வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன் அவரிடம் பேசினான். முருகா உன்னைப் பெற்றதால் அந்த பரமசிவனார் பாக்கியசாலி ஆகிறார் அன்பனே எங்கள் அசுர வம்சத்திற்கும் தேவ வம்சத்திற்கும் காலம் காலமாக தீராப்பகை இருந்து வருகிறது. அதை நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். உன் தந்தை பரமேஸ்வரனே எனக்கும் என் சகோதரர்களுக்கும் சகல சக்தியையும் அருளியிருக்கிறார். அவ்வகையில் உன்னையும் அவரைப் போலவே வழிபட காத்திருக்கிறேன். அதனால் எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே என்றான் பணிவான வார்த்தைகளால். வடிவேலன் சிரித்தான். தாரகா நன்றாக இருக்கிறது உன் பேச்சு. உலகத்தை சிருஷ்டிக்கும் பரமசிவனாரின் கருணையே உன்னை அழிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் பரமசிவானார் உனக்கு வரமளிக்கும் போது என்ன சொன்னாரோ அதை மீறி விட்டாய். இறைவன் வரம் தருவது உலகத்திற்கு நன்மை செய்வதற்காக நீயோ உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறாய். பிற உயிர்களைத் துன்புறுத்துகிறாய். பிறரை மதிக்காதவனுக்கும் கொடுமைப்படுத்துபவனுக்கும் இறைவன் கொடுத்த வரங்கள் பலிப்பதில்லை. சிவனார் இட்ட கட்டளைப்படி உன்னை ஒழிக்கவே வந்திருக்கிறேன். உன் மரண ஓலையைப் பிடி என்றார் கம்பீரமான குரலில்.
தாரகனுக்கு பொறுமை போய் அசுரகுணம் தலைக்கேறி விட்டது. சிறுவனே இங்கே நின்று என்ன உளறிக் கொண்டிருக்கிறாய் நான் விஷ்ணுவையும் பிரம்மனையும் இந்திரனையும் வென்றவன். விஷ்ணு அவரது சக்கரத்தை என் மீது ஏவிய போது அது என் நெஞ்சில் பட்டு பதக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார். அத்தகைய தைரியம் படைத்த என்னை ஒழித்து விடுவேன் என சாதாரணமாகச் சொல்கிறாயா என் முன் நிற்கும் தகுதி கூட உனக்கு இல்லை. ஓடி விடு. போய் தாய் தந்தையுடன் சுகமாக இரு என்றான் ஆணவத்துடன். கர்வம் பிடித்தவனே தன் சுயபலத்தை தம்பட்டம் அடிப்பவன் வீரனே அல்ல தைரியசாலிகள் செயலில் தான் எதையும் காட்டுவார்கள். அதை மற்றவர்கள் பார்த்து புரிந்து கொள்வார்கள் புகழ்ந்து தள்ளுவார்கள். உன்னை நீயே புகழ்ந்ததன் மூலம் இறைவனிடம் பெற்ற வரத்தை இழந்து விட்டாய். வா போருக்கு என்று அறைகூவல் விடுத்தார் முருகன். பொறுமையிழந்த தாரகன் முருகனின் மீது அம்பு மழை பொழிய அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார் கந்தப்பெருமான். அதிபயங்கர யுத்தம் நடந்தது. எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கி தாரகனின் தும்பிக்கையை துண்டு துண்டாக்கினார் வடிவேலன். அது மீண்டும் முளைத்தது. பல மாயங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிழைத்த அவன் ஒரு கட்டத்தில் கிரவுஞ்ச மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். கந்தன் கிரவுஞ்ச மலை மீது தன் வேலை எறிந்தார். அதன் சக்தி தாளாமல் மலையாய் நின்ற கிரவுஞ்சன் என்ற அந்த அசுரன் தன் உயிரை விட்டான். உயிரற்று சாய்ந்த மலையை வேலால் கிழித்த வேலவன் உள்ளிருந்த வீரபாகு மற்றும் வீரர்களை மீட்டார்.
அவர்கள் ஆரவாரத்துடன் வெளியே வந்தனர். மறைந்திருந்த தாரகன் வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற பெயர்களில் மூன்று வடிவங்களை எடுத்தான். மூன்று நகரங்களை அமைத்து அதில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான் பரமசிவனார் போல் உருமாறி அந்த நகரங்களை எரித்தே அழித்தார். அங்கிருந்து தப்பிய தாரகனை வேலெறிந்து வீழ்த்தினார். சற்றும் எதிர்பாராத விதமாக தாரகன் போர்களத்தில் வீழ்ந்து மாண்டான். வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தாரகனின் படை சிதறியது. அவர்களை வீரபாகு தலைமையிலான தேவர் படை துவம்சம் செய்தது. போர்களத்தில் ஒரு அசுர உயிர் கூட மிஞ்சவில்லை தாரகன் மடிந்தான் என்ற செய்தியறிந்து அவனது மனைவி கவுரியும் மற்ற ஆசைநாயகியரும் ஓடோடி வந்தனர். அன்பரே விஷ்ணுவாலும் தேவவேந்திரனாலும் வெல்ல முடியாதவரும் பரமசிவானாரிடம் சாகாவரம் பெற்றவருமான உங்களுக்கா இந்தக்கதி நேர்ந்தது இனி நீங்கள் சென்றுள்ள உலகத்திற்கே வருவோம். ஒரு சிறுவனிடம் உங்கள் கணவன் தோற்றான் என்று பிறர் பேசுவது எங்கள் காதில் விழும்முன் உங்களை நாடி வந்து விடுகிறோம் என்று கதறினர். தன் தந்தை இறந்த செய்தியறிந்து தாரகனின் மகன் அசுரேந்திரன் ஓடிவந்தான். தந்தையின் உடலின் மீது விழுந்து கதறினான். அப்பா ஒரு சிறுவனிடம் தோற்று அசுர குலத்திற்கு தீராக்களங்கத்தை ஏற்படுத்தி விட்டீர்களே இது எப்படி சாத்தியமாயிற்று. உங்களுக்கு நேர்ந்த இழுக்கிற்கு பிராயச்சித்தம் செய்வேன் எந்த சிறுவன் உங்களைத் தோற்கடித்தானோ, அந்த சிறுவனுக்கு பாடம் புகட்டுவேன் இது சத்தியம் என்று சபதம் செய்தான். பின்னர் அகில் சந்தனக்கட்டைகளை அடுக்கி அதன் மீது தந்தையின் உடலை வைத்து சகல மரியாதைகளுடன் தகனம் செய்யச் சென்றான். அவனது தாய்மார்கள் தங்களையும் சிதையில் வைத்தும் தகனம் செய்யும்படி அடம்பிடிக்கவே. அவர்களையும் சிதையில் அமர வைத்து தீமூட்டினான். இறுதிக் கிரியைகளை முடித்த பின் கோபமும் வருத்தமும் பொங்க தன் பெரியப்பா சூரபத்மனின் நகரான வீரமகேந்திர பட்டணத்தை வந்தடைந்தான்.