

நாமதேவர் அமைதியாக வீடு திரும்பினார். ராஜாய் பாகவதர் மனைவியை பயத்தினால் அன்று சந்திக்கவில்லை. மறு நாள் வழக்கம் போல பாகவதர் பூஜைக்கு அமர்ந்தார். கல் இருந்த பேழையை கண்ணில் ஒற்றிக்கொண்டு லட்சுமியை பிரார்த்தித்து திறந்தார். உள்ளே கல் இல்லை மனைவியிடம் கேட்டு விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டார் நெருப்பாக அவளை திட்டி தீர்த்தார். நாமதேவர் வீட்டிற்க்கு வந்து எங்கே என்னுடைய மந்திரக்கல். அதனை உடனே கொடு என்றார். பாகவதரை அமைதிபடுத்திய நாமதேவர் பகவான் மீது செய்யும் பஜனையின் புண்ய பலனைகளை எல்லாம் எடுத்தி கூறி மீண்டும் பாகவதம் செய்ய வருமாறும் இந்த கல் மேல் உள்ள ஆசையை விடுமாறும் எடுத்துக் கூறினார். அதை கேட்கும் நிலையில் பாகவதர் இல்லை. வானுக்கும் பூமிக்குமாக குதித்து கொண்டு வா என் கல்லை என்று நச்சரிக்கவே அது சந்திரபாகா நதியில் போடப்பட்டதை நாமதேவர் சொன்னதும் பாகவதர் நதிக்கு ஓடினார். என் கல் என் கல் அதை இப்போதே தா என்று பித்து பிடிக்காத குறையாக கத்தினார் பாகவதர். நாமதேவரையும் விட்டலனையுமே வாய்க்கு வந்தபடியெல்லாம் தாழ்வாக ஏசினார். விட்டலனை பாகவதர் திட்டுவதை கேட்ட நாமதேவர் வருத்தமடைந்தார். பாகவதரே என்னோடு வாருங்கள் என்று அவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நதிக்குள் இறங்கினார். விட்டலா நான் செய்த தவறினால் இந்த பாகவதர் உன்னையும் திட்டுகிறார். என்னை மன்னித்து விடு. இந்த பாகவதரின் கல் மீண்டும் கிடைக்க அருள் புரியவேண்டும் என்று சொல்லி நதியில் மூழ்கி கைக்கு கிடைத்த கல்லெல்லாம் எடுத்து பாகவதரிடம் கொடுத்தார். உங்களது கல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நாமதேவரின் கை நிறைய பெரிய பெரிய மந்திர கற்கள். நாமதேவரின் சக்தியையும் பாண்டுரங்கன் மகிமையையும் இமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டார் பாகவதர். கற்களை வாங்கி நதியில் வீசிய பாகவதர் நாமதேவர் காலடியில் விழுந்தார். மீண்டும் விட்டலனின் ஆலயத்தில் நாமதேவரோடு பாகவதர் பஜனைகள் செய்ய ஆரம்பத்தார்.

ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் சுவாமிகள்

காசியில் சிதம்பர சுவாமிகள் குருகுலத்தில் ஆசிரியர் தன்னுடைய மிகச் சிறந்த மாணவனான முத்துசுவாமியை அழைத்து தம்பி உன்னுடைய கல்வி நிறைவடைந்து விட்டது. நீ திருவாருர் செல். போகும் வழியில் திருத்தணி முருகனை வழிபட்டுச் செல். முருகன் உனக்கு வழி காட்டுவான் என்றார். முத்துசுவாமி தன்னுடைய கல்வி நிறைவு பெற்றதை எப்படி நான் அறிந்து கொள்வது என்று தன் குருவிடம் கேட்டார். அதற்கு குரு கங்கையில் நீராடி வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியை நினைத்துக் கொள் உனக்கு பதில் கிடைக்கும் என்றார். நேராக கங்கைக்கு சென்ற முத்துசுவாமி சரஸ்வதியை நினைத்துக் கொண்டே கங்கையில் மூழ்கி எழுந்தான். அப்போது சரஸ்வதி நேரடியாக காட்சி கொடுத்து அழகிய வீணையை பரிசாக கொடுத்தாள். அந்த வீணையின் சிறப்பாக அதில் ராம் என்று வடமொழியில் எழுதி இருந்தது. யாழ் மேல் நோக்கி பார்த்திருந்தது. மகிழ்ச்சி அடைந்த முத்துசுவாமி தான் கல்வியில் நிறைவு பெற்று விட்டோம் என்று எண்ணிக் கொண்டு குரு சொன்ன படி திருத்தணியில் ஒருமண்டலம் தங்கி தியானத்தில் இருக்க முடிவு செய்து அங்கேயே தங்கினார். 40 வது நாள் நாள் ஒரு வயதான பெரியவர் முத்துசுவாமியின் அருகில் வந்து உனது வாயைத் திற என்று சொல்லி வாயில் கற்கண்டைக் கொடுத்து நொடியில் மறைந்து விட்டார்.

முத்து சுவாமியின் வாயிலிருந்து ஶ்ரீ நாதாதி குரு குஹோ ஜயதி ஜயதி என்ற பாடல் பிறந்தது. ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் சுவாமிகள் தனது முதல் பாட்டை முருகன் சன்னிதானத்தில் பாடினார். 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாத சுவாமிகளை தமிழில்பாடச் சொல்லிக் கேட்டு முருகன் மகிழ்ந்தானோ அதுபோலவே தீட்சிதர் சுவாமிகளை வடமொழியில் பாடச்சொல்லி மகிழ்ந்தான் முருகன். தீட்சிதர் சுவாமிகள் 500 மேற்பட்ட பாடல்களை வெவ்வேறு ராகங்களில் இயற்றியிருக்கிறார். முத்து சுவாமி சுவாமிகள் குரு குஹ என்று தன்னுடைய முத்திரையையும் என்ன ராகத்தில் பாடவேண்டும் என்பதற்காக ராகத்தின் பெயரையும் பாடல் வரிகளின் நடுவில் பதித்து இருப்பார்கள். சுவாமிகளின் சீடர் தம்பியப்பன் வயிற்று வலியால் துடித்த போது சீடரின் ஜாதகத்தைப் பார்த்து அந்த வலி குருப்பெயர்ச்சியால் என்று அறிந்து கொண்டு கிரகஸ்பதே என்று அடாணாவில் குரு பகவானை வாழ்த்தி ஒரு பாடலை இயற்றி சீடரின் வயிற்று வலியை போக்கினார் முத்து சுவாமி சுவாமிகள். தனது சீடரின் வேண்டுகொளுக்கு இணங்க நவகிரக தெய்வங்களுக்கு நவகிரக கீர்த்தனைகள் பல ராகங்களில் முத்து சுவாமி சுவாமிகள் இயற்றினார். ஒரு சமயம் மதுரையிலிருந்து எட்டையாபுரம் நடந்து வரும்போது சாத்தூர் அருகில் ஒரு கிராமத்தில் பல வருடங்களாக மழையில்லாமல் வாடி வதங்கி பூமி பாளம் பாளமாக வெடித்து பாலை வனமாக காட்சி அளித்ததைக் கண்டு மனம் வாடினார். இறைவியை வேண்டி ஆனந்த ம்ருதாக்‌ஷினி என்ற பாடலை அம்ரிதவர்ஷினி ராகத்தில் இயற்றி பாடினார். வருஷய வருஷய வருஷய என்று பாடலை முடிக்கும் போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

புரந்தரதாசர்

பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தரதாசர் ஒருமுறை கிருஷ்ணரை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின் பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு சத்திரம் ஒன்றில் தங்கினார். நடுஇரவில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல் அப்பண்ணா ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான். தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர் வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார். அப்பண்ணா ஒன்றுடம் சொல்லாமல் படுக்கச் சென்று விட்டார். பின்பு தமது செயலைக் குறித்து வருந்தினார். நிம்மதியாகத் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவை படுத்திருக்கும் இடத்திற்குஞ் சென்று நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார். அப்பண்ணா ஆச்சரியமாகி நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே என்றார். புரந்தரதாசர் குழம்பினார். நீராடி விட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில் கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.

கிருஷ்ணரே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும் புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும் என்று கண்ணீர் சிந்தினார். கிருஷ்ணரின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடினார். புரந்தரதாசர் கோவிலில் இருக்கும் கருட கம்பம் என்ற ஒரு தூணின் கீழ் அமர்ந்து பாடினார். இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர். அந்த தூணுக்கு வெள்ளியால் காப்பு போடப்பட்டிருக்கிறது.

உருவ வழிபாடு

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை ஆல்வார் சமஸ்தானத்திற்குச் சென்றார். அங்கு இருந்த மகாராஜா மங்கள்சிங் விவேகானந்தரை அன்புடன் வரவேற்றார். மகாராஜாவுக்கு இறைவழிபாட்டில் பல சந்தேகங்கள் இருந்தன. குறிப்பாக அவர் விக்ரக வழிபாட்டை ஏற்கவில்லை. எனவே விவேகானந்தரிடம் கேள்வி கேட்டார். கல்லாலும் உலோகத்தாலும் ஆன இந்த விக்ரகங்களில் என்ன சக்தி இருக்கிறது என்று இவற்றை நாம் வணங்க வேண்டும் அறியாமல் இவற்றை வணங்குவது முட்டாள்தனம் அல்லவா என்று கேட்டார். விவேகானந்தர் மகாராஜவின் கீழ் இருக்கும் ஒரு திவானை அழைத்தார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த மகாராஜாவின் உருவப் படத்தை கழற்றிக் கொண்டு வருமாறு பணித்தார். திவானும் அவ்வாறே கழற்றிக் கொண்டு வந்தார். பின் திவானைப் பார்த்து இதன் மீது துப்புங்கள் என்றார். திவான் திகைத்துப் போனார். அய்யோ இது மகாராஜாவின் உருவப்படம் ஆயிற்றே எப்படி இதில் துப்புவது என்றார் அச்சத்துடன். சரி உங்களுக்கு அச்சமாக இருந்தால் வேண்டாம் வேறு யாராவது வந்து துப்புங்கள் என்றார் விவேகானந்தர். அனைவரும் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனரே அன்றி அதைச் செய்வதற்கு யாரும் முன் வரவில்லை. உடனே விவேகானந்தர் நான் என்ன உங்கள் மகாராஜாவின் முகத்தின் மீதா எச்சில் துப்பச் சொன்னேன். இந்த சாதாரண படத்தின் மீது தானே துப்பச் சொன்னேன். அதற்கு ஏன் இத்தனை தயக்கம் என்றார். யாரும் பதில் பேச முடியாமல் திகைத்துப் போய் விவேகானந்தர் முகத்தையும் மன்னரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்.

விவேகானந்தரிடம் திவான் மட்டும் தயக்கத்துடன் சுவாமி மன்னிக்க வேண்டும். இது இந்த நாட்டைக் காக்கின்ற மகாராஜாவின் உருவப்படம். இதில் துப்புவது என்பது அவர் மேலேயே துப்பி அவமானம் செய்வது போலாகும். அதை எப்படி எங்களால் செய்ய முடியும்? ஆகவே எங்களை மன்னிக்க வேண்டும் எங்களால் முடியாது என்று கூறினார். மன்னரோ சுவாமிகள் வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துகிறாரோ என்று எண்ணி புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். விவேகானந்தர் மகாராஜாவிடம் இந்த உருவப்படம் மகாராஜாவைப் போல இருக்கிறது. ஆனால் இது மகாராஜாவாகி விட முடியாது. ஆனாலும் இதை நீங்கள் மகாராஜாவாகவே தான் கருதுகிறீர்கள். அது போலத் தான் இறைவனும் இறைவன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தாலும் விக்ரகங்களிலும் கற்களிலும் அவரது தெய்வீக அம்சம் இருப்பதாகவே கருதி மக்கள் வழிபடுகிறார்கள். ஆராதனை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கூறி விளக்கினார். மகாராஜா விக்ரக ‌வழிபாட்டின் பெருமையையும் அதன் உண்மையை உணர்ந்து சுவாமிகளின் மேன்மையையும் புரிந்து கொண்டார். தனது தவறான கேள்விக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டி விவேகானந்தரின் ஆசியைப் பெற்றார்.

சிறந்த ஆட்சி

கிருஷ்ணர் தர்மரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தர்மர் ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். தான தர்மங்களை முடித்துவிட்டு கிருஷ்ணரை சந்தித்த தர்மர் தான் தினமும் தான தர்மம் செய்வதை பற்றி மிக சிறப்பாகவும் உயர்வாகவும் எடுத்துச் சொன்னார். ஏழைகளுக்கு தர்மம் செய்வதால் நான் மிகவும் உயர்ந்தவனாக இருக்கின்றேன் என்ற ஒரு எண்ணம் அவர் மனதில் இருந்தது. அதனால் தான் சிறந்த மன்னன் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. இதனைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் உண்மையான ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக தர்மருக்கு போதிக்க முடிவு செய்தார்.

கிருஷ்ணர் தர்மரிடம் நாம் பாதாள லோகம் வரை சென்று வரலாமா என்று தமது விருப்பத்தை கூறினார். தர்மரும் அதற்கு அவருடன் பாதாள லோகம் சென்றார். அங்கே பலிச் சக்கரவர்த்தி ஆண்டு வருவதை சற்று விசித்திரமாகப் பார்த்தார் தர்மர். இங்கு ஆட்சி நடப்பது போலவே தெரியவில்லையே என்று தர்மர் தனக்குள் சிந்தித்துக் கொண்டே சென்றார். ஆனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் அவரால் காண முடிந்தது. சில நாட்கள் பலிச்சக்கரவர்த்தி உபசரிப்பில் கிருஷ்ணரும் தர்மரும் இருந்து வந்தார்கள். அப்பொழுது தர்மர் தினமும் ஏழைகளுக்கு பொருட்களை தானமாக வழங்கும் உயர்ந்த குணத்தையும் அந்த பெருமையையும் உயர்வாக பலிச்சக்கரவர்த்திக்கு எடுத்துச் சொன்னார் கிருஷ்ணர். தர்மரிடம் வந்த பலிச்சக்கரவர்த்தி உண்மையில் நீங்கள் மிகவும் உயர்ந்தவர் என்று பாராட்டி புகழ்ந்தார். நானும் உங்களைப் போல் தர்மம் கொடுக்க எண்ணுகிறேன் ஆனால் என் நாட்டில் தானம் கொடுத்தாலும் வாங்குவதற்கு ஒரு ஏழைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது நான் மிகவும் வேதனைப்படுகிறேன் என்று தன்னை மிகவும் தாழ்த்திக்கொண்டு சொன்னார். இதைக்கேட்ட தர்மர் நம் நாட்டில் ஏழைகள் இருக்கிறார்களே அதற்கு காரணம் நம்முடைய ஆட்சியின் சிறப்பு இன்மையே என்ற உண்மையை புரிந்து கொண்டு ஏழைகளே இல்லாத சிறந்த ஆட்சியை கொடுக்க முடிவு செய்தார்.

பண்டரீபுரம்

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகர். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவர். திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்த பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம் நாமும் காசி போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். பெற்றோரை அனைவர் எதிரிலும் சில நேரங்களில் அவமரியாதை செய்தான் புண்டரீகர். காசி செல்லும் வழியில் யாத்ரீகர்கள் அனைவரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தின் அருகே இரவு ஓய்வெடுத்தார்கள். அதிகாலை நேரத்தில் விழித்த புண்டரீகர் நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் குக்குட முனிவரின் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் ஆசிரமத்தை சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு முனிவரின் ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து தூய்மையின் அம்சங்களாக அழகாக மாறி இருந்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் புண்டரீகருக்கு புரியவில்லை. மறுநாளும் அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவர் வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது அவர்களின் பாதங்களில் விழுந்து நீங்கள் யார் அழுக்காக வரும் நீங்கள் அழகாக மாறுவது எப்படி என்று கேட்டார்.

கங்கை யமுனை சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். எங்களிடம் வருபவர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்து விட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களுடன் நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன் பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் இந்த குக்குட முனிவருக்கு சேவை செய்வதால் எங்கள் பாவங்கள் கழுவப்பட்டு மீண்டும் தூய்மையடைந்து திரும்புகிறோம் என்று கூறிவிட்டு அவர்கள் மறைந்தார்கள். அக்கணமே புண்டரீகர் மனம் திருந்தினார். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டார். புண்டரீகர் தன் தாய் தந்தையின் மீது வைத்துள்ள பக்தியை அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்க்க வந்தார். இவர்கள் வந்த சமயம் புண்டரீகர் தன் தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். வாசலில் வந்து நின்ற கிருஷ்ணர் நான் கிருஷ்ணர் ருக்மணியுடன் வந்திருக்கிறேன் என்றார். இதனை கேட்ட புண்டரீகர் அங்கே இருந்த இரண்டு செங்கற்களை எடுத்துப் போட்டு சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள் நான் என் கடமையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றார். பணிவிடை செய்துவிட்டு வர நேரம் ஆகியதால் கிருஷ்ணரும் ருக்மணியும் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்றார்கள். தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகர் அவர்களை காண சென்றார். வந்திருப்பது கிருஷ்ணர் ருக்மிணி தேவி என்பதை அறிந்த புண்டரீகன் காத்திருக்க வைத்ததற்காக அவர்களின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். உன் தாய் தந்தைக்கு நீ செய்யும் சேவையில் மனம் மகிழ்ந்தேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். பாண்டுரங்கனே நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். உன் பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினார் புண்டரீகர். அதற்கு கிருஷ்ணர் இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள் தங்களது துன்பம் எல்லாம் நீங்கி சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள் என்று அருளினார்.

புண்டரீபுரம் என்னும் அப்புண்ணிய இடத்தில் அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி பண்டரீபுரம் ஆகிவிட்டது. பண்டரீபுரத்தில் பீமா நதி சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால் அந்த நதி இங்கு சந்திரபாகா நதி என அழைக்கப்படுகிறது. சந்திரபாகா என்றால் பிறைச் சந்திரன் என்று பொருள். இந்தச் சந்திரபாகா நதிக்கரையில் கிருஷ்ணர் பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன் தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறார்.

ராமாயணத்தின் தத்துவம்

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள். ‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா – ராமர்
மனம் – சீதை
மூச்சுக் காற்று – அனுமன்
விழிப்புணர்வு – லட்சுமணன்
அகங்காரம் – ராவணன்

ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர். தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள். பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய வாய் (பேசுதல்) கைகள் (செயல்) கால்கள் (போக்குவரவு) எருவாய் (கழிவுகளை நீக்குதல்) கருவாய் (இன்பமும் பிறப்பும்) ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும் உணர்வு உறுப்புகளாகிய கேட்டல் (காதுகள்) ருசித்தல் (வாய்) முகர்தல் (மூக்கு) பார்த்தல் (கண்கள்) உணர்தல் (தோல்) ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் ஆகும்.

கௌசல்யை என்றால் ஆற்றும் சக்தி (திறன்) என்று பொருள்.

மனம் என்னும் சீதை ஆசை என்னும் ராவணனால் கவரப்படும் பொழுது எதனாலும் பாதிக்கப்படாத ஆத்மா என்னும் ராமர் பரமாத்மாவிடம் இருந்து விலகி நிற்கிறார். அப்போது நமக்குள் பத்து தேர்களாக இருக்கும் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் கௌசல்யை என்னும் திறனை பயன்படுத்தி அடக்கி ஆண்டால் ராமர் என்ற ஒளியை உணரலாம். இந்த ராமர் என்ற ஒளியை மனம் என்னும் சீதையுடன் சேர்க்க லட்சுமணன் என்ற விழிப்புணர்வின் துணையோடு பிராணனை (மூச்சுக்காற்றை) அனுமனின் உதவியோடு கவனித்து மனதை ஆத்மா என்ற பரமாத்மாவோடு ஒருமுகப்படுத்த வேண்டும். அப்போது அகங்காரம் என்னும் ராவணன் அழிந்து விடுவான். அதன் பிறகு மனம் எனும் சீதை ராமராகிய ஆன்மாவோடு ஒன்று சேர்ந்து மனம் எண்ணங்களற்ற நிலையை அடைந்து பேரின்பத்தில் இருக்கும்.

அகத்தியர் ஜீவநாடியில் ராமர் பற்றிய கேள்விக்கு அகத்தியரின் பதில் – 2

வால்மீகி ராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இது உண்மையா? இடைச்செருகலா?

மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கத்தான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில் தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒருவேளை அது உண்மை என்றால் அப்பேற்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் பின்னால் வந்த மனிதன் தான் சாப்பிடும் மாமிச உணவிற்கு வசதியாக ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு வசதியாக வைத்துக் கொண்டான்.