சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒரு நாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி சிவனின் சாபத்தைப் பெற்றது. தனது தவறை உணர்ந்து வருந்தி திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க சாபத்துக்கு பிராயச்சித்தமாக நீ பூலோகம் சென்று பல சிவன் கோயில்களை வழிபட வேண்டும். நிறைவாக திருவாலங்காட்டில் எம்மை நோக்கித் தவமிருக்கும் சுனந்த முனிவர் என்பவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரது ஆசியும் கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உனது சாபம் நீங்கும். அந்த நொடியில் நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன்படி கார்கோடகன் ஒரு முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவன் கோயில்களை வழிபட்டார். கார்கோடகன் வழிபட்ட இடம்தான் கோடன் பாக்கம் ஆகி அதுவே பின்னர் கோடம்பாக்கமாக (சென்னை) மாறியது. நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அவனது சாபமும் நீங்கியது.
சுனந்த முனிவர் கடுந்தவம் புரிந்தார். அதனால் அவரது தலை மீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து வளர்ந்தது. இதன் காரணமாகத்தான் அவர் முஞ்சிகேசர் எனப் பெயர் பெற்றார். கேசம் என்றால் முடி. சிவனுக்கும் காளிக்கும் நடைபெற்ற தாண்டவப் போட்டியை நேரடியாகக் கண்டவர் முஞ்சிகேச முனிவர். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார். கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் இவர் திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பஞ்ச சபைகளில் மூத்த சபையான திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோயில் அருகே இவரது ஜீவசமாதி தனிக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த ஜீவசமாதி சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியப்படுகிறது. தமிழகத்தில் சுமார் பத்திலிருந்து பதினைந்து பழைமையான சிவன் கோயில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சன்னிதி உண்டு. ஸ்ரீ கச்சாலீஸ்வரர் எனும் பழைமையான கோயில் சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் அருகே உள்ளது. இங்கும் முஞ்சிகேசர் முனிவருக்கு சன்னிதி உள்ளது.