சிவ வடிவம் – 27. கங்காளமுர்த்தி

ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப் பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. அதன் பலனாக அந்த எலிக்கு மூன்று லோகமும் ஆட்சி செய்யும் அமைப்பை வழங்கினார் சிவபெருமான். அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி என்ற மன்னனாக அசுர குலத்தில் பிறந்தான். மகாபலி அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும் யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக விளங்கினான். மகாபலியின் தவப் பயனால் அசுர குலத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் வெற்றி பெறவே தேவர்கள் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். அந்த நேரம் திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்டாள். அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்துப் பிறந்தார் திருமால். மகாபலி மிகப்பெரிய யாகம் ஒன்றை செய்தான். யாகத்தின் போது செய்யப்படும் தானத்தின் போது வாமன அவதாரத்தில் இருந்த திருமால் யாகம் நடைபெறும் இடத்திற்கு சென்று மூன்றடி மண் கேட்டார். இதனைக் கண்ட அசுர குலத்தின் குருவான சுக்ராச்சாரியார் மகாபலியிடம் சென்று வந்திருப்பது திருமால் எனவே தானம் தர ஒப்புக் கொள்ள வேண்டாம் என தடுத்தார். இறைவனுக்காக செய்யப்படும் மிகப்பெரிய யாகத்தின் போது யார் என்ன தானம் கேட்டாலும் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அரசனான நான் வாக்கு தவற மாட்டேன் என்று சுக்ராச்சாரியார் சொல்லை கேட்காமல் மூன்றடி மண் தானமாக தர ஒப்புக் கொண்டார் மகாபலி.

திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுத்து ஓரடியால் பூலோகத்தையும் மற்றொரு அடியால் மேலோகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று திருமால் கூற மகாபலி தன் தலை மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். அதன்படி மகாபலியின் தலை மீது வாமனன் தன் திருவடியை வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்தில் அமிழ்ந்தான். தான் திருமாலின் அவதாரம் என்ற எண்ணம் மறைந்து தான் வாமனன் சிறு வயதிலேயே அசுரனை அழித்து விட்டேன் என்று வாமனனுக்கு கர்வம் வந்தது. சிவபெருமான் வாமனரை அமைதி கொள்ள வேண்டினார். ஆனால் கர்வம் அடங்காத வாமனனின் கர்வத்தை அடக்க சிவபெருமான் தன் திருக்கையில் உள்ள வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்தார். வாமனன் நிலம் வீழ்ந்தார். வாமன அவதாரத்தில் இருந்த உடம்பின் தோலை உறித்து மேல் ஆடையாக்கி முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டார். கர்வம் அடங்கியதும் தான் அவதாரம் என்பதை உணர்ந்த திருமால் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வைகுண்டம் சென்றார்.

கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும். கங்காளமூர்த்தி சீர்காழியில் கோயிலில் சட்டைநாதர் பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். இறைவி பெயர் பெரியநாயகி திருநிலை நாயகியாகும். கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 590

கேள்வி: குருநாதர் பல கேள்விகளுக்கு மௌனமாக இருக்கிறார்?

இறைவன் அருளால் ஸ்ரீ ராமபிரானுக்கு அபிஷேகம் நடந்தது. யாராவது வந்தார்களா? ஏதாவது அங்கு அதிசயம் நடந்ததா? இது குறித்து குருநாதர் ஏதும் கூறவில்லையே? இதுகுறித்து ஏதாவது கூறினால் நன்றாக இருக்குமே. ஆஞ்சநேயர் வந்தாரா? கருடாழ்வார் வந்தாரா? சிறிய திருவடியா? பெரிய திருவடியா? அல்லது ராம பிரானே வந்து அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டாரா? இவையெல்லாம் நியாயமான வினாக்களாக இருந்தாலும் இது போன்ற வினாக்களுக்கு அதிலும் இத்தருணம் யாங்கள் ஏதும் கூற விரும்பவில்லை. இனி அவரவர்களே இதுபோன்ற இறைவழிபாட்டில் புரிந்து கொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நடக்கும் வண்ணம் அவரவர்களும் தன் மனதை லயப்படுத்தி பூஜை செய்தால் பலன் உண்டு. அந்த பலனை அங்கேயே உணரக்கூடிய ஒரு தன்மைக்கு அனைவரும் ஆட்பட வேண்டும் என்று நாங்கள் மௌனம் காக்கிறோம்.

ராமர் அனுமன்

சீதையை இலங்கையில் கண்டதற்கு சாட்சியாக சீதை தந்த கணையாழியை ராமரிடம் கொடுக்கும் அனுமன். இந்த சிற்பத்தில் ராமர் ஒரு கால் மீது இன்னோரு கால் மடக்கி வைத்து அமர்ந்திருப்பதும் தனது அம்புகளை வைக்கும் அம்பறாத்தூணியில் அம்புகள் இருப்பது தெளிவாகத் தெரியும் வண்ணம் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. இடம் திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் திருக்கோவில். மயிலாடுதுறை மாவட்டம்.

குருவே இறைவன்

ஒரு சீடனின் வீட்டுக்கு இறைவனும் சீடனின் குருவும் வருகை தந்தனர். இறைவனையும் குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக இறைவனின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான். உடனே இறைவன் அவனைத் தடுத்து முதலில் நீ உன் குருவை வணங்கு என்று சொன்னார். சீடன் குருவினை பணியச் சென்ற போது சீடனே நான் உனது வீட்டிக்கு இறைவனை அழைத்து வந்திருக்கிறேன். அதனால் நீ இறைவனைத்தான் முதலில் வணங்க வேண்டும் என்று சொன்னார். குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் இறைவனின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். அப்பனே உன் வாழ்க்கையில் இறைவனை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார். ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும். ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக என்றார் இறைவன். சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். சீடனே நான் தான் இறைவனை அடைய வழி காட்டினேன் என்றாலும் அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். ஆகவே நீ முதலில் இறைவனிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது என்றார் குரு. மீண்டும் இறைவனிடம் சென்றான் சீடன். அப்பனே உனது குரு சொல்வது எல்லாம் சரிதான். இறைவன் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்கிறேன். அதன் பின் சிந்தித்து செயல்படு என்றார்.

ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன். ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத் தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே இறைவனை விட குருவே உயர்வானவர். இறைவன் வேறு குரு வேறு இல்லை குருவே இறைவன் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் இறைவன். சீடன் குருவை முதலில் வணங்கி பின் இறைவனை வணங்கி இருவரின் அருளையும் பெற்றான்.

சிவ வடிவம் – 26. பாசுபத மூர்த்தி

மகாபாரத யுத்தத்தின் போது பாண்டவர்களின் படையும் கௌரவர்களது படையும் கடுமையாக மோதிக் கொண்டது. 13 ஆம் நாள் யுத்தம் நடைபெற்ற போது துரோணாச்சாரியாரால் பத்ம வியூகம் அமைக்கப்பட்டது. அதனுள் தர்மரின் கட்டளையை ஏற்று அர்ஜுனனின் மகனான அபிமன்யு உள்ளே சென்று கடுமையாக போராடினான். தர்மனின் படை பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே சென்று அபிமன்யுவுக்கு உதவ சென்றபோது ஜயந்திரன் என்பவன் தனது படைகளோடு வந்து தருமரை பத்ம வியூகத்தில் செல்லாதவாறு தடுத்தான். அபிமன்யுவினால் பத்ம வியூகத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. பெரும் போர் செய்த அபிமன்யு ஜயந்திரன் கொன்று விட்டான். அதனால் மிக கோபம் கொண்ட அர்ஜுனன் அடுத்த நாள் பொழுது சாயும் முன் ஜயந்திரனை கொல்வேன். கொல்ல முடியாவிட்டால் தீமூட்டி அதனுள் பாய்ந்து உயிரை விடுவேன் என சபதமிட்டான். பின் தன் மகனை நினைத்து வருத்தத்தில் இருந்தான். அப்போது கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ஜூனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அதற்கு அர்ஜூனன் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ண மாட்டேன் என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ஜூனனும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான். அர்ஜூனனா ஜயந்திரனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விடலாம் வா என்று அழைத்தான். இருவரும் கையிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ஜூனன் கண்ணனை சிவனாக பாவித்து அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ஜூனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் எதிரியை அழிக்க வல்ல பாசுபதஸ்திரத்தை கொடுத்தார். இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.

சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர். அர்ஜூனன் இவ்வாறு கனவு கண்டான். கண் விழித்துப் பார்க்கும் போது தன்னுடைய அம்பறாத் தூணியில் புது வகையான அம்பு அதாவது பாசுபதஸ்திரத்திரம் இருப்பதைக் கண்ட அர்ஜூனன் மீண்டுமொரு முறை சிவபெருமானையும் கண்ணனையும் வணங்கினான். அர்ஜூனனும் சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் கண்ணனின் வழிகாட்டுதலின் படி ஜயந்திரனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான். கண்ணனும் அர்ஜூனனும் வேண்டிய வண்ணம் பாசுபதஸ்திரத்தை அருளிய நிலையிலுள்ள உருவமே பாசுபத மூர்த்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 589

கேள்வி: இறை தரிசனம் கிட்டும் போது நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஐயனே:

இறைவனே தரிசித்த பல அசுரர்களின் கதைகளை மனதிலே எண்ணி கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்தும் அசுரர்கள் திருந்தவில்லை. தன் அசுரத்தனங்களை விடவில்லை. எனவே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை வைக்கும் பொழுதே இறைவா நீ என்னை ஆட்கொண்டு விடு. நீ வேறு நான் வேறு என்று இல்லாமல் எப்படி நதி தனியாக இருக்கும் வரை நதி அது கடலில் கலந்து விட்டால் அது நதி இது கடல் என்று பிரிக்க முடியாதோ அதை போல் என்னை ஆக்கிவிடு என்ற ஒரு பிரார்த்தனையை வைத்தால் போதும்.

சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சிவ வடிவம் – 25 சார்த்தூலஹர மூர்த்தி

தருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை கொல்ல அனுப்பிய புலியின் தோலினை உரித்து உடுத்திக் கொண்ட தோற்றம் சார்த்துலஹர மூர்த்தியாகும்.

தில்லை காடுகளை சுற்றியிருந்த தருகா வனத்தில் வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்று செறுக்குடன் இருந்தார்கள். அவர்களது துணைவியர்களோ இறைவனை விட தங்களது கற்பே சிறப்புடையது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்ட எண்ணிய சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்‌ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்‌ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தருகா வனத்தை அடைந்தார்.

தருகா வனத்தில் வந்திறங்கிய பிக்‌ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தணர்களின் பத்தினிகள் பிக்‌ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாக சாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கி விட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்‌ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் துணைவியர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்க முடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்‌ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் சாபங்கள் அனைத்தும் இறைவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் அபிசார ஹோமம் என்ற யாகத்தினை வளர்த்தனர். அதன் மூலம் உருவாக்கப்பட்ட கூரிய கொடிய புலியை சிவபெருமான் மீது ஏவினர். சிவபெருமான் அப்புலியை அடக்கி அதன் தோலினை உரித்து ஆடையாக உடுத்திக் கொண்டார். அக்கோலமே சார்த்துலஹர மூர்த்தியாகும்.

மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 588

கேள்வி: காலம் தானாக சுழற்சி பெறுமா? அல்லது மறுபடியும் அதை இறைவன் ஆரம்பத்திலிருந்து இயக்குவாரா?

இறைவனின் கருணையாலே வளைந்த நிலையிலே உள்ள ஆரத்திற்கு எது ஆரம்பம்? எது முடிவு? அதைப் போலத்தான் இந்த அண்ட சராசரமும் இறைவனின் இயக்கமும் இன்று ஆரம்பம் போல் தோன்றும். இன்னொன்று முடிவு போல் தோன்றும். முடிவிலும் ஆரம்பம் இருக்கும். ஆரம்பத்திலும் முடிவு இருக்கும்.

சிவலிங்கத்தைச் சுமக்கும் சதாசிவன்

தன்னைத்தானே அர்ச்சிக்கும் மூர்த்தி சதாசிவ வடிவமாகும். அகவழிபாடு செய்பவர்களுக்கு அவரது உடம்பே சதாசிவமாயும் சதாசிவ லிங்கமாயும் நிற்கும். உருவம் அருஉருவம் (லிங்கம்) என இரண்டு நிலைகளை பார்க்கும் வண்ணமும் அருபத்தை உணரும் வண்ணமும் இத் திருவுருவம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரிலும் அரியலூர் மாவட்டத்தில் மேலப்பழுவூரிலும் சிவலிங்கத்தைத் தோளில் சுமந்தவாறு காட்சி தரும் அரிய சதாசிவனின் சிற்பங்கள் உள்ளன.