சுலோகம் -161

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-42

புலன்கள் உடலைக் காட்டிலும் மேலானவை என்று கூறுகிறார்கள். அவை உயர்ந்தவை பலமுள்ளவே நுண்ணியமானவை. இந்த புலன்களைக் காட்டிலும் மனம் மேலானது. மனதைக் காட்டிலும் புத்தி மேலானது. எது புத்தியைக் காட்டிலும் மேலானதோ அதுவே ஆத்மா.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய புலன்கள் பலத்துடன் கண்களால் பார்க்கக் கூடிய உடலை தன் விருப்பத்திற்கு இழுத்துச் சென்று வழி நடத்திச் செல்கிறது. ஆகவே உடலை விட புலன்களே மேலானவை என்று பலர் கூறுவார்கள். இந்த புலன்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. இந்த மனதையும் புத்தியையும் சரியாக பயன்ப்படுத்தி ஆத்ம விசாரம் செய்தால் தமக்குள் இருக்கும் ஜீவாத்மாவான இறைவனை உணர்ந்து கொள்ளலாம். ஆகவே ஆத்மா அனைத்தையும் விட மேலானதாக இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 290

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஆதியந்த பராபரத்தின் திருவை சாட்சி. அன்பான மனோஹரியின் பாதம் சாட்சி. சோதி எனும் சுடர் ஒளியின் திருவடி சாட்சி. சொல்லொண்ணா ரகசியங்கள் அடங்கி நிற்கும் பரம்பொருள் சாட்சி. சாட்சியே மெய் சாட்சியே மூலம்தானப்பா. சாட்சிக்குத் தெரியாது இங்கு எக்காட்சியும் கிடையாதப்பா. சாற்றுங்கால் சாட்சியறியா காட்சி ஏதேனும் உண்டா? என்றால் ஏதும் இல்லை. காட்சிக்கும் தெரியும் எது மெய்யான மனசாட்சி என்று. சாட்சிக்கும் சாட்சியாய் நின்று காத்து அருளுகின்ற அந்த மெய் சாட்சியின் காட்சிதனை காண வேண்டும் என்பதையே மெய் நோக்கமாகக் கொள்ள வேண்டும். மாந்தரினம் (மனித இனம்) அதை விட்டு விட்டு தனம் தேடி அலைவதும் அதுபோல வாழ்வதும் அது வாழ்க்கையே மெய் என இருப்பதும்தான் கவலைக்குரிய சூழல் அப்பா. மற்றுமொரு வினா எழக்கூடும். இந்த நில உலகிலே மாந்தன் (மனிதன்) தனம் இல்லாமல் எப்படி வாழ்வது? அதுபோல வினாக்கள் கால காலம் இருப்பதுதான். மாந்தர்கள் (மனிதர்கள்) நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தனத்தை தேடாதே விட்டுவிடு என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அழிகின்ற அந்த தனத்தை சேர்க்கிறேன் என்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் யாம் கூறுகிறோம்.

தனம் சேர்க்கிறேன் என்று எதாவது வழியிலே தனம் சேர்ந்தால் போதும் என்று பாவத்தை சேர்த்துக் கொண்டால் பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்பதே மெய்யாகும். ஆகுமப்பா ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ இல்லையோ எம்மை நம்புகிறானோ இல்லையோ எத்தனையோ பிரச்சினைகளை சிக்கல்களை எதிர்கொள்கிறான். உறவு சிக்கல் பண சிக்கல் ருண (கடன்) சிக்கல் பிணி சிக்கல் தச வழி (தொழில் வழி) சிக்கல்கள் பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம் மிகுந்த புண்ணியத்தை சத்தியத்தை பொறுமையை தர்மத்தை பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ ஏழையோ நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால் எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ பாவத்தை செய்தானோ அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும். ஆகுமே எத்தனைதான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனைதான் உபதேசம் செய்தாலும் கூட மாந்தன் (மனிதன்) செவியில் (காதில்) இவையெல்லாம் ஏறாது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். சுருக்கமாக சொல்லப் போனால் ஆலயங்கள் சென்றாலும் செல்லா விட்டாலும் அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் செய்யா விட்டாலும் யாகங்கள் செய்தாலும் செய்யா விட்டாலும் எவன் ஒருவன் சத்தியத்தையும் தர்மத்தையும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறானோ அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகுமப்பா.

சுலோகம் -160

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-41

ஆகவே அர்ஜூனா நீ முதலில் புலன்களை வசப்படுத்தி ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிக்கின்ற பெரும் பாவியான இந்த காமத்தை நிச்சயமாக வீறுடன் ஒழித்து விடு.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஆசைகள் ஐந்து புலன்களின் வழியாக மனிதனை மயக்கி ஞானத்தையும் அந்த ஞானத்தை அடைய வேண்டிய வழிமுறையை அறிந்து கொள்ளும் அறிவையும் பெற முடியாதபடி தடுக்கிறது. ஆகவே எதனே செய்தாலும் பற்றில்லாமல் செய்து கர்ம யோகத்தில் ஈடுபட்டு முதலில் ஐந்து புலன்களை தன் வசப்படுத்த வேண்டும். அதன் வழியாக இந்த ஆசைகளை அழித்து விடு என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகத்தின் கடைபிடித்து ஆசைகளை அழித்து புலன்களை வசப்படுத்தி விட்டால் இறைவனை அடையக் கூடிய ஞானத்தையும் அந்த ஞானத்தை அடையகூடிய கூடிய வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 289

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒரு மகானின் வழிகாட்டுதல் இருந்தாலும் ஏன்? ஆண்டவனே அருகில் இருந்தாலும் விதி தன் கடமையை செய்து கொண்டே இருக்கும். விதி தன் கடமையை செய்து கொண்டே இருக்கட்டும். மனிதன் தன் கடமையை மனம் சோர்ந்து விடாமல் செய்து கொண்டே இருந்திட வேண்டும். கடமை என்றால் வெறும் லோகாய கடமை மட்டுமல்ல. பாவ புண்ணியம் என்ற கர்மக் கணக்கிலே பாவக் கணக்கு அதிகமாக பெற்றதனால் குழப்பமும் தெளிவுமாக வாழக்கூடிய நிலைமை கொண்ட மனிதர்கள் பாவங்களை குறைக்க எல்லா வழிகளையும் அன்றாடம் முயற்சி செய்திட வேண்டும். அது பிணியாக வாட்டி குறையலாம். அது கடினமென்றால் முன்னதாகவே கூடுமானவரை சிந்தித்து தேகத்தை பராமரிப்பது போல ஏழைப் பிணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தும் கூடுமானவரை பிணி அவஸ்தையை குறைக்க முயற்சி செய்யலாம். பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்து அதன் மூலம் சில பாவங்களை குறைக்கலாம். இப்படி ஒவ்வொரு முறையிலும் மனிதன் எல்லாவகையான தர்மங்களையும் எதிர்பார்ப்பு என்ற நிலை கடந்து செய்ய கட்டாயம் பாவவினைகள் குறையும். பாவ வினைகளின் அளவு குறைய குறையவே மனிதனுக்கு நல்விதமான இறை ஞானத் தெளிவு ஏற்படும். இது வருகிறது அல்லது வந்து கொண்டிருக்கிறது என்பதை மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது? என்றால் விதவிதமான அளவு கோல் மனிதப் பிறவியை பொறுத்து இருக்கிறது என்றாலும்கூட மீண்டும் பாவங்கள் செய்யத் தோன்றாத ஒரு நிலையும் அப்படி தவிர்க்க முடியாமல் செய்து விட்டால் பாடாய் படுத்துகின்ற நிலையும் அதனையும் தாண்டி மனமும் எண்ணங்களும் எப்பொழுதும் காற்றை விட லேசான எடையற்ற நிலையில் இருப்பதுபோல் தோன்றும்.

எது நிகழ்ந்தாலும் அதனால் மனம் பாதிக்கப்படாமல் ஒரு மூன்றாவது மனிதனுக்கு நிகழும் பொழுது பார்வையாளனாக இருந்து பார்க்கின்ற சராசரி மனிதனைப்போல தன்னுடைய தேகத்தையும் தன்னுடைய தேகம் எடுத்த பிறகு நடக்கின்ற வாழ்க்கை நிகழ்வுகளையும் பார்க்கின்ற நிலை ஏற்படும். எனவே இறை ஞானத்தெளிவு வராத வரையில் மனிதனுக்குள் எல்லாவகையான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும் செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும் அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற முறையான யோகப் பயிற்சியினாலும் அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும் கட்டாயம் பாவ வினைகள் குறைக்கின்ற வழிமுறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக்காட்டப்படலாம். அதனை உறுதியாக பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது மாந்தர்களின் கடமையாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 288

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நலமான வாழ்வு நல்விதமாய் அமைந்திட நலமான வழி முறைகளையெல்லாம் நாள் நாளும் மாந்தர்கள் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்தான். இயம்பிடுவோம் எத்தனைதான் ஒரு மனிதனுக்கு விதி அவன் வாழ்விற்கு எதிராக இருந்தாலும் அவன் மதியை ஆக்கிரமித்து அவனுக்கு தவறான வழிகளைக் காட்டினாலும் மீண்டும் மீண்டும் சரணாகதி பக்தியாலும் அல்லது தன்னுடைய மனச்சான்றின் வழிகாட்டுதல் படியும் ஒரு மனிதன் சரியான வழிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்திட வேண்டும். இறைவனின் கருணையாலே விதி வழி ஒருவன் தவறு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இதற்கு விதிதான் பொறுப்பு அல்லது எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பு என்றெல்லாம் மனிதர்கள் எண்ணி விடக்கூடாது. ஒன்று எல்லாம் விதி என்ற நிலைக்கு வந்து விட்டால் ஒரு விதி தவறு செய்யத் தூண்டுகிறது. அது விதியின் குற்றமே என்று கூறும் பொழுது அப்படியொரு தவறை செய்து அதன் விளைவாக கடுமையான தண்டனையையும் அந்த விதிதான் தருகிறது என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோபாவம் வந்துவிட வேண்டும். இறைவனின் கருணையாலே விதி குறித்தும் கர்மவினைகள் குறித்தும் மகான்கள் கூறுவது எப்பொழுதும் மனிதர்களை அச்சப்படுத்த அல்ல. விழிப்புணர்வோடு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆத்மா சிறைப்பட்டுள்ள கூடான தேகத்தை நன்றாக பராமரித்து வருதலும் அப்படி பராமரிக்காமல் விட்டுவிட்டு கடுமையான பிணி தாக்கும் பொழுது விதிதான் என்று கூறுவதும் மனிதர்களின் இயல்புதான். விதிதான் நாங்கள் மறுக்கவில்லை. விதி வழியாக ஒரு மனிதனுக்கு கடுமையான பிணி வரும் காலத்தில் வரட்டும். அவன் எத்தனைதான் சாத்வீக உணவுகளை உண்டாலும் எத்தனைதான் தேகப்பயிற்சிகளை செய்தாலும் எத்தனைதான் பிராணாயாமம் யோகாசனங்களை செய்தாலும் ஒரு கால கட்டத்திற்கு பிறகு தேகம் கடுமையான பிணியால் பாதிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்குமாயின் பாதிக்கப்பட்டே ஆகும். அதல்ல பிரச்சனை. அப்படி பாதிக்கப்பட வேண்டும் என்பதாலேயே ஒரு மனிதன் தேகப் பயிற்சி செய்யாமலோ அல்லது தேகத்தை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட வேண்டும் என்பது பொருளல்ல. விதி வழியாக நடப்பது நடந்து விட்டுப் போகட்டும். அதே சமயம் இறைவனை எண்ணி நேரிய வழியில் ஒரு மனிதன் தன் கடமைகளையும் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

மகான்கள் கூறுவது பல்வேறு தருணங்களில் குழப்பமாக இருப்பதுபோல் மனிதர்களுக்கு தோன்றும். எல்லாம் விதி. அதன் வழியாக வாழ்ந்து விட்டுப்போ என்பதுபோல் சில சமயம் மகான்கள் கூறுகிறார்கள். சில சமயம் விதிக்கு எதிராக கூறுகிறார்கள் அல்லது விதிக்கு எதிராக முயற்சி செய்யுமாறு கூறுகிறார்களே? என்றால் என்ன பொருள். இரண்டுமே மெய்யிலும் மெய். அதே சமயம் சரியான பக்குவமும் புரிதலும் இல்லையென்றால் இது போன்ற கர்ம ஞான விஷயங்களை ஒரு மனிதனுக்கு குழந்தை கையில் கிட்டிய ஆயுதம் போல் ஆகிவிடும். எனவே சரியான புரிதலை ஒரு மனிதன் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அந்த சரியான புரிதலும் தெளிவான ஞானமும் பாவங்கள் இருக்கும் வரை ஒரு மனிதனுக்கு அத்தனை எளிதாக சித்திக்காது. சித்திக்காது என்றாலும் தக்கவர்கள் கூறுகின்ற வழிமுறைகளை அவன் பின்பற்றத்தான் வேண்டும். ஆனால் அவனுடைய தெளிவற்ற மனம் தெளிவான சிந்தனையை என்றுமே ஏற்றுக் கொள்வதில்லை. தான் எண்ணுவதும் தான் நினைப்பதும் தனக்கு போதிக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே மெய் என்று எண்ணுவதோடு புறத்தே இருந்து வருகின்ற விஷய ஞானத்தைக் கூட தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையிலே மட்டும்தான் மனிதன் ஏற்கவும் மறுக்கவும் முற்படுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 287

கேள்வி : சனியும் செவ்வாயும் ஒன்றாக இருந்தாலோ அல்லது சப்தம பார்வையான ஏழாம் பார்வையாக இருந்தால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுவது எப்படி?

இறைவன் கருணையாலே ஒரு ஜாதகத்தைப் பார்த்த உடனேயே கிரகங்கள் எல்லாம் எதிர்மறையாக இருக்கிறது. நல்ல பலன்களை விட தீய பலன்கள்தான் நடக்கிறது என்றால் அந்த கிரகங்களைப் பார்த்தாலே மனிதன் அஞ்சுகிறான். இது எப்படி இருக்கிறது? என்றால் ஒரு மனிதன் வழுக்கி விழுந்து விடுகிறான் அடிபடுகிறது. எலும்பு முறிந்து விடுகிறது. இவனுக்கு சிகிச்சை தர வேண்டி மருத்துவன் விழி காணா ஔி பிம்பம் (எக்ஸ்ரே) எடுத்து பார்க்கிறான். அதிலே மிகவும் பலமாக அடிபட்டு எலும்பு விலகியும் பிசகியும் உடைந்தும் இருப்பது தெரிகிறது. அதைக் காட்டினால் பாதிக்கப்பட்ட மனிதனும் அவன் குடும்பத்தினரும் இந்த பிம்பத்தை எடுத்ததால்தானே இந்த விளைவு? இதை ஏன் எடுத்தோம்? இதை எடுக்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாமே? என்று கூறினால் எப்படி இருக்குமோ அப்படிதான் ஜாதகத்தைப் பார்த்து ஒருவன் அச்சப்படுவதும். எனவே எல்லா கிரகங்களும் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக் கொண்டால் அந்தந்த மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை நுகர்வதற்கு அந்த கிரகங்களுக்கு இறைவன் அதிகாரங்களை தந்திருக்கிறார். இதனைப் பார்த்து மனிதன் என்ன புரிந்து கொள்ள வேண்டும்?. துன்பம் அதிகமாக இருக்கும் தருணங்களிலே இந்த பாவம் கழிகிறது என்று எண்ணி அமைதியான முறையிலே அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எப்பொழுதுமே அந்த நிலையை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது என்ன கிரகமாக இருந்தாலும் மனிதனுக்கு வேண்டுமானால் கிரகம் சுபமாகவும் சுபத்திற்கு மாறாகவும் தெரியலாம். ஆனால் எல்லா கிரகங்களுமே எப்பொழுதுமே சுபத்தன்மை கொண்டவை தான்.

அந்த வகையிலே இன்னவன் கூறியது போல் இந்த கிரகம் இப்படியிருந்தால் தோஷம் அந்த கிரகம் அங்கு இருந்தால் தோஷம் என்பதெல்லாம் ஒரு வகையிலே ஜாதகக் குறிப்புக்காகக் கூறப்பட்டாலும் அது எதனை சுட்டிக்காட்டுகிறது? உடம்பிலே இன்ன வியாதி இருக்கிறது என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற மருந்தை உண்ண வேண்டும். அதற்கு ஆதரவான உணவை உண்ண வேண்டும். அதற்கு எதிரான உணவை தவிர்க்க வேண்டும் என்கிற ஒரு உணர்வு வருகிறதல்லவா? அதைப் போலத்தான் இந்த ஜாதகப் பலனைப் பார்த்து இப்படியிப்படி கிரகங்கள் இருந்தால் இன்னின்ன வகையான வழிபாடுகள் செய்து இன்ன வகையான தர்மங்களை செய்து தற்காத்துக் கொள்ளக்கூடிய ஒரு முறையை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர வெறும் அச்சத்தாலும் குழப்பத்தாலும் ஒரு மனிதன் அப்படியே சோர்ந்து விடக்கூடாது. யாம் (அகத்திய மாமுனிவர்) அடிக்கடி கூறுவது தான். தர்மகாரியங்களில் எவனுக்கு இயல்பாக நாட்டம் இருக்கிறதோ அவன் இன்னும் அதிகப்படுத்திக் கொள்வதும் அறவே நாட்டமில்லாதவன் சிறிதளவாவது தர்ம குணத்தை வளர்த்துக் கொண்டால் கட்டாயம் நவகிரக தோஷங்கள் ஒரு மனிதனை பெருமளவு பாதிக்காது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 286

கேள்வி: பித்ரு பூஜை செய்ய முடியாத சூழலில் என்ன செய்வது? காயத்ரி மந்திரங்களை பெண்கள் சொல்லலாமா?

இறைவன் கருணையாலே இதற்கு பலமுறை வாக்கைக் கூறியிருக்கிறோம். ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் சென்று இறை வழிபாட்டில் ஈடுபடலாம். மனமொன்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண் பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை. இதுபோல் முன்னொர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும் வேறு சிறப்பு வழிபாடுகளையும் முன்னோர்கள் தொடர்பான தர்ம காரியங்களையும் ஒருவன் செய்துதான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதே சமயம் முறையான பூஜை செய்ய இயலாதவர்கள் மானசீக பூஜை செய்து இயன்ற தர்ம காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க வீட்டிலே வாழ்கின்ற முதிர்ந்த பெரியவர்களை அவமானப்படுத்தி வேதனைப் படுத்திவிட்டு அவர்கள் இறந்த பிறகு பூஜை செய்வதால் எந்த பலனுமில்லை. வாழும் பொழுதும் அவர்கள் எப்படி நடந்து கொண்டாலும் மதிக்க வேண்டும் போற்ற வேண்டும். அதே சமயம் அவர்கள் இந்த உலகை விட்டு சென்ற பிறகும் குறைந்த பட்சம் மாதம் ஒரு தினமாவது குறிப்பாக நிறைமதி (பௌர்ணமி) காலத்திலாவது அவர்கள் நினைவாக தர்ம காரியங்களை செய்வதும் சிறிய சிறிய பூஜைகளை செய்வதுமாக இருக்க வேண்டும். கால அவகாசம் இல்லை என்று மனிதன் கூறுகிறான். ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொள்ளலாம். ஆனால் உலகியல் வாழ்வை எதிர் கொள்ள வேண்டிய மனிதன் எத்தனையோ இடங்களில் காத்திருக்கிறான். அலுவலகத்தில் பயண இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் அவன் காலத்தை வியம் (விரயம்) செய்கிறான். ஆனால் ஒரு தினம் ஒதுக்கி முன்னொர்களுக்கோ அல்லது வேறு வழிபாட்டிற்கோ கால அவகாசத்தை ஒதுக்க அவனுக்கு காலம் இல்லை என்கிறான். காலமில்லை என்பதை விட மனதிலே ஈடுபாடு இல்லை என்பதுதான் மெய்யான நிலையாகும்.

கேள்வி: மனிதன் வாழும் பொழுதே சில விருப்பங்களை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கிறான். அதனால் தன் விருப்பத்திற்கேற்ப பூமியில் பிறக்கிறானா?

அதிக புண்ணியம் செய்த ஆத்மாக்களுக்கு வேண்டுமானால் சில வாய்ப்புகளை இறைவன் தரலாம். ஆனால் புண்ணியம் மிகக் குறைவாகவும் பாவம் அதிகமாகவும் உள்ள அதாவது மனித பிறவி எடுக்கும் அளவிற்கு மட்டுமே புண்ணியம் இருந்து வேறு புண்ணியம் இல்லாத ஆத்மாக்களுக்கு எந்த வாய்ப்பையும் இறைவன் தருவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 285

அகத்திய மாமுனிவர் உறுதி படக்கூறும் உண்மைச் சம்பவம். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை:

நம் தமிழகத்திலிருந்து ஒரு குடும்பம் காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது அந்தண குலம் என்பதால் வேதம் ஓதுவதும் குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர வளர தந்தைக்கு ஒரு கவலை. நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால் நிம்மதியாக இருக்கலாமே என்று. ஆனால் மகளோ பிடிவாதமாக அப்பா நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம் என்று உறுதிபடக் கூறி விட அக்கம் பக்கம் உள்ளவர்களும் அறிந்தவர்களும் கூட அம்மா நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும் காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து பிறகு வேறு வழியில்லை என்பதால் தன்னிடம் இருக்கக் கூடிய நில புலன்களை எல்லாம் விற்று அம்மா ஒரு வேளை நான் இறந்து போய் விட்டாலும் இந்த செல்வத்தைக் கொண்டு பிறரை நாடாமல் கையேந்தாமல் வாழ்ந்து கொள் என்று ஏற்பாடு செய்து ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு சில காலங்களில் இறந்தும் விடுகிறார். தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார் அவற்றை செயல்படுத்தினால் என்ன? என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும் உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர் மருத்துவ உதவி கல்வி உதவி வேண்டும் என்று கேட்க இவளும் செய்து கொண்டே வருகிறாள்.

இறைவனின் திருவுள்ளம் இந்தப் பெண்ணை சோதிக்க எண்ணியது. அந்தக் காசி மாநகரம் முழுவதும் இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து தந்து ஒரு கட்டத்தில் வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க வேறு வழியில்லை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால் இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால் அச்சமும் ஆட்கொண்டு விட்டது. இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ இப்படிக் கடனாக என்னை இடர் படுத்துகிறது. இறைவா நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால் என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும் கடனை திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன் என்று மனம் உருகி இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒர நாள் ஒரு பழுத்த மகான் இவளைத் தேடி வருகிறார். மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார். அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும் என்று அந்த மகான் கூறுகிறார். எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா? என்று அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும் துறவி கூறியதால் அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால் அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர் பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையில் பெண்ணே உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்று செல்வந்தன் கேட்க எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்று செல்வந்தன் கேட்க இவள் தயங்கி தயங்கி தனக்கு ஏற்பட்டுள்ள கடன் மற்ற பிரச்சனைகளைப் பற்றிக் கூறி அக்கால கணக்கின்படி ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால் எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஐந்து லட்சம் தந்தால் காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார். என்று தயங்கி தயங்கி கூறுகிறாள்.

அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப்பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி அந்த செல்வந்தர் மிக சாமார்த்தியமாகப் பேசுகிறார். பெண்ணே நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும் நீர்த் தடங்களை அமைப்பதும் கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால் உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும் இப்படி தர்மம் செய்த நீயே நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியும்? அடுத்ததாக நான் கடன் கொடுத்தால் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி நீ கேட்கின்ற அந்த தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது? என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.

இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள். மன்னித்து விடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதுவும் தருவதற்கு இல்லை என்று செல்வந்தர் கூற அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும் என் தந்தையும் ஆங்காங்கே பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக் கூடிய ஊர் பொதுக் குளம் கூட அடியேன் கட்டியதுதான். இந்த நீரை தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும் இந்த பொதுக் குளத்தை எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே நாளைக் காலை சூரிய உதயத்தில் இருந்து யாரெல்லாம் நீர் பருகுகிறார்களோ அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று கேட்க அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே பெண்ணே ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு நீ கூறியபடி நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம் என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும் புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து புண்ணியம் என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? என்று கேட்கிறார்.

அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும் படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள் என்று அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே குளக்கரையில் கருங்கல்லால் ஆன சிவ லிங்கத்தைக் காட்டி எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக் காட்டக் கூடாது. என்றாலும் கடனிலிருந்து தப்பிக்க இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர் இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து அசலும் வட்டியுமான புண்ணியம் இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் என்று கூறி பல முறை பஞ்சாட்சரம் கூறி வணங்கி அடியாட்களின் துணை கொண்டு அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு அந்த செல்வந்தரைப் பார்த்து அய்யா நீரின் உள்ளே இருப்பது வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாட்சத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன் படுத்துவார்களோ எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ அப்பொழுதே இந்த சிவலிங்கம் மிதக்கும் என்று கூறுகிறாள்.

செல்வந்தரோ நகைத்து அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே. இல்லை. நம்புங்கள் சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள் என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தர மாட்டேன் என்றால் நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும் இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால் இவள் புண்ணியவதி என்பதை நானும் ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால் இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும். என்று எண்ணி அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக் கொண்டு வீடு சென்று யார் யாருக்கு தர வேண்டுமோ அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு இறைவா உன்னை நம்பித்தான் இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள்.

இங்கே செல்வந்தரோ அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ? என்று உறக்கம் வராமல் எப்பொழுது விடியும்? என்று பார்த்து விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு கையில் ஒரு ஏடும் எழுத்தாணியும் வைத்துக் கொண்டு ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன? என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டு இவரும் வீட்டின் மேல் விதானத்தில் அமர்ந்து கொண்டு குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார். காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென சாம்பிராணி குங்கும மணத்தோடு பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார். அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி விட்டது. ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால் அந்த புண்ணியவதி செய்த அறப்பணிக்கு முன்னால் என் செல்வம் அத்தனையும் வீண் என்பதை புரிந்து கொண்டு என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள் என்று கூற ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து தானும் கடைவரை(கடைசி வரை) தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300 400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 284

கேள்வி: மேலைத் தவத்தளவே ஆகும் தான் பெற்ற செல்வம் என்னும் ஔவையாரின் வாக்கைப்பற்றிக் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும்:

செல்வம் என்றால் பொருள் செல்வத்தையல்ல. அருள் செல்வத்தையே ஔவைப் பிராட்டி கூறி அருளியிருக்கிறாள். முற்பிறவியில் செய்த தவம் அல்லது நல்ல சத்காரியங்களின் விளைவாகத்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்ல ஆன்மீக வாழ்க்கை இயல்பாகவே ஒருவனுக்கு அமைகிறது. எனவே தான் ஒரு மனிதனின் பார்வைக்கு வேண்டுமானால் ஒரு பிறவி என்பது நீண்ட காலம் போல் தெரியும். ஆனால் மகான்களுக்கும் இறைவனுக்கும் ஒருவனின் பிறவி என்பது ஒரு கணப்பொழுது போல் தெரியும். எனவே தான் வாழுகின்ற பொழுதும் இந்த வாழ்க்கை தாண்டி அடுத்த பிறவிக்கும் ஒரு மனிதன் இப்பொழுதிலிருந்தே நல்ல விஷயங்களை பேசியும் செய்தும் பழகி வந்தால் இந்தப் பிறவியும் இனி அடுத்து வரும் பிறவியும் அருள் வாழ்க்கைக்கு செல்வதற்குண்டான சூழலை ஏற்படுத்தும். கடினப்பட்டு ஏற்படுத்திக் கொள்வது என்பது ஒரு வகை. இயல்பாகவே நல்ல குடும்பத்தில் சாத்வீக குடும்பத்தில் தர்மத்தில் நாட்டமுள்ள குடும்பத்தில் சத்தியத்தில் விருப்பமுள்ள குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது இயல்பாகவே நல்லவனாக வளர்வது எத்தனை எளிதோ அத்தனை ஒரு எளிதான நிலை ஏற்படும். ஆனால் பாவங்கள் அதிகமாக சேர்த்து விட்ட ஆத்மாவிற்கு இது போன்ற வாய்ப்பு அந்த பாவங்கள் தீரும் வரை இயல்பாக அமைவது என்பது கடினம். எனவேதான் அந்த அருட்செல்வத்திற்கு வேண்டிய தவத்தை அதாவது தவம் என்றால் கண்ணை மூடி செய்வது மட்டுமல்ல. வாழுகின்ற வாழ்க்கை முறையில் கடுமையான நிலையிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கின்ற அந்த நிலையைத்தான் தவம் என்று கூறுவது உண்டு. எனவே அப்படி வாழ்ந்தால் அது அருட்செல்வத்தை சேர்த்துத் தரும் என்பதே பொருளாகும்.

கேள்வி: விருத்தாச்சலத்தில் (கடலூர் மாவட்டம்) அவ்வைப் பிராட்டி மூத்தோனை வணங்கி கயிலையை அடைந்ததைப் பற்றியும் அமிர்த சஞ்சீவினி பற்றியும் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும்:

கோவில் உள்ள ஊர் விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம். திருக்கோவில் விருத்தகிரீஸ்வரர் ஆலயம்

மிக மிக உயர்வான சிறப்பான ஆலயம். தடை நீங்க பிள்ளையை (வினாயகர்) சென்று வணங்க ஏற்றதொரு ஆலயமப்பா. இதோடு இங்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்கு வழி இருக்கிறது. பிற அற்புத விஷயங்களை தக்க காலத்தில் கூறுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 283

கேள்வி: அன்பே சிவம் விளக்கம்:

இறை அன்பு உருவமாக இருக்கிறது. அல்லது உலகத்தின் ஒட்டு மொத்த கருணையும் அன்பும் சேர்ந்தால் அதுதான் இறை என்பதன் பொருள்தான் இது. ஆனால் மனிதர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வரும் சமயம் இறைவன் அன்பு மயமானவன் இறைவன் கருணை கொண்டவன் என்றால் ஏற்க முடியவில்லையே? எனக்கு ஏன் இத்தனை இடர் வருகிறது? என்ற ஐயம் (சந்தேகம்) இருக்கிறது. அவனவன் வினைகளை உணர்ந்து கொண்டால் கர்மாக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பிறவிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அப்பொழுது புரியும் இறைவன் அன்பு மயமானவன் என்று. பல பிறவிகளில் சேர்த்த பாவங்களையெல்லாம் சிறிது சிறிதாகத்தான் நுகர இறைவன் அனுமதிக்கிறார் என்றாலே அதுவே இறைவனின் கருணையாகும். ஒட்டு மொத்தமாக ஒரே கணத்தில் ஒரு மனிதனின் பாவங்களையெல்லாம் அவன் நுகர வேண்டும் என்றால் அதை விட கடுமையான தண்டனை உலகினில் வேறு எதுவும் இல்லை. சில காலம் அரவணைப்பு சில காலம் சந்தோஷம் சில காலம் துயரம் என்று மாறி மாறித்தான் இறைவனும் தருகிறார். மனிதர்கள் எத்தனை கொடுமைகள் செய்தாலும் இந்தப் பூமியை எத்தனை பாழ் படுத்தினாலும் எத்தனை இடர் படுத்தினாலும் எத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாரே? எனவே அந்த இறை அல்லது சிவம் அன்பு என்பதில் இரு வேறு கருத்து ஏதும் இல்லையப்பா.

கேள்வி: சரணாகதி தத்துவத்தை விளக்கிக் கூற வேண்டும்:

விடம் (விஷம்) அருந்து என்று குருவோ அல்லது குரு வடிவமாக இறை வந்து கூறினால் இது விடமாயிற்றே? (விஷமாயிற்றே) இது அருந்தினால் உயிர் போய் விடுமே? விடத்தை (விஷத்தை) யாராவது அருந்துவார்களா? அவன்தான் கூறினான் என்றால் இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? அவன் தான் குரு என்று கூறினால் இவனுக்கு இறைவன் புத்தியைத் தந்திருக்கிறானே? மறுத்திருக்க வேண்டாமா? என்றெல்லாம் அறிவு கூறினாலும் கூறியது அல்லது குருவாக நம்பிய அந்த உன்னதமான ஆத்மா கூறியது என்பதால் அதனை அப்படியே எந்தவிதமான காரண காரியங்கள் பாராமல் எவன் ஏற்கிறானோ அதுதான் பரிபூரண சரணாகதி தத்துவத்தை நோக்கி செல்கின்ற நிலையாகும்.