ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 360

கேள்வி: நல்ல ஆத்மாவாக இருக்கும் ஒருவன் தனக்கு முன் ஜென்ம பாவங்களால் இப்பிறவியில் ஏற்படும் இன்னல்களால் விரக்தி உண்டாகி மேலும் மேலும் தவறு செய்யக் கூடுமல்லவா?

இறைவன் அருளால் சென்ற ஜென்மத்தில் நிறைய பாவங்களை செய்து அதற்குண்டான தண்டனைகளை இந்த ஜென்மத்தில் எவன் நுகரவேண்டும் என்று தலையிலே எழுதப்பட்டிருக்கிறதோ அவன் அதை நுகர்ந்து கொண்டிருப்பான். தண்டனைகளையும் மீறி நல்லவனாக வாழ வேண்டும் என்று எவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ அவன் தண்டனைகளை அடைந்தாலும் நன்மைக்குரிய குணங்களை விடமாட்டான். மேலும் மேலும் பாவங்கள் செய்ய வேண்டும் என்று எவன் தலையில் எழுதப்பட்டிருக்கிறதோ அவன் அப்படித்தான் வாழ்வான். எனவே எப்படி பார்த்தாலும் விதிதான் அங்கு முன்னே நிற்கிறது. இதையும் மீறி ஒருவன் மேலே வர வேண்டும் என்றால் பக்தியும் தர்மமும் மட்டும்தான் அவனை காப்பாற்றும். மனித சக்திக்கு அப்பாற்பட்டு எத்தனையோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பொதுவாக மனிதனே இந்த பஞ்ச பூதத்தால் ஆன உடலை உகுத்து விட்டால் அவன் ஆத்மா எங்கு வேண்டுமானாலும் செல்லும். மனித உடல் எடுத்த பிறகுதான் அதற்கு வடிவம் எடை காலம் தூரம் நாழிகை அளவு எல்லை தேவைப்படுகிறது. உதாரணமாக இந்த அடைப்பான் தாழிட்டிருந்தால் மனிதனால் வெளியே செல்ல முடியாது. திறந்தால்தான் வாசல் வழியாக வெளியேற முடியும். ஆனால் இவனுக்குள் இருக்கின்ற ஆத்மா சுவரோ கல்லோ மரமோ கதவோ அல்லது மேற்கூரையோ எதற்குள் வேண்டுமானாலும் புகுந்து மறுபக்கம் சென்று விடும். இதே ஒரு அதிசயமில்லையா?

வெண்கல வினாயகர்

உலகின் மிக உயரமான விநாயகர் சிலை தாய்லாந்தின் க்லோங் குவானில் உள்ளது. 39 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தால் ஆன விநாயகர் இவர். இவர் கையில் 4 கைகள் உள்ளன. மேல் வலது கையில் பலாப்பழம் மேல் இடது கையில் கரும்பு கீழ் வலது கையில் வாழைப்பழம் கீழ் இடது கையில் மாம்பழம் வைத்திருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 359

கேள்வி: அரங்கனைப் பாடும் வாயால் குரங்கினை பாடமாட்டேன் என்று ஒரு ஆழ்வார் சொல்லியிருக்கிறார். ஞான நிலையில் இருப்பவர்கள் இப்படி பேதம் பார்க்கலாமா?

பக்தி மேலீட்டால் கூறப்படுகின்ற வார்த்தைக்கெல்லாம் தவறாக பொருளை எடுத்துக் கொள்ள கூடாது. என் குழந்தை ராஜா என்று தாய் அரவணைத்து பாராட்டும் பொழுது உண்மையில் குழந்தை ராஜாவாகி விடுகிறதா என்ன? பாசத்திலும் அன்பிலும் கூறப்படுகின்ற கூற்றாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது இதுபோல் வார்த்தைகளுக்கெல்லாம் நேருக்கு நேர் பொருள் கொள்ளக் கூடாது. இதனை அருள் நிலையில் பார்த்து சூட்சுமமான பொருளை பழகிக் கொள்ள வேண்டும். எனவே ரங்கனாகிய பெருமாளை ரங்கனாகிய விஷ்ணுவை ரங்கனாகிய கண்ணனை ரங்கனாகிய ராமனை பாடுகின்ற வாயால் குரங்கினை பாடமாட்டேன் என்றால் குரங்கு போல் அலைபாயும் கொண்ட மனம் கொண்ட மன்னர்களை மனிதனை பாட மாட்டேன் என்ற ஒரு பொருளும் உண்டு.

அதுபோல் தலைவனை பாடும் வாயால் அதுபோல் தொண்டனைக் கூட நான் பாட மாட்டேன். ஆஞ்சனேயர் என்னதான் ஆத்மார்த்தமான தொண்டனாக இருந்தாலும் நான் தலைவனுக்குள்ளேயே தொண்டனை பார்ப்பதால் ஆஞ்சனேயரைக் கூட நான் பாடமாட்டேன் என்று கூட பக்தி மேலீட்டால் கூறியதாக ஒரு பொருள் கொள்ள வேண்டுமே தவிர இதற்கு சராசரி பொருளை கொள்ளுதல் கூடாது.

ஔவையாரை கயிலைக்கு தமது துதிக்கையால் தூக்கியருளிய கணபதி

சுந்தரர் வெள்ளை யானை மீதேரியும் அவர் தோழராரன சேரமான் பெருமாள்நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஔவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஔவையார் தானும் கைலாயம் செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய ஆரம்பித்தார். ஔவையாருக்கு விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும் கயிலைக்கு தான் அழைத்து செல்வதாகவும் அருளினார். ஔவையார் பொறுமையாக தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஔவையாரை கணபதி தனது துதிக்கையால் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கையிலை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 358

சொல் அக விளக்கது சோதி உள்ளது. இதன் பொருள் என்ன?

அதிலேயேதான் அர்த்தம் வெளிப்படையாக தெரிகிறதே அப்பா. அகத்திலே ஜோதியை பார்க்க வேண்டும். அதற்கு சொல் எனப்படும் சிவாய நம அல்லது நம சிவாய அல்லது நமோ நாராயணாய எனப்படும் அந்த மந்திர சொல்லை அகத்திலே இருந்து சொல்ல சொல்ல சொல் அகமே ஜோதி அகமாக ஆகி ஜோதி விளக்காக எரியுமப்பா ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 357

கேள்வி: இருப்பதிலேயே புனர்பூசம்தான் பெரிய நட்சத்திரமா?

பொதுவாக குருவைத் தேடி அலைபவர்கள் இந்த நட்சத்திரம் நடக்கின்ற காலத்தில் குரு தட்சிணாமூர்த்திக்கு 9 முக தீபம் ஏற்றி குரு தட்சிணாமூர்த்தியின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.