ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 531

கேள்வி: தமிழ்நாட்டில் அஷ்ட பைரவர் கோவில் சீர்காழியைத் தவிர வேறு எங்கு உள்ளது? என்று சொல்லுங்கள்.

அப்படியானால் ஏக பைரவரை வணங்கினால் இந்த பலனும் வராது என்ற பொருளாகிவிடும். தாராளமாக அஷ்டபைரவரையும் வணங்கலாம். சதுர் கால பைரவரையும் வணங்கலாம். பஞ்ச பைரவரையும் வணங்கலாம். ஏக பைரவரையும் வணங்கலாம். பைரவரை வணங்காத பலரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள். அஷ்டபைரவர் வழிபாடு சதுர்கால பைரவர் வழிபாடு என்பதெல்லாம் குறிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பைரவரை எப்படி எந்த நாமத்தின் வணங்கினாலும் பைரவரின் அவதார நோக்கமே பாவ கர்மாவை குறைப்பதுதான். குறிப்பாக அறிந்தும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்ய நேரிடுகிறது என்று வருந்தக் கூடியவர்கள் ஒரு குடும்பத்திலே அகால மரணங்கள் அடிக்கடி நேரிடுகிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் கட்டாயம் அன்றாடம் குறைந்தபட்சம் ஐந்து ஐந்து முக நெய் தீபங்களாக பைரவர் முன்னால் ஏற்றி மானசீகமாக பைரவரின் அஷ்டோத்திரத்தையோ சகஸ்ர நாமத்தையோ பைரவர் அஷ்டகத்தையோ அல்லது அவன் அறிந்த மந்திரத்தையோ துதித்து வந்தால் கட்டாயம் இந்த தோஷம் நீங்கும். இது பக்தி வழி.

அதற்காக பைரவரை வணங்கி விட்டு வெளியே வந்தவுடன் ஒரு பைரவரின் வாகனம் (நாய்) வால் ஆட்டிக் கொண்டே வந்தால் அந்த பக்கம் போ வராதே என்று அதனை விரட்டினால் ஏற்றிய தீபம் வேண்டிய பிரார்த்தனை அத்தனையும் வீணாகிவிடும். எனவே உயிரினங்களையும் போற்ற வேண்டும். பைரவரையும் வணங்க வேண்டும். பல இடங்களிலேயே பைரவ வாகனத்தை வளர்த்து விட்டு தொல்லையாக இருக்கிறது என்று எங்காவது கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த பாவத்திற்கு பிரயாசித்தம் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொல்லை என்று தெரியும் அல்லவா? எதற்கு அதனை வளர்க்க வேண்டும்? எதற்கு அதனோடு போராட வேண்டும்? அதை போல் ஒரு மனிதனுக்கு பூர்வீக தோஷங்கள் கர்மங்கள் முன்னோர்கள் செய்த கடுமையான பாவங்கள் சாபங்கள் இருக்கிறதென்றால் கட்டாயம் அவன் வாழ்க்கையிலே பைரவர் வழிபாட்டை எல்லா வகையிலும் சிறப்பாக செய்ய வேண்டும். ராகு காலத்திலோ அல்லது அஷ்டமியிலோ தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அப்படி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் செய்யட்டும். வாய்ப்பு இல்லாதவர்கள் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ தாராளமாக செய்யட்டும். நெய் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் தூய்மையான எள் எண்ணெய் தீபமும் ஏற்றலாம் குற்றம் ஏதுமில்லை. நல்ல மிளகினை அதிலே போட்டு ஏற்றலாமா? என்றால் தாராளமாக ஏற்றட்டும் தவறொன்றும் இல்லை. தீபம் மட்டும் ஏற்றினால் போதுமா அபிஷேகம் செய்ய வேண்டாமா? என்றால் தாராளமாக அபிஷேகம் செய்யலாம். அரளி பூதான் போட்டு அர்ச்சிக்க வேண்டும் என்பது இல்லை. எல்லா வகையான நறுமண மலர்களையும் சாற்றலாம்.

எனவே பைரவர் வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் பிதர் சாபத்தை, முன்னோர்கள் பெற்ற சாபத்தை, பாவத்தை, முன்னோர்களுக்கு இவர்கள் செய்ய தவறிய கடமையினால் ஏற்படக்கூடிய பாவத்தை, சாபத்தை நீக்கக்கூடிய மிக முக்கியமான வழிபாடு. அந்தந்த சிறப்பான ஸ்தலங்களுக்கு சென்று தான் இதை செய்ய வேண்டும் என்று இல்லை. அவரவர்களின் இல்லத்தில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று செய்யலாம். அந்த வசதியும் இல்லாதவர்கள் சிவபெருமானின் அம்சம் தான் பைரவர் என்பதால் பைரவரின் ரூபம் கிடைக்காதவர்கள் சிவபெருமானின் ரூபத்தை வைத்துக்கூட பைரவ வழிபாட்டை இல்லத்தில் உள்ள சுத்தி உடல் சுத்தியோடு தாராளமாக செய்யலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 530

கேள்வி: பாவ கர்மாக்களை குறைக்க உடலோடு இருக்கும் பொழுது மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அல்லது உடலை உகுத்த பிறகும் அந்த ஆன்மா பிரார்த்தனை செய்து கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள முடியுமா?

பூர்வ புண்ணியம் அதிகமாக இருந்தால் விலங்கு நிலையில் இருந்தால் கூட இறைவனை வணங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு திருவானைக்காவல் திருவெறும்பூர் உதாரணம். எனவே அப்படி பூர்வ புண்ணியம் அதிகமாக பெற்றவர்கள் தேகத்தை இழந்த பிறகும் சூட்சும சாரீரத்தில் அலைந்து கொண்டே கூட இறை நாமத்தை ஜெபிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் லகரத்தில் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிட்டும். ஏனையோர்க்கு எல்லாம் குழப்பத்திலும் பயத்திலும் தான் இறந்து விட்டோம் என்று கூட தெரியாத நிலையில் எப்பொழுதும் அலைந்து கொண்டிருப்பார்கள். இது போல் நிலையிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால்தான் உடலோடு இருந்தாலும் வாழ இயலும். உடலை விட்டாலும் நன்றாக வாழ இயலும்.

உதங்கமுனிவர்

வில்வ மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூஜை செய்யும் உதாங்கமுனிவர். இடம்: பஞ்சவர்ணேசுவரர் கோவில். உறையூர் திருச்சி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 529

கேள்வி: மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொண்டால் பாவ கர்மங்களின் அளவு குறைக்கப்படுகின்றதா?

இறைவனின் அருளால் ஒரு ஏழை சிறு அளவு தனத்தை கூட செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அன்றாடம் வாழ்க்கையில் போராட்டத்தையே காண்கிறான். வறுமையின் உச்சத்தில் இருக்கிறான். அவனைப் போன்ற மனிதர்கள் ஆலயம் சென்று வெறும் உடல் ரீதியான தொண்டை செய்துவிட்டு எதை வேண்டினாலும் ஒருவேளை இறைவன் அருளால் கிடைக்கலாம். ஆனால் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மோட்ச தீபத்திலோ வேறு வழிபாடுகளிலோ கலந்து கொண்டு வணங்கி விட்டு வந்தால் மட்டும் பலன் கிட்டாது. அந்த தொண்டிற்கு உண்டான செலவினங்களை தாராளமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கிறது நான் மிகவும் போராடி சேர்த்து வைத்திருக்கிறேன். நான் ஏன் தர வேண்டும்? என் அந்திம (இறுதி) காலத்திற்கு நான் யாரிடம் கையேந்துவது? என்ற சித்தாந்தங்களும் கொள்கைகளும் உள்ளவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு சென்று மிகவும் சிக்கனமாக சாமர்த்தியமாக நடந்து கொண்டால் ஒரு பலனும் அவர்களுக்கு கிட்டாது.

சண்முகன்

ஆறுமுகங்களும் பன்னிருகைகளுடன் கொண்ட சண்முகன். ஸ்ரீ சிகாநாதசாமி (சிகாகிரீஸ்வரர்) கோவில் குடுமியான்மலை. புதுக்கோட்டை மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 528

கேள்வி: தீபத்தை புதிதாக தான் ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் எண்ணையை ஊற்றி தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது அது பற்றி விளக்குங்கள்:

இறைவன் அருளால் பரிகாரம் கோரிக்கை பாவங்கள் குறைய வேண்டும் என்று ஒரு நேர்த்திக்கடனாக செய்யப்படும் பூஜைகளிலே புதிய விளக்குகளை ஏற்றுவதும் புதியதாக அனைத்தையும் பயன்படுத்துவதும் சிறப்பு. ஆனால் சாதாரணமாக ஒரு ஆலயத்துக்கு செல்கிறான் ஒரு மனிதன். அங்கு ஒரு தீபம் அணையும் நிலையில் இருக்கிறது. அதனை தூண்டிவிட்டு சுடர்விட செய்யலாம். அதில் ஒன்றும் தோஷம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தொண்டாக செய்யும் பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றுவது தவறில்லை. ஆனால் பிராயச்சித்தம் என்று வரும்பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றக்கூடாது. சாப்பிட்ட இலையில் சாப்பிடுவாய் என்றால் ஏற்றிய தீபத்தில் ஏற்றலாம்.

சிவசக்தி

சிவபெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை. அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள். அவள் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். இடம்: ஹலபேடு. ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 527

கேள்வி: சித்தர்கள் கூறிய பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? நாங்கள் ஆலயத்திற்கு சென்று செய்யும் பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கூறுங்கள் ஐயனே:

இறைவன் அருளால் உண்மையான பிரார்த்தனைகளை நாங்கள் கூறி செய்தாலும் மனிதனாக செய்தாலும் இரண்டிற்கும் நல்ல பலன் உண்டு. இது ஒரு நிலை அடுத்ததாக மகான்களும் ஞானிகளும் வழிகாட்டி அதன் மூலம் பரிகாரங்களை செய்யும் பொழுது மனிதனுக்கு சற்று கூடுதல் பலமும் வலிமையும் கிடைப்பது என்பது உண்மையாகும். இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆளுகின்ற அரசனை நேரடியாக சென்று பார்த்து உதவி கேட்பது ஒருவகை. அந்த அரசனுக்கு நெருங்கிய உறவின் மூலம் செல்வது இன்னொரு வகை. இரண்டில் எது சிறப்பு? என்பதை புரிந்து கொண்டால் இந்த வினாவிற்கு விடை புரியும்.

நடராஜர்

வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் இருவருக்கும் நடராஜர் தனது திருநடனத்தை காட்டி அருளிய காட்சி. இடம் முக்தீஸ்வரர் கோவில். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.