- அர்ஜூன விஷாத யோகம் முன்னுரை
மகாபாரதம் குருசேத்திர யுத்தம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்றது. யுத்தம் ஆரம்பிக்கும் முன் அஸ்தினாபுரத்தின் அரசனான பார்வையற்ற திருதராஷ்டிரன் தன் அரண்மனையில் இருந்தபடியே யுத்தக் களத்தில் நடைபெறுவதை தெரிந்து கொள்வதற்காக சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமித்தார். வேதவியாசரால் ஞானதிருஷ்டியை பெற்ற சஞ்ஜயன் யுத்தக் களத்தில் நடந்தவைகளையும் கிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் நடைபெற்ற உரையாடலையும் தன் ஞானதிருஷ்டி வழியாக பார்த்து திருதராஷ்டிரருக்கு தெரிவித்தார். முதல் அத்தியாயத்தில் திருதராஷ்டிரன் சஞ்ஜயனிடம் கேள்வி கேட்பதும் அதற்கு சஞ்ஜயன் பதில் கொடுப்பதும் அர்ஜூனன் தன் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளாக வந்ததை எண்ணி கவலையில் முழ்கி யுத்தம் செய்ய மாட்டேன் என்று கிருஷ்ணரிடம் சொல்லி தன் காண்டிப வில்லை கீழே வைத்து விட்டு யுத்த களத்தில் அமர்ந்து விடுவதும் இந்த தலைப்பில் உள்ளது. அர்ஜூன விஷாத யோகம் முதல் அத்தியாயத்தில் மொத்தம் 47 சுலோகங்கள் உள்ளது.
பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #1
சஞ்ஜயனிடம் திருதராஷ்டிரன் கேள்வி கேட்கிறார். தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளத்திற்கு யுத்தம் செய்ய வந்த கௌரவர்களான எனது மகன்களும் பாண்டவர்களான எனது தம்பி மகன்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: யுத்த களத்தை திருதராஷ்டிரன் தர்மம் நிறைந்த குருசேத்திர யுத்தகளம் என்று ஏன் சொல்கிறார்.
பதில்: மகாபாரதம் வனபருவம் 83 வது அத்தியாத்திலும் சல்லியபருவம் 53 வது அத்தியாயத்திலும் குரு சேத்திர யுத்தகளத்தின் பெருமை சொல்லப்படுகிறது. சதபதப்ராஹ்மணம் என்னும் பழமையான நூலில் இதற்கான குறிப்பு உள்ளது. இந்த இடத்திற்கு சமந்த பஞ்சகம் என்ற பெயரும் உண்டு. இங்கு பிரம்மா இந்திரன் அக்னி முதலிய தேவர்கள் தவம் செய்திருக்கிறார்கள். குருமகாராஜன் என்பவர் கடுமையான உயர்ந்த தவத்தை செய்திருக்கிறார். இங்கே இறப்பவர்கள் உத்தம கதியைப் பெறுவார்கள். இதனால் இந்த இடத்தை திருதராஷ்டிரன் தர்மமும் புண்ணியமும் நிறைந்த குரு சேத்திர யுத்தகளம் என்று சொல்கிறார்.
வனபருவம் 83 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே பழமையான நூல்களில் சொல்லப்படுகிறது. அங்கே இருக்கும் புனிதம் நிறைந்த பிரம்மசேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் சாரணர்களும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் யட்சர்களும் நாகர்களும் அடிக்கடி வருவார்கள். குருசேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் தர்ம சிந்தனையுடன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பக்தியுடைய மனதுடன் குருசேத்திரத்திற்குச் செல்பவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். நான் குருசேத்திரத்தில் வாழ்வேன் என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டு வரப்பட்ட குருசேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை அடுத்த பிறவியில் அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.
சல்லியபருவம் 53 வது அத்தியாத்தில் சொல்லப்படும் பெருமை: குருசேத்திரத்தில் பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் பாடிய ஒரு பாடலில் குருசேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீயசெயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும் என்று பாடியுள்ளான். தேவர்களில் முதன்மையானவர்களும் பிராமணர்களில் முதன்மையானவர்களும் நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையான பலரும் விலை மதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து தங்கள் உடல்களை விட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.

