திருமந்திரம் சொல்லும் சிவ மணம்

“திருமந்திரம் சொல்லும் சிவ மணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-03-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்

“திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 1-03-2022 சிவராத்திரி அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 451

கேள்வி: விநாயகருக்கு ஜாதிபத்திரி வைத்து வழிபட்டால் என்ன பலன்?

விநாயகருக்கும் ஜாதியா? இறைவனுக்கு உள்ளன்போடு எதை வைத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் என்பதே உண்மை. இதைதான் அதைதான் வைக்கவேண்டும் என்றெல்லாம் இறைவன் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்வதில்லை. மனிதர்கள் எதை வைக்கிறார்கள்? என்பதைவிட எப்படி வைக்கிறார்கள்? என்பதைதான் இறைவன் பார்க்கிறார். எனவே எதை வைத்தாலும் உள்ளன்போடு வைப்பதே சிறப்பு. அருகம்புல் மருத்துவ குணம் கொண்டது. அருகம்புல்லை அருந்து உடலுக்கு நல்லது என்றால் கேட்கக் கூடிய மனோபாவம் இன்று ஓரளவு இருந்தாலும் எக்காலத்திலும் அப்படி எதுவும் இல்லை. அருகம்புல்லை உண்டால் நல்லது என்று கூறுவதைவிட அதை இறைவனின் பிரசாதமாக கொடுப்பது அக்காலத்தில் சிறப்பான முறையாக கையாளப்பட்டு வந்தது. நன்றாக கவனிக்க வேண்டும். இப்பொழுது அருகம்புல்லை மாலையாக இறைவனுக்கு சாற்றி கையில் தந்துவிடுகிறார்கள். அதுவும் பிரசாதம்தான். ஆனால் ஒரு காலத்திலே அருகம்புல்லை மாலையாக சாற்றுவதோடு தூய்மையான அருகம்புல்லை பணிவன்போடு மிகவும் பணிந்து போற்றி இறைவனின் பூஜைக்காகவும் எங்களின் நலத்திற்காகவும் உன்னை பறிக்கிறேன். மன்னித்துக்கொள் என்றெல்லாம் வேண்டி மூலிகை சாபத்தை நீக்கி அந்த மூலிகையை பறித்து வந்து அருகம்புல்லை கஷாயமாக்கி அதையும் விநாயகர் முன் வைத்து படைத்து அதை பிரசாதமாக தரும் வழக்கம் இருந்தது. இப்பொழுது அது இல்லை என்பதுதான் உண்மை.

துளசியை இறைவனுக்கு நிவேதனம் செய்வதும் மருத்துவ குணத்தின் காரணமாகத்தான். எனவே எப்படியாவது மனிதன் நலம் பெறவேண்டும். அவன் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விதவிதமான வழிபாடுகளும் பிரசாதம் என்ற பெயரில் விதவிதமான பொருள்களும் வைக்கப்பட்டன. அதை அன்போடு வைத்தால் கட்டாயம் இறைவன் ஏற்றுக்கொண்டு சாதம் பிரசாதமாக மாறும்.

30. மெய் காட்டிட்ட படலம்

திருவிளையாடல் புராணம் 30. மெய் காட்டிட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மெய் காட்டிட்ட படலம் முப்பாதாவது படலமாகும்.

அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூஷண பாண்டியனின் ஆட்சியில் சுந்தர சாமந்தன் என்றொரு சேனாதிபதி இருந்தான். அவன் சொக்கநாதரிடமும் அவருடைய தொண்டர்களிடமும் நீங்காத பக்தி கொண்டு இருந்தான். அப்போது சேதிராயன் என்பவன் வேடுவர்களின் தலைவனாக இருந்தான். அவன் பல வெற்றிகளைக் கொண்ட செருக்கால் குலபூஷண பாண்டியனிடம் பகைமை கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க எண்ணினான். இந்த செய்தியை ஒற்றர்கள் மூலம் குலபூஷண பாண்டியன் அறிந்தான். தனது சேனாதிபதியான சுந்தர சாமந்தனிடம் நீ நமது நிதி அறையினைத் திறந்து வேண்டுமளவு பொருள்களை எடுத்துக் கொண்டு புதிதாக சேனைப் படைகளை திரண்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். சுந்தர சாமந்தனும் நிதி அறையினைத் திறந்து தனக்கு வேண்டுமளவு பொருட்களை எடுத்துக் கொண்டான். அப்பொருட்களைக் கொண்டு சிவபெருமானுக்கு திருக்கோவிலும் ஆயிரங்கால் மண்டபமும் கட்டினான். சிவனடியார்களுக்கு திருஅமுது செய்வித்து எஞ்சியவற்றை உண்டு ஆறு மாத காலம் வரை வாழ்ந்து வந்தான். இச்சேதியை ஒற்றர் மூலம் குலபூடண பாண்டியன் அறிந்தான். குலபூஷண பாண்டியன் சுந்தர சாமந்தனை உடனடியாக அரண்மனைக்கு வர உத்தரவிட்டான். சுந்தர சாமந்தன் வந்ததும் எவ்வளவு படை திரட்டி  இருக்கிறாய்? எனக் கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் மனதில் சொக்கநாதரைத் தியானித்தபடி போதுமான படை திரட்டி விட்டேன் என்று கூறினான். உடனே குலபூஷண பாண்டியன் நாளை சூரியன் மறையும் முன்பு சேனைப்படை வீரர்கள் அனைவரையும் மதுரைக்கு அழைத்து வரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.

குலபூஷண பாண்டியனின் கட்டளையை கேட்ட சுந்தர சாமந்தன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். பின்னர் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே அரசன் அளித்த நிதியினைக் கொண்டு சிவதொண்டு செய்துவிட்டேன். இனி எப்படி பெரும் சேனைகளை நாளை திரட்டிக் காண்பிப்பது? என்று பிரார்த்தனை செய்தான். அதற்கு இறைவனார் நாளைக்குச் சேனை வீரர்களோடு நாமும் வருவோம். நீ பாண்டியனின் அவைக்குச் சென்று என் வரவை எதிர்பார்ப்பாயாக என்று அசிரீரீயாக திருவாக்கு அருளினார். மறுநாள் சொக்கநாதர் தமது சிவகணங்களை வேல் ஏந்திய படை வீரர்களாகவும் தாமும் ஒருகுதிரை வீரனாகவும் உருவம் எடுத்துக் கொண்டார். தன்னுடைய இடப வாகனத்தை குதிரையாக்கி அதன்மேல் ஏறி தன் பரிவாரம் சூழ ஒற்றைச் சேவகராய் மதுரையை நோக்கி எழுந்தருளினார். சேனையின் வரவினைக் கண்ட சுந்தர சாமந்தன் குலபூஷண பாண்டியனின் முன்சென்று வணங்கி சேனைகளின் வரவு பற்றி தெரிவித்தான். குலபூஷண பாண்டியனும் மனம் மகிழ்ந்து அரண்மனை மேலிருந்து சேனைப் படைகளை பார்வையிட்டான். சுந்தர சாமந்தன் அணிவகுத்து நின்ற ஒவ்வொரு பகுதியினரையும் இறைவனாரின் அருளால் சுட்டிக் காட்டி அவர்கள் எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்று வரிசையாக காட்டினான்.

குலபூஷண பாண்டியன் ஒற்றைச் சேவகராய் நின்ற சொக்கநாதாரைக் காட்டி அவர் யார்? என்று கேட்டான். அதற்கு சுந்தர சாமந்தன் வந்திருப்பது இறையனார் என்பதை அறிந்து அவரையே பார்த்துபடி அசையாமல் நின்றார். அப்போது அரசன் முன் ஒற்றன் ஒருவன் வந்து அரசே சேதிராயன் வேட்டைக்குச் சென்றபோது புலியால் அடித்து கொல்லப்பட்டு இறந்தான் என்று கூறினான். அதனைக் கேட்ட பாண்டியன் சுந்தர சாமந்தனுக்கு நிறைய பரிசுகளை வழங்கினான். நீ படைக்கு ஆள் சேர்த்த நேரம் போருக்கு அவசியமே இல்லாமல் ஆகி விட்டது. அதனால் படை வீரர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து திருப்பி அனுப்பி விடு என்றார். சுந்தர சாமந்தன் படைவீரர்களைப் பார்த்து நீங்கள் செல்லுங்கள் என்று சொன்ன அடுத்த வினாடி படைகள் அனைத்தும் மறைந்தன. குலபூஷண பாண்டியன் திகைத்தான். சுந்தர சாமந்தனனை அழைத்துக் காரணம் கேட்க நடந்ததை ஒளிக்காமல் கூறினான் சுந்தர சாமந்தன். அதற்கு குலபூஷண பாண்டியன் உனக்கு மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதரே வந்து அருளினார் என்றால் எனக்கு அக்கடவுள் நீயே என்று கூறி அவனுக்கு பல சிறப்புகளைச் செய்தான். பின்னர் சிறிதும் மனக்கவலை ஏதும்மின்றி மதுரையை ஆண்டு வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனார் தம்மை நம்பும் அடியவர்களுக்காகவும் சிவத்தொண்டு புரியும் அடியவர்களுக்காகவும் எந்த வேடத்திலும் வந்து எதனையும் செய்து அருள் புரிவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 450

கேள்வி: கந்தர் அனுபூதி வேல் மாறலின் சிறப்பு மற்றும் அதை பாராயணம் செய்யும் முறை:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இன்னவன் கேட்ட இறை தொடர்பான ஸ்லோகங்கள் பதிகங்கள் மட்டுமல்லாமல் எந்த பதிகமாகவோ தேவாரமோ திருவாசகமோ ஆழ்வார்களின் பாடல்களோ மனம் ஒன்றி கண்ணில் நீர் மல்க நல்விதமாய் உள்ளம் உருகி வேறு சிந்தனைகள் இல்லாமல் ஓதினால் நற்பலன் உண்டு. இவற்றை ஓத ஓத கட்டாயம் முன்னர் கூறியதுபோல உலகியல் வாழ்வில் உள்ள எதிர்ப்புகளும் சிறிதளவுகூட பண்பாடு இல்லாத மனிதர்களின் தொடர்பால் மன உளைச்சல் ஏற்படுகிறதே? அதிலிருந்து மனிதன் வெளியே வரவேண்டுமென்றால் இன்னவன் கூறிய பதிகங்களை ஓதினால் நன்மை உண்டு.

29. மாயப் பசுவை வைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மாயப் பசுவை வைத்த படலம் இருபத்தி ஒன்பதாவது படலமாகும்.

அனந்தகுணப் பாண்டியன் இறைவனான சொக்கநாதரின் அருளினால் சமணர்கள் உண்டாக்கிய நாகத்தினை அழித்து மதுரையைக் காத்தார். இதனை கண்ட சமணர்கள் எப்படியாவது சூழ்ச்சி செய்து மதுரையையும் சிவனடியாராகத் திகழ்ந்த அனந்தகுண பாண்டியனையும் அழிக்க எண்ணினர். பசுவானது சைவர்களுக்கு புனிதமானது. எனவே மாயப்பசுவை உருவாக்கி மதுரையை அழிக்க ஆணையிட்டால் அனந்தகுண பாண்டியன் புனிதத்தன்மையான பசுவினை எதிர்த்து போரிட மாட்டான். ஆகையால் அவனை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் வேள்வி செய்யத் தொடங்கினர். வேள்வியின் இறுதியில் மாயப்பசு ஒன்று உருவானது. அவர்கள் மதுரையையும் அனந்தகுண பாண்டியனையும் அழிக்க மாயப் பசுவிற்கு ஆணையிட்டனர். மாயப்பசுவும் அவர்களின் ஆணையை ஏற்று மதுரையை நோக்கி விரைந்தது. வானளவிற்கு வளர்ந்திருந்த அப்பசு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அழிக்கத் தொடங்கியது. மாயப் பசுவின் செயல்களை மக்கள் அனந்தகுண பாண்டியனுக்குத் தெரிவித்தனர். இதனைக் கேட்டதும் அனந்தகுண பாண்டியன் திருகோவிலுக்குச் சென்று இறைவனான சொக்கநாதரிடம் முறையிட்டான். தன்னையும் தம்மக்களையும் காத்தருளும்படி வேண்டினான்.

சொக்கநாதர் அனந்தகுண பாண்டியனையும் மதுரை மக்களையும் காப்பாற்ற திருவுள்ளம் கொண்டார். அவர் நந்தியெம் பெருமானை அழைத்து நீ சென்று சமணர்கள் ஏவிய மாயப் பசுவினை வென்று வருவாயாக என்று கட்டளையிட்டார். நந்தியெம் பெருமானும் இறைவனின் ஆணைக் கேட்டதும் கண்களில் அனல் தெறிக்க மிகப்பெரிய காளை வடிவாகி மாயப் பசு இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார். காளை வடிவில் இருந்த நந்தியெம் பெருமானுக்கும் மாயப் பசுவிற்கும் நெடுநேரம் சண்டை நடந்தது. இறுதியில் நந்தியெம் பெருமான் அழகிய காளையாக வடிவெடுத்தார். அழகிய காளையைக் கண்ட மாயப் பசு அதனுடைய அழகில் மயங்கியது. மாயப் பசு மோகத்தினால் சண்டையை மறந்தது. சண்டையில் களைப் படைந்திருந்த மாயப் பசு மோகம் அதிகரித்தால் தன்னிலை மறந்து மயங்கி விழுந்து மடிந்தது. மாயப்பசு வீழ்ந்த இடம் மலையாக மாறியது. அம்மலையானது இன்றும் மதுரையில் பசு மலை என்று அழைக்கப்படுகிறது. மாயப் பசு மடிந்ததைக் கண்ட அனந்தகுண பாண்டியனும் மதுரை மக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மாயப் பசுவினை வென்றதும் நந்தியெம் பெருமான் தன்னுடைய பூத உடலினை இடப மலையாக நிறுத்திவிட்டு சூட்சும உடலோடு திருக்கயிலாயத்தை அடைந்தார். இடப மலை என்பது இன்றைக்கு மதுரையில் அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை அமைந்திருக்கும் இடம் ஆகும்.

இராமர் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லும் போது இடப மலையில் தங்கியிருந்தார். இதனை அறிந்த அகத்தியர் இராமரிடம் சென்று சொக்கநாதரின் பெருமைகளையும் இந்திரன் சாபத்தை அவர் போக்கி அருளியதையும் எடுத்துக் கூறினார். இராமர் சொக்கநாதரை வழிபட மதுரைக்கு வந்து பொற்றாமரைத் தீர்த்தத்தில் நீராடி சொக்கநாதரை பலவாறு துதித்து வழிபட்டார். சொக்கநாதர் இராமா நீ இலங்கை சென்று வைதேகியை மீட்டு வெற்றியுடன் திரும்பி வந்து உன் நாட்டிற்குச் சென்று சிறப்புடன் ஆட்சி செய்வாயாக. அச்சம் கொள்ள வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமர் இலங்கை சென்று இராவணனை வென்று மைதிலியுடன் வெற்றியுடன் இராமேஸ்வரத்தை அடைந்து சிவலிங்க வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது மதுரை வந்து சீதையுடன் சொக்கநாதரை வழிபட்டு தன்நாட்டிற்குச் சென்றார். அனந்தகுண பாண்டியன் தன்மகனான குலபூடணிடம் தன்னுடைய ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து இறுதியில் சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தீவினைகள் எப்படி வந்தாலும் இறைவனை சரணடைந்தால் இறைவன் அதனை அழிப்பார் என்பதையும் மோகத்தில் (மோகம் என்றால் மாயையினால் நிகழும் மயக்க உணர்ச்சியில் மயங்கி தன்னிலை இழத்தல் ஆகும்) மயங்கினால் அழிவு நிச்சயம் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 449

கேள்வி: மனம் தடுமாறி தீய வழியில் செல்லும்பொழுது எந்த இறை நாமத்தை ஜபிப்பது?

மனம் தடுமாறாமல் இருக்க மனம் சபலத்தில் ஆழாமல் இருக்க மனம் சாத்வீக எண்ணங்களோடு இருக்க ஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். பஞ்சாட்சரத்தை ஜபிக்கலாம். அஷ்டாக்ஷரத்தை ஜபிக்கலாம். இவையனைத்தும் சிறப்புதான். எதுவும் ஒன்றுக்கொன்று குறைவில்லை. இதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக் கொண்டே வந்தால் மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பக்தி வழி. பக்தியை ஏற்றுக் கொள்ளாத மனிதருக்கு அறிவு பூர்வமாகக் கூறுவதென்றால் ஒரு செயலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு எண்ணத்தை எண்ணும் பொழுதோ அவன் எப்படி சிந்திக்க வேண்டும்? என்றால் உதாரணமாக ஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான். இது வெறும் எண்ணம்தானே? செய்தால்தானே பாவம். செய்தால்தானே தவறு. அதனால் பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது. மனதில்தானே எண்ணுகிறோம் என்று அவன் எண்ணுவதாகக் கொள்வோம். அதே எண்ணத்தை பிறர் எண்ணினால் அதை நியாயம் என்று இவன் ஏற்றுக் கொள்வானானால் இவன் அதை தாராளமாக எண்ணலாம

28. நாகம் எய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நாகம் எய்த படலம் இருபத்தி எட்டாவது படலமாகும்.

அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சொக்கநாதக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

அவன் தீவிர சிவபக்தனாக இருந்தான் எப்போதும் ருத்ராட்சம் திருநீரும் அணிந்து பஞ்சாட்சரம் ஜெபித்துக் கொண்டே இருந்தான். அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது. அதைக் கண்ட சமணர்கள் சமணமதம் நசித்துவிடுமோ என்றஞ்சி பாண்டியனை ஒழித்து விட விக்கிரம பாண்டியன் காலத்தில் செய்தது போல் ஆபிசார வேள்வி (மரண வேள்வி) செய்ய தீர்மானித்தார்கள். சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும் மதுரையையும் அழிக்க அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி (மரண வேள்வி) ஒன்றினைத் தொடங்கினார்கள். அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான். அவ்வவுணன் சமணர்களிடம் எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது? என்று வினவினான். சமணர்கள் அவனிடம் நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும் அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு என்று கட்டளையிட்டனர். அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான்.

மதுரை நகரின் எல்லைக்கு வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது. நாகத்தின் விஷ மூச்சுக் காற்றால் அங்கு இருந்த மரங்கள் பயிர்கள் எல்லாம் கருகின. நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும் செயலையும் தெரிவித்தனர். நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான். இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான். இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான். அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது. நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது. நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது. மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து இறைவா மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள். கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள். மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள். தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினான். அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை சித்தர் வடிவில் தோன்றி மதுரையின் மீது தெளித்தார். இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது. மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர். நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தீயவர்களின் சூழ்ச்சியினால் வரும் துன்பத்தினை பிரார்த்தனையாலும் இறை நம்பிக்கையினாலும் இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 448

கேள்வி: ஆஞ்சநேயர் பற்றி:

ஆஞ்சநேயர் இறைவனின் அம்சம். சாட்சாத் சிவபெருமானின் சக்திதான் மால்தூதன். ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல ஜடாயு என்ற பட்சி வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார். அதுபோல் இவரின் சகோதரர் சம்பாதி என்ற பட்சியும் ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.

27. அங்கம் வெட்டின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அங்கம் வெட்டின படலம் இருபத்தி ஏழாவது படலமாகும்.

குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் மாணிக்க மாலை. இருவரும் இறைவனான சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டிருந்தனர். வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சி கூடம் ஒன்றினை அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நேரம் போக மீதிநேரம் சொக்கநாதரின் ஆலயம் சென்று இறை வழிபாட்டிலேயே காலம் கழித்து வந்தார். அவனிடம் சித்தன் என்பவன் வாட்பயிற்சி பெற்றான். நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான். திறமைசாலியாக விளங்கிய சித்தன் கெட்ட எண்ணங்கள் மற்றும் துர்நடத்தைகள் கொண்டவனாக விளங்கினான். சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத் தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான். தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன் தனது குருவிடம் பயின்று வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற கட்டாயப்படுத்தினான். ஆனால் அவனது குருவோ சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை.

குருவால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதை தலைக்கு ஏறிய சித்தன் தனது குருவின் மனைவியை அடைய விரும்பினான். ஒருநாள் குரு வீட்டில் இல்லாத போது அவரது வீட்டிற்குச் சென்று மாணிக்க மாலையிடம் தன்னுடைய விருப்பத்திற்கு உடன்படும்படி அவதூறாகப் பேசினான். பின் மாணிக்க மாலையின் கையைப் பிடித்து இழுத்தான். அவனிடம் இருந்து தப்பித்த மாணிக்க மாலை உள்ளே சென்று கதவை தாளிட்டாள். சிறிது நேரம் காத்திருந்த சித்தன் மற்றொரு நாள் மாணிக்க மாலையை கவனித்துக் கொள்வதாகக் கூறி சென்று விட்டான். மாணிக்க மாலை தனது நிலை குறித்து மிகவும் வருந்தினாள். மாணிக்க மாலை நடந்த விசயங்களை தன் கணவனிடம் கூறினால் சித்தனுக்கும் கணவனுக்கும் சண்டை ஏற்படக் கூடும். சண்டையில் வயதான தனது கணவனை சித்தன் தோற்கடித்தால் பின் தன்னுடைய நிலை? என்று பலவாறு மனதிற்குள் எண்ணினாள். இறுதியில் திக்கற்றவளாய் சொக்கநாதரை சரண் அடைந்தாள். இறைவா என்னையும் என் கணவனையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று கதறினாள். மாணிக்க மாலையின் அழுகுரலைக் கேட்டு இறைவனார் அவளுக்கு உதவ அருளுள்ளம் கொண்டார். மறுநாள் இறைவனார் வாளாசிரியரின் உருவத்தில் சித்தனின் வாட்பயிற்சி கூடத்திற்கு சென்றார். சித்தனிடம் சித்தா இளைஞனான நீயும் வயதான நானும் நாளை வாட்போர் புரிந்து நம்மில் வல்லவர் யார் என்பதைக் காண்போம். ஆதலால் நீ நகருக்கு வெளியே வந்து என்னுடன் வாட்போர் புரி என்று கூறினார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த சித்தன் அதற்கு சம்மதித்தான். நாளை நடைபெறும் போரில் எளிதாக வெற்றி பெற்று வாளாசிரியனை ஊரைவிட்டு துரத்திவிட்டு மாணிக்க மாலையை அடைந்து விடவேண்டும் என்று மனதிற்குள் எண்ணினான். மறுநாள் மதுரைநகரின் வெளியிடத்தில் சித்தனுக்கும் வாளாசிரியன் உருவில் வந்த இறைவனாருக்கும் வாட்போர் தொடங்கியது. இருவரும் நீண்ட நேரம் போர் புரிந்தனர்.

வாளாசிரியர் வடிவில் இருந்த இறைவன் அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி உன் குருவின் மனைவியை விரும்பிய உள்ளத்தையும் தகாத வார்த்தை பேசிய நாவினையும் தொட்ட கைகளையும் கெட்ட எண்ணத்தோடு பார்த்த கண்களையும் காத்துக்கொள் என்று கூறினார். பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார். தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர். தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர். வாளாசிரியரின் இல்லத்தில் இருந்த அவருடைய மனைவியிடம் வாளாசிரியர் எங்கே என்று கேட்டனர். மாணிக்க மாலை வாளாசிரியர் இறைவனை வழிபட திருக்கோவிலுக்கு சென்றதாகத் தெரிவித்தார். அப்போது வாளாசிரியர் தனது இல்லத்திற்கு வந்தார். அவரிடம் மாவணவர்கள் சித்தனைக் கொன்ற பின் தாங்கள் எங்கே சென்றீர்கள்? என்ற கேட்டனர். வாளாசிரியரும் சித்தனைத் தான் கொல்லவில்லை என்று தெரிவித்தார். அப்போது மாணிக்க மாலை வாளாசிரியரிடம் சித்தன் தன்னிடம் நடந்த முறையற்ற நடத்தைகளைக் கூறினார். வாளாசியரின் மாணவர்களும் போர்களத்தில் வாளாசிரியர் மாணிக்க மாலை கூறியவாறு கூறி அவனைக் கொன்றதாகத் தெரிவித்தனர். அப்போது வாளாசிரியர் மாணிக்க மாலையின் துயரினைப் போக்க சொக்கநாதர் தனது உருவம் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாத உணர்ந்து பக்தி வெள்ளத்தில் உருகினார். இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப் பெற்ற அத்தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும் பொருளும் வழங்கினான். பின் தன் மகனான அனந்தகுண பாண்டியனுக்கு அரசு உரிமை அளித்து சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனுக்கு செய்யும் துரோகத்தை கூட இறைவன் மன்னிப்பார். ஆனால் குருத்துரோகத்தை இறைவன் மன்னிக்க மாட்டார் என்பதையும் குருநிந்தனை செய்யக் கூடாது என்பதையும் குரு நிந்தை செய்வோரையும் தன்பக்தர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் கொடியவர்களை இறைவன் அழித்து விடுவார் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.